பட மூலம், AFP PHOTO / ISHARA S.KODIKARA, via Asia Times

1951இல் சட்டவாக்கப்படுத்தப்பட்ட முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டமானது (MMDA) ஒரு மதம் சார் பிரச்சினையாக அல்லது சிறுபான்மையினரின் பிரச்சினைகளில் ஒன்றாகவே பெரிதும் பார்க்கப்படுகிறது. முஸ்லிம் ஆண் அரசியல்வாதிகளும், மதத் தலைவர்களும், அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களும் பல தசாப்தங்களாக இதனைக் ‘குறித்த (முஸ்லிம்) சமூகத்தினுள்’ தீர்க்கப்படவேண்டிய பிரச்சினையாக மட்டுமே கருதிவருகின்றனர். இதன் காரணமாக, முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டமானது இலங்கை நாடாளுமன்றத்தினால் சட்டவாக்கம் செய்யப்பட்ட எந்தவொரு சட்டத்தையும் போன்றதொன்றாகும். என்றபோதிலும், காதி நீதிமன்ற அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட எந்தவொரு தீர்ப்பினையும் நீதிமுறைமையினூடு செயற்படுத்த முடியும் என்றபோதிலும், முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் தொடர்பான பிரச்சினைகள், சமத்துவம் மற்றும் முஸ்லிம் பெண்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளாக அரசினை நோக்கி எழுப்பப்படுவது தடுக்கப்பட்டு வந்துள்ளது. முக்கியமாக முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டமானது காலனித்துவ ஆட்சியின் எச்சமாக மட்டுமே உள்ளதென்பதுடன், அது இலங்கை முஸ்லிம்களின் தற்கால வாழ்வின் நடைமுறை யாதார்த்தங்கள் எதையுமே பிரதிபலிக்கவில்லை என்பதுடன், உலகெங்கிலுமுள்ள முஸ்லிம் சமூகங்கள் மற்றும் நாடுகளில் முஸ்லிம் தனியார் சட்டத்தினை உரைபெயர்ப்பதில் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றங்கள் எதையுங்கூட அது பிரதிபலிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


முஸ்லிம் தனியார் சட்டம் – சில அவதானங்கள்


பாரபட்சமான ஏற்பாடுகள் மற்றும் நடைமுறையிலுள்ள ஒழுங்கீனங்கள் என்பவற்றுக்கு மத்தியிலும், ‘அடிப்படை உரிமைகள் தொடர்பான அத்தியாயத்தின் (முன்னைய?) ஏற்பாடுகளுடன் முரண்படுகின்றபோதிலும், நடைமுறையிலுள்ள எல்லா வரையப்பட்ட மற்றும் வரையப்படாச் சட்டங்களும் செல்லுபடியாகும் மற்றும் செயற்படுத்தப்படும்’ எனக் கூறும் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் உறுப்புரை 16(1) இன் கீழ் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டமானது பாதுகாக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசானது முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்ட மறுசீரமைப்புக்கான பொறுப்பினை முஸ்லிம் சமூகத்திடம், குறிப்பாக மதத் தலைவர்கள் மற்றும் ஆண் அரசியல்வாதிகளிடமேயே தொடர்ச்சியாக அளித்து வந்துள்ளது. தனித்த முஸ்லிம் பெண்களும், முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சிச் செயல் முன்னணி (MWRAF) போன்ற பெண்கள் குழுக்களும் மாற்றத்தினை உறுதியளித்த செயன்முறைகளுடன் இணைந்து செயற்பட்டு வருகின்ற நிலையிலும் – சமீப காலங்களில் மேலும் மேலும் அதிகளவிலான முஸ்லிம் பெண்கள் அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் பற்றிப் பொதுமக்கள் பிரதிநிதித்துவக் குழுவின் (PRC) முன்னிலையிலும் – சமத்துவமான மற்றும் பாரபட்சமற்ற சட்டங்கள் மற்றும் நடைமுறைகளைக் கோருவதற்கும், குறிப்பாகத் தனியார் மற்றும் தேச வழமைச் சட்டங்கள் மீதான சீர்திருத்தங்களைக் கோருவதற்குமான அரசியலமைப்புத் தயாரிப்பது தொடர்பான வழிநடத்தும் குழுவின் அடிப்படை உரிமைகள் பற்றித் துணைக் குழுவின் முன்னிலையிலும் – பிரதிநிதிகளாகச் சாட்சியமளித்து வருகின்ற நிலையில் அரசு முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்ட மறுசீரமைப்புக்கான பொறுப்பினை முஸ்லிம் மதத் தலைவர்கள் மற்றும் ஆண் அரசியல்வாதிகளிடம் தொடர்ச்சியாக அளித்து வருகின்றது. இந்த முஸ்லிம் பெண்கள், குறிப்பாக முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தினால் நேரடியாகப் பாதிக்கப்படுபவர்கள், ஒரு படி மேலே சென்று, தமது குறைகளை நிவர்த்திசெய்வதற்காகக் குடியியல் (சிவில்) நீதிமன்ற அமைப்பினை அணுகுவதற்கான தேர்வு அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் அல்லது தற்போது முஸ்லிம் பெண்கள் பொதுச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்வதைத் தடைசெய்யும் (இது இந்நாட்டின் பிரஜைகளிடையே பாரபட்சம் காட்டப்படுவதற்கான ஒரு உதாரணமாகும்) பொதுத் திருமணப் பதிவுக் கட்டளைச் சட்டத்தின் (GMRO) வாசகத்தை நீக்குவதன் மூலம் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்திலிருந்து விலகுவதற்கான தேர்வு அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.


