படம் | Jera, (திருகோணமலை, குமாரபுரத்தில் இராணுவத்தினரால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணொருவர்)

ஐ.நா. மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்ற மாட்டேன் என இலங்கை அரசு தெளிவாக சொல்லுமிடத்து  அவர்களுக்கு அதே தீர்மானத்தை நிறைவேற்ற கால அவகாசம் வழங்குவது ஐ.நா. உரிமை பேரவையின் நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்தும் என்று கூட்டு விண்ணப்பமொன்றை வெளியிட்டு தெரிவித்திருக்கும் தமிழ் சிவில் சமூக அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள், அவ்வாறு கால அவகாசம் வழங்குதல் நீதிக்கான தேடலை நீர்த்துப் போகச் செய்யும் என்றும் தெரிவித்துள்ளது​

###

கூட்டு விண்ணப்பத்தின் முழு வடிவம் கீழே தரப்பட்டுள்ளது.

09 மார்ச் 2017

இலங்கையின் அனுசரணையுடன் ஐ.நா. மனித உரிமை பேரவையில் 2015 அக்டோபரில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானமானது, மனித உரிமைகள் அச்சுறுத்தலுக்குட்படுத்தப்பட்ட ஒரு நாட்டுடன் இணைந்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவை எவ்வாறு ஆக்கபூர்வமாக தொழிற்படுவது என்பதற்கு உதாரணமாக அமையக் கூடியது என அந்நேரத்தில் பரவலாகக் கருத்துரைக்கப்பட்டது. ஆனால், இலங்கை அரசாங்கத்தை, இப்பிரேரணையின் இணை அனுசரணையாளர் எனும் தளத்திற்கு கொண்டுவருவதற்காக, பிரேரணையின் உள்ளடக்கத்தில், உறுதியான சர்வதேச நியமங்களுக்கமைவான பொறுப்புக்கூறல் மற்றும் நீதிப்பொறிமுறைகளுக்கான அடித்தளமொன்றை இடுவதற்கான சந்தர்ப்பத்தை இழந்து, தெளிவற்ற வாசகங்களுடன் கூடிய கலப்பு நீதிப்பொறிமுறை ஒன்றிற்கு விட்டுக்கொடுப்பு செய்யப்பட்டு 30/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கையின் கட்டமைப்புகள், உண்மையைக் கண்டறிந்து நீதியை வழங்குவதற்கான அரசியல் விருப்பை கொண்டிராதமையால், இலங்கை அரசாங்கத்தின் உள்ளக நிர்வாகக்கட்டுப்பாட்டின் கீழ் அமைகின்ற எந்தவொரு கலப்புபொறிமுறையும் எமக்கான நீதியைப் பெற்றுத் தராது என நாம் அப்போதே குறிப்பிட்டிருந்தோம். குறிப்பாக, ஐநா மனித உரிமை பேரவையின் 30/1 தீர்மானம் நிறைவேற்றபபட்ட பின்பு இலங்கை நீதித்துறையால் வழங்கப்பட்ட குமாரபுரம் மற்றும் அமரர் ரவிராஜ் வழக்குகளின் தீர்ப்புகள், இலங்கை நீதித்துறையில் ஆழமாக வேரூன்றியிருக்கின்ற, குறிப்பாக பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்களாக இருக்கும் பட்சத்தில், குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ளும் வழமையை உறுதிப்படுத்துகின்றன. அத்தோடு, உண்மையான பொறுப்புக்கூறலில் அரசியல் விருப்பில்லாத இலங்கையின் கட்டமைப்புகளுள், சில வெளிநாட்டு நீதிபதிகளை மட்டும் சேர்த்துக் கொள்வதன் மூலம் மட்டும் பொறுப்புக்கூறல் நடைபெறுவதற்கான சாத்தியம் இல்லை என்பதனை இது வெளிக்காட்டி நின்றது.

