பட மூலம், Eranga Jayawardane, AP images

“தேசிய சட்டங்கள் மற்றும் இலங்கையின் சர்வதேச மனித உரிமைக் கடப்பாடுகளிற்கு அமைய வன்முறையை ஊக்குவிக்கும் மற்றும் ஆதரிக்கின்ற வெறுப்பான பேச்சுகள் பரவாது நிறுத்துவதற்கு உரிய காலத்தில் நடவடிக்கை எடுப்பதற்கும் வன்முறைகளைத் தடுப்பதற்கும் அரசாங்கத்திற்குப் பொறுப்புள்ளது. அவ்வாறு நடவடிக்கை மேற்கொள்ளத் தவறுவதானது நாட்டின் மனித உரிமைகள் செயற்பாடுகள் மீது கறுப்புப் புள்ளியாக இருத்தல் மட்டுமன்றி, அதிமேதகு ஜனாதிபதியானவர் அதிமுக்கியத்துவம் கொடுக்கும் நல்லிணக்கத்தை அடைய பாரிய தடையாகவும் இருக்கும்.”

முஸ்லிம் மற்றும் ஏனைய சிறுபான்மை மதத்தவர்களை இலக்காகக் கொண்டு வன்முறையில் ஈடுபட்டுவருபவர்களுக்கு எதிராகத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக எடுக்குமாறு இலங்கை மனித உரிமை ஆணைக்குழு ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்த கடிதமொன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறது.

மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக்காலப்பகுதியில் சிறுபான்மை முஸ்லிம் மக்களை இலக்காகக் கொண்டு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட வன்முறை அண்மைக்காலமாக நல்லாட்சியிலும் தீவிரமடைந்திருப்பதை அவதானிக்கக் கூடிதாக உள்ளது.

அடிப்படைவாதத்துக்கும், தீவிரவாதத்துக்கும் முற்றுப்புள்ளி வைப்பதாகக் கூறி சிறுபான்மை மக்களிடம் வாக்குகளை அள்ளிய மைத்திரி – ரணில் அரசாங்கம் மதத்தின் போர்வையில் அரங்கேறிவரும் வன்முறைகளை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறது.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் 2 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்த ஞானசார தேரர் மூன்று, நான்கு வாரங்களாக தலைமறைவாக இருந்துவிட்டு நாளை வருவதாகக் கூறி அடுத்த நாள் நீதிமன்றத்துக்கு வந்துசேர்கிறார். நான்கு வாரங்களாக தேடிக்கொண்டிருந்த 4 விசேட பொலிஸ் குழுக்கள் இப்போது தலைமறைவாகிவிட்டன. ஊழல் குற்றச்சாட்டு ஒன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நீதிமன்றில் இருந்த சமயம் அவரது ஆதரவாளர் ஒருவர் சப்தம் எழுப்பியதால் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் உடனே சிறைக்கு அனுப்பிய இலங்கையின் நீதித்துறை, தலைமறைவாகியிருந்து சரணடைந்த ஞானசார தேரரை உடனே விடுதலை செய்கிறது.

தண்டனையிலிருந்து விலக்கீட்டுரிமை வழங்கியதன் விளைவே மூவரை பலிகொண்ட, பலர் காயங்களுக்குள்ளான, பல மில்லியன் பெறுமதியான சொத்துக்களை இழக்க நேரிட்ட அளுத்கம கலவரம் இடம்பெறக் காரணமாக அமைந்தது. இந்த நிலைமை மீண்டுமொருமுறை ஏற்பட்டுவிடும் என்ற அச்சவுணர்வு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், 2013ஆம் ஆண்டிலிருந்து சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்கு எதிரான வெறுப்புணர்வுப் பேச்சுகள், மதத்தலங்கள், வர்த்தக நிலையங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைகளை முஸ்லிம்களுக்கான செயலகம் (Secretariat for Muslims) ஆவணப்படுத்திவருகிறது.

குறிப்பாக நல்லாட்சி பதவியேற்ற 2015ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை முஸ்லிம் மக்களின் மதத்தலங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் பல தாக்குதல் சம்பவங்களையும் இந்த அமைப்பு ஆவணப்படுத்தியுள்ளது. காலவரிசை (Timeline) ஊடாக இங்கு கிளிக் செய்வதன் மூலமாகவும் கீழே தரப்பட்டுள்ளதன் ஊடாகவும் அதனைப் பார்க்கலாம்.