(Video) MMDA: நீதியைத் தேடும் பெண்கள் (நேர்க்காணல் 7)


மேலும், பெண்கள் நடவடிக்கை வலையமைப்பு (WAN) மற்றும் முஸ்லிம் தனியார் சட்ட மறுசீரமைப்புச் செயலணி (MPLRAG) போன்ற பெண்கள் குழுக்கள், பாரபட்சமான சட்டங்கள் மீதாக சீர்திருத்தங்கள் எப்போது மேற்கொள்ளப்படினும் அல்லது மேற்கொள்ளப்படாவிடினுங் கூட, அனைத்துப் பிரஜைகளினதும் உரிமைகளைப் புதிய அரசியலமைப்பு பாதுகாக்க வேண்டும் எனக் கோருகின்றன. அனைத்துப் பிரஜைகளுக்கும் சமத்துவத்தை உறுதிசெய்தல் மற்றும் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்ட மறுசீரமைப்புக்கான மேலதிக சாத்தியக்கூறுகளை ஏற்படுத்துதல் என்பவற்றின் அடிப்படையில் உறுப்புரை 16(1) ஆனது நீக்கப்பட வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கையாகும்.

இப்பெண்கள் குழுக்கள் இக்கோரிக்கையைப் பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச அரங்கங்களுக்கு எடுத்துச் சென்றுள்ளன. இதனால், முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்திலுள்ள பாரபட்சமான ஏற்பாடுகளைச் சீர்த்திருத்துமாறு அரசு மீது பாரிய அழுத்தம் கொடுக்கப்பட்டுவருகிறது. இதற்காக இப்பெண்கள், குறிப்பாகப் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் களச் செயற்பாட்டாளர்கள் கொடுக்கும் விலை பெரியது. அவர்கள் பௌத்த அடிப்படைவாதிகளுக்கு ‘(முஸ்லிம்) சமூகத்தைக் காட்டிக்கொடுப்பதாகவும்’​, முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளைப் பொது உரையாடலுக்கு எடுத்துச் செல்வதாகவும் பொய்யான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

ஆனால், முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்ட மறுசீரமைப்பை முன்னெடுப்பவர்களுக்கான உந்துதல் எளிமையானதொன்று. ஒரு குறித்த சமூகத்தினுள்ளும், குடும்பத்தினுள்ளும் உள்ளவர்கள் மீது மேற்கொள்ளப்படும் அநீதி மற்றும் பாகுபாடுகள் வெளிச்சக்திகளால் ஒரு குறித்த சமூகம் மீது பிரயோகிக்கப்படுவதாகும். இரண்டுமே சட்டத்தின் முன் சமத்துவத்திற்காகவும், சமனான நடத்துகைக்காகவுமான போராட்டங்களாகும். இரண்டுமே முழு அங்கீகாரம், உத்தரவாதம் மற்றும் உரிமைகளின் பாதுகாப்பு என்பவற்றுக்கான போராட்டங்களாகும். இரண்டுமே கௌரவம் மற்றும் நீதிக்கான போராட்டங்களாகும். முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்ட மறுசீரமைப்புச் செயற்பாட்டின் தற்போதைய இந்த அலையானது, முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த மற்றும் வெளியிலிருந்தான செயற்பாட்டாளர்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் அறிஞர்களின் குறிப்பிடத்தக்க வேலையை அடிப்படையாகக்கொண்டது என்பதோடு, அது குறைந்தபட்சம் 1951 ஆம் ஆண்டிலிருந்து கட்டமைப்பில் எந்தவொரு குறிப்பிடத்தகுந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாத படிப்படியான மறுசீரமைப்பை வலியுறுத்தி முன்னெடுத்தவர்களின் தோல்விகளையும் அடிப்படையாகக்கொண்டது என்பதையும் உணர்ந்துகொள்வது அவசியமாகும்.

