படம் | telegraph

தமிழர்களுக்கு இப்போது யார் தேவை? நல்ல நிர்வாகியா? நல்ல அரசியல்வாதியா? என்கிற கேள்வியை கடந்தவார ‘வடக்கு அரசியல்’ எழுப்பியிருந்தது. இதற்கு கேள்வி மாதிரியான பதிலையே உடனே வழங்கிவிட முடியும். வடக்கில் நல்ல நிர்வாகி அரசுக்குத் தேவை. நல்ல அரசியல்வாதி தமிழர்களுக்குத் தேவை.

ஏன் நல்ல நிர்வாகி அரசுக்குத் தேவை?

இங்கு அரசின் நல்ல நிர்வாகி மெழுகிச் சிலைபோல இருக்கக்கூடியவராய் இருத்தல் வேண்டும். வெண்மையாக, கறடுமுறடுத்தனங்களற்றவராக, எந்த வடிவத்திலும் செதுக்கிக் கொள்ளக்கூடியவராக மற்றும் சிற்பிக்கு சிலையை அருவருக்கும் தருணத்தில் உருக்கி சிலைமாற்றம் செய்துகொள்ளக்கூடியவராக அந்த மெழுகுச் சிலை இருக்கவேண்டும். மெழுகுச்சிலைகளால் அழுங்காமல் குழுங்காமல் நிர்வாகத்தை நடத்த முடியும். அதாவது, ‘நிர்வாகத்தை’ இவ்வகையில் நடத்துவதில் பெயர்பெற்ற மன்மோகன் சிங்கை நினைவுபடுத்திக் கொள்ளவும். பொருளாதாரத் துறையில் மற்றும் நுண்பொருளாதார துறையில் இரு காலாநிதி பட்டங்களை பெற்றவர் அவர். அவரையே மெழுகுச் சிலையாகவே சோனியா அம்மையார் நடத்துகிறார் என்பது உலகறிந்த விடயமாக இருக்கிறபடியால், அந்த எளிய உதாரணத்தை நம் முன் தெரியும் மெழுகுசிலைகளிடமும் பிரயோகித்துப் பார்க்கலாம். பெரும்பாலும் இதுபோன்ற நிர்வாக திறனுடையவர்கள் அதிகாரத்தின் பொம்மலாட்ட நிழலுருவங்களாகவே செயற்படுகின்றனர் என்பதையும் ஊகித்தறிய நேரமெடுக்காது. இதுவே மெழுகுச் சிலைகளுக்காக எளிய தத்துவார்த்த விளக்கம்.

ஏன் மெழுகுசிலைபோன்ற நிர்வாகி? தேவையென்ற கேள்வி எழுவது நியாயம். வடக்கின் அதாவது, தமிழரின் ஊடகங்களுக்கும் வருகை தரும் வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கும் வட மாகாண சபையென்பது அங்கீகரிக்கப்படாத அரசு. தமிழர்களின் தியாகத்துக்கு மதிப்பளித்து ராஜபக்‌ஷ அரசும், இந்தியாயும் உலகமும் உவந்தளித்த நினைவுப் பரிசு. அதை வழிநடத்துபவர் அல்லது நிர்வகிப்பவர் பிரபாகரனாக இருக்க முடியாது. இருக்கவும் கூடாதென்பது பரிசு வழங்கிய வல்லலாளர்களின் திட்டம். எனவே தான் மெழுகுச்சிலை. இந்தப் பிராந்தியம் இரண்டுக்கு மேற்பட்ட ஆளுகை வகைகளுக்குட்பட்டிருக்கிறது. ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட வடமாகாண சபை, இராணுவம், மத்திய அரசின் கீழ் வருகின்ற நிர்வாக சபை. எனவே, இங்கு நிர்வாக குழப்பங்கள், பங்கு பிரிப்புகளில் அசம்பாவிதங்கள் நிகழ அதிக வாய்ப்புகளுண்டு. இந்த பிரதானமான நிர்வாக வகைகளுக்குள் மக்கள் பக்கம் இருக்கும் பலமான அமைப்பு எதுவாக இருக்க வேண்டுமென்றால், மக்களால் தெரிவு செய்யப்பட்ட அமைப்பு. அது ஏனைய அமைப்புக்களால் பலவீனப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தாலோ, அதன் செயற்பாட்டுக்கு குந்தகம் விளைவித்துக் கொண்டிருந்தாலோ உடனடி நடடிவடிக்கை எடுக்கக்கூடிய வகையில் அது செயற்றிறன் பெற்றிருக்க வேண்டும். ஆனால் நடைமுறை? தீர்மானம் இயற்றுவதில் கின்னஸ் சாதனை படைத்தலுக்கான ஒரு சபையாக மட்டுமே இந்த மெழுகு நிர்வாகம் செயற்படுகிறது. அதையே அரசும் எதிர்பார்க்கிறது. நடைமுறையில் வீரியமற்ற, ஆனால் ஊடக வீரியத்தை காட்டும் ஒரு நிர்வாகம்.

