பட மூலம், REUTERS/Dinuka Liyanawatte

2016ஆம் ஆண்டு அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில்  8 வீதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாக கடந்த ஞாயிறு சண்டே ஒப்சர்வர் முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருக்கிறது.

ஆராய்ச்சிகளுக்கு மற்றும் மக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டிருந்ததாக அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அமைச்சர் அநுரபிரியதர்சன யாப்பாவின் பொறுப்பில் உள்ள அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கீழ் வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்தவ நிலையம், தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் மற்றும் தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பு போன்றன செயற்படுகின்றன.

இந்த அனர்த்தம் அனர்த்த முகாமைத்தவ அமைச்சில் மட்டும் நிகழும் நிகழ்வல்ல. மொத்த அரச சேவையும் இவ்வாறுதான் செயற்படுகின்றன. அனைத்து அரச காரியாலயங்களில் ஊழியர்கள் நிரம்பி வழிகின்ற நிலையிலும் ஒதுக்கப்படும் நிதி பயன்படுத்தப்படாமல் திரும்பிச் செல்கின்றமை அரச சேவையில் வழமையான ஒன்றாகும்.

இதற்கு மேலதிகமாக சர்வதேச அமைப்புகளிடமிருந்து கிடைக்கப்பெற்ற நன்கொடை நிதியும் அரசுக்கு சிக்கலாக அமைந்திருக்கிறது. இந்த நிதியையும் செலவழிக்கவேண்டும் என்பதே இதற்கான காரணமாகும்.

தரகுப் பணம், வெளிநாட்டுப் பயணம், வாகனங்கள், கொடுப்பனவு, ஆடம்பர உணவு போன்றன தங்களுக்குக் கிடைக்கும் பட்சத்தில்தான் இந்தப் பணத்தை அவர்கள் பயன்படுத்துவார்கள். ஒன்றும் இல்லை என்ற நிலை வரும்போது அது குறித்து அக்கறை கொள்ளமாட்டார்கள்.

“இவற்றை செய்தால் எப்.சி.ஐ.டி. போகவேண்டிவரும்” என்று சிலர் கூறுவார்கள். ஆனால், எதுவுமே செய்யாமல் இருப்பதனால் எப்.சி.ஐ.டி. போகவேண்டிவராது என்ற நம்பிக்கை மட்டும் இவர்களிடம் நிலவுகிறது.

அரசியல்வாதிகளில் இருந்து அதன் கீழ் உள்ள பல பிரிவுகளில் இருக்கின்ற மத்திய வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்குப் பாதுகாப்பான, வசதியான தொழில் வழங்கும் நிறுவனமாக அரசாங்கம் செயற்பட்டுவருகிறது என்று நாம் நீண்டகாலமாக கூறிவருகிறோம். இதன் மூலம் இந்த அரசாங்கம் ஒடுக்கப்பட்ட மக்களை அதலபாதாளத்துக்கு இழுத்துச் செல்ல மறப்பதில்லை. என்னைப் பொறுத்த வரையில் அரசியல்வாதிகளுக்கு, அரச அதிகாரிகளுக்கு, ஊழியர்களுக்கு கொடுப்பனவு, சலுகைகள் வழங்குவதே இந்தப் பெரும் அரச சேவையின் அடிப்படை பணியாக இருக்கிறது. இதனை நியாயப்படுத்த “மக்கள் நலன்புரி” என்ற ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள். வறுமையில் வாடும் மக்களுக்காக என்று கூறுகின்றபோதும் அவர்களுக்காக ஒன்றும் இங்கு நிறைவேற்றப்படுவதில்லை. இவர்களுக்கு ‘வறுமை’ அனைத்து நோய்க்கான நிவாரணியாக இருக்கிறது.

கொள்கைகள், சட்டம் ஒழுங்குகளை உருவாக்குதல், சமூகத்தில் அடிப்படைத் தேவைகள் என்னவென்பதை இனங்காணுதல், கட்டியெழுப்புதல் போன்றனவே அரசாங்கம் ஒன்றினால் மேற்கொள்ளவேண்டிய பணியாக இருக்கிறது.


தொடர்புபட்ட கட்டுரை: வௌ்ள நிவாரணமும் ஊடக ஒழுக்கமும்


தொழில்வாய்ப்புக்களை மட்டும் வழங்கும் நிறுவனமாக அரசாங்கம் இருத்தலாகாது. வேலைசெய்யும் மக்களுக்கு இதுபோன்ற மிகப் பெரிய அரசாங்கத்தால் எதுவித நன்மையும் கிட்டப்போவதில்லை.  அது சட்ட ஒழுங்கை ஏற்படுத்துவதற்காக நாட்டின் பொருளாதாரத்தில், அரசியலில், சமூகத்தில் தலையிடவேண்டும்.

ஏழை, தொழிலாளர், ஒடுக்கப்பட்டவர்களின் பெயரால் கொள்ளையிடும் மத்தியவர்க்க ஆதிக்கத்துடனான இலங்கை அரசாங்கத்தைப் பாதுகாக்கும் இன்னுமொரு சக்தி இடதுசாரி அரசியல்வாதிகளாகும். இலங்கை போன்ற நாடுகளில் மக்களை அடிப்படையாகக் கொண்டு இடதுசாரி அரசியல் செயற்படுவதில்லை. மத்தியவர்க்கத்தில் மேல் நிலையில் இருப்பவர்கள், கிராமத்தில் உள்ள ஏழைகளை அடிப்படையாகக் கொண்டே செயற்பட்டு வருகிறார்கள். இந்தப் பிரிவினர் அரசாங்கத்தில், அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரணத்தில் தங்கி வாழ்பவர்கள். அரசாங்கத்தால் வழங்கப்படும் நலன்புரி சேவைகளிலும் பெரும்பங்கை தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி தொழிலாளர்களிடமிருந்து பறித்துக் கொள்கிறார்கள். ஆனால், தொழிலாளர்கள் இதற்காக அரசாங்கத்துக்கு நிதியைத் தேடிக்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

