படம் | Roar.lk

ட்ரோன்கள் (Drones) என்று அழைக்கப்படுகின்ற ஆளில்லா விமானங்களின் பயன்பாடும் துஷ்பிரயோகமும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வருகின்ற நிலையில், ஊடகத்துறையில் அவற்றின் பயன்பாடு தொடர்பில் காணப்படக்கூடியதாக இருக்கின்ற சில போக்குகள் குறித்து சிந்தித்துப் பார்ப்பது பயனுடையதாக இருக்கும். தீங்கானதாக நோக்கப்படுகின்றதும் அஞ்சப்படுகின்றதுமான இந்த ட்ரோன்கள் நாட்டின் பிரதான போக்கு ஊடகங்களில், விசேடமாக தொலைக்காட்சி சேவை நிலையங்களினால் பயன்படுத்தப்படுகின்ற மிகவும் சமீபத்திய தொழில்நுட்பமாக விளங்குகின்றன. ட்ரோன்கள் என்ற பெயரே பிரச்சினைக்குரியதாக நோக்கப்படுகிறது. யேமன், பாகிஸ்தான் போன்ற நாடுகளின் போர்க்களங்களில் முன்னாள் ஜனாதிபதிகளான ஜோர்ஜ் புஷ், பராக் ஒபாமா ஆகியோரின் நிர்வாகங்களின் உத்தரவுகளின் கீழ் அமெரிக்கர்களினால் தாக்குதல்களுக்காக ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வந்ததே அதற்குப் பிரதான காரணமாகும். இலங்கையிலும் ஆகாயமார்க்க கண்காணிப்புப் பணிகளுக்காக ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன. வடக்கிலே இராணுவ நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கக் கூடிய ட்ரோன்கள் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் சமூகத்திற்கு பெரும் உணர்வதிர்ச்சியை ஏற்படுத்துபவையாக இருந்திருக்கின்றன. அதேவேளை, மறுபுறத்தில், குடிமக்களின் கைகளில் இந்த உபகரணம் கிடைத்துவிடக்கூடிய சாத்தியப்பாடுகள் பற்றிய பீதி இராணுவத் தரப்புக்கும் இருந்தது. இந்த பீதித்தான் பொழுதுபோக்கு தேவைகளுக்காகவும் ஊடகத்துறையின் சேவைக்காகவும் சிறியதும் மலிவானதுமான ட்ரோன்கள் பரந்தளவில் பயன்படுத்தப்படுவதற்கு எதிரான நிலைப்பாடுகளுக்கு காரணமாக இருக்கிறது.

பாவனையாளர்கள் நவீன ரகமான ட்ரோன் ஒன்றை இரண்டு இலட்சம் ரூபாவுக்கும் குறைந்த விலைக்கு இன்று கொழும்பு லிபர்டி பிளாசாவில் வாங்கிக் கொள்ள முடியும். இந்த விலைக்கு வாங்கக்கூடிய ட்ரோன் முழு அளவில் மின்விசை ஏற்றப்பட்ட நிலையில், 2 தொடக்கம் 4 கிலோமீற்றர் வரையான தரையிலும் உச்சபட்சம் சுமார் 500 மீற்றர்கள் உயரத்தவும் சுலபமாகவே பறக்கக் கூடியவையாகும். 4K கமராக்களுடன் வருகின்ற இந்த வகைமாதிரியான ட்ரோன்கள் ஆகாயத்திலிருந்து மிகவும் உயர் தெளிவான புகைப்படங்களையும் HD திரைகளில் கூட காட்சிப்படுத்தக்கூடியனவாகவும் கூடுதல் தெளிவான வீடியோக்களையும் எடுக்கக்கூடிய ஆற்றல் உடையவையாகும். சில வகைமாதிரியான ட்ரோன்கள் மிகவும் மேம்பட்ட அம்சங்களைக் கொண்டவையாக இருக்கின்றன. உதாரணமாக, அந்த ட்ரோன்களின் மென்பொருள் அமைப்புகளில் இலங்கையில் உள்ள விமான நிலையங்கள் பற்றிய விபரங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அதனால், அந்த விமான நிலையங்களின் நெருக்கமான செயற்பாட்டு ஆகாயப் பரப்பெல்லைக்குள் ட்ரோன்களை பறக்க வைப்பதோ அல்லது இயக்குவதோ சாத்தியமில்லை. வர்த்தக விமானங்களுடன் ட்ரோன்கள் நடுவானில் மோதிக்கொள்ளக் கூடிய ஆபத்து இதன்மூலம் தடுக்கப்படுகிறது. வேறு சில வகைமாதிரியான ட்ரோன்கள் தன்னிச்சையாகவே தொடக்க இடங்களுக்கு திரும்பிவரக்கூடியவையாக தயாரிக்கப்பட்டுள்ளன. அதாவது, மின்கலங்களில் எஞ்சியிருக்கும் மின்விசையைக் கணக்கிட்டு அந்த மின்விசை மிகவும் குறைவானதாக இருக்கும் பட்சத்தில் (ஆகாயத்திலிருந்து விழுந்துவிடக்கூடிய ஆபத்தை தவிர்ப்பதற்காக) இடைநடுவிலேயே பறப்பதை நிறுத்திக்கொண்டு தொடக்க இடத்துக்கு திரும்பிவரக்கூடியதாக பொறிமுறை அமைக்கப்பட்டுள்ளது. DJI நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட சில வகை ட்ரோன்கள் பறக்கும்போது விபத்து இடம்பெறக்கூடிய சாத்தியத்தை தன்னியல்பாகவே கண்டறியக்கூடிய பொறிமுறையைக் கொண்டிருக்கின்றன. விலைமலிவான சிறிய ட்ரோன்களில் இத்தகைய மிகவும் மேம்பட்ட வகையிலான நவீன அம்சங்கள் இல்லை.