ஆயினும், ஐ.நா. மனித உரிமை பேரவையின் 30/1 தீர்மானத்தின் மூலம்  பொறுப்புக்கூறலிற்காக (இலங்கை அரசினால்) ஒத்துக்கொள்ளப்பட்ட ஆகக்குறைந்த கடப்பாடுகளிலிருந்து கூட தற்போது இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக முழுமையான விலகியுள்ளது. தாமே இணை அனுசரணையாளர்களாக இருந்து நிறைவேற்றிய, ஐ.நா. மனித உரிமைபேரவையின் 30/1 தீர்மானம், குறிப்பாக நிறைவேற்றுப்பந்தி 6 இல் குறிக்கப்பட்ட கடப்பாடுகள் (வெளிநாட்டு நீதிபதிகள், வழக்குத் தொடுநர்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என்ற கடப்பாடுகள்), எந்த வகையிலும் தம்மை கட்டுப்படுத்தாது என இலங்கை அரசாங்கம், இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட மறுநாளிலிருந்தே தொடர்ச்சியாக பலதடவைகள் எண்ணத்திலும் செயற்பாட்டிலும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இந்த கடப்பாடுகள் தம்மைக் கட்டுப்படுத்த மாட்டாதவை என காட்டும் செயற்பாடுகளுக்கு இலங்கை ஜனாதிபதி அவர்களே தலைமைதாங்குகிறார். மிகக்குறைந்தளவான கலப்பு பொறிமுறையை பரிந்துரை செய்திருந்த இலங்கை அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்கத்துக்கான கலந்தாய்வுச் செயலணியின் அறிக்கையை நேரடியாகப்பெற்றுக் கொள்வதைக் கூட இலங்கை ஜனாதிபதியும் பிரதமரும் தவிர்த்திருந்தனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. எனவே, ஐ.நா. மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில், 28.02.17 அன்று உரையாற்றிய இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் உரையானது, வெற்றுவார்த்தைகளால் புனையப்பட்டதும், இலங்கை அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாட்டுடன் எந்தவிதத் தொடர்பற்றதென்பதோடு, அடிப்படையில் அனைவரையும் பிழையாக வழிநடத்துகின்ற ஒன்றாகும்.

இலங்கை அரசாங்கமானது, 30/1 தீர்மானத்தின் 06ஆம் செயற்பாட்டு பந்தியில் குறிப்பிடப்பட்டவற்றை மட்டுமல்லாது, அத்தீர்மானத்திலுள்ள வேறு பல கடப்பாடுகளையும் நிறைவேற்றத் தவறியுள்ளது. உதாரணமாக:

1)    கணிசமான எண்ணிகையான அரசியல் கைதிகள் இன்னமும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். விடுவிக்கப்பட்ட சிலர் கூட, இலங்கை ஆயுதப்படைகளால் நிர்வகிக்கப்படும், ஈவிரக்கமற்ற சித்திரவதைகளுடன் கூடிய மனிதத்துவமற்ற தரம் தாழ்த்தும் கொடூரமான ‘புனர்வாழ்வு’ முகாம்களுக்கென அனுப்பப்படுகின்றனர். இவற்றிலிருந்தெல்லாம் விடுவிக்கப்பட்டவர்களும் கூட கடுமையான கண்காணிப்பு மற்றும் தொடர்ச்சியான தொந்தரவுகளிற்கு உட்படுத்தப்படுகின்றனர்.

2)    இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் 1/5 நிலங்கள் கூட இன்னும் விடுவிக்கப்படவில்லை. சில காணிகள் (ஆக்கிரமிப்பிலிருந்து) விடுவிக்கப்பட்டிருக்கின்ற போதிலும், அப்பகுதியிலிருந்த இராணுவம், அருகிலிருக்கும் நிலப்பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளதே தவிர, இராணுவமயாமக்கலை நீக்கி, முழுமையான மீள்குடியமர்வுக்கான ஒரு சூழலை உருவாக்கவில்லை. இராணுவநீக்கம் இல்லாத காணி விடுவிப்புகள், இயல்புநிலை உருவாக்கத்துக்கு முட்டுக்கட்டையாகவே தொடர்ந்து இருக்கின்றன. இதைவிட, பெருமளவிலான நிலப்பகுதிகள் தற்போதும் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்பதோடு, வெவ்வேறு முகமூடிகளோடு, தற்போதைய அரசின் கீழும் இலங்கை இராணுவத்தால் காணி அபகரிப்பு தொடர்கிறது. வடக்கு கிழக்கில் இராணுவக் குறைப்பு செய்யப்படவில்லை என இலங்கை அரசாங்கம் தானே ஒத்துக்கொண்டு அறிவித்துமுள்ளது​

