பட மூலம், Tamil Guardian

அரசியல் கைதிகளின் விவகாரம் இதற்கு முன்னரும் பல தடவைகள் வீதிக்கு வந்திருக்கிறது. அதேபோன்று இம்முறையும் வந்திருக்கிறது. வழமைபோல் தமிழ் அரசியல்வாதிகளது உருக்கமான அறிக்கைகளும், நாடாளுமன்ற பேச்சுக்களும் முன்ரைப் போன்றே அதன் காரம் குறையாமல் வெளிவந்திருக்கிறது. அரசியல் கைதிகளின் போராட்டம் தொடர்பான செய்திகளை சக்தி​ தொலைக்காட்சி காட்சிப்படுத்தியிருந்தது. அதன்போது ஒரு விடுதலையான கைதி இவ்வாறு கூறுகின்றார். நாங்கள் முன்னர் போராடியபோது சம்பந்தன் ஜயா குறுக்கிட்டு எங்களுக்கான தீர்வை பெற்றுத் தருவதாக கூறியிருந்தார். ஒருவேளை முடியாவிட்டால் நானும் உங்களோடு வந்து போராடுவேன் என்றும் கூறியிருந்தார். ஒன்றில் எங்களுக்கு தீர்வை பெற்றுத் தாருங்கள் அல்லது எங்களோடு வந்து போராடுங்கள் என்று அந்த விடுதலையான கைதி கூறுவது முற்றிலும் நியாயமானது. தமிழ் மக்களை முன்னிறுத்தி சிந்திக்கும் ஒவ்வொரு அரசியல் தலைவரும் அவர்களுடன்தான் வீதியில் நிற்க வேண்டும். உண்மையில் இது தீர்க்க முடியாதவொரு பிரச்சினையா அல்லது இதனை தீர்க்குமளவிற்கு அரசாங்கத்தை இறங்கிவரச் செய்ய முடியாதளவிற்கு சம்பந்தன் பலவீனமாக இருக்கின்றாரா?

அண்மையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப அங்கத்தவர்களை ஜனாதிபதி மைதிரிபாலசிறிசேன சந்தித்திருந்தார். இதன்போது அவர் தெரிவித்திருந்த கருத்துக்கள் எந்தளவிற்கு அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அசமந்தப் போக்கை கடைப்பிடித்துவருகிறது என்பதற்கு ஒரு சிறந்த சான்று. ஜனாதிபதி இவ்வாறு கூறியிருக்கின்றார். அதாவது, “உங்கள் பிள்ளைகள், உறவினர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இராணுவ முகாம்கள் தொடர்பில் உங்களுக்கும் தெரிந்திருந்தால் அதனை என்னிடம் சொல்லுங்கள், நீங்கள் அங்கு சென்று நிலைமைகளைப் பார்வையிடுவதற்கு நான் ஏற்பாடு செய்து தருகின்றேன்.” இது என்ன மாதிரியான பதில்? ஒரு நாட்டின் பொறுப்பு வாய்ந்த உயரிய இடத்திலிருக்கும் ஒருவர் எவ்வாறு இப்படிக் கூற முடியும்? ஒரு நாட்டின் ஜனாதிபதிக்கே தெரியாத விடயம் எவ்வாறு அந்த சாதாரண ஏழைத் தாய்மார்களுக்கு தெரியப்போகிறது? காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எவரும் இல்லை என்பதுதான் உண்மையெனின் அதனையாவது அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கலாம். ஆனால், அதனைச் செய்வதற்கும் அரசாங்கம் தயக்கம் காண்பித்து வருகிறது.