நான் இலங்கைக்கு உள்ளேயும் வெளியேயும் பல வருடங்களாக ட்ரோன்களை பறக்கவிட்டிருக்கிறேன். அவற்றின் பயன்பாடுகள் பற்றி போதித்திருக்கிறேன். அவை தொடர்பான நடைமுறை ஒழுங்கை அல்லது ஒழுக்கவியலை ஆராய்ந்திருக்கின்றேன். போர் மற்றும் தாக்குதல் தேவைகளுக்கு அப்பால் ட்ரோன்களின் பயன்பாட்டை நான் பார்த்திருக்கிறேன். பாவனையாளர் ட்ரோன்களின் விற்பனை கடந்த சில வருடங்களாக அதிகரித்திருக்கின்றன. பல நூறு கோடி டொலர்கள் பெறுமதியான உலகளாவிய தொழில்துறையாக ட்ரோன் தயாரிப்பும் விற்பனையும் வளர்ந்துவிட்டன. அந்தப் போக்கில் தணிவு ஏற்படுவதற்கான அறிகுறி எதுவுமில்லை. Parrot மற்றும் DJI என்ற இரு கம்பனிகளே ட்ரோன் சந்தையில் ஆதிக்க நிலையில் விளங்குகின்றன. இலங்கையில் நாம் எமது சொந்த ட்ரோன்களைத் தயாரிக்கிறோம்.

மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் திணைக்களம் 2014ஆம் ஆண்டில் றேவன் என்ற நடுத்தர அளவு ட்ரோன் ஒன்றை பரீட்சித்துப் பார்த்தது. அதே வருடம் திறந்துவைக்கப்பட்ட அதன் UAV ஆராய்ச்சி நிலையம் மேலும் கூடுதலான அளவுக்கு மேம்பட்ட Ceyhawk என்ற ட்ரோன்களைத் தயாரித்தது.

விடுமுறைக் களிப்பிடங்களையும் சுற்றுலா பகுதிகளையும் திருமணங்கள் மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளையும் படம்பிடித்தல் போன்ற பொழுதுபோக்கு நோக்கங்கள் தொடக்கம் ஊடகத்துறையின் தேவைகள் வரை ட்ரோன்களின் பயன்பாடு காரணமாகவே அவற்றின் மீது நாட்டம் அதிகரித்திருக்கிறது. ஊடகத்துறையைப் பொறுத்தவரை, அரசியல் காட்சிகளின் பேரணிகள், பரந்தளவிலான இயற்கை அனர்த்தங்கள், மனிதரால் ஏற்படுத்தப்படும் அனர்த்தங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளைப் பற்றிய தகவல்களைத் திரட்டுவதற்காக ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. புதைகுழிகளில் இருந்து சடலங்கள் மீண்டும் தேண்டியெடுக்கப்பட்ட சம்பவங்கள், பொது மக்களின் பாதுகாப்பைப் பற்றி அக்கறைப்படாமல் சனக்கூட்டத்தின் மேலாக பறக்கவிடப்பட்ட சம்பவங்கள் மற்றும் தாதுகோபுரங்களுடனான மோதல்கள் ஆகியவை காரணமாகவே அண்மைக் காலத்தில் ட்ரோன்கள் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்ததைக் காணக்கூடியதாக இருந்தது. இவை பெரும்பாலும் நடைமுறை ஒழுங்கிற்கு முரணான வகையில் அல்லது சட்ட விரோதமாக ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்ட சம்பவங்களாகவே இருந்தன.


