பட மூலம், Selvaraja Rajasegar 

“வேலை முடிந்து பஸ்ஸில் வீடு திரும்பிக் கொண்டிருந்த நான், எம்புல்தெணிய சந்தியில் இறங்கி, நடைபயணமாக வீடு சென்றுகொண்டிருந்தேன். அன்றைய காலப்பகுதியில் தொடர்ச்சியாக எனக்கு விடுக்கப்பட்டிருந்த அச்சுறுத்தல் காரணமாக சொந்த வீட்டிலிருந்து விலகி பாதுகாப்புக்காக வாடகை வீடொன்றில் வாழ்ந்துவந்தேன். ஒரு கையில் டொகியுமன்ட், மறு கையில் மகளுக்கும் மனைவிக்கும் வாங்கிய ‘மாலுபனிஸ்’ (மீன் பனிஸ்). குறுகிய இன்னொரு பாதைக்குத் திரும்பி முன்னால் சென்றுகொண்டிருக்கும்போது வெள்ளை வான் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. குறுகிய பாதை என்பதால் வான் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் சிறிய இடைவெளியே இருந்தது. அந்த சிறிய இடைவெளியில் வானை கடந்து செல்வதற்கு காலை எடுத்து வைத்தது மட்டும்தான். சந்தோசமான, ஆரோக்கியமான மனிதனாக நான் கடைசியாக எடுத்துவைத்த காலடிகள் அவை.”

சிரேஷ்ட ஊடகவியலாளர் போத்தல ஜயந்த தான் கடத்திச்செல்லப்படுவதற்கு ஒரு சில வினாடிகளுக்கு முன்பு நடந்த சம்பவத்தை கடந்த வருடம் இவ்வாறு நினைவுகூர்ந்திருந்தார்.

2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திகதி – மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக்காலப்பகுதியில் கடத்திச் செல்லப்பட்டு, கொடூர சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட ஊடகவியலாளர் போத்தல ஜயந்த கடந்த சில நாட்களுக்கு முன்பு கொழும்பு குற்றவியல் பொலிஸ் பிரிவில் முறைப்பாடொன்றை செய்ய வந்திருந்தார். உயிர் பாதுகாப்புக்காக 2010ஆம் ஆண்டு நாட்டை விட்டு சென்றதிலிருந்து பொலிஸ் மா அதிபர் உட்பட உயர் அதிகாரிகளுக்கு கடத்தல் மற்றும் சித்திரவதை தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு முறைப்பாடு செய்திருந்ததாகவும், எனினும், தான் திருப்திக்கொள்ளக் கூடிய வகையில் விசாரணைகள் இடம்பெறவில்லை என்றும் போத்தல ஜயந்த ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருந்தார். அதன் காரணமாகவே நேரடியாக வந்து குற்றவியல் பொலிஸ் பிரிவில் முறைப்பாடு செய்தார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொல்லப்பட்ட, காணாமலாக்கப்பட்ட, கடத்தப்பட்ட, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள், தாக்குதலுக்குள்ளான ஊடக நிறுவனங்களுக்கு நீதியைப் பெற்றுத்தருவதாகக் கூறி 2015 ஜனவரி 8ஆம் திகதி ஆட்சிக்கு வந்த ரணில் – மைத்திரி அரசாங்கம், இன்று நீதிக்குப் பதிலாக நிவாரணத்தை வழங்கிவருகிறது என்று கூறும் ஊடகவியலாளர் போத்தல ஜயந்த நிவாரணங்களை விட ஊடகவியலாளர்களுக்கு எதிராக கொடூர குற்றங்களில் ஈடுபட்ட நபர்களை சட்டத்தின் முன் கொண்டுவருவது அவசியாவசியமானது என்பதால்தான் தான் நேரடியாக வந்து முறைப்பாடு செய்தார் என்றும் அவர் கூறினார்.

சிரேஷ்ட ஊடகவியலாளர் போத்தல ஜயந்த தொடர்பான வீடியோப் பதிவு கீழே தரப்பட்டுள்ளது.