படம் | Selvaraja Rajasegar

“நீங்க ஏதோ எல்லாம் நினைச்சி அழுறீங்க. என்னோட இருக்கிறதால ஒன்டும் நடந்திருக்காது. என்ட பேரப்புள்ள மாதிரி.”

தன்னுடைய மகள் நாட்டின் ஜனாதிபதியுடன் இருக்கும் படத்தை காண்பித்து அழுது புலம்பியபோது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறிய ஆறுதல் வார்த்தைகள்தான் இவை.

கடந்த வருடம் மார்ச் மாதம் ஜனாதிபதியுடன் இருப்பதாகக் கூறும் பிள்ளையின் தாயைச் சந்தித்தேன். தான் ஜனாதிபதியைச் சந்தித்து தனது மகள் காசிப்பிள்ளை ஜெரோமி காணாமல்போயுள்ள விடயம் குறித்து கூறினார் என தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2016 ஆகஸ்ட் மாதம் 7ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டபோது காணாமல்போனோரின் உறவுகள் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை நடத்தியிருந்தனர். வட மாகாணத்திலுள்ள 5 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இதில் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது ஜனாதிபதியைச் சந்திக்க வேண்டுமெனக் கோரி மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜனின் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றபோது ஐவரை மட்டும் ஜனாதிபதியைச் சந்திப்பதற்காக அழைத்துச் செல்லலாம் என பொலிஸார் அறிவிக்க, அந்த ஐவருள் ஜெயவனிதாவும் இணைந்து கொண்டு ஜனாதிபதியைச் சந்திக்கச் சென்றார்.

இதன்போது ஜனாதிபதி தெரிவித்தார் என ஜெயவனிதா கூறியவை,

ஆனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இது அரசியல்வாதிகளின் சதி நடவடிக்கையாகும் என தற்போது குறிப்பிட்டிருக்கிறார்.

திருகோணமலை மாவட்டம் சம்பூர் பகுதியில் வைத்தியசாலை கட்டடம் மற்றும் கலாச்சார மண்டபம் போன்றவற்றை திறந்துவைக்கும்போது ஜனாதிபதி இதுதொடர்பாகக் கூறியுள்ளார்.

ஜனாதிபதி தெரிவித்தவை,

இந்தப் படம் குறித்து விசாரணை செய்வதற்காக பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர் தன்னை நாலாம் மாடிக்கு அழைத்து விசாரித்ததாக ஜெயவனிதா என்னிடம் அன்று கூறினார்.

“(2016) ஜனவரி மாதம் 13ஆம் திகதி விசாரணைக்காக போனனான். நாலாம் மாடியில சொல்லினம், சிலவேளை ஜனாதிபதியின்ட படத்தில உங்கட பிள்ளையின்ட படத்த புகுத்தியிருக்கினம் என்டு. என்ட புள்ள ஸ்கூல் யுனிபோர்ம் உடுத்தி படம் எடுத்ததே இல்ல, அப்படி இருக்கும்போது எப்படி புகுத்துறது.”

“அன்டைக்கு (2016 மார்ச் மாதத்துக்கு முன்னர்) ஊர்ல வந்தும் விசாரிச்சிரிக்கினம். படத்தில இருக்கிறவ என்ட மகளா? எந்த ஸ்கூல்ல படிச்சவ? என்டெல்லாம் கேட்டிருக்கினம். இதுல ஜனாதிபதி தலையிட்டிருக்கார் என்டுதான் நான் நினைக்கிறன். அதனால, கூடிய சீக்கிரத்தில மகள் வீடு வந்து சேருவா, புதிய ஜனாதிபதி மேல எனக்கு நம்பிக்க இருக்கு”

– என்று ஜனாதிபதி மீது தான் வைத்திருக்கும் நம்பிக்கை குறித்து அன்று என்னிடம் தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதி கூறுவது போல இது அரசியல் சதி நடவடிக்கையாகவே இருக்கலாம் என்று வைத்துக் கொண்டாலும் தனது மகள்தான் இதுவென்று 2 வருடங்களுக்கு மேலாக நம்பிக்கொண்டிருக்கும் தாய்க்கு வழங்கும் பதில் என்ன?

இந்தப் படம் யாழ். இந்துக் கல்லூரியில் எடுக்கப்பட்டது என உறுதியாகக் கூறும் ஜனாதிபதி இது குறித்து உடனடியாக விசாரணை நடத்த உத்தரவிடாதது ஏன்?

படத்தைக் காட்டி தனது மகள் குறித்து தெரிவித்தபோது, “இந்தப் புள்ள என்னோட இருக்கிறதால நல்லாதான் இருக்கும். கவலைப்படாதீங்க. என்ட பேரப்புள்ள மாதிரி” என்று தாங்கள் கூறியதாக தாய் ஜெயவனிதா கூறுகிறார். இந்தச் சந்திப்பு நிகழவில்லையா?

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் இந்தப் படம் குறித்த கடந்த வருடமே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து தாங்கள் அறியமுற்படவில்லையா?

“இந்நாட்டை மகிழ்ச்சியாக வாழும் மக்களைக்கொண்ட ஒரு நாடாக கட்டியெழுப்புவதற்கு நல்லாட்சி மற்றும் நல்லிணக்கம் ஆகிய சொற்களை யதார்த்தமாக்குதல் வேண்டும். நாட்டின் எதிர்காலமானது நல்லாட்சி மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றைப் பிரயோக ரீதியில் நடைமுறைப்படுத்துவதிலேயே தங்கியுள்ளது.”

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

செல்வராஜா ராஜசேகர்