இதில் இன்னொரு விடயத்தையும் கவனித்தல் அவசியம். வடக்கை சுற்றிப் பார்க்க வரும் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும், தகவல் திரட்டுநர்களுக்கும் வெண்மையான, பளபளப்பான, கண்ணீரற்ற, காயங்களின் சீழற்ற நிர்வாகத்தை காட்டவேண்டிய தேவை அரசுக்கு உண்டு. ஆகவே, இந்த இடத்தில் மெழுகு அழகு. அது செய்யும் நாறும் பிணங்களின் மேலான, பிள்ளைகளைத் தேடும் பசையான கண்ணீருக்கு கீழான அபிவிருத்தி கொள்ளை அழகு. எப்பேர்பட்ட இராஜதந்திரியும் இன்னொரு தேசத்தை சுற்றிப்பார்க்கையில் முதலில் அவர் சுற்றுலா தேசமாகவே அணுகுவார்  என்பது இராஜதந்திரத்தின் தலையாய விதி. அப்படியே அணுகவும் வேண்டும். முதலில் அந்தப் பிராந்திய சமூக பண்பாட்டு, சூழல் நெறிமுறைகளை எடைபோட்டுக்கொள்ள இந்த விதி அவசியப்படுகிறது. இந்த நோக்கில் போருக்குப் பின், முதன் முதலாக வடக்கை அணுகும் இராஜதந்திரி ஒருவருக்கு கிடைக்கும் முன் அனுபவம் என்னவாக இருக்கும். பளபளப்பான நிர்வாகம். உயரிய ஆங்கிலத்தில் பேசும் மெழுகுச் சிலைகள். திரும்பும் தெருவின் திசைகளெல்லாம் அபிவிருத்தியின் சத்தங்கள், இதை நுகரக் கொடுக்கும் மெழுகுச்சிலைகளே அரசுக்குத் தேவை. ஆக, இதனை நல்லதொரு அரசியல்வாதியால் செய்ய முடியுமா? சாதாரண அரசியல் வாதியாலேயே முடியாத இந்தச் செயலை எப்படி நல்லதொரு அரசியல்வாதியால் செய்ய முடியும். எனவேதான், நல்லதொரு மெழுகு நிர்வாகி வடக்கிற்கு அவசியப்பட்டிருக்கிறார்.

மக்களுக்குத் தேவை நல்லதொரு அரசியல் நிர்வாகி

இந்த அநாதையான அரசியல் பெருவெளிக் காலத்தில், தமிழருக்குத் தேவை நல்லதொரு அரசியல் நிர்வாகி. அவர் நல்ல அரசியல்வாதியாகவும், மக்களுக்கான நிர்வாகியாகவும் தொழிற்படுபவராக இருக்கவேண்டும். ஒவ்வொரு ஜெனீவா தீர்மானம் வருவதற்கு முன்பும் இலங்கைக்கு படையெடுக்கும் வெள்ளைத் தோள்காரன்களிடம் உண்மையைச் சொல்லும் அரசியலாளன்கள் வேண்டும். அரசைக் காப்பாற்றும், முள்ளிவாய்க்கால் பழியில் எம் பிள்ளைகளையும் பங்கிட்டுக்கொள்ளுபவர்களையல்ல. பிள்ளைகளைத் தேடும் தாய்களின், தந்தைகளின், உடன்பிறப்புக்களின் கண்ணீரைத் தொட்டுப்பார்த்த அரசியல் நிர்வாகி வேண்டும். மக்களின் கண்ணீருக்கு பயந்து ஓட்டமெடுக்கும் அரசியல்வாதிகளால் யாருக்கு லாபம். அவர்களை அரியணையேற்றவும், மாடிகளில் நின்று கையாட்டவுமா வரிசை கட்டிநின்று வாக்களித்தது சனம். தன் துயர் போக்கும் மீட்பர்கள் என்ற நம்பிக்கையில்தானே ஒவ்வொரு அச்சமிகு தேர்தலையும் துணிவோடு எதிர்கொள்கின்றனர் மக்கள். எலும்புக் கூடு மீட்பு செய்திகள் வட மாகாணம் முழுதிலும் பரவலடைந்து கொண்டே போகின்றன. காணாமல்போனவர்களின் பெற்றோர் தொடர்ந்தும் ஏமாற்றப்படுகின்றனர். நில சுவீகரிப்பு சட்டபூர்வமானதாக மாறிவருகிறது. விவசாயம், மீன்பிடியில் என்றுமில்லாத சரிவை வடக்கு சந்தித்திருக்கிறது. ஒன்றுக்கு மேற்பட்ட கணவன்களையும், ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளையும் வைத்துக்கொள்ள ஆசைப்படும் வடக்கு மனிதர்களுடன் கலாசாரம் கறையேற்கிறது. இப்படியாக நம்மைச் சூழ்ந்த ஆயிரத்தெட்டுப் பிரச்சினைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால், நமக்கு இதில் எதிலும் கவனிப்பு கிடையாது. நம்மை துண்டித்துக் கொள்வதற்கான இரணைமடு திட்டம் குறித்து பேசுவதிலேயே மற்றைய முக்கிய பிரச்சினைகளை மூழ்கடித்துவிடுகிறோம்.

இப்போது சொல்லுங்கள், நீங்கள் நல்ல அரசியல்வாதிகளா? நிர்வாகிகளா? மெழுகுச் சிலைகளா?

ஜெரா

Jera