இந்த இடத்தில் கேள்வி எழுப்ப வேண்டிய சம்பந்தனோ, எதற்காக பொறுமை காக்க வேண்டும் என்று மற்றவர்கள் புரிந்துகொள்ள முடியாதவாறு, அமைதி காத்து வருகின்றார். அது ஒரு எல்லையற்ற அமைதி.  நிதானமாகப் போக வேண்டும், அமைதி காக்க வேண்டும் என்று கூறுவதைத் தவிர சம்பந்தனிடம் கூறுவதற்கு எதுவுமில்லை. இவ்வாறானதொரு பின்னணியில்தான் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தரப்புக்களும் தங்களின் பிரச்சினைக்காகத் தாங்களே போராட முயல்கின்றன. அதனைத் தவிர அவர்களுக்கு முன்னால் வேறு தெரிவுகள் எதுவுமில்லை. காணிகளப் பறிகொடுத்த மக்கள் அதற்காக தெருவில் இறங்கிய பின்னர்தான் அவர்களின் பிரச்சினையில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டது. அதேபோன்று அரசியல் கைதிகள் உண்ணாவிரதமிருந்த போதுதான் அவர்கள் பக்கமாக அனைவரும் திரும்பினர். எனவே, இங்கு ஒரு விடயம் வெள்ளிடைமலை. அதாவது, பாதிக்கப்பட்ட மக்கள் தங்களை நோக்கி மற்றவர்களை திருப்பாதவரையில் இங்கு எதுவுமே நடைபெறப் போவதில்லை. மீட்பர்கள் என்போர் அதுவரை ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பர்.

அரசியல் கைதிகளின் விவகாரத்தைப் பொறுத்தவரையில் ஏன் இந்த அசமந்தப் போக்கு. அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என்று அரசாங்கம் தொடர்ந்தும் கூறிவருகிறது. அவ்வாறாயின் நீண்டகாலமாக விசாரணையின்றி தடுத்து வைத்திருக்கும் அந்தத் தமிழர்கள் யார்? இறுதி யுத்தத்தின் போது சரணடைந்த 11,400 போராளிகளுக்கு மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கம் பொது மன்னிப்பு வழங்கியிருந்தது. அவ்வாறாயின் இந்த 200 – 300 வரையான அரசியல் கைதிகளை விடுவிப்பதில் அப்படியென்ன ஆபத்து வந்துவிடப் போகிறது? தமிழ் அரசியல் தலைவர்களும் மூச்சுப்பிடித்து நாடாளுமன்றத்தில் பேசுகின்றனர். ஆனால், அரசாங்கமோ தொடர்ந்தும் கண்டுகொள்ளாமலேயே இருக்கிறது. அவ்வாறாயின் தமிழர் தலைமை வேறு அணுகுமுறைகளைத்தானே பின்பற்ற வேண்டும்.

சம்பந்தன் பல்வேறு விடயங்களில் அரசாங்கத்திற்கு விட்டுக் கொடுப்புக்களை செய்து வருகின்றார். ஆனால், அரசாங்கமோ தமிழ் மக்கள் தொடர்பில் எந்தவொரு விட்டுக் கொடுப்பையும் செய்யவில்லை. மாறாக பாதிக்கப்பட்ட மக்களாக வீதிக்கு வருகின்ற போது மட்டும்தான் அவர்களின் கோரிக்கைகளில் சிலவற்றையாவது ஏற்றுக் கொள்கின்றது. காணி விடுவிப்பிலிருந்து அரசியல் கைதிகள் விவகாரம் வரையில் இதுதான் நிலைமை. இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் காணிகளை மீட்பதற்காக பாதிக்கப்பட்ட மக்கள் வீதிக்கு வந்தபின்னர்தான், சம்பந்தன் அது தொடர்பில் அரசாங்கத்துடன் விசேட பேச்சுவார்த்தைகளுக்குச் சென்றிருந்தார். உண்மையில் அதனை முன்னரே செய்திருக்கலாம்.

கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கி ஒரு பிரத்தியேக குழுவை நியமிக்கலாம். வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அன்றாட பிரச்சினைகளைத் தீர்க்கும் நோக்கில் மேற்படி விசேட குழு குறிப்பிட்ட அமைச்சர்களோடு, அதிகாரிகளோடு உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளலாம். அரசாங்கம் இந்த விடயத்தில் எவ்வாறு ஒத்துழைப்பு வழங்குகின்றது என்பதைக் கொண்டு, நல்லிணக்கத்தின் மீதான அரசாங்கத்தின் அசமந்தப் போக்கை அம்பலப்படுத்தலாம். ஆனால், சம்பந்தனோ இந்த விடயங்களில் போதிய கவனத்தைச் செலுத்தவில்லை. சம்பந்தனைப் பொறுத்தவரையில் அரசியல் தீர்வு விடயத்தை மட்டுமே இலக்காகக் கொண்டு செயற்பட்டு வருக்கிறார். சம்பந்தன் அவ்வாறு செயற்படுவது தவறான ஒன்றல்ல. ஆனால், அரசியல் தீர்வு முயற்சிகளில் ஈடுபடுகின்ற அதேவேளை மக்களின் அன்றாட பிரச்சினைகளைக் கவனிக்க வேண்டியதும் அரசியல் வாதிகளின் கடமைதான்.

