பட மூலம், ColomboTelegraph

மஹிந்த ராஜபக்‌ஷவுடன் இணைந்து செயற்பட விரும்புவதாக சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார். ‘தமிழ் வினைச் சொற்களை விபரித்தல்’ என்னும் தலைப்பில் ஜூலம்பிட்டியே மங்கள தேரரால் எழுதப்பட்ட நூல் வெளியீட்டில் பங்குகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெவித்திருக்கிறார். இந்த நூல் வெளியீட்டில் மஹிந்த ராஜபக்‌ஷவும் பங்குகொண்டிருந்தார். சில தகவல்களின்படி இந்த நூல் வெளியீட்டில் பங்குகொள்ளக் கூடிய நிலையில் மஹிந்த ராஜபக்‌ஷ இருந்திருக்கவில்லை. அந்த நேரத்தில் அவருக்கு கொழும்பு நகரத்திலிருந்து வெகு தொலைவில் நிற்கவேண்டிய தேவையிருந்திருக்கிறது. எனினும், சம்பந்தனும் இதில் பங்குகொள்கின்றார் என்பதை அறிந்தபோது தனது வேலைகளையும் புறம்தள்ளிவிட்டு இதில் பங்குகொண்டிருக்கிறார். தமிழர் தரப்புடன் உறவை ஏற்படுத்திக் கொள்ளும் ஆர்வம் மஹிந்தவிற்குள் இருந்திருக்கலாம். அதனால் சம்பந்தன் பேசும் நிகழ்வில் தானும் பங்குகொள்ள வேண்டுமென்பதில் அவர் ஆர்வத்தை காண்பித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் சம்பந்தனும் மஹிந்தவும் ஒரே மேடையில் பேசியிருப்பது இதுவே முதல் தடவையாகும். இந்த முதலாவது சந்தர்ப்பத்திலேயே மஹிந்தவுடன் இணைந்து பணியாற்றும் விருப்பத்தை சம்பந்தன் வெளிப்படுத்தியிருக்கின்றார். புதிய ஆட்சியின் மீதான சம்பந்தனின் நம்பிக்கை புஸ்வானமாகிக் கொண்டிருக்கும் சூழலில்தான் சம்பந்தன் இவ்வாறானதொரு கருத்தை பகிரங்கமாக தெரிவித்திருக்கின்றார். புஸ்வானத்தின் திரியை பற்றவைத்ததும், அது தீப்பொறியை கக்கிக்கொண்டு சீறியெழும். ஆனால், கொஞ்ச நேரத்தில் அதன் தீச்சுவாலையை முற்றிலும் இழந்து ஒரு சிறிய சத்தத்துடன் தன் கதையை முடித்துக்கொள்ளும். கிட்டத்தட்ட இந்த அரசாங்கத்தின் மீதான கவர்சியும் அப்படியான ஒன்றுதான். அதனால்தான் புஸ்வானம் என்னும் சொல்லை இங்கு பயன்படுத்தியிருக்கிறேன். இந்த அரசாங்கம் ஆரம்பத்தில் மிகவும் கவர்ச்சிகரமானதாகவும் அபூர்வமான ஒன்றாகவும் பார்க்கப்பட்டது. சம்பந்தன் செல்லும் இடமெல்லாம் மைத்திரிபால சிறிசேனவையும் அரசாங்கத்தையும் புகழ்வதையே தனது பிரதான அரசியல் பணியாகச் செய்துகொண்டிருந்தார். ஆனால், சம்பந்தனின் நம்பிக்கைக்கு மாறாகவே விடயங்கள் நடந்துகொண்டிருந்தன. இவ்வாறு செயற்பட்ட சம்பந்தன்தான் தற்போது ஜனாதிபதியும் பிரதமரும் பிரிந்துவிடக்கூடாது என்றும் குறிப்பிடுகின்றார். உண்மையில் ஜனாதிபதியும் பிரதமரும் பிரிந்தால் முதலில் பாதிக்கப்படப் போது சம்பந்தன்தான். ஏனெனில், சம்பந்தன் எதிர்க்கட்சிப் பதவியை பறிபோய்விடும். அரசாங்கத்திற்குள் நாளுக்குநாள் உள் முரண்பாடுகள் தீவிரமடைந்து செல்கின்றன. எந்தவொரு விடயத்தையும் ஒன்றிணைந்து முன்னெடுக்க முடியாத சூழல்நிலை தோன்றியிருக்கிறது. இந்த நிலையில் இந்த அரசாங்கம் எவ்வாறு புதிய அரசியல் யாப்பை கொண்டுவரப் போகிறது? அதற்கான பெதுசன அபிப்பிராய வாக்கெடுப்பை நடத்தப் போகிறது? இப்படியான கேள்விகளுக்கு சம்பந்தனிடம் நிச்சமாகப் பதில் இல்லை. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் மஹிந்தவுடன் இணைந்து செயற்படும் விருப்பத்தை சம்பந்தன் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2015 ஜனவரியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது அதில் தமிழ் மக்களுக்கு ஒரு பிரதான பங்கிருந்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு, பேரம்பேசலில் ஈடுபடலாம் என்றவாறான கருத்து தமிழ்த் தேசியத் தரப்பினர் மத்தியில் இருந்தது. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் மத்தியிலும் அவ்வாறானதொரு கருத்தே இருந்தது. ஆனால், சம்பந்தன் ஆட்சி மாற்றம் தொடர்பில் விரிவாக ஆராய்ந்து செயற்படுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கவில்லை. தன்னிச்சையாகவே முடிவுகளை எடுத்திருந்தார். தன்னுடைய முடிவுகளை விமர்சித்தவர்களை மஹிந்தவின் ஆதரவாளர்களாகவே சித்தரிக்க முற்பட்டார். எந்தவொரு உடன்பாடுமின்றி செல்வது சரியான ஒன்றல்ல. அது மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும் என்று இப்பதியாளர் உள்ளடங்கலாக சிலர் எழுதியிருந்தனர். ஆனால், அவ்வாறானவர்களும் மஹிந்தவின் ஆட்களாகவே சித்தரிக்கப்பட்டனர். இன்று அதே சம்பந்தன் மஹிந்தவுடன் இணைந்து செயற்பட விரும்புவதாக கூறுகின்றார். இந்த இடத்தில் ஒரு கேள்வியை கேட்கலாம் – அவ்வாறாயின் ஏன் மஹிந்த ஆட்சியில் இருந்த காலத்தில் இந்த விருப்பத்தை சம்பந்தன் வெளிப்படுத்தியிருக்கவில்லை?

