பட மூலம், ISHARA S. KODIKARA, Getty Images

சட்டத்தரணி லக்‌ஷான் டயஸுக்கு எதிரான நீதி அமைச்சரின் அச்சுறுத்தும் பேச்சு பெளத்த (வேறு எந்த மதமாக இருந்தாலும்) விவகாரத்தை நீதியமைச்சுடன் இணைத்ததால் ஏற்பட்டிருக்கும் விளைவு என்றே எண்ணத் தோன்றுகிறது.

அண்மையில் ‘தெரண’ தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டிருந்த சட்டத்தரணி லக்‌ஷான் டயஸ், கிறிஸ்தவ மதத்தலங்கள் மீது தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தப்படுவதாகத் தெரிவித்திருந்தார். இவர் அடிப்படை சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் மீதான தாக்குதலுக்கு எதிராக தொடர்ச்சியாகவும் விடாமுயற்சியுடனும் செயற்பட்டு வரும் மனித உரிமை பாதுகாவலராவார்.

இந்த விடயம் தொடர்பாக தான் கர்தினால் மல்கம் ரஞ்சித்திடம் கேட்டறிந்தபோது, அப்படியெந்த சம்பவம் குறித்தும் தான் கேள்விப்படவில்லை என அவர் தெரிவித்தார் என்றும், ஆகவே, சட்டத்தரணி லக்‌ஷான் டயஸ் 24 மணித்தியாலங்களுக்குள் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோரவேண்டும் என்றும், அதை செய்யத் தவறும் பட்சத்தில் சட்டத்துறையில் இருந்து அவரை நீக்குவதற்கான நடவடிக்கைகளை தான் எடுப்பதாகவும் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ கூறியிருந்தார்.

ஒரு சட்டத்தரணியை சட்டத்துறையில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கையை உயர்நீதிமன்றமே மேற்கொள்ள முடியும். அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ தனது அதிகாரத்தை மீறிய செயற்பாடுகள் குறித்து கருத்துத் தெரிவித்திருக்கின்றார் என்றே தோன்றுகிறது. அமைச்சருக்கும் அதற்கான நிறைவேற்று அதிகாரம் மஹிந்த ஆட்சியில் போன்று நல்லாட்சியில் வழங்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

நல்லாட்சி அரசாங்கத்துக்கு எந்தவிதத்திலும் தான் பொருத்தமற்றவர் என்பதையும், அதேபோல் தான் மஹிந்த ராஜபக்‌ஷவின் அமைச்சரவைக்குப் பொருத்தமானவர் என்பதையும் நீதி அமைச்சர் பல சந்தர்ப்பங்களில் நிரூபித்திருக்கிறார். சிங்கள – பெளத்த அடிப்படைவாத சிந்தனைகளை மக்கள் மத்தியில் பரவச் செய்யும் அமைப்புகள் மற்றும் தலைவர்களுடன் விஜயதாஸ ராஜபக்‌ஷ கொண்டிருக்கும் தொடர்பு குறித்து முழு நாட்டு மக்களும் அறிவர். அமைச்சர், கெளதம புத்தரின் புத்தசாசனத்தைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கிறாரா அல்லது ஞானசாரவின் அடிப்படைவாதக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறாரா என்ற கேள்வி இதன் மூலம் எழுகிறது.

சட்டத்தரணி லக்‌ஷான் டயஸின் கருத்து தவறாக இருந்தாலும்கூட அதற்கு முறையாக பதில் வழங்கியிருந்தால் அது நீதியமைச்சருக்குப் பொருத்தமாக இருந்திருக்கும். ஆனால், அமைச்சரோ சட்டத்தரணி டயஸை அச்சுறுத்தலுக்கு உட்படுத்துவதன் மூலம் கருத்துத் தெரிவிக்கும் உரிமையை மீறும் வகையில் நடந்துகொண்டிருக்கிறார். அமைச்சர் அச்சுறுத்தும் தொனியில் கலவரமடைவது ஏன் என்று தெரியவில்லை. இதன் மூலம் நல்லாட்சியில் அமைச்சராக அங்கம் வகித்தாலும் மஹிந்த ராஜபக்‌ஷவின் கருத்தியலுடன்தான் நீதியமைச்சர் செயற்பட்டுவருகிறார் என்பது புலனாகிறது.

