பட மூலம், sky News

ஈராக்கின் சுயாட்சிப் பிராந்தியமான குர்திஸ்தான் சில தினங்களுக்கு முன்னர் தனிநாடாக பிரிந்து செல்வதற்கான பொதுசன வாக்கெடுப்பை நடத்தியிருந்தது. 77 வீதமான மக்கள் வாக்கெடுப்பில் பங்குகொண்டிருந்தனர். இதில் 93 வீதமான மக்கள் பிரிந்து செல்வதற்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றனர். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் புதிய நாடொன்று உதயமாவதற்கான மக்கள் அங்கிகாரம் கிடைக்கப்பெற்றிருக்கிறது. இந்த விடயம் ஜரோப்பாவைத் தளமாகக் கொண்டியங்கிவரும் புலம்பெயர் அமைப்புக்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. ஒருவேளை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இன்றும் நிலைகொண்டிருந்தால் இந்த உற்சாகம் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களையும் தொற்றியிருக்கும். அவர்களும் இதனை கொண்டாடியிருப்பர்.

மேற்படி பொதுசன வாக்கெடுப்பு தொடர்பில் ஈராக் கடுமையான நெருக்கடிகளைக் கொடுத்திருந்தது. அதனுடன் இணைந்து சிரியா, துருக்கி ஆகிய நாடுகளும் இராஜதந்திர நெருக்கடிகளை ஏற்படுத்தியிருந்தன. இஸ்ரேலை தவிர மத்திய கிழக்கிலுள்ள எந்தவொரு நாடும் இதனை ஆதரித்திருக்கவில்லை. அமெரிக்க இராஜங்கத் திணைக்களமும் இந்த வாக்கெடுப்பு தொடர்பில் எச்சரித்திருந்தது. இது முன்னெடுக்கப்படுமாக இருந்தால் குர்திஸ்தானுக்கான பொருளாதார உதவிகளை நிறுத்த வேண்டிவரும் என்றும் எச்சரித்திருந்தது. ஆனாலும் திட்டமிட்டவாறு பொதுசன வாக்கெடுப்பு முன்னெடுக்கப்பட்டது. மக்கள் பிரிந்து செல்வதையே தெரிவு செய்திருக்கின்றனர். இது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. உண்மையில் இது போன்றதொரு வாக்கெடுப்பை நடத்துவதற்கான ஏற்பாடுகளை குர்திஸ்தான் 2014இலேயே மேற்கொண்டிருந்தது எனினும், இராஜதந்திர அழுத்தங்களினால் அது நிகழவில்லை. ஆனால், இரண்டு வருடங்கள் கழித்து அது நிறைவேறியிருக்கிறது.

1971இல் பங்களாதேஷ் என்னும் புதிய நாடொன்று உதயமானபோதும் அது ஈழத்து அரசியல் செயற்பாட்டாளர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தது. முக்கியமாக ஈழத் தமிழர் அரசியல் ஆயுத விடுதலைப் போராட்டமாக பரிணமித்ததற்கும் அதுவே காரணம். இதன் விளைவாவே 1976இல் வட்டுக் கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும். 1977 பொதுத் தேர்தலின் போது தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாக்களித்து, பிரிந்து செல்வதற்கான ஆணையையும் வழங்கியிருந்தனர். ஆனால், அன்றைய சூழலில் தமிழர் அரசியல் தெற்காசிய பிராந்தியத்திற்கு வெளியில் பேசப்படும் ஒரு விடயமாக இருந்திருக்கவில்லை. 1983களில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு நடவடிக்கையை தொடர்ந்து பிராந்திய சக்தியான இந்தியா, இலங்கையின் பிரச்சினையில் நேரடியாக தலையீடு செய்ய எத்தணித்தது. இதன் பின்னர் தமிழ் இயக்கங்களுக்கு இந்தியா ஆயுத பயிற்சியளித்ததும் அதன் பின்னர் நடந்த விடயங்கள் தொடர்பில் இங்கு விளக்கிச் சொல்ல வேண்டியதில்லை. இந்தியப் படைகள் இலங்கைத் தீவை விட்டுச் சென்றதன் பின்னரான இலங்கையின் அரசியல் சூழல் என்பது ஒரு முழுமையான உள்நாட்டு யுத்தத்திற்கான காலமாகவே நீண்டு சென்றது.