“தொழில்நுட்ப வளர்ச்சியை தடுக்க முடியாது, மனிதாபிமானம் இருக்கவேண்டும்”

ஊடகத்துறையில் மரணிக்கும் மனிதாபிமானம்


ஊடகத்துறையில் ட்ரோன்களின் பயன்பாடு பற்றி டிசம்பர் மாத முற்பகுதியில் அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. தற்போதைய அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டிருக்கும் ட்ரோன்களின் பயன்பாடு தொடர்பான ‘புதிய’ ஒழுங்குவிதிகள் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதாக சில ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன. தனியார் தொலைக்காட்சி நிலையங்களுக்குச் சொந்தமான ட்ரோன்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவங்கள் அரசியல் நோக்குடனானவை என்று வேறு சில ஊடகங்கள் குற்றஞ்சாட்டியிருந்தன. ஊடகங்கள் மீது குற்றம் கண்டுபிடிக்கின்ற போக்கும் ஊடக நிறுவனங்களும் ஊடகவியலாளர்களும் வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட நிலைவரமும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கு ஆபத்தும் ஏற்பட்டிருந்த கடந்த ஒரு தசாப்தகால புன்புலத்தில் நோக்குகையில் இந்த குழப்பநிலை புரிந்துகொள்ளப்படக் கூடியதேயாகும். ஒரு ஊடகத்தினால் ட்ரோன் ஒன்றைப் பறக்கவிட முடியவில்லை என்றால் அது ஊடக சுதந்திரத்துக்கு ஏற்படுகின்ற அவமதிப்பேயாகும். ஆனால், இங்கையில் பல ஊடகவியலாளர்களும் ட்ரோன்களை இயக்குபவர்களும் ட்ரோன்களின் பயன்பாடு தொடர்பில் முதலில் 2015 ஆகஸ்டில் இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையினால் (Civil Aviation Authority of Sri Lanka) வெளியிடப்பட்டு பிறகு ஒவ்வொரு வருடமும் மீளாய்வு செய்யப்பட்டு வருகின்ற ஒழுங்கு விதிகளை அறியாதவர்களாகவே இருந்துவருகிறார்கள். மிகவும் அண்மையில் இவ்வருடம் ஜனவரி முற்பகுதியில் வெளியிடப்பட்ட ஒழுங்கு விதிகள் காரை செலுத்துவது போன்றே ட்ரோன்களையும் பயன்படுத்த வலியுறுத்துகின்றன. ட்ரோன்களை பதிவுசெய்வதுடன் காப்புறுதியும் செய்துகொள்ள வேண்டும். அதை இயக்குபவர் (Pilot) தன்னையும் பதிவுசெய்து கொண்டு செல்லுபடியாகக்கூடிய அனுமதிப்பத்திரத்தையும் பெற்றிருக்கவேண்டும். திறந்த பகுதியொன்றில் ட்ரோனை பறக்கவிடுவதாக இருந்தால் சம்பந்தப்பட்ட உள்ளூர் பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்கவேண்டும். பிரதம பாதுகாப்பு அதிகாரி அலுவலகத்திடமிருந்து அனுமதியைப் பெற்றிருக்கவேண்டுமென்ற கடந்த வருடத்தைய நிபந்தனை இப்போது நடைமுறையில் இல்லை. பல வழிகளில் நோக்குகையில் இந்த ஒழுங்கு விதிகள் ட்ரோன் ஒன்றை சொந்தமாக வைத்திருப்பதையும் பறக்கவிடுவதையும் சுலபமாக்குகின்றன என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், இலங்கையிலே பாரதூரமான சவால்கள் தொடர்ந்தும் இருக்கவே செய்கின்றன.