3)    காணாமல் போனோருக்கான அலுவலகம், தனது அடிப்படையில் பிழையான நடைமுறைகளுடனேனும், நடைமுறைச்செயற்பாட்டிற்கு வராது, இன்னமும் எழுத்துவடிவிலேயே இருக்கிறது

4)    வடக்கு கிழக்கு மக்களின் பொதுவாழ்க்கை மீதான இராணுவ மற்றும் பொலிஸ் கண்காணிப்பு, இந்த அரசாங்கத்திலும் தொடர்கிறது. ஆதலால், தற்போதைய ‘இயல்பு நிலை’ எனும் தோற்றப்பாட்டை பயன்படுத்தி செயற்பாடுகளை முன்னெடுக்கும் செயற்பாட்டாளர்கள், தற்போதைய சூழ்நிலை எதிர்காலத்தில் மோசமடையும் பட்சத்தில், அரசாங்கத்தினால் தாம் இலக்குவைக்கப்படக்கூடும் என அஞ்சுகின்றனர். 2001-2004 சமாதான செயன்முறைகள் குலைவடைந்த போதும் செயற்பாட்டாளார்கள் இவ்வாறாகவே குறி வைத்துக் கொல்லப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசு ‘உண்மையைக் கண்டறிதலை’ முன்னிறுத்தி குற்றவியல் நீதியை அல்லது நீதியை புறந்தள்ள முயற்சிப்பது தொடர்பில் நாம் மிகுந்த கரிசனை கொண்டுள்ளோம். ஆனால், இப்போது இவை இரண்டையுமே பின்தள்ளி அரசியலமைப்பாக்கத்தை முன்னிறுத்தி நீதி, உண்மையைக் கண்டறிதல் ஆகிய இரண்டையும் பிற்போட வேண்டும் என அரசாங்கம் கூறுகின்றது. புதிய அரசியலமைப்பு உருவாக்க செயன்முறையை முன்னிறுத்தி உண்மையையும், நீதியையும், பொறுப்புக்கூறலையும் புறந்தள்ளுதல் காலத்தை இழுத்தடிக்கும் செயலாக நாம் கருதுகிறோம். நீதியும் சமாதானமும் (நிரந்தரத் தீர்வும்), இருவேறான தூண்கள் அல்ல. அவை இரண்டுமே ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டது. சமாதானத்தை முன்னிறுத்தி நீதியை புறந்தள்ளல் அரசியலமைப்பாக்க முயற்சியின் நேர்மைத்தன்மையை கேள்விக்குட்படுத்துகின்றது. சமாதானத்தையும், நீதியையும் இருதுருவங்களாக அரசாங்கம் அணுகுவது அபாயகரமானதும் இவ்விரண்டிலும் அரசாங்கத்திற்கு அரசியல் விருப்பமில்லை என்பதனை வெளிப்படுத்தி நிற்கின்றது. எது எவ்வாறாயிருப்பினும் அரசியலமைப்பு முயற்சிகளில் பெரிதளவில் முன்னேற்றங்கள் இல்லை என்பதே உண்மை. அரசியலமைப்பாக்க சபையின் வழிகாட்டும் குழு தன்னுடைய இடைக்கால அறிக்கையை இன்னும் சமர்ப்பிக்கவில்லை. இவ்வறிக்கையை அரசாங்கத்தின் ஓர் பகுதியினரே தடுத்து வைத்துள்ளனர். இது புதிய அரசியல் திட்ட செயன்முறையில் இடையூறு ஏற்பட்டுவிட்டதை சுட்டி நிற்கின்றது. புதிய அரசியலமைப்புத் திட்டம் தொடர்பிலான உரையாடல் இலங்கையின் ஒற்றையாட்சி முறையை கேள்விக்குட்படுத்தவில்லை. முன்னரைப் போல சிங்கள-பெளத்த மேலாதிக்கவாதம் தொடர்ந்தும் பேணப்படும் என்று பொது வெளியில் தெற்கின் அரசியல்வாதிகள் உறுதிப்படுத்துகிறார்கள். தமிழ் மக்கள் மீது புதிய அரசியல் திட்டம் எனும் வெற்று வெறிதான நம்பிக்கைக்குப் பதிலாக பொறுப்புக்கூறலை கைவிடுமாறு அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்றது. இறுதியில் அரசியல் தீர்வும் இல்லை, நீதியும் இல்லை எனும் நிலைப்பாட்டிற்கே இது இட்டுச் செல்லும்.