2009இற்குப் பின்னர் இடம்பெற்ற இரண்டு தேர்தல்களின் போதும் சம்பந்தன் மஹிந்தவிற்கு எதிரானவர்களையே ஆதரித்திருந்தார். 2010இல் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்திற்கு தலைமை தாங்கிய சரத் பொன்சேகாவிற்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்கள் கோரப்பட்டனர். இறுதி யுத்தத்தின் போது, தமிழ் மக்களுக்கு எதிராக மிகப் பெரியதொரு அநியாயம் நிகழ்ந்த பின்னரும் கூட, ஒரு இராணுவத் தளபதியை தமிழ் மக்களால் ஆதரிக்க முடிந்திருக்கிறது. இதனால், தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியாக எந்தவொரு நன்மையும் கிட்டவில்லை. அரசியலில் ஒரு முடிவை எடுக்கும் போது முதலில் எங்களுக்குள் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி – இதனால் எங்களுடைய மக்களுக்கு கிடைக்கப் போவது என்ன? ஒரு முடிவால் 60 விகிதம் நன்மையும் 40 விகிதம் பாதிப்பும் வருமென்றால் அந்த முடிவை நோக்கிச் செல்வதில் தவறில்லை. ஆனால், நாங்கள் எடுக்கும் ஒரு முடிவால் இறுதியில் எந்தவொரு நன்மையுமே கிடைக்கவில்லை என்றால் அந்த முடிவை எவ்வாறு சரியான முடிவென்பது?

சரத் பொன்சேகா போன்ற ஒருவரை ஆதரிப்பதால் எந்தவொரு நன்மையும் இல்லையென்றால் பின்னர் ஏன் அவ்வாறானதொரு முடிவை எடுக்க வேண்டும்? ராஜபக்‌ஷதான் வெல்லப் போகின்றார் என்பதை தெரிந்து கொண்டும், சரத் பொன்சேகாவை ஆதரித்ததால் தமிழ் மக்களுக்குக் கிடைத்த வசப்பிரசாதங்கள் என்ன? உண்மையில் இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஒரு தலைமை செய்ய வேண்டியது ஒருவரையும் ஆதரிக்காமல் விடுவதுதான்? ஆனால், சம்பந்தன் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் மஹிந்தவிற்கு எதிரானவர்களுடனே நின்றார். ஆட்சி மாற்றத்தின் போது கூட மஹிந்தவுடன் பேசுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. சந்திரிக்கா – மைத்திரி – ரணில் கூட்டு, மஹிந்தவைக் காரணம் காண்பித்து உடன்பாட்டை தவிர்த்துக் கொண்டபோது அதனை எந்தவொரு கேள்வியுமற்று சம்பந்தன் ஏற்றுக்கொண்டார்? அவ்வாறு ஒரு உடன்பாடின்றி சென்றதால் தமிழ் மக்களுக்கு கிடைத்த நன்மைகள் என்ன? சில காணிகள் விடுவிக்கப்பட்டிருக்கின்றன என்று எவரேனும் சொல்ல முற்பட்டால் அவர்களுக்கான ஆகச் சிறந்த பதில் இதுதான் – தமிழ் மக்களின் காணியை தமிழ் மக்களுக்குக் கொடுப்பதில் என்ன சிறப்பு இருக்கிறது?