2009இல் விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்படும் வரையில் தமிழ் மக்களுக்கென்று ஒரு நடைமுறை அரசை விடுதலைப் புலிகள் வைத்திருந்தனர். அவ்வாறானதொரு சூழலில் ஒரு பொதுசன வாக்கெடுப்பு நடத்துவதற்கு உலகம் இணங்கியிருந்தால் இன்று இலங்கை இரண்டாகியிருக்கும். ஏனெனில், அதற்கான சகல கட்டுமானங்களும் விடுதலைப் புலிகளிடம் இருந்தது. ஆனால், விடுதலைப் புலிகளின் நடைமுறை அரசை உலகம் அங்கீகரித்திருக்கவில்லை. ஆனால், குர்திஸ்தான் பிராந்திய அரசின் (Kurdistan Regional Government) நிலைமை அப்படியான ஒன்றல்ல. இது ஏற்கனவே ஒரு சுயாட்சி அலகாக உலகால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. குர்திஸ்தான் தனக்கென்று ஒரு படைப்பிரிவு, பொருளாதார வளம் ஆகியவற்றை கொண்டிருந்தது. எந்தவொரு நாட்டிலும் தங்கியிருக்க வேண்டிய தேவையற்ற வகையில் ஒரு தனிநாட்டை நிர்வகிக்கக் கூடிய அனைத்து ஆற்றலுடனும் இருந்தது. இவ்வாறானதொரு சூழலில்தான் மத்திய கிழக்கு நாடுகளை மையப்படுத்தி நிகழ்ந்த பல்வேறு விடயங்களும் ஒரு அமைதியான வாக்கெடுப்பை நடத்தி வெற்றி பெறுவதற்கான சூழலை குர்திஸ்தானுக்கு வழங்கியிருக்கிறது. அரபுலக எழுச்சி, அதனைத் தொடர்ந்து முழுப் பிராந்தியமும் ஒருவித பதற்ற நிலைக்கு தள்ளப்பட்டமை, ஜ.எஸ்.எஸ் தீவிரவாத அமைப்பினால் மத்திய கிழக்கில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகள் அனைத்தும் குர்திஸ்தானுக்கு சாதகமாக இருந்தது. இவற்றை சரியாக கணித்து பொருத்தமான நேரத்தில் பொதுசன வாக்கெடுப்பு என்னும் ஆயுதத்தைச் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறது குர்திஸ்தான். இவ்வாறானதொரு விடயத்தை செய்வதற்கு வலுவான தலைமை ஒன்று அவசியம். அவ்வாறானதொரு தலைமை குர்திஸ்தானிடம் இருந்தது. அதானாலேயே இந்த விடயத்தில் குர்திஸ்தானால் வெற்றிபெற முடிந்திருக்கிறது.

இந்த அனுபவங்களை முன்னிறுத்தி எங்களுடைய சூழலை உற்று நோக்கினால் எங்களுக்கும் குர்திஸ்தானுக்கும் மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசத்தை காணலாம். ஈழத்தமிழ் சூழலில் காணப்படும் மிகப் பெரிய குறைபாடு 2009இற்கு பின்னர் தமிழ் சமூகத்திற்கு ஒரு வலுவான தலைமை இல்லை. இவ்வாறானதொரு சூழலில்தான் புதிய அரசாங்கம் தாங்கள் நினைத்தவாறெல்லாம் விடயங்களை கையாண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாகவே தற்போது ஒரு இடைக்கால அறிக்கை வெளிவந்திருக்கிறது. இதிலுள்ள மிகவும் நகைச்சுவையான விடயம் என்னவென்றால் இடைக்கால அறிக்கையை தயார்செய்ய வழிகாட்டல் குழுவில் அங்கம் வகித்த அனைவரும் தனியாகவும் முன்மொழிவுகளை சமர்பித்திருக்கின்றனர். இந்த வழிகாட்டல் குழுவில் கூட்டமைப்பு சார்பில் இரா.சம்பந்தனும், சுமந்திரனும் பங்குபற்றியிருந்தனர். இதேபோன்று ஜக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, முஸ்லிம் காங்கிரஸ், மலையகக் கட்சிகள், ஜாதிக ஹெல உறுமய, ஜே.வி.பி. என பல கட்சிகளும் பங்குகொண்டிருந்தன. இவர்கள் அனைவரது கலந்தாலோசனையின் பெயரில்தான் இடைக்கால அறிக்கை தயாரிக்கப்பட்டது. ஆனால், தற்போது இதில் பங்குகொண்ட அனைத்து கட்சிகளும் தனித்தனியாக பிரத்தியேக முன்மொழிவுகளையும் வழங்கியிருக்கின்றனர். அவ்வாறாயின் இவர்கள் எதற்காக வழிகாட்டல் குழுவில் பங்குகொள்ள வேண்டும்? எதற்காக அனைவரும் கூடி மணிக்கணக்காக பேச வேண்டும்? இந்த ஒரு விடயமே போதுமானது, இவர்கள் எந்தளவிற்கு அரசியல் தீர்வு விடயத்தில் உண்மையாகவும் அக்கறையாகவும் இருந்திருக்கின்றனர் என்பதை விளங்கிக்கொள்வதற்கு. இடைக்கால அறிக்கையில் இருக்கின்ற விடயங்களே மிகவும் குறைவானது. தமிழர் தரப்பின் எதிர்பார்ப்புக்களை ஆகக் குறைந்த நிலையில் தீர்த்துவைக்கும் ஆற்றலைக் கூட இடைக்கால அறிக்கை உட்கொண்டிருக்கவில்லை. இந்த நிலையில் எதற்கு பிண்ணிணைப்புக்கள்?