ஐ.நா. மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் 30/1 என்பது இலங்கையின் மீதான சர்வதேச சமூகத்தின் பார்வையை திசை திருப்புவதற்காக என்பது மேற்சொன்னவற்றில் இருந்து தெளிவாகின்றது. கடுமையான நடவடிக்கையில் இருந்து இலங்கையைப் பாதுகாத்துக் கொள்வதற்கே இத்தீர்மானம் கொண்டு வரப்பட்டதாக தற்போது சிரேஸ்ட அமைச்சர்கள் விளக்கம் கொடுக்கின்றனர். எனவே, அரசாங்கத்தைப் பொறுத்த வரை மனித உரிமைப் பேரவைத் தீர்மானம் அவர்களின் சாணக்கியமான வெளியுறவு கொள்கை உத்தியின் ஓர் அங்கமே அன்றி வேறொன்றுமில்லை.

ஐ.நா. மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் 30/1க்கு பின்னரான இலங்கை அரசின் நடவடிக்கைகள் ஐ.நா. மனித உரிமை பேரவையின் நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்துகின்றது. கலப்பு நீதிமன்ற முறை இலங்கையின் இறையாண்மையை பாதிக்குமென்று கூறி இலங்கை அரசு தனது வாக்குறுதியை நிறைவேற்றாது தட்டிக்கழித்து வந்திருக்கின்றது என்பது ஐ.நா. செயன்முறையோடு நாம் ஒத்துழைத்துப் போக விரும்புகிறோம் என்ற அரசின் பொய்யான வேடத்தை அம்பலப்படுத்துகின்றது. அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முன்னர் ஐ.நா. மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில், எவ்வளவு தூரம் தாக்கத்தைச் செலுத்தியுள்ளது என்பதை கணிக்கவேண்டிய கடப்பாடு ஐ.நா. மனித உரிமை பேரவைக்கும் அதன் உறுப்பு நாடுகளுக்கும் உண்டு. தமிழ் மக்களின் கணிப்பின்படி இலங்கை அரசு பாதிக்கப்பட்ட மக்கள் நலன் சார்ந்து செயற்பட அரசியல் விருப்பற்று அதேநேரத்தில் சர்வதேச தளத்தில் அவ்வரசியல் விருப்பு உள்ளது போல் காட்டிக்கொள்ள முயல்கின்றது. மீண்டும் அதே தீர்மானத்தை நிறைவேற்ற இலங்கை அரசாங்கத்திற்கு நேர அவகாசம் வழங்கக் கொண்டுவரப்படும் தீர்மானமானது ஏமாற்றுத் தன்மையானது. ஐ.நா. மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்ற மாட்டேன் என ஓர் அரசு தெளிவாக சொல்லுமிடத்து  அவர்களுக்கு அதே தீர்மானத்தை நிறைவேற்ற கால அவகாசம் வழங்குவது ஐ.நா. உரிமை பேரவையின் நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்தும். அவ்வாறு கால அவகாசம் வழங்குதல் நீதிக்கான தேடலை நீர்த்துப் போகச் செய்யும். வடக்கு கிழக்கில் வாழுகின்ற தமிழ் மக்கள் சுயாதீனமான சர்வதேச விசாரணையை வலுயுறுத்தி வந்துள்ளனர், தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். இலங்கை அரசு கலப்பு நீதிமன்ற முறையை நிராகரித்தமையானது உள்நாட்டில் தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதை இன்னும் சாத்தியமற்றதாக்கின்றது. தமிழ் மக்களுக்கு உண்மையான நீதி கிடைக்கவேண்டுமெனில் இலங்கை அரசு இழைத்த பாரிய குற்றங்கள் தொடர்பில் விசாரிக்க தனியான சர்வதேச தீர்ப்பாயம் அமைக்கப்படவேண்டும். அல்லது சர்வதேச குற்றவியல் நீதிமன்றில்  விசாரிக்கப்படவேண்டும். இது தொடர்பில் முன்னெடுப்புக்களை முடுக்கிவிடுதல் ஐ.நா. அமைப்பின் கடமையாகும். அதுவரைக்கும் ஐ.நா. மனித உரிமை மீறல்களை கண்காணிக்க மனித உரிமை செயலாளர்  நாயகம் அவர்களின் அலுவலகங்கள் வடக்கு -கிழக்கில் உருவாக்குதல் அவசியமாகின்றது.

