படம் | Tamil Guardian

2009 மே மாதம் 18ஆம் திகதி மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நிலைத்துநின்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதவிடுதலைப் போராட்டம் இராணுவ ரீதியில் முற்றுப்பெற்றது. இதன்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பில் வேறுபட்ட பதிவுகள் உண்டு. ஜ.நாவின் கணிப்பின்படி 10,000 – 40,000 வரையிலான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம். அரசியல் கட்சிகள் சிலவற்றினது தகவல்களின்படி 50,000 இற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். எண்ணிக்கைகள் எதுவாக இருப்பினும் தமிழ் மக்கள் பெருந்தொகையில் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டனர் என்பதுதான் உண்மை. கடந்த 18ஆம் திகதியுடன் யுத்தம் நிறைவுற்று எட்டு ஆண்டுகள் ஆகின்றன. இந்த எட்டு ஆண்டுகளில் முள்ளிவாய்க்காலை நினைவுகூரப்பட்டு வருகிறது. மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கம் முள்ளிவாயக்காலை நினைவுகூர்வதற்கு தடைவிதித்திருந்தது. ஆனால், அந்தத் தடையையும் மீறி முள்ளிவாய்க்கால், முள்ளிவாய்க்காலுக்கு வெளியில் நினைவுகூரப்பட்டது. ஆட்சி மாற்றம் முள்ளிவாய்க்கால் படுகொலையை, முள்ளிவாய்க்காலிலேயே நினைவுகொள்வதற்கான வாய்ப்பை வழங்கியது.

இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றும் கூட. ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து நான் எழுதிய முதலாவது கட்டுரையில் இதற்கான வாய்ப்புக்கள் தொடர்பில் குறிப்பிட்டிருந்தேன். எவற்றை எல்லாம் மஹிந்த அரசு மறுத்து வந்ததோ அவற்றை எல்லாம் புதிய அரசாங்கம் அனுமதிக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என்பதே எனது கணிப்பாக இருந்தது. ஏனெனில், மஹிந்தவிலிருந்து தங்களை வேறுபடுத்திக் காண்பிக்க வேண்டிய அவசியம் புதிய அரசாங்கத்திற்கு இருந்தது. இதன் விளைவாகவே கடந்த ஆண்டு மாவீரர் துயிலும் இல்லத்தில் சுடரேற்றுவதற்குக் கூட அரசாங்கம் அனுமதித்திருந்தது. ஆனால், இவ்வாறான அனுமதிகளை வழங்கிக் கொண்டே மறுபுறத்தில், இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பான விசாரணையை அரசாங்கம் நிராகரித்துவருகிறது. இந்த இடத்தில் அரசாங்கத்திடம் ஒரு தெளிவான நிகழ்ச்சிநிரல் உண்டு. அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் ஒன்றை தொடர்ந்து மறுத்துவருவதன் வாயிலாகவே, ஒன்றின் மீதான கவர்ச்சி பேணிப்பாதுகாக்கப்படுகிறது. எனவே, விடயங்களை அதன் போக்கில் விட்டுவிட்டால் மக்கள் சாதாரணமாக அனைத்தையும் மறந்துவிடுவர் என்று அரசாங்கம் கருதஇடமுண்டு. அரசாங்கம் இதில் வெற்றிபெறுமா அல்லது இல்லையா என்பது, தமிழர் தேசத்தின் அனுகுமுறையில்தான் தங்கியிருக்கிறது.