சீர்திருத்தங்கள் நிறுத்தப்பட்டுள்ளதா?

2009 இல் அப்போதைய நீதியமைச்சர் மிலிந்த மொறகொடவினால் நியமிக்கப்பட்ட முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்ட மறுசீரமைப்புக் குழுவானது, நீதிபதி சலீம் மர்சூப் (ஜனாதிபதி சட்டத்தரணி, முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி, குழுவின் தலைவர்), நீதிபதி ஏ.டபிள்யு.ஏ. சலாம் (முன்னாள் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி), திரு. சுகத கமலத் (அப்போதைய நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர்), திரு. சிப்லி அஸீஸ் (ஜனாதிபதி சட்டத்தரணி, முன்னாள் சட்டமா அதிபர்), திரு. பைஸ் முஸ்தபா (ஜனாதிபதி சட்டத்தரணி, முன்னாள் அரச குற்றவழக்கு உதவிப் பணிப்பாளர்) பேராசிரியர் ஷர்யா ஸ்காரெங்குய்வெல் (மனித உரிமைக் கற்கைக்கான நிலையத்தின் நிர்வாகப் பணிப்பாளர்), திரு. முகம்மது மக்கீ (மேல் நிதிமன்ற நீதிபதி மற்றும் நீதிச்சேவை ஆணைக்குழுவின் முன்னாள் துணைச் செயலாளர், காலஞ்சென்ற) திரு. எஸ். எம். ஏ. ஜபார் (காதிமார் சபையின் முன்னாள் தலைவர்), கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி (முன்னாள் பணிப்பாளர், ஜாமிய்யா நளீமிய்யா), அஷ்-ஷெய்க் முகம்மது மக்தூம் அகம்மது முபாரக் (முன்னாள் தலைவர், ஜம்இய்யத்துல் உலமா), அஷ்-ஷெய்க் முகம்மது இப்ராஹிம் முஹம்மது ரிஸ்வி முப்தி (தலைவர், ஜமியத்துல் உலமா), தேசபந்து திருமதி. ஜெசீமா இஸ்மாயில் (தேசிய மகளிர் குழு மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு என்பவற்றின் முன்னாள் உறுப்பினர்), திரு. ரஸ்மரா ஆப்தீன் (சட்டத்தரணி), திருமதி. சபானா குல் பேகம் (சட்டத்தரணி), திருமதி. பஸ்லெத் சகாப்தீன (சட்டத்தரணி), திருமதி. ஷெர்மிலா ரசூல் (முன்னாள் தேசியத் திட்ட ஒருங்கிணைப்பாளர், நீதியை அணுகுதல் திட்டம், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம்)ன, செல்வி. டில்ஹாரா அமரசிங்க (அப்போதைய மேலதிக செயலாளர், மற்றும் திரு. ஏ. கே. டி. டி. அரந்தார, அமைச்சின் அப்போதைய துணைச் செயலாளர்) ஆகியோரைக் கொண்டுள்ளது.


“முஸ்லிம் தனியாள் சட்டத்தைத் திருத்துவதில் மதத் தலைவர்களை நம்ப இயலாது”


இவர்கள் எல்லோரும் படித்த நபர்கள் என்பதுடன், தத்தமது துறையில் சிறந்து விளங்குபவர்கள். இவர்கள் அனைவரும் இக் குழுவின் அங்கத்தவர்களாக இருக்க ஒப்புக்கொண்டமையானது, அவர்கள் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும் என உறுதியாக நம்பியதைச் சுட்டிக்காட்டுகிறது. ஆயினும், குழு உறுப்பினர்கள் (முஸ்லிம்) சமூகத்துக்குப் பல வாக்குறுதிகளை வழங்கியபோதும், கடந்த எட்டு வருடங்களாக எந்தவொரு பெறுபேறுகளையும் அளிக்காது இழுத்தடிப்புச் செய்தவாறு உள்ளனர். பல திகதிகளும், காலக்கெடுக்களும் அளிக்கப்பட்டு, இப்போது அவர்களது அறிக்கையைப் பரிசீலிப்பதற்கு ஒரு அமைச்சரவை உபகுழுவும் நியமிக்கப்படுள்ளபோதிலும் இதுவரை எந்தவொரு முடிவும் எய்தப்படவில்லை. கடந்த ஆண்டின் பிற்பகுதியில், குழுவின் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் எனக் குழுவின் தலைவர் அறிவித்திருந்தார். எனவே, கலந்தாய்வின் அடிப்படையில் வரைவறிக்கை ஒன்று குழுவினரிடையே குழுத் தலைவரால் விநியோகிக்கப்பட்டுள்ளது என நம்பப்பட்டது. இப்போது அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையிடமிருந்து (ACJU) இன்னுமொரு முன்மொழிவொன்று குழுவிடம் முன்வைக்கப்பட்டுள்ளது என நான் அறிகிறேன். இது அனேகமாக தீர்வினை வழங்குவதைப் பின்னடையச் செய்யும் நோக்கிலேயே மேற்கொள்ளப்பட்டிருக்கக்கூடும்.