புதியவர்களைப் பொறுத்தவரை ட்ரோன் ஒன்றைப் பதிவுசெய்வதற்கு சுலபமான வழி எதுவும் இல்லை. இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் முறைமை மிகவும் பழமைப்பட்டுப்போன ஒன்றாக இருக்கிறது. ட்ரோன் ஒன்றை பறக்கவிடுவதற்கு முன்னதாக அதைப் பதிவுசெய்துகொள்ள வேண்டியதும் செல்லுபடியாகக் கூடிய அனுமதிப்பத்திரத்தை வைத்திருப்பதும் இப்போது அவசியம் என்றபோதிலும், அதற்கான வழிமுறைகளை ஒழுங்கமைப்பதற்கான ஏற்பாடுகள் பற்றியோ அல்லது பொதுமக்களுக்கு அந்தச் செயன்முறைகளைச் சுலபமாக்குவது பற்றியோ சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபைக்கே எதுவும் தெரியவில்லை. அதன் விளைவாக, சட்டபூர்வமாக ட்ரோனை பறக்கவிடுவதில் அக்களை கொண்டிருப்பவர்கள் கூட, பெரும்பாலும் ஒழுங்குவிதிகளை மீறியே செயற்படுகின்ற நிலைமையைக் காணக்கூடியதாக இருக்கிறது. மேலும், ட்ரோனை எவ்வாறு காப்புறுதி செய்துகொள்வதென்பது குறித்து காப்புறுதிக் கம்பனிகளுக்கே தெளிவான வழிகாட்டல் எதுவும் இல்லை. புதிய ஒழுங்குவிதிகளின் பிரகாரம் ட்ரோன்கள் நான்கு வகையாக தரப்படுத்தப்பட்டுவருகின்றன. ஆனால், (வீட்டுத் தோட்டங்களுக்கு வெளியே பறக்கவிடக்கூடிய ஆற்றல்கொண்ட விளையாட்டு ட்ரோன்கள் தொடக்கம் உடைமைகளுக்கும் ஆட்களுக்கும் ஆபத்தைத் தோற்றுவிக்கக்கூடிய கூடுதல் சக்திவாய்ந்த இயந்திரங்கள் வரை) தங்களுக்கு கையளிக்கப்படுகின்ற உபகரணங்களை காப்புறுதி செய்யுமுகமாக மதிப்பீட்டைச் செய்வதற்கான வழிகாட்டல் விதிமுறைகளை இன்னமும் காப்புறுதிக் கம்பனிகள் வகுக்கவில்லை. சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் புதிய ஒழுங்குவிதிகளைப் பற்றி பொலிஸார் முறையாக அறிந்திருக்கிறார்களா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. ஒழுங்கு விதிகளை சிங்களத்தில் அல்லது தமிழில் கிடைக்கச் செய்வதற்கு அதிகார சபை நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆங்கிலத்தில் உள்ள ஒழுங்கு விதிகள் சலிப்பூட்டுகின்ற அளவுக்கு வெறும் சொல்மயமானவையாகவே இருக்கின்றன. விளங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு நுணுக்கம் சார்ந்தவையாக இருக்கின்றன. பிரிட்டன், அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் ஏனைய நாடுகளில் உள்ளதைப் போன்று ஒழுங்குவிதிகள் அச்சில் சுருக்கமானவையாகவும் இல்லை. இன்போகிராபிக்ஸ், கார்டூன்கள், வீடியோக்களைப் பயன்படுத்தி புதிய பாவனையாளர்களுக்கும் விமானிகளுக்கும் உதவக்கூடிய முறையில் ஒழுங்குவிதிகளின் அடிப்படைகளை கிரகித்துக்கொள்வதற்கு இலங்கையில் வகைசெய்யப்படவில்லை.

ஒழுங்குவிதிகளைப் பற்றிய விழிப்புணர்வை மேபடுத்துவதற்கும் பயிற்சியளித்து ட்ரோன் விமானிகளை சான்று உறுதிப்படுத்துவதற்கும் ஊடகத்துறை அமைச்சும் அரசாங்கத் தகவல் திணைக்களமும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையும் மேற்கொண்டிருக்கும் செயற்பாடுகள் வரவேற்கப்படத்தக்கவை. ஆனால், அதேவேளை, அந்தச் செயற்பாடுகளை துரிதப்படுத்த வேண்டியது அவசியமாகும். அதற்குச் சமாந்தரமாக, ட்ரோனைப் பயன்படுத்துவதில் கடைப்பிடிக்கவேண்டிய நடைமுறை ஒழுக்கத்தை அல்லது ஒழுக்கவியலைப் பற்றி கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்வதும் முக்கியமானதாகும். ஒழுக்கவியல் பற்றி தற்போது நடைமுறையில் உள்ள ஒழுங்குவிதிகள் ட்ரோன் பயன்பாட்டுக்கு ஆழமாகப் பிரயோகிக்கப்படக்கூடியவை என்பதை ஊடகவியலாளர்கள் புரிந்துகொள்வது அவசியம். அந்தரங்கத்துக்கான உரிமை, சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் ஒழுங்குவிதிகளில் பிரத்தியேகமாக குறித்துரைக்கப்பட்டுள்ளன. அதற்கும் அப்பால் பொது அறிவின் அடிப்படையிலான ஒழுங்குவிதிகளும் முக்கியமானவை.

