பட மூலம், Eranga Jayawardane Photo

இன்று நாட்டிலுள்ள பெரும்பாலான தொலைக்காட்சி நிறுவனங்கள் பல பெயர்களை வைத்துக்கொண்டு சமூக நலச் சேவைகளைச் செய்துவருகின்றன. தற்போது வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை இதனூடாக செய்து வருகின்றன. தெளிவாகக் கூறுவதானால், இந்தத் தொலைக்காட்சி நிறுவனங்கள் நிவாரணப் பொருட்களைக் கொண்டுசெல்ல உதவுகிறார்களே தவிர, நிவாரணப் பொருட்களை வழங்குவதில்லை. மக்களிடமிருந்தே உதவிப் பொருட்களைப் பெறுகிறார்கள். விகாரைகள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், இன்னும் பல பொருட்கள் சேகரிக்கும் நிலையங்கள் மற்றும் தொலைக்காட்சி சேவைகளின் நிவாரண நிலையங்கள் போன்றவற்றுக்கு மக்கள் வழங்கும் பல்வேறு நிவாரணப் பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொண்டுசெல்வதற்கான ஒருங்கிணைப்புப் பணியையே இந்த தொலைக்காட்சி நிறுவனங்கள் செய்துவருகின்றன.

தொலைக்காட்சி சேவைகள் செய்துவரும் இந்த ஒருங்கிணைப்புப் பணி தொடர்பில் எதுவித சிக்கலும் எமக்கில்லை. இவ்வாறு கொண்டுசெல்லப்படும் நிவாரணப் பொருட்களை வைத்து ஊடக நிறுவனத்தை முன்னிலைப்படுத்தும் வெட்கத்தனமான செயல்பாடு குறித்தே கவனம் செலுத்த தீர்மானித்தேன்.

நாட்டு மக்கள் முகம்கொடுக்க நேரும் எந்தவொரு அனர்த்தத்தின்போதும் உதவிசெய்யும் நோக்கில் ஊடக நிறுவனம் முன்னிலை வகிப்பது தவறல்ல. நாட்டின் ஏனைய அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களையும் விட, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், அவர்களைத் தயார்படுத்துதல், எச்சரிக்கை செய்தல் போன்றவற்றை அவர்களால்தான் செய்யமுடியும். மக்களுக்காக ஒருங்கிணைப்பு, ஏற்பாட்டு சேவைகளைச் செய்யும் அதேவேளை, தங்களுடைய நிறுவனத்தை முன்னிலைப்படுத்த முயற்சி செய்வார்களேயானால், அவர்களால் செய்யப்படுவது மக்கள் நலன்புரி சேவையல்ல. அது தனது நிறுவனத்தை முன்னிலைப்படுத்தும் செயற்பாடேயாகும்.

இவ்வாறு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் போர்வையில் தங்களது நிறுவனத்தை முன்னிலைப்படுத்தும் ஊடக நிறுவனங்களின் நோக்கத்தைத் தெளிவாகக் காணமுடிகிறது. ஊடக நிறுவனங்களின் நிவாரணப் பொருட்கள் சேகரிக்கும் நிலையத்தை நோக்கி உதவிப் பொருட்களுடன் வரும் பொதுமக்கள், தாங்கள் நிவாரணப் பொருட்களை வழங்க ஏன் இந்த ஊடக நிறுவனத்தைத் தெரிவு செய்தோம் என்று கூறுகிறார்கள். இந்த விடயத்தை தொலைக்காட்சி நிறுவனங்கள் முதன்மைப்படுத்திக் காட்டுகிறார்கள்​

குறித்த ஊடக நிறுவனத்தின் மீது கொண்டிருக்கும் நம்பிக்கைக் காரணமாகவே நிவாரணப் பொருட்களை இங்கு கொண்டுவந்ததாக சிலர் கூறுகிறார்கள். இன்னும் சிலர், தாங்கள் ஊடக நிறுவனத்திற்கு வழங்கும் நிவாரணப் பொருட்கள் சந்தேகமின்றி பாதிக்கப்பட்ட மக்களைப் போய்ச் சேரும் எனக் கூறுகிறார்கள். இன்னும் நிவாரணப் பொருட்கள் கிடைக்காத பகுதிகளுக்கு இந்த ஊடக நிறுவனம் நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்லும் என்பதால் தாங்கள் இங்கு வந்து கொடுத்ததாக சிலர் கூறுகிறார்கள். மக்கள் தெரிவிக்கும் இந்தக் கருத்துக்களை ஊடக நிறுவனங்கள் தங்களது பிரதான செய்திகளிலும், விசேட நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள்.