இவ்வாறானதொரு சூழலில்தான் புதிய அரசியல் யாப்பிற்கான பொதுசன வாக்கெடுப்பு தொடர்பில் பேசப்பட்டு வருகிறது. பொதுசன வாக்கெடுப்பு என்பது பெரும்பான்யினால் தீர்மானிக்கப்படும் ஒன்று. இந்த நிலையில், தற்போது இடைக்கால அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் விடயங்கள்தான் புதிய அரசியல் யாப்பிற்கான உள்ளடக்கமாக இருக்குமானால் அதனை சிங்கள மக்கள் மத்தியில் விற்பது கடினமான விடயமல்ல. ஆனால், இதற்கு முதலில் மகா சங்கத்தினரின் ஆசீர்வாதத்தை அரசாங்கம் பெற வேண்டியிருக்கிறது. ஆனால், கேள்வி அவ்வாறானதொரு அரசியல் யாப்பை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளலாமா? அது சரியான ஒன்றாக இருக்குமா? இடைக்கால அறிக்கையில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சில சொற்பிரயோகங்கள் தமிழ் மக்கள் எக்காலத்திலும் தங்களின் அரசியல் உரிமைகளை கோர முடியாதவாறான ஏற்பாடுகள் சிலவற்றையும் உள்ளடக்கியிருக்கிறது. பிளவுபடுத்த முடியாத, பகுக்கப்பட முடியாத போன்ற சொற்கள் மிகவும் நுட்பமாக புகுத்தப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் இல்லை என்பதை தமிழ் மக்களே ஏற்றுக் கொள்கின்றனர். அதனை ஏற்றுக் கொண்டுவிட்டால் அதன் பின்னர் சுயநிர்ணய உரிமை தொடர்பில் பேசுவதற்கும் ஒன்றுமில்லை. இந்த விடயங்களை தமிழர் தரப்பை கொண்டே இணங்கச் செய்வதற்காகவே மேற்படி சொற்கள் மிகவும் நுட்பமாக உட்புகுத்தப்பட்டிருக்கின்றன. இதனடிப்படையில் சாதாரண தமிழ் மக்களுக்கு புதிய விளக்கங்களை சிலர் சொல்லக்கூடும். ஆனால், ஒரு விடயத்தை அனைவரும் விளங்கிக்கொள்ள வேண்டும். அதாவது, தந்தை செல்வா, அமிர்தலிங்கம் போன்ற சட்ட நிபுணர்களால் பேசிப் பெற முடியாத ஒன்றை இப்போதுள்ள ஒரு சிலரால் பெற்றுவிட முடியுமென்று எவரேனும் நம்பினால் அது மிகவும் தவறான ஒரு புரிதலாகும். அப்படிப்பட்ட அமிர்தலிங்கத்தையே, பயங்கரவாதத் தடைச் சட்ட விடயத்தில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன சர்வசாதாரணமாக ஏமாற்றியது வரலாறு. இன்றும் அதுதான் அரங்ககேறிக் கொண்டிருக்கிறது. தமிழர்களைக் கொண்டே தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மறுதலிப்பதே இதன் பின்னாலுள்ள மறைமுகத் திட்டம். இதனை தமிழ் மக்கள் ஏற்கப் போகின்றார்களா?