ஆட்சி மாற்றம் இடம்பெற்று இரண்டு வருடங்கள் முடிந்துவிட்டன. ஆட்சிமாற்றத்திற்கு பின்னரான முள்ளிவாய்க்கால் தினம் என்று பார்த்தால், இது மூன்றாவது முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் ஆகும். இம்முறை வழமைக்கு மாறாக ஒரு விடயம் இடம்பெற்றிருக்கிறது. கடந்த எட்டு வருடங்களில் இரா.சம்பந்தன் எப்போதுமே முள்ளிவாய்க்கால் நினைவுகூரலில் பங்குகொண்டவரல்ல. அவர் இவ்வாறான நிகழ்வுகளில் பங்குகொள்வதை எப்போதுமே நிராகரித்தே வந்திருக்கிறார். அவரது சொந்த மாவட்டமான திருகோணமலையில் நடைபெறும் நிகழ்வுகளில் கூட, அவர் எப்போதுமே தலை காட்டியதில்லை. தமிழரசு கட்சியின் சார்பில் மாவை சேனாதிராஜாவே எல்லா இடங்களிலும் தலை காட்டிவந்திருக்கிறார். ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் என்று பார்த்தாலும் கூட, கடந்த இரண்டு வருடங்களில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளிலும் சரி, வேறு எந்தவொரு யுத்தம் தொடர்பான தமிழ் நினைவுகூரல்களில் சரி, சம்பந்தன் பங்குகொண்டதில்லை. அவ்வாறான சம்பந்தன் ஏன் இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவில், அதிலும் வடக்கு மாகாண சபையின் தலைமையில் முள்ளிவாயக்கால் முன்றலில் இடம்பெறும் நிகழ்வொன்றில், பங்குகொள்ளும் முடிவை எடுத்தார். இத்தனைக்கும் சம்பந்தனை எவரும் அழைக்கவுமில்லை. ஏனெனில், இந்த நிகழ்வு வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமைலேயே இடம்பெற்றது. சம்பந்தன் வழமையாக எந்தவொரு நிகழ்விற்கும் அழையா விருந்தாளியாகச் செல்வதில்லை. தனக்கு முதன்மையளிக்கப்படும் நிகழ்வுகளிலேயே அவர் பங்குகொள்வதுண்டு. அவ்வாறான சம்பந்தன் முள்ளிவாய்க்கால் நிகழ்வின் பின்னணியை தெரிந்துகொண்டே, அதில் பங்குகொள்ளச் செல்கின்றார் என்றால், நிச்சயமாக அதற்கு பின்னால் ஒரு தெளிவான அரசியல் காரணம் உண்டு. அது என்ன?

ஆட்சிமாற்றத்தைத் தொடர்ந்து சம்பந்தன், அரசாங்கத்துடன் ஏதோவொரு வகையில் இணைந்தே செயற்பட்டுவருகின்றார். அரசாங்கத்தைப் புகழ்ந்து பேசுவதையே தன்னுடைய பிரதான அரசியல் பணியாகச் செய்துவந்தார். வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்திக்கும் போதெல்லாம் அரசாங்கத்தை குறிப்பாக, மைத்திரிபால சிறிசேனவை புகழ்ந்து பேசுவதையே தனது கடமையாகக் கொண்டார். 2016இற்குள் ஒரு நல்ல அரசியல் தீர்வு என்றார். பின்னர் அது தனது கணிப்பு என்றார். ஆனால், சம்பந்தன் நம்பியது போல் எதுவே நிகழவில்லை. இந்த நிலையில், தனது நகர்வுகள் தோல்விடைந்துவிடுமோ என்னும் பயம் சம்பந்தனை பற்றிவிட்டது. அண்மையில் இடம்பெற்ற மோடி – கூட்டமைப்பு சந்திப்பின் போது, இந்த நிலைமையை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. வழமையாக அரசாங்கத்தை புகழ்ந்துபேசிவந்த சம்பந்தன், அதற்கு மாறாகவே மோடியிடம் பேசியிருக்கின்றார். நாங்கள் 2016 இற்குள், ஒரு தீர்வு கிடைக்குமென்று நம்பினோம். ஆனால், எதுவும் நிகழ்வில்லை. இலங்கையின் அரசியல் வரலாற்றில் என்றுமில்லாதவாறு இரண்டு கட்சிகளும் இணைந்து ஆட்சி செய்கின்றன. நாங்கள் விரும்பும் ஒரு அரசியல் தீர்வை காண்பதற்கு இதுதான் ஏற்ற சந்தர்ப்பம். ஆனால், இரண்டு கட்சிகளும் தங்களுக்கிடையிலான முரண்பாட்டின் காரணமாக அரசியல்சாசன விடயத்தை பிற்போட்டு வருகின்றனர். மஹிந்தவை காரணம் காட்டி, விடயங்களை பிற்போடும் போக்கொன்றும் இருக்கிறது. இது தொடர்பில் நீங்கள் அரசாங்கத்திடம் வலியுறுத்த வேண்டும். இது சம்பந்தன் அண்மைக்காலமாக அனுஸ்டித்து வந்த விரத்திற்கு மாறானது.