அரசியல் தீர்வு விடயங்களில் ஈடுபடுகின்ற அதேவேளை மக்கள் எதிர்கொள்ளுகின்ற அன்றாட பிரச்சினைகள் தொடர்பில் வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கும் ஒரு செயற்பாட்டையும் முன்னெடுக்கலாம். கூட்டமைப்பு ஒரு தேசிய இனத்தை பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு பிரதான அரசியல் கூட்டு என்னும் வகையில் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் மாதாந்த இராஜதந்திர சந்திப்புக்களில் ஈடுபட்டிருக்க வேண்டும். இந்தப் பிரச்சினைகளின் தார்ப்பரியத்தை அவர்களுக்கு தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். இதன் மூலமும் அரசாங்கத்திற்கு உள்ளுக்குள்ளேயே ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால், அது தொடர்பிலும் எவரும் சிந்திக்கவில்லை. சம்பந்தன் இதனை செய்ய மறுக்கின்ற போது, அவருக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் ஏனைய கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து இவ்வாறான இராஜதந்திர சந்திப்புக்களை ஏற்படுத்தலாம்.

ஒரு விடயம் மட்டும் உண்மை. அரசாங்கத்திற்கு நெருக்கடிகளைக் கொடுக்காமல் எதனையுமே சாதிக்க முடியாது. இது பற்றி பேசினால் அரசாங்கம் சங்கடத்திற்குள்ளாகிவிடும், சிங்கள மக்கள் கோபித்துவிடுவார்கள் என்று நினைப்பவர்கள் தமிழ் மக்களின் அரசியலுக்கு தலைமை தாங்கினால் இந்த நிலைமை இப்படியே தொடரும். இதில் எந்தவொரு மாற்றமும் ஏற்படப் போவதில்லை. அந்த வகையில் நோக்கினால் இன்று மேற்கொள்ளப்படும் அரசியல் கைதிகளின் போராட்டம் சொல்லும் செய்தி என்னவென்றால், விட்டுக் கொடுத்துச் செல்லும் மனநிலையிலிருந்து சம்பந்தன் தரப்பினர் முதலில் வெளியில் வரவேண்டும். அப்போதுதான் இந்தப் பிரச்சினைகளை உரிமையுடன் எதிர்கொள்ள முடியும். இன்று அரசியல்யாப்பு விவகாரத்தில் நடப்பதும் இதுவேதான். உண்மையில் இந்த வழிகாட்டல் குழுவில் கூட்டமைப்பின் சார்பில் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் பங்குபற்றியிருக்கக் கூடாது. முதலில் நீங்கள் பேசி ஒரு வரைபை வெளியிடுங்கள், பின்னர் அதனை முன்னிறுத்தி நாங்கள் பேசுவோம் என்னும் நிலைப்பாட்டை எடுத்திருந்தால் இன்று பத்தோடு பதினொன்றாக இடம்பெற்றிருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காது. ஒவ்வொரு விடயங்களும் அரசாங்கத்தின் விருப்பிலிருந்தே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இதன் காரணமாகத்தான் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை, அரசியல் கைதிகளின் பிரச்சினை என்று ஒவ்வொன்றிலும் அரசாங்கத்துடன் மோத முடியாமல் இருக்கிறது. ஏனெனில், ஏற்கனவே அரசாங்கத்தின் விருப்பிற்குப் பின்னால் இழுபட்டுச் சென்றதால் தமிழ் மக்களுடன் தொடர்புடைய அனைத்து பிரச்சினைகளின் போதும் அரசாங்கத்தின் விருப்பமே முதன்மையாக இருக்கிறது. மோத வேண்டிய தமிழர் தலைமையோ இழுபட்டுக் கொண்டிருக்கிறது. ஒன்றில் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் அல்லது தீர்க்க முடியாத இடத்தில் பிரச்சினைகளோடு நிற்க வேண்டும். அரசியல் தலைவர்கள் என்போர் பிரச்சினைகளோடு நிற்றல் என்பதும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒரு வழிதான்.

யதீந்திரா