இந்த இடத்தில் இப்படியொரு கேள்வியை ஒருவர் முன்வைக்கலாம் – அதாவது, மஹிந்தவுடன் சம்பந்தனை பேசுமாறு கூறுகின்றீர்களே, ஆனால் மஹிந்தவுடன் பேசிய போதும் கூட, அவர் இந்தப் பிரச்சினைகளை தீர்க்கும் விருப்பம் கொண்டவராக இருக்கவில்லையே. பின்னர் எவ்வாறு ஆட்சி மாற்றத்தின்போது மஹிந்தவுடன் பேசியிருக்க முடியும்? தேர்தலில் தோல்வியடைந்ததும் மஹிந்த செய்த முதல் வேலை இந்தியாவை குற்றம் சாட்டியதுதான். இந்திய உளவுத்துறையின் சதியால்தான் தான் தோற்கடிக்கப்பட்டதாகவே மஹிந்த கூறியிருந்தார். ஆனால், அவ்வாறான மஹிந்தவை, இந்தியாவின் பிரதமர் சந்திக்கிறார்தானே. மஹிந்த இந்தியாவை விமர்சித்தார் என்பதற்காக மஹிந்தவுடனான உறவுகளை இந்தியா துண்டித்துக் கொள்ளவில்லையே – ஏன்? ஏனெனில், அரசியலில் எவர் எப்போது தேவைப்படுவார் என்பதை முன் கூட்டியே மதிப்பிட முடியாது. பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய வல்லமை மஹிந்தவிற்கு மட்டுமே இருந்தது. ஆனால், அவர் அதில் நாட்டம் செலுத்தவில்லை. வெற்றி கொடுத்த போதையில் ஆழ்ந்திருந்தார். ஆனால், கொழும்பின் ஆட்சியாளர்கள் எதிர்பாராத நெருக்கடிகள் தங்களை சூழ்கின்ற போதுதான் தமிழர் தரப்புடன் பேச முற்படுவார். ஒன்றில் தமிழர் தரப்பின் செயற்பாடுகளால் அவர்கள் தொடர்ச்சியான நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டும் அல்லது பிராந்திய, உலகளாவிய சக்திகளின் அழுத்தங்களின் அவஸ்தையை அவர்கள் உணர வேண்டும். இதில் ஏதுமில்லை என்றால் கொழும்பு ஒருபோதுமே தமிழர்களை நோக்கி இறங்கிவராது. இதுவே சிங்களத்தின் வரலாறு. இவ்வாறான சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொள்வதில் தமிழர் தரப்பு எந்தளவிற்கு வல்லமையுடன் இருக்கிறது என்பதைப் பொறுத்துத்தான், இந்தச் சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொள்ள முடியும். அவ்வாறானதொரு சந்தர்ப்பம்தான் 2015 ஜனவரியில் கிடைத்திருந்தது. ஆனால், அது பயன்படுத்திக் கொள்ளப்படவில்லை. அன்று பெயரளவில் கூட மஹிந்தவுடன் பேசுவதை விரும்பாத சம்பந்தன், இன்று அவருடன் இணைந்து செயற்படப் போவதாகக் கூறுகின்றார். இதனை அரசியல் முதிர்ச்சியென்பதா அல்லது அரசியல் இயலாமை என்பதா? ஆனால், இதன் மூலம் சம்பந்தன் ஒரு விடயத்தை ஏற்றுக்கொள்கிறார். அதாவது, மஹிந்த ஒரு தவிர்க்க முடியாத சக்தி என்பதை அவர் உணர்ந்திருக்கிறார். மீண்டும் மஹிந்தவின் ஆளுகைக்குள் கொழும்பு வந்துவிடக் கூடுமென்னும் அச்சமும் சம்பந்தனுக்குள் உண்டு. மஹிந்த இல்லாவிட்டால் கூட, மஹிந்தவின் சகோதரர்கள் மற்றும் மகன்மார் என்று ஏதோவொரு வகையில் மஹிந்தவின் நிழல் கொழும்பின் மேல் தொடர்ந்தும் விழத்தான் போகிறது. இந்த நிலையில்தான் மஹிந்தவை தவிர்த்துச் செல்ல முடியாது என்னும் உண்மையை சம்பந்தன் உணரத் தலைப்பட்டிருக்கிறார். ஆனால் விடயம், சிங்களத் தலைமைகள் ஆட்சிக்கு வருவதும், போவதும் சாதாரணமான ஒன்று. ஆனால், குறித்த சூழலை கையாளும் திறமை தமிழ்த் தலைவர்களுக்கு இருந்தால் மட்டும்தான் அவர்களுடன் ஊடாடுவதால் தமிழ் மக்களுக்கு நன்மைகள் கிட்டும். அவ்வாறில்லாது விட்டால் எவருடனும் இணைந்தும் பயனில்லை, முரண்பட்டும் பயனில்லை.

யதீந்திரா