இலங்கை அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற அதன் மீது கடுமையான அழுத்தமே இன்றைய தேவை. அழுத்தத்தைக் குறைப்பது அரசு தனது வாக்குறுதிகளைத் தொடர்ந்து செயலிழக்க வைக்க ஊக்குவிக்கும். அவ்வாறான நேர்மையான சர்வதேச அழுத்தம் தான் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் மீதான உரிமை மீறலைக் குறைப்பதற்கு சர்வதேச சமூகம் எடுக்கக்கூடிய குறைந்தபட்ச நடவடிக்கையாகும். இக்கோரிக்கை சர்வதேச சமூகம் இலங்கை தொடர்பில் இங்கு நிலவும் மனித உரிமை சூழல் தொடர்பான அரசியல் கணிப்பிற்கு முரண்பட்டதாக இருக்கலாம். ஆனால், வடக்கு கிழக்கில் வாழும் மக்கள் அனுபவ வாயிலாக கண்டுகொண்ட, நாளாந்தம் அனுபவிக்கும் யதார்த்தத்தையே நாம் இவ்விண்ணப்பத்தில் வெளிப்படுத்துகின்றோம். இலங்கை அரசு ஒருபோதும் பொறுப்புக்கூறல் தொடர்பில் நம்பகத்தன்மையான பொறிமுறைகளை வழங்காது என்பது மீண்டும் உறுதியாகியுள்ள நிலையில் தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதாயின் இவ்விண்ணப்பத்தில் சொல்லப்பட்டுள்ளவையே தீர்வாகும் என நாம் கருதுகிறோம்.

ஒப்பமிடும் சிவில் சமூக அமைப்புக்கள், தொழிற் சங்கங்கள்

  1. Association of the Families of the Forcibly Disappeared
  2. Centre for Human Rights and Development
  3. Ceylon Teachers Union
  4. Centre for the Promotion and Protection of Human Rights, Trincomalee
  5. Catholic Youth Federation, Jaffna
  6. Foundation of Changers, Batticaloa
  7. Inayam – Network of NGOs, Batticaloa
  8. Jaffna University Teachers Association
  9. Jaffna University Students Association
  10. Jaffna University Science Teachers Association
  11. Jaffna University Employees Union
  12. Jaffna Peace and Justice Desk, Laity Commission, Catholic Diocese of Jaffna
  13. Jaffna Economists Association
  14. Justice and Peace Commission, Jaffna
  15. Mannar Citizens Committee
  16. Mullaitivu Federation of Fishermen Societies
  17. Rural Workers Society, Jaffna
  18. Suyam Centre for Women Empowerment
  19. Tamil People’s Council
  20. Tamil Civil Society Forum
  21. Tamil Lawyers Forum

அரசியற் கட்சிகள்

  1. Eelam People’s Revolutionary Liberation Front (EPRLF)
  2. Tamil National People’s Front (TNPF)
  3. Tamil Eelam Liberation Organisation (TELO)