2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிபீடமேறிய பின்னர் தேவாலயங்கள், மதகுருமார்கள் மற்றும் கிறிஸ்தவர்களை இலக்குவைத்து நடத்தப்பட்ட 190 க்கும் அதிகமான சம்பவங்கள் தமது அமைப்புக்கு பதிவாகியுள்ளதாக இலங்கை கிறிஸ்தவ சுவிஷேஷ ஐக்கியம் (National Christian Evangelical Alliance of Sri Lanka) அறிக்கை ஒன்றை வெளியிட்டு சுட்டிக்காட்டியுள்ளது. இதனையே மூல ஆதாரமாகக் கொண்டு சட்டத்தரணி லக்‌ஷான் டயல் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.

கத்தோலிக்கப் பிரிவுக்குட்பட்ட மதத்தலங்கள் மீது எந்தவிதத் தாக்குதலும் நடத்தப்படவில்லை என்றே கர்தினால் மல்கம் ரஞ்சித் கூறியிருக்கிறார். ஆனால், சட்டத்தரணி லக்‌ஷான் டயஸ், இலங்கை கிறிஸ்தவ சுவிஷேஷ ஐக்கியம் பிரிவுக்கு உட்பட்ட மதத்தலங்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்டிருந்தார். பொறுப்புணர்வுடன் அமைச்சர் இதுகுறித்து ஆராய்ந்து கருத்துத் தெரிவிக்காமல் சிங்கள அடிப்படைவாதிகளின் குரலாகவே தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கிறார்.

“மனித உரிமைகளைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொள்ளும் சிலர் இனங்களுக்கிடையே நிலவும் அமைதியை சீர்குலைத்து நாட்டை மீண்டும் யுத்தத்தை நோக்கி இழுத்துச் செல்லவே முயற்சி செய்கின்றனர்” என்றும் நீதியமைச்சர் கூறியிருக்கிறார்.

முஸ்லிம் மக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக வெறுப்புணர்வுப் பேச்சுக்களிலும், தாக்குதல் நடவடிக்கையிலும் ஈடுபட்டுவரும் அடிப்படைவாத பிக்குகள் நாட்டில் நிலவும் அமைதியைக் குலைப்பதாக அமைச்சருக்கு தெரியவில்லை. பல்வேறு சந்தர்ப்பங்களில் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்ட, நீதிமன்ற பிடியாணைகளை கணக்கிலெடுக்காத, பாதாள உலக குண்டர்களைப் போன்று பொல்லுகளுடன் நீதிமன்றத்தினுள் நுழைந்து நாட்டின் நீதிப் பொறிமுறைக்கே கலங்கத்தை ஏற்படுத்திய ஞானசாரவை நீதியமைச்சருக்குத் தெரியவில்லையா?

மட்டக்களப்பில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இனவாத நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் அம்பிட்டிய சுமணரத்தின தேரருக்கும் ஞானசாரவுக்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை. உயர் பொலிஸ் அதிகாரிகள் இருக்கும்போது தமிழ் அரச அதிகாரியொருவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கும் அளவுக்கு அதிகாரபலம் கொண்டவராக அவர் இருக்கிறார்.

பல தியாகங்களுக்கு, உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் காட்டாட்சி நடத்திய மஹிந்த கூட்டணியை விரட்டியடித்து நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காக ஒன்றுதிரண்ட எமக்கு, இலங்கை நீதிப் பொறிமுறையை அவமரியாதைக்கு உட்படுத்தும் இரு அடிப்படைவாத குண்டர்களுடன் இணைந்து நல்லாட்சியின் நீதியமைச்சர் செய்தியாளர் சந்திப்பு நடத்தும் துர்பாக்கியத்தையும் பார்க்க வேண்டியிருக்கிறது.

பன்மைத்துவம்  கொண்ட நாட்டின் நீதியமைச்சர் ஒரு இன மக்களுக்கு மாத்திரம் சார்பாக செயற்பட்டுவருவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆகவே, அமைச்சர் விஜேதாஸ ராஜபக்‌ஷ சமூகத்தில் காணப்படும் பன்மைத்துவம் குறித்து, அதன் உணர்வுத்தன்மையை கருத்தில் கொண்டு முழுமையாக ஆராய்ந்து கருத்து தெரிவிப்பது சிறந்தது.

நீதி அமைச்சர் என்ற வகையில் பொறுப்புவாய்ந்த அறிக்கைகள் வெளியாவதற்கும்  யுத்தத்திற்குப் பின்னர் சமூகத்தில் காணப்படும் ஆழமான காயங்கள் மேலும் தீவிரமாவதை தடுப்பதற்கும் பக்கச்சார்பின்மையையும் சுயாதீனத்தன்மையையும் பின்பற்றுவது அவசியமாகும்.

செல்வராஜா ராஜசேகர்