பட மூலம், Selvaraja Rajasegar photo

கலபொட அத்தே ஞானசார என்ற பெயர் நீண்டகாலத்துக்குப் பிறகு மீண்டும் அடிபடத் தொடங்கியிருக்கிறது. திடீரென வெளியில் கிளம்பும், திடீரென மறையும் அபூர்வமான பிக்கு அவர். அவர் வெளியே வருவதையும், திடீரென மறைவதையும் சில காரணிகள் தீர்மானிக்கின்றன என்பது தெளிவு.

அந்தக் காரணிகள் எவை? ஒன்று – பணம். பணம் கிடைக்கும்போது ஞானசார சுறுசுறுப்படைகின்றார். வெளிநாட்டு பணத்தால் ஞானசார ஆட்டுவிக்கப்படுகின்றார், சிங்கள இனத்தையும் பெளத்த மதத்தையும் அழிப்பதே அவரது செயற்பாட்டின் இறுதி நோக்கமாக இருக்கிறது.

இரண்டாவது காரணி, அரசியல். மஹிந்த ராஜபக்‌ஷவின் அனுசரணையைப் பெற்றுக்கொண்டு அளுத்கம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட முஸ்லிம் விரோத கலவரத்தினால் இறுதியில்  முஸ்லிம் மக்களின் வாக்குகளையும் இழப்பதற்கு காரணமாக இருந்தவர் இந்த ஞானசார.

நீண்ட நாட்களுக்குப் பின்னர் திடீரென தோன்றியிருக்கும் ஞானசார, இப்போது யாருக்காக தனது நடிப்பை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் உள்ளது. மஹிந்த ராஜபக்‌ஷ வெளியில் தலைகாட்டும்போது அதே காலப்பகுதியில் ஞானசாரவும் தோன்றுவதை காணமுடிகிறது. ஆகவே, இதன் பின்னால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இருக்கக்கூடும் என்ற கருத்தும் உலாவுகிறது.

இது எவ்வாறு இருந்தாலும், மனநிலை பாதிக்கப்பட்ட நிலைக்கு ஞானசார சென்றுகொண்டிருப்பதைப் பார்க்கும்போது பாவமாகத்தான் இருக்கிறது.

தான் நீதி அமைச்சராக இருக்கும் வரை கோத்தபாய ராஜபக்‌ஷவை கைதுசெய்ய இடமளிக்க மாட்டேன் என அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ அண்மையில் கூறியிருந்தது நினைவுக்கும். இது போன்ற அமைச்சரின் கீழ் நீதியை நிலைநாட்டுவதற்காக இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனங்களின் செயற்பாடுகள் குறித்து புதுமை கொள்ளத் தேவையில்லை. கடந்த காலங்களில் பொலிஸ் மற்றும் நீதிமன்றம் அதிகாரத்தில் உள்ளவர்களின் விருப்பத்திற்கேற்பவே செயற்பட்டது. தற்போது அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு என்ன தேவைப்படுகிறது என்று தெரியவில்லை. நாட்டை பலர் ஆட்சி செய்வதே இதற்குக் காரணமாகும். ராஜபக்‌ஷ, சய்டம் விரோத குழுக்கள், தொழிற்சங்கங்கள், ஊடக நிறுவனங்கள், பாதாள உலக கோஷ்டிகள் போன்றன தங்களுக்கு தேவையான விதத்தில் ஆட்சி செய்துவருகின்றன.

கோத்தாபய ராஜபக்‌ஷவுக்கு நீதி அமைச்சரினால் வழங்கப்பட்ட வாக்குறுதி போன்ற ஒன்றை சண்டித்தனத்தைக் காட்டி ஞானசார பெற்றுக்கொள்ள முயற்சி செய்கிறார். ஞானசார விடயத்தில்​ நீதிமன்றம், பொலிஸாரின் செயற்பாட்டைப் பார்க்கும்போது அதில் அவர் ஓரளவுக்கு வெற்றியையும் பெற்றிருக்கிறார் என்றே கூறமுடியும்.

ஞானசாரவை கைதுசெய்ய வேண்டும். இனங்களுக்கு இடையில் இனவாதத்தைப் பரப்புவதற்காக, ஒற்றுமையை சீர்குலைப்பதற்காக, வன்முறையை ஊக்குவிப்பதற்காக இவருக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இவரை புனர்வாழ்வுக்கு உட்படுத்த வேண்டும்.

இப்படியிருக்கு – பெரும்பாலும் ஏழ்மை காரணமாக சிறுவயதிலேயே பிக்குவாக்கப்பட்ட, காவி உடை தரிந்த ஆண்களினால் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட, மனநல மருத்துவத் தேவை உள்ள, இருந்தபோதிலும் பெளத்தர்களினால் கொண்டாடப்படுகின்ற இவ்வாறானவர்கள் மீது கருணை காட்டுவதும் அவசியம்.