இச்சீர்திருத்த அறிக்கை பற்றிச் சிந்திப்பதற்கும், கலந்துரையாடுவதற்கும் குழு உறுப்பினர்கள் எடுத்துக்கொண்ட கடந்த எட்டு ஆண்டுகளில், அவர்களது சொந்தச் சமூகத்திலேயே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிராக எவ்வளவு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பது பற்றி அவர்களுக்குப் புரிகிறதா? எவ்வாறு அவர்களால் இப்படி உணர்வற்றவர்களாக இருக்க முடிகிறது? இஸ்லாம் உண்மையில் மற்றொரு வாழ்க்கை முறையே என்பதை நிரூபிப்பதிலிருந்து அவர்கள் தலைவர்களாக எவ்வாறு தோல்வியடைகின்றனர்? சட்டச் சீர்திருத்தங்களினூடு தீர்வுகளை அளிக்கத் தவறுவதானது எவ்வாறு பல உயிர்களை மோசமாகப் பாதிக்கிறது என்பது பற்றி அவர்களுக்குப் புரியவில்லையா? இல்லை, ஆண் மதத் தலைவர்கள் மத்தியில் அவர்களுக்குக் கிடைக்கும் மதிப்பு அவர்களின் மனிதத்தன்மையை மழுங்கடிக்கிறதா?

இச் சீர்திருத்தக் குழுவிலுள்ள புகழ்பெற்ற சட்டத்தரணிகளும், ‘முற்போக்கு’ முஸ்லிம் உரிமைச் செயற்பாட்டாளர்களும், (முஸ்லிம்) சமூகத்தின் சில பிரிவுகளின் பிர்போக்குத்தனத்திற்கும், கோழைத்தனமான செயல்களுக்கும் எதிராக நின்று, முஸ்லிம் பெண்களுக்குச் சட்டத்தின் முன் சமமாக நடத்தப்படுவதற்கான அவர்களது உரிமையை அவர்களுக்கு அளிக்க ஏதுசெய்வார்களா? இல்லை குருடர்களாக இருந்து பழமைவாதிகளுக்கும், மத அடிப்படைவாதிகளுக்கும் பலியாகப்போகிறார்களா?

முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தமட்டில், முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்திலுள்ள பாரபட்சமான ஏற்பாடுகளை ஆதரிப்பதன் மூலம் இஸ்லாத்தைப் ‘பாதுகாப்பதாக’ நம்பிக்கொண்டிருக்கும் மத மற்றும் அரசியல் தலைவர்களே, உங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் சலுகைகளைச் சரிபார்த்துக்கொள்ளுங்கள். இஸ்லாத்தின் பெயரில் நீங்கள் உண்மையாகவே பாரபட்சங்களை  நியாயப்படுத்த முயற்சிசெய்கிறீர்களா? ஒரு முஸ்லிம் பெண் என்ற வகையில், ஒருவரது பால்நிலையைக் கருத்திற்கொள்ளாது, கருணை மற்றும் கண்ணியம் பற்றிப் பேசும், நீதியானதொரு இஸ்லாத்தையே நான் நம்புகிறேன். இஸ்லாமும், நான் நேசிக்கும் நீதியான கடவுளும், சர்வாதிகார சக்திகளால் விழுங்கப்பட்டு, நான் இணக்கமாக உணரமுடியாததொன்றாக மாற்றப்படுவதைப் பார்ப்பதென்பது வேதனையானதொன்று. இஸ்லாத்தின் பெயரில் செயற்படுத்தப்படும் நீதியற்ற சட்டங்களும், நடைமுறைகளும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாதவை என்பதுடன், அவை முஸ்லிம்களிடையே கூடுதலான சமத்துவமின்மைக்கே வழிகோலும். இலங்கை முஸ்லிம்களுக்கான சமத்துவம் மற்றும் நீதிக்கான தேடலானது வீட்டிலிருந்தே ஆரம்பிக்கப்படவேண்டும்.

ஷ்ரீன் அப்துல் சரூர்