இன்றைய சூழலில் இவ்வாறானதொரு அரைகுறை தீர்வை தமிழர் தரப்பின் ஒத்தாசையுடன் தமிழ் மக்கள் மீது திணிப்பதற்கான புறச் சூழல் மிகவும் சாதகமாகவே இருக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டே கொழும்பின் ஆளும் வர்க்கம் ஒவ்வொரு காய்களையும் நகர்த்தி வருகிறது. களத்திலுள்ள மக்கள் கூட்டம் ஒரு விடயத்தை ஏற்றுவிட்டால், அதன் பின்னர் புலம்பெயர் சமூகம் பேசுவது எதுவுமே சபையேறாது. இது மிகவும் நன்கு திட்டமிடப்பட்ட ஒரு விடயம். ஆனால், இதனை குழப்பும் ஆற்றலோடு வடக்கு கிழக்கில் அமைப்புக்கள் எதுவும் இல்லை. அண்மையில் யாழ்ப்பாணத்தில் ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருக்கும் போது அவர் ஒரு விடயத்தை குறிப்பிட்டார். நீங்கள் ஒரு வலுவான தேசியத் தலைமை தொடர்பில் எழுதியும் பேசியும் வருகிறீர்கள், கூட்டங்களை கூட்டுகின்றீர்கள். ஆனால், நீங்கள் புதிய தலைமை ஒன்றிற்கான பொது உளவியலை கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. அது இல்லாமல் நீங்கள் கூறும் எந்தவொரு விடயத்தையும் சாத்தியப்படுத்த முடியாது என்றார். அவர் கூறிய விடயத்தை ஆழமாக யோசித்தால் அதில் ஒரு முக்கிய விடயம் இருக்கிறதுதான்.

பொதுவாக மக்களின் பொது உளவியல் என்பது ஒன்றில், வெற்றிப் பரவசத்தால் கட்டமைக்கப்படுகிறது அல்லது அச்சத்தால் உருவாகிறது. விடுதலைப் புலிகளின் தொடர்ச்சியான இராணுவ வெற்றிகள்தான் தமிழ் மக்களின் பொது உளவியலை கட்டிப் போட்டது. விடுதலைப் புலிகளால் ஏதொவொரு விடயம் சாத்தியப்படும் என்று அனைவருமே நம்பினர். ஆனால், அது நிகழாத போது அவர்களது பொது உளவியலில் நம்பிக்கையீனமே மேலோங்கியது. எனவே, இந்தப் பின்னனியில் 2009இற்கு பின்னரான கூட்டமைப்பின் செயற்பாடுகள் மக்களின் பொது உளவியலில் தாக்கம் செலுத்தக் கூடிய நிலையில் இருக்கவில்லை. இந்த நிலையில்தான் இரண்டாவது தொடர்பில் சிந்திக்க வேண்டியிருக்கிறது. நடைபெறப் போகும் (அந்த) ஒன்று தங்களின் எதிர்காலத்தை மிகவும் ஆழமாக பாதிக்கப் போகின்றது என்னும் அச்சம் ஏற்பட்டால் அந்த அச்சத்திற்கு காரணமான ஒன்றிற்கு எதிராகவே மக்கள் சிந்திக்கத் தலைப்படுவர். இது உலகெங்கும் பொதுவானது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூட, கடந்த தேர்தலின் போது வெள்ளையின உளவியலை இலக்குவைத்தே தனது பிரச்சாரங்களை முன்னெடுத்திருந்தார். அது அவருக்குப் பெரும் வெற்றியையும் பெற்றுக் கொடுத்தது.

எனவே, புதிய அரசியல் யாப்பு என்பது அப்படியான ஒன்றுதான் என்பதை தமிழ் மக்கள் உணரத் தொடங்கினால் அது நிச்சயம் அவர்களது பொது உளவியலில் தாக்கம் செலுத்தும். தங்களுக்கு எதிராகவே ஒரு பெரும் சூழச்சி நடைபெற்றுவருகிறது என்னும் அச்சவுணர்வு அவர்களை தொற்றிக் கொண்டால் அதுவே இன்றைய போக்கிற்கு எதிராக அவர்களை திருப்பும். ஆனால், இது தானாக நிகழாது. ஒரு அமைப்பை உருவாக்கி மக்கள் மத்தியில் தொடர்ந்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செயலாற்ற வேண்டும். இதனை மிகவும் வேகமாகவும் தாக்கம் மிக்கதாகவும் செய்ய வேண்டும். இல்லாவிட்டால நிலைமைகள் விரைவாக மாறிவிடும். அவ்வாறு செயற்படும்போது, அந்த அமைப்பு இயல்பாகவே மக்களின் பாதுகாவலனாக மாறிவிடும் சூழல் உருவாகும்.

யதீந்திரா