உண்மையில் சம்பந்தன் அச்சமடைந்திருக்கின்றார். ஏற்படுத்தப்பட்டிருக்கும் அமைச்சரவை மாற்றத்தால் அரசாங்கத்திற்குள் மேலும் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இந்த நிலைமை தொடரும் பட்சத்தில் தேசிய இனப்பிரச்சினை தொடர்பான விவகாரம் கிடப்பிற்குள் சென்றுவிடும். இந்த நிலைமை நிச்சயம் சம்பந்தனது நகர்வுகள் அனைத்தையும் தோல்வியுறச் செய்யும். இதனால், சம்பந்தன் கலக்கமடைந்திருக்கிறார். தொடர்ந்தும் நிதானமாக இருங்கள், பக்குவமாக இருங்கள் என்னும் சொற்களுக்குள் ஒழிந்து விளையாட முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இதன் விளைவாவே சம்பந்தன் மீளவும் பழைய விடயங்களை நோக்கி முன்னகர முயற்சிக்கின்றார். இதன் ஒரு அங்கம்தான் முள்ளிவாய்க்கால் நிகழ்வில் அவர் பங்குகொண்டமை. முன்னாள் போராளிகளை தமிழரசு கட்சிக்குள் உள்வாங்கப் போவதாக அண்மையில் அறிக்கை வெளியிட்டதும் மேற்படி நிலைமையின் எதிரொலியே. மஹிந்த தரப்பு முன்னாள் போராளிளை கையாண்டுவிடலாம் என்னும் அச்சமொன்றும் இதன் பின்னால் இருப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் போராளிகள் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கேட்டபோது அதனை மறுத்ததும் சம்பந்தனும் மாவையும்தான். அன்று நிராகரிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மீது ஏன் இந்த திடீர் கரிசனை?