மதுபோதையில் அல்லது போதைப் பொருட்களை உட்கொண்ட நிலையில் வாகனங்களை செலுத்தக்கூடாது என்பதைப் போன்றே ட்ரோன் ஒன்றைப் பறக்கவிடும் போதும் கீழே இருக்கக்கூடியவற்றுக்கும் கீழே இருக்கக்கூடியவர்களுக்கும் ஆபத்து நேராமல் பார்த்துக்கொள்வதில் மிகுந்த கவனம் செலுத்தப்படவேண்டும்.

இலங்கையில் ட்ரோன்களின் பயன்பாட்டை மேம்படுத்துவதில் (குறிப்பாக ஊடகத்துறையில்) தனக்கு இருக்கின்ற அக்கறையை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை திரும்பத்திரும்ப வலியுறுத்துகின்ற அதேவேளை, அரசாங்கத்தின் ஏனைய பிரிவுகள் (சந்தேகத்துக்கிடமின்றி பாதுகாப்புத் துறை) ட்ரோன்களை தரையிறக்குவதிலேயே கூடுதல் அக்கறை கொண்டுள்ளன என்பதையும் அது சுட்டிக்காட்டியிருக்கிறது. இது ஊடகத்துறைக்கான ஒரு வாய்ப்பாகும்.

கடலோரப் பகுதிகளில் உள்ள வாழ்க்கை நிலைமைகள், காடழிப்பு, நிலப்பயன்பாடு, வரட்சிக் கொடுமை, அனர்த்தங்களின் பின்னரான தேவைகள் மதிப்பீடு, அனர்த்த நிலவரங்கள், அனர்த்தத் தவிர்ப்பு செயற்திட்டங்கள், நகர்புற வறுமை, ஆறுகளின் நிலைமை, வீடமைப்பு, விவசாய முகாமைத்துவம், நீர்வளங்கள்/ சுற்றாடல் மற்றும் வனவிலங்கு நிலைவரம், மண் அகழ்வு, சுற்றுலாத்துறை அபிவிருத்தி, உள்ளூர் வளங்கள் மற்றும் வாழ்வாதாரங்கள் மீதான அதன் தாக்கங்கள் என்று பெருவாரியான துறைகளில்  தகவல்களைச் சேகரிப்பதற்கு ட்ரோன்களைப் பயன்படுத்த முடியும். புதிய நோக்குகளையும் எண்ணப்பாங்குகளையும் கொண்டுவரக்கூடிய முறையில் செய்தி சேகரிப்பதற்கு பல் வழிகளிலும் ட்ரோன்களைப் பயன்படுத்த முடியும். கச்சிதமான முறையில் கையாண்டால் இந்த வியக்கத்தக்க இயந்திரங்கள் புதிய சட்டகங்களின் ஊடாக இலங்கையை நாம் பார்ப்பதற்கு உதவக்கூடியவையாகும். இதுவரையில் விளிம்பு நிலையில் இருந்திருக்கக்கூடிய வாய்ப்புக்களை பிரசித்தப்படுத்துவதற்கும் நிகழ்வுப்போக்குகள், அக்கறைகள், கேள்விகள், சவால்களை பதிவுசெய்வதற்கும் இவை உதவக்கூடியவையாகும்.

அதுவே சிறப்பான ஊடகத்துறையாகும்.


Droning On என்ற தலைப்பில் சஞ்சன ஹத்தொட்டுவ எழுதி ஞாயிறு ஐலண்ட் பத்திரிகையில் வௌியான கட்டுரையின் தமிழாக்கம்

 


சமூக ஊடகங்களில் மாற்றம்:

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : மாற்றம் பேஸ்புக் பக்கம்

ருவிட்டரில் மாற்றத்தைத் பின்தொடர : மாற்றம் ருவிட்டர் தளம்

இன்ஸ்டகிராமில் கருத்து/விருப்பம் தெரிவிக்க : மாற்றம் இன்ஸ்டகிரம்