ஊடக ஒழுக்கம் அப்பட்டமாக மீறப்பட்ட இன்னுமொரு சம்பவத்தையும் இந்தத் தொலைக்காட்சிச் சேவைகளில் காணக்கூடியதாக இருந்தது. நிவாரணப் பொருட்களை வழங்கிவரும் சமூகத்தில் அந்தஸ்துள்ள நபர்களிடம் பெற்றுக் கொள்ளும் கருத்துகள் இங்கு கவனிக்கத்தக்கது. உதாரணமாக, நிவாரணப் பொருட்களைக் கொண்டுவரும் கலைஞர், தான் ஏன் உதவிப் பொருட்களை வழங்க இந்த ஊடக நிறுவனத்தைத் தெரிவுசெய்தேன் என்று தெரிவித்த கருத்தை மட்டும் திரும்பத் திரும்ப ஒளிபரப்பிவருகிறார்கள். நான் இந்தப் பதிவை எழுதுவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர், பிரபலமான தொலைக்காட்சி நிறுவனமொன்று நடத்தும் நிவாரணப் பொருட்கள் சேகரிக்கும் நிலையத்துக்கு உதவிப் பொருட்களுடன் வந்த பிக்கு ஒருவர் தொலைக்காட்சி நிறுவனம் குறித்து தெரிவித்த மிக நீண்ட கருத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் போர்வையில் நிறுவனத்தை முன்னிலைப்படுத்துவதற்காகப் பயன்படுத்தியிருந்தார்கள். நிவாரணப் பணியில் ஈடுபடும் இந்த நிறுவனம் மிகச் சிறந்த நிறுவனமென்று அந்த பிக்கு தெரிவித்திருந்தார். இதுபோன்ற விடயங்களை வெள்ள நிவாரணப் பணியைத் தங்களது நிறுவனத்தை முன்னிலைப்படுத்தும் நோக்குடன் ஊடக ஒழுக்கநெறியை மீறும் வகையில் எந்தவித வெட்கமுமின்றி வெளியிடுவதற்கு எதிராக நாம் எமது கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும்.

சில ஊடக நிறுவனங்களின் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் படகுகளில் சென்று மக்களிடம் நேரடியாகவே நிவாரணப் பொருட்களைப் பகிர்ந்தளிக்கும் நேரலை நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பப்படுகின்றன. தாங்கள் நேரடியாகவே பொருட்களை வழங்குவதால் ஏனைய தொலைக்காட்சி நிறுவனங்களை விட தாங்களே சிறந்தவர்கள், முதன்மையானவர்கள், மக்களின் நம்பிக்கையைப் பெற்றவர்கள் என காட்ட முனைகிறார்கள்.

பொதுமக்களால் வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்களை வைத்து தங்களது ஊடக நிறுவனத்தை முன்னிலைப்படுத்துவதற்காக எடுத்துவரும் இன்னுமொரு சம்பவத்தை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். வெள்ள நிவாரணப் பொருட்கள் கொண்டுசெல்லும் அனைத்து வாகனங்களிலும் தங்களுடைய மக்கள் நலன்புரி சேவையின் பெயரைக் கொண்ட பெனர்கள் மற்றும் ஸ்டிக்கர்களை காட்சிப்படுத்துகிறார்கள். அதனோடு, ஊடக நிறுவனத்தின் இலட்சினையையும் உள்ளடக்கத் தவறுவதில்லை. இதன் மூலம் மக்களின் மனதில் நிறுவனத்தை நிலைநிறுத்துவதே இவர்களது நோக்கமாக இருக்கிறது.

ஊடக நிறுவனங்கள் தாங்கள் பணத்தைச் செலவழித்தே இந்த நிவாரணப் பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவது போல் காட்ட முயல்கிறார்கள். மக்கள் வழங்கும் உதவிப் பொருட்களை தங்களது நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகப் பயன்படுத்துவது மிகவும் பாரதூரமான ஊடக ஒழுக்கநெறி மீறலாகும்.

வெள்ள நிவாரணப் பணிகளைச் செய்வதாகக் காட்டிக்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களின் இன்னலை விற்பனை செய்யும் ஒழுக்கமற்ற ஊடகப் பயன்பாடு நாட்டில் உருவாகியிருப்பதை தற்போது காணமுடிகிறது. நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கை மற்றும் நிவாரணப் பொருட்களைப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொண்டுசெல்லும் செயல்பாடு குறித்து எந்த மாற்றும் கருத்தும் இல்லை. ஆனால், இந்த செயல்பாட்டின் ஊடாக தங்களுடைய நிறுவனத்தை முன்னிலைப்படுத்த எடுக்கும் நடவடிக்கை குறித்து இங்கு பதிவுசெய்திருக்கிறேன்.

ஆகவே, அனர்த்தம் ஒன்று ஏற்படும் சந்தர்ப்பத்தில் தங்களது நிறுவனத்தை முன்னிலைப்படுத்தும் வெட்கத்தனமாக செயற்பாடுகளில் ஈடுபடுவதை விடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஊடகங்கள் உண்மையாக செயற்படவேண்டும்.

சுரோஷன இரங்க