பட மூலம், Youtube

புதிய அரசியலமைப்புக்கு ஆதரவு வழங்குவோருக்கு மரணதண்டனை வழங்கவேண்டும் என ‘வியத்மக’வின் அறிவார்ந்த நபரான மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தைரியமாக தெரிவித்திருப்பது அவரது தனிப்பட்ட கருத்தாக எடுத்துக்கொள்ள முடியாது. அதற்கு அப்பாற்பட்டு, அந்த அமைப்பில் இருக்கும் சில அறிவார்ந்த நபர்களுக்கு மத்தியில் பலமடைந்துவரும் கருத்தியலின் ஒரு வெளிப்பாடாகவே இதனைக் கருதமுடியும். அவரின் இந்த மரணதண்டனை நிறைவேற்றப் பேச்சு, 1987 – 89ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு ஆதரவாகவும் 13ஆவது திருத்தத்துக்கு ஆதரவாகவும் இருந்த இடதுசாரிகளுக்கு தங்களுடைய உயிரை இழக்கவேண்டி ஏற்பட்ட அந்த இருண்ட யுகத்தை நோக்கி எம்மை கொண்டு செல்கிறது. 87 – 89 வரை இடம்பெற்றது போன்று துரோகிகளை அழிப்பதை மற்றும் அவர்களுடைய சடலங்களைப் புதைப்பதைப் பின்பற்றுமாறு அவர் ஆலோசனை வழங்கியிருக்கிறார். 87 – 89 வரையான காலப்பகுதியில் அவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு முகம்கொடுத்து உயிர்தப்பிய பெரும்பாலானவர்கள் இன்று ‘வியத்மக’ அமைப்பிலும் இருப்பதைக் காணமுடிகிறது.

‘வியத்மக’ பலமடைந்து வருவது தொடர்பாக முழுப் பொறுப்பையும் இந்த அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஊழல்வாதிகள், கொலையாளிகள் மற்றும் பொதுமக்களின் சொத்துக்களைக் கொள்ளையிட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதமையினால், நேர்மையான பிரஜைகள் போன்று ஒன்றுகூடுவதற்கான வாய்ப்பை அவர்களுக்கு இந்த அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல், பழைய ஊழல்வாதிகளுக்கு பதவிகள் வழங்கியதன் மூலம் மக்கள் முன்னிலையில் இந்த அரசாங்கம் நல்லாட்சித் தன்மையையும் இழந்து நிற்கிறது.

அரசாங்கம் பலவீனமானதாகவும் அதிகாரமற்றதாகவும் இருந்ததினால் ‘வியத்மக’வின் ஸ்திரத்தன்மை தொடர்பான கோஷங்கள் முன்வைக்கப்பட்டன.

‘வியத்மக’வில் இருக்கும் அறிவுசார்ந்தவர்களுக்கு ஜனநாயகம், சோஷலிசம் அல்லது தாராளவாதம் தொடர்பான அரசியல் கருத்தியல் தெளிவில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. அவர்களுடைய வரலாற்றுப் பயணத்தைப் பின்னோக்கிப் பார்த்தால், மார்க்ஸ்வாதத்துடனோ அல்லது புரட்சிகர அமைப்புகளில் அல்லது இடதுசாரி கட்சிகளில் அவர்கள் வேரூன்றியிருந்தபோதிலும், தற்போது அந்த வேர்கள் இத்துப்போய் சிங்கள இனவாதத்தின் பக்கம் வந்து நிற்கிறார்கள். இறுதியில் அவர்கள் பாசிசத்துக்கு ஆதரவாக சேவை செய்துகொண்டிருப்பது ஆச்சரியமளிப்பதாகவும் இல்லை.

பகிரங்கமாக தெரிவிக்கப்பட்ட மரணதண்டனை கருத்துக்கு எதிராக அரசாங்கம் என்ன நடவடிக்கையை எடுக்கப்போகிறது என்பதை நாம் தெரிந்துகொள்வது அவசியமாகும். அவர்களுக்கு மட்டும் சட்டம் இல்லையா?

தயாபால திராணகம