நிலைமைகள் அனைத்தும் தனது தலைமைத்துவதற்கு எதிராக திரும்புவது தொடர்பில், சம்பந்தன் மிகுந்த கலக்கமடைந்திருக்கிறார். சம்பந்தன் எதிர்பார்த்திருக்க மாட்டார், முள்ளிவாய்க்கால் முற்றமே அதற்கான சான்றாக இருக்குமென்று. முள்ளிவாய்க்காலில் சம்பந்தனுக்கு நல்ல வரவேற்பு அளிக்கப்படவில்லை. அவர் பேசுகின்ற போதே மக்கள் கேள்விகேட்க முற்பட்டிருக்கின்றனர். இது ஒரு தனிநபரின் குழப்ப நடவடிக்கை என்று சுமந்திரன் குறிப்பிட்டிருக்கின்றார். அங்கு இடம்பெற்ற விடயங்களை, ஒரு அரசியல் கட்சியுடன் தொடர்புபடுத்த முற்பட்டிருக்கின்றார். இதுபோன்ற விடயங்களை தொடர்ந்தும் இவ்வாறே, எதிர்கொள்ளலாம் என்று எண்ணுவது தவறாகும். தனிநபர்களின் குழப்பத்திற்குள் ஏன் மக்கள் செல்ல நேர்கிறது? உண்மையில் மக்களுக்குள் ஏற்கனவே எரித்து கொண்டிருக்கும் விடயங்கள்தான் கோபமாக வெளிவருகின்றன. அனுபவம் வாய்ந்த சம்பந்தன் நிச்சயம் இதனை உணராமல் இருக்கமாட்டார். தான் எதிர்பார்த்ததைவிடவும் நிலைமைகள் வேகமாக மாறிவருகிறது என்னும் அச்சத்தின் விளைவாகததான், வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் இணைந்து ஊடயவிலாளர்களைச் சந்திக்க சம்பந்தன் விரும்பியிருக்கிறார். ஆனால், விக்னேஸ்வரன் அதனை மறுதலித்துவிட்டார். விக்னேஸ்வரன் வடக்கு மக்களின் உணர்வலைகளுடன் பயணிப்பதால் அவர் மக்களது மனங்களில் இடம்பிடித்திருக்கிறார். அவர் தனது கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துவாராக இருப்பின், அவரது புகழ் இன்னும் பன்மடங்கு அதிகரிக்கும். புலம்பெயர் சூழலிலும் கூட, அவர் மிகவும் உயர்வாகவே மதிக்கப்படுகின்றார். இந்த நிலைமையும் கூட, சம்பந்தனது சங்கடங்களை அதிகரித்திருக்கலாம். முள்ளிவாய்க்கால் நினைவுகூர்தலைத் தொடர்ந்து, விக்னேஸ்வரனை விட்டுவிட்டு பத்திரிகையாளர்களைச் சந்திக்க முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கின்றதென்றால், அது சம்பந்தனின் வீழ்ச்சியை அல்லவா காண்பிக்கின்றது. இந்த நிலைமைகள் ஒரு புதிய தலைமைத்துவத்திற்கான தேடலை மக்கள் மத்தியில் ஏற்படுத்திவிடுமோ என்னும் கேள்வியும் சம்பந்தனை அச்சுறுத்தலாம்.

இந்த நிகழ்வில் பங்குகொண்ட அரசியல் நோக்கர்களின் தகவல்களின்படி அங்கு திரண்டிருந்த மக்கள் விக்னேஸ்வரனின் காலில் விழுந்து கதறி அழுதிருக்கின்றனர். மக்கள் அரசியல் தலைவர்களின் காலில் விழுவதை இக்கட்டுரை ஊக்குவிக்கவில்லை. அதனை அரசியல் தலைவர்களும் ஊக்குவிக்கக் கூடாது. ஆனால், சம்பந்தன் ஒரு வேளை மக்களது உணர்வோடு பயணித்திருந்தால், நிச்சயம் அந்த மக்கள் சம்பந்தனது காலைத்தான் தேடியிருப்பர். ஜயா என்று விழுந்திருப்பர். சம்பந்தனது அரசியல் அனுபவத்தோடு ஒப்பிட்டால் விக​னேஸ்வரன் மிகவும் புதியவர், ஆனாலும், அவர் எவ்வாறு இவ்வளவு குறுகிய காலத்தில் மக்களின் மனதில் இடம்பிடித்தார்? மக்களோடு இருப்பவர்களையே மக்கள் மதிப்பர் – போற்றுவர். சம்பந்தன் ஒரு அனுபவம் வாய்ந்த தலைவராக இருப்பினும் கூட, மக்களின் உணர்வலைகளை கருத்தில்கொள்ளவில்லை. இதன் காரணமாகவே அவர் எதிர்ப்புக்கு ஆளாகின்றார். நிலைமைகள் மிகவும் வேகமாக மாறலாம். இந்த மாற்றம் அரசாங்கத்தின் மீதான எதிர்ப்பாக உருமாறாது மாறாக, சம்பந்தனுக்கு எதிரான, சில வேளைகளில் கூட்டமைப்பின் மீதான எதிர்பாகவே மாறும்.

யதிந்திரா