பட மூலம், Businesstoday

ஆட்சிமாற்றத்திற்கு பின்னர் மிகவும் அமைதியாக இருந்த முன்னாள் பாதுகாப்புச் செயலரான கோட்டாபய ராஜபக்‌ஷ இனியும் தான் அமைதிகாக்கப் போவதில்லை என்று தெரிவித்திருக்கின்றார். எலிய (வெளிச்சம்) என்னும் புதிய சிவில் சமூக அமைப்பொன்றை அறிமுகம் செய்யும் நிகழ்விலேயே கோட்டாபய இவ்வாறு தெரிவித்திருக்கின்றார். புதிய அரசியல் யாப்பு என்னும் பெயரில் பிரிவினைவாதிகளை திருப்திப்படுத்தும் முயற்சிகள் இடம்பெறுவதாக குறிப்பிட்டிருக்கும் அவர், புதிய அரசியல் யாப்பை எதிர்த்து களமிறங்கப் போவதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். இதிலிருந்து கோட்டாபய புதிய அரசியல் அமைப்பை எதிர்த்தல் என்பதையே தனது அரசியல் பிரவேசத்திற்கான துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தப் போகின்றார் என்பதில் ஜயமில்லை. புதிய அரசியல் யாப்பு தொடர்பான வழிகாட்டல் குழுவின் அறிக்கை இம்மாதம் வெளிவரவுள்ள நிலையிலேயே கோட்டாபய நேரடியாக களமிறங்கியிருக்கின்றார். இதிலிருந்து கோட்டாபய சரியானதொரு தருணத்திற்காக காத்திருந்திருக்கின்றார் என்பது தெளிவு.

சில தினங்களுக்கு முன்னர் சம்பந்தன் புதிய அரசியல் யாப்பிற்கு ஆதரவு தருமாறு மஹிந்த ராஜபக்‌ஷவிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில்தான், கோட்டாபயவின் புதிய அமைப்பு உதயமாகியிருக்கிறது. இந்தச் சந்திப்பின் போது மஹிந்த ராஜபக்‌ஷவினால்தான் இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியுமென்று சம்பந்தன் தெரிவித்ததார் என்றும், ஆனால் மஹிந்தவோ புதிய அரசியல் யாப்பு ஒன்று தற்போதைக்கு அவசியமில்லை என்று பதிலளித்ததாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. மஹிந்தவின் பங்களிப்பின்றி புதிய அரசியல் யாப்பு விவகாரத்தை எதிர்கொள்ள முடியாது என்பதை சம்பந்தன் விளங்கிக் கொண்டிருப்பதன் விளைவே மேற்படி சந்திப்பு எனலாம். ஏனெனில், தெற்கின் அரசியல் ஒழுங்கை குழப்பும் ஆற்றல் மஹிந்த தரப்பிடம் உண்டு. இந்த நிலையில், மஹிந்தவின் ஆதரவின்றி புதிய அரசியல் யாப்பு என்னும் விடயம் சாத்தியப்படப் போவதில்லை என்பதை அனுபவம் வாய்ந்த சம்பந்தன் நன்கறிவார். இந்த நிலையில்தான் சம்பந்தன், மஹிந்தவைச் சந்தித்து ஆதரவு கோரியிருந்தார். ஆனால், நிலைமைகளோ சம்பந்தனின் எதிர்பார்ப்பிற்கு முற்றிலும் மாறாக இருக்கிறது. தெற்கின் அரசியல் நிலைமைகளை சரியாக உற்று நோக்கினால் புதிய அரசியல் யாப்பு என்னும் விடயம்தான் ராஜபக்‌ஷாக்கள் மீளவும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான வாய்ப்பை வாரி வழங்கப் போகின்றதா என்னும் கேள்வியெழுகிறது. ஏற்கனவே கலாநிதி தயான் ஜயதிலகவும் அவரது ஆலோசனைகளால் வழிநடத்தப்படும் சிங்கள தேசியவாத குழுவினரும் 2020இல் கோட்டாபயவை ஜனாதிபதியாகவும் மஹிந்தவை பிரதமராக ஆக்குவதற்கான திட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர். கோட்டாபயவின் வெளிச்சம் அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாகக் கூட இருக்கலாம்.

