பட மூலம், Sri Lanka Guardian

மூதூரில் இயங்கிவந்த பிரான்ஸ் தொண்டு நிறுவனமான ஏ.சி.எப். நிறுவனத்தின் பணியாளர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 11 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன.

ஏ.சி.எப். நிறுவனத்தின் பணியாளர்கள் திருகோணமலை மாவட்டம் மூதூரில் 2006 ஆகஸ்ட் 4ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டனர்.

இவர்கள் முழங்காலிடப்பட்டு விசாரணையின்றி சுடப்பட்டனர் என்றும், இவர்களைச் சுட்டவர்கள் இலங்கையின் பாதுகாப்புப் படையினர்தான் என்பதற்கு தம்மிடம் ஆதாரங்கள் இருப்பதாகவும் ஏ.சி.எப். நிறுவனம் கூறிவருகிறது.

ஏ.சி.எப். நிறுவனத்தின் மனித நேய செயல்பாட்டு ஆலோசகர், பாலின் செட்குவிட்டி 2013ஆம் ஆண்டு பிபிசி தளத்துக்கு இவ்வாறு கூறியிருந்தார்,

“ஏ.சி.எப். பணியாளர்கள் படுகொலை தொடர்பாக தங்களுக்குக் கிடைத்த சாட்சியங்கள் மிகவும் எளிமையானவை, இவைகளை முழுமையாக வெளியிட்டால், இந்த சாட்சியங்களை யார் தந்தார்கள் என்ற அடையாளத்தைக் காட்டிக்கொடுத்துவிடும் , அது அவர்களுக்குப் பாதுகாப்புத் தராது என்று அஞ்சுகிறோம். பல ஆண்டுகளாக இலங்கை அரசுடன் நாங்கள் ஒத்துழைத்து விட்டோம். தற்போது உள்நாட்டில் நடத்தப்படக்கூடிய எந்த ஒரு விசாரணையும் , சாட்சி அளிப்பவர்களை பாதுகாக்கவும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தீர்வு வழங்கவும் உதவ, போதிய அளவுக்கு சுயாதீனமாகவும், பக்கசார்பற்ற முறையிலும் நடத்தப்படும் என்று நினைக்கவில்லை. எனவேதான், நாங்கள் ஒரு சர்வதேச விசாரணையைக் கோருகிறோம். இலங்கை ஆட்சியாளர்களுடன் பல ஆண்டுகள் ஒத்துழைத்த பின்னரே இந்த முடிவுக்கு நாங்கள் வந்திருக்கிறோம்” என்றார்.

ஏ.சி.எப். பணியாளர்கள் கொலை குறித்த விசாரணைகள் உரிய முறையில் நடைபெறாமையின் ஊடாக போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச பங்களிப்புடனான விசாரணைகளை வலியுறுத்தி நிற்பதாக மனித உரிமை கண்காணிப்பகம் ஏ.சி.எப். பணியாளர்கள் படுகொலையின் 10ஆவது ஆண்டு பூர்த்தியின்போது தெரிவித்திருந்தது.

தாமே இணை அனுசரணையாளராக இருந்து நிறைவேற்றிய, ஐ.நா. மனித உரிமைபேரவையின் 30/1 தீர்மானம், குறிப்பாக நிறைவேற்றுப்பந்தி 6 இல் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் (வெளிநாட்டு நீதிபதிகள், வழக்குத் தொடுநர்கள் உள்ளடக்கப்பட வேண்டும்), எந்த வகையிலும் தம்மை கட்டுப்படுத்தாது என்பதை ஒவ்வொரு ஆண்டும் இலங்கையில் இடம்பெற்ற படுகொலைகளின் ஆண்டு பூர்த்திகள் வரும்போது இலங்கை அரசாங்கம் எமக்கு நினைவுப்படுத்திக்கொண்டே வருகிறது.

ஏ.சி.எப். நிறுவனத்தின் பணியாளர்கள் படுகொலை தொடர்பான சிறிய வீடியோ பதிவொன்று கீழே தரப்பட்டுள்ளது.