உதாரணமாக: இலங்கையில் உள்ள பிரபல அரச பாடசாலைகளில், பல்கலைக்கழகங்களில் இடஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வது இந்தப் பிரிவினரேயாகும். பல்கலைக்கழக மாணவர்களுடைய பெற்றோர்கள் மேற்கொள்ளும் போராட்டப் படங்களில் பஸ் நடத்துனர், துப்பரவுத் தொழில் செய்பவர்கள், மேசன் தொழிலாளர், வீட்டுப் பணிப்பெண்கள், வெளிநாடுகளில் வேலைசெய்யும் பணிப் பெண்கள், ஆடைத்தொழிற்சாலையில் வேலைசெய்பவர்கள், தோட்டத் தொழிலாளர்கள் போன்றோரை காணமுடிவதில்லை, ஏன் என்று சிந்தித்துப் பாருங்கள். வைத்திய கல்லூரி மாணவர்களின் பெற்றோர்களுக்காக சிறப்பு நிபுணத்துவ வைத்தியர்களே பிரதிநிதித்துவம் செய்கிறார்கள். அரச வைத்திய கல்லூரி இல்லையென்றால் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு வைத்தியத்துறை கனவு போன்றதொரு விடயமாகும் என்று அங்கும் இவர்கள்தான் கூறுகிறார்கள். உண்மைதான்.

ஆனால், ஏன் அரச வைத்திய கல்லூரிகளுக்கு தொழிலாளர்களின் பிள்ளைகள் தெரிவாகுவதில்லை? இந்தப் பிள்ளைகளின் கல்வியுரிமை பறிப்பு முதலாம் தரத்துக்கு சேர்ப்பதிலிருந்து ஆரம்பமாகிறது.

நாட்டின் மொத்த சனத்தொகையில் பத்து வீதமானோர் அரச ஊழியர்களே. இந்த மிகப்பெரும் அரச சேவையின் செயல்திறன் குறித்து மக்கள் கேள்வி எழுப்பும்போது, அரசியல்வாதிகளைக் குறைகூறுவதை இடதுசாரி அமைப்புகள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. ஊழல்வாதிகளாகவும் செயல்திறன் அற்றவர்களாகவும் ​ அரசியல்வாதிகள் காணப்படுகின்றனர் என்பது உண்மைதான். ஆனால், மொத்தமாக 500  அரசியல்வாதிகளே இலங்கையில் இருக்கிறார்கள், அரச ஊழியர்கள் 14.5 இலட்சம் பேர் உள்ளார்கள்.


தொடர்புபட்ட கட்டுரை: அனர்த்தம் விடுதலைப் புலிகள் மற்றும் வடக்கு


அத்தோடு, ஏன் இந்தளவுக்கு அதிகார பலத்தை அரசியல்வாதிகள் பெற்றிருக்கிறார்கள் என்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டும். அரசாங்கம் என்ற நிறுவனத்தைக் கொண்டுதான் இவர்கள் இந்தளவுக்கு அதிகார பலத்தைப் பெற்றிருக்கிறார்கள். அரசாங்கம் எந்தளவுக்கு பலமடைகிறதோ அந்தளவுக்கு அரசியல்வாதிகளும் பலமடைகிறார்கள். வேலியில போற பாம்பை வேட்டிக்குள்ள போட்டுக் கொண்டு கடிக்குது கடிக்குது என்று இப்போது கதறுவதால் எந்தப் பயனும் இல்லை.

தீர்வு இதுதான். அரசாங்கத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறோ அல்லது இன்னும் விரிவாக்கம் செய்யுமாறோ நாம் கேட்காமல் இருப்போம். ஆனால், எந்தவொரு அரச பல்கலைக்கழகங்களையும் மூடக்கூடாது. அரச பல்கலைக்கழகங்களில் சேர்த்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அதேபோன்று, அரச சேவையின் செயல்திறன் குறித்து அதிகப்படியான கவனம் செலுத்துதல் அவசியம். அத்தோடு, அரசியல்வாதிகளின் பேரில் கொள்ளையில் ஈடுபடும் அரச ஊழியர்களின் ஆட்டத்தை நிறுத்தவேண்டும். அரசியல்வாதிகளுக்கு வழங்கியுள்ளதைப் போன்று அரச ஊழியர்களுக்கும் மக்களது பணம் குறித்து பொறுப்புக்களை வழங்கவேண்டும்.

முதலில் நான் குறிப்பிட்ட விடயத்துக்கு வருகிறேன். திறைசேரியால் ஒதுக்கப்பட்ட நிதியில் 92 வீதமானவற்றை பயன்படுத்தாமல் திருப்பியனுப்புவது தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சரிலிருந்து அனைத்து நிறைவேற்று தர அதிகாரிகள் வரை அனர்த்த முகாமைத்துவ விடயத்தில் இலங்கையின் தோல்வி குறித்து பொறுப்புகூற வேண்டியவர்களாவர். அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று மற்றும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியமாகும்.

கடந்த வார ‘ராவய’ பத்திரிகையில் அஜித் பெரகும் ஜயசிங்கவால் எழுதப்பட்டு வெளியான கட்டுரையின் தமிழாக்கம் இங்கு தரப்பட்டுள்ளது.