ராஜபக்‌ஷாக்களின் அரசியல் நகர்வுகளுக்குப் பின்னால் தயான் ஜயதிலக போன்றவர்களின் பலமான ஆலோசனை உண்டு. அண்மையில் தயான் ஜயதிலக, பேராசிரியர் பீரிஸ், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் வட கிழக்கு மாகாண சபையின் முன்னைநாள் செயலாளர் கலாநிதி விக்கினேஸ்வரன் ஆகியோர் ஒரு நேரடி கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர். இதனையும் கோட்டாபயவினால் வழிநடத்தப்படுவதாகச் சொல்லப்படும் சிறிலங்கா இன்ங் என்னும் அமைப்பே ஒழுங்கு செய்திருந்தது. இந்தக் கலந்துரையாடலில் புதிய அரசியல் யாப்பு, அதற்கான பொதுசன வாக்கெடுப்பு தொடர்பில் சுமந்திரன் தனது வாதங்களை முன்வைத்திருந்தார். இதனை எதிர்த்து வாதிட்ட தயான் ஜயதிலக ஒற்றையாட்சி முறைமையை மாற்றக் கூடாது என்பதற்கு தனது நிலையில் எதிர்வாதங்களை முன்வைத்திருந்தார். அரசியல் யாப்பை மாற்ற வேண்டியதில்லை, ஆனால் அரசியல் யாப்பில் மாற்றங்களை மேற்கொள்ளலாம் என்பதே தயான் ஜயதிலகவின் வாதமாக இருந்தது. 75000 இந்தியப் படையினர் தங்களது நெற்றியில் துப்பாக்கியை வைத்து அழுத்திக் கொண்டிருந்த போது கூட தாங்கள் 13ஆவது திருத்தச் சட்டத்தைத் தாண்டிச் செல்வதை ஏற்றுக்கொள்ளவில்லை. விடுதலைப் புலிகள் கொழும்பை தாக்கிக் கொண்டிருந்த போது கூட நாங்கள் 13ஆவது திருத்தச் சட்டத்தைத் தாண்டிச் செல்வதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவ்வாறிருக்கின்ற போது தற்போது எதற்காக ஒற்றை ஆட்சி முறைமையை மாற்ற வேண்டும்? யாருக்காக அதைச் செய்ய வேண்டும்? ஜெனிவா பிரேரணையில் கூட 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் செல்வதற்கான அழுத்தங்கள் இல்லை. தயானின் தர்க்கங்களை சுமந்திரன் வலுவாக எதிர்கொண்டிருக்கவில்லை. ஏனெனில், தயான் ஒரு சிங்கள தேசியவாதியாகவே தன்னுடைய வாதங்களை முன்வைத்திருந்தார். ஆனால், சுமந்திரனோ வெறும் சட்டத்தரணியாக நின்று கொண்டிருந்தார். இதனால், தயானின் வாதங்களை சுமந்திரனால் வலுவாக எதிர்கொள்ள முடியவில்லை. ஏனெனில், சுமந்திரனால் ஒரு தமிழ் தேசியவாதியாக தன்னை நிலைநிறுத்த முடியாது. அதற்கு அவர் தயாராகவும் இல்லை.

இந்த இடத்தில் தயானின் வாதங்களை சுட்டிக் காட்டுவதற்கு ஒரு தெளிவான காரணம் உண்டு. அதாவது, தயானின் புரிதல்தான் தெற்கின் தேசியவாத சக்திகளின் புரிதல். அவ்வாறான தேசியவாதிகள் மத்தியில் தயான் ஒரு கருத்தியல் ஆயுதமாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறார். எனவே, ஒற்றையாட்சி முறைமையை மாற்றியமைக்கும், பெளத்தத்திற்கான முன்னுரிமையை இல்லாதொழிக்கும் ஒரு புதிய அரசியல் யாப்பை எதிர்ப்பதில் சிங்கள – பெளத்த – கிறிஸ்தவ – மாக்ஸிய தேசியவாதிகள் அனைவரும் ஒன்றுபடப் போவது நிச்சயம். தயான் ஒரு பௌத்தர் அல்லர். இந்த நிலைமையை மாற்றியமைக்கக் கூடிய ஆற்றல் தற்போதைய சூழலில் ராஜபக்‌ஷாக்களுக்கு மட்டுமே உண்டு. ஆனால், அவர்கள் அதனை செய்ய மாட்டார்கள். ஏனெனில், அவர்கள் கைநழுவ விட்ட அதிகாரத்தை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு கிடைத்திருக்கும் ஒரு அரிய வாய்ப்பாகவே புதிய அரசியல் யாப்பை கருதுகின்றனர்.

கோட்டாபாய குறைத்து மதிப்பிடக்கூடிய ஒரு நபரல்ல. ஒஸ்லோவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் எரிக் சொல்ஹெய்ம் பேசுகின்ற போது குறிப்பிட்டிருந்த விடயம் நினைவுக்கு வருகிறது. இந்த உலகிலேயே விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடிக்க முடியும் என்று எவருமே நம்பியிருக்கவில்லை ஆனால், அதில் ஒருவர் மட்டுமே வதிவிலக்காக இருந்தார். அது கோட்டாபய ராஜபக்‌ஷ மட்டுமே. எனவே, கோட்டாபயவின் மீது சிங்கள தேசிய வாதிகள் நம்பிக்கை வைப்பதற்கு நியாயமான காரணங்கள் உண்டு. இந்த நிலையில் கோட்டாபயவும் ஏனைய ராஜபக்‌ஷாக்களும் புதிய அரசியல் யாப்பிற்கு எதிராக நேரடியாக களமிறங்கினால் நிலைமைகள் நிச்சயமாக தலைகீழாக மாறலாம். புதிய அரசியல் யாப்பை அரசாங்கம் கைவிடலாம் அல்லது சிங்கள தேசியவாதிகளின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் அதனை மாற்றியமைக்கலாம். சிங்கள தேசியவாதிகளின் விருப்பம் எப்போதும் 13ஆவதுக்கு உள்தான் வட்டமிடும். ஏனெனில், அதனைத் தாண்டிச் செல்ல வேண்டிய எந்தவொரு நிர்பந்தமும் அவர்களிடம் இல்லை.

அண்மையில் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூட உச்ச நீதிமன்றம் சமஷ்டியை பிரிவினையல்ல என்று வழங்கிய தீர்ப்பை சுட்டிக் காட்டியிருந்தார். இதனை தமிழர்கள் சாதகமாகப் பயன்படுத்தலாம் என்றும் சிலர் சொல்லுகின்றனர். இங்கு விடயம் உச்சநீதிமன்றம் உண்மையை கூறியிருக்கிறது. அதாவது, சமஷ்டி என்பது பிரிவினையல்ல. அது உண்மைதான். ஆனால், அது ஒரு வாக்கெடுப்பிற்கு விடப்படுமானால் அதனை தீர்மானிக்கப் போவது சாதாரண சிங்கள மக்களே அன்றி உச்சநீதிமன்றமல்ல. ஆனால், அவ்வாறானதொரு வாக்கெடுப்பு இடம்பெறுவதையும் சிங்கள தேசியவாத சக்திகள் விரும்பவில்லை. இதற்கும் தயான் கூறும் விளக்கமொன்று இருக்கிறது. அதாவது, அவ்வாறானதொரு வாக்கெடுப்பு, அதில் புதிய அரசியல் யாப்பு தோற்கடிக்கப்பட்டால் கூட அதுவும் நாட்டிற்கு ஆபத்தே. ஏனெனில், அதன் பின்னர் அதனை பிரிவினைக்கான ஒரு அங்கீகாரமாக தமிழர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள். எனவே, பொதுசன வாக்கெடுப்பு என்பதும் சிங்களவர்களுக்கு எதிரான ஒன்றே. இவ்வாறான விளக்கங்களே இனி சிங்கள மக்கள் மத்தியில் விதைக்கப்படப் போகின்றன. அதற்கு கோட்டாபய தலைமையேற்பார். ஏனைய ராஜபக்‌ஷாக்கள் அதற்குப் பக்கபலமாக களமிறங்குவர். இந்த நிலையில், சம்பந்தன் என்ன செய்யப் போகின்றார்? மஹிந்தவிடம் சென்றது போல் கோட்டாபயவிடமும் சென்று பேசப் போகின்றாரா? இதில் ரணில் விக்கிரமசிங்கவின் நிகழ்ச்சிநிரல் மிகவும் தெளிவானது. பழியை ராஜபக்‌ஷாக்கள் மீது போட்டுவிட்டு அவர் ஒதுங்கிவிடுவார். நாங்கள் சரியானதைச் செய்ய முயற்சித்தோம். ஆனால் அவர்கள் குழப்பிவிட்டனர் என்பதே இறுதியில் சம்பந்தனுக்கு கிடைக்கப் போகும் பதிலா?

யதீந்திரா