யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்ட தமிழ் ஊடகவியலாளர் ஒருவரான சுப்ரமணியம் ராமச்சந்திரன் யாழ்ப்பாணத்தில் 2007 பெப்ரவரி 15 அன்று காணாமல்போனார். இராணுவச் சோதனைச் சாவடியிலும், முகாம்களிலும் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்ததற்கான நேரில் கண்ட சாட்சியங்கள் இருந்த போதிலும், இன்று வரை அவரது நடமாட்டம் பற்றி அறியமுடியவில்லை. நாளாந்தம் அவரது வருகைக்காக அவரது வயதான பெற்றோரும் குடும்பத்தினரும் காத்திருக்கின்றனர். ஏதேனும் பிரச்சினை மீது அச்சமின்றி எழுதக்கூடிய துணிவுமிக்க ஊடகவியலாளர் ஒருவராக அவரது ஊடக நண்பர்களும், குடும்பத்தினரும் அவரை நினைவுகூருகின்றனர். யுத்தத்தின்போது இராணுவத்தினராலும், வேறு துணை இராணுவக் குழுவினராலும் இழைக்கப்படும் துஷ்பிரயோகத்தினதும், உரிமை மீறல்களினதும் மீது அறிக்கையிடுவதைத் தொடர்ந்த யாழ்ப்பாணத்தில் தளத்தைக் கொண்ட ஒரு சில ஊடகவியலாளர்களில் அவரும் ஒருவராவார். ராமச்சந்திரன் காணாமல்போய் 10 வருடங்களின் பின்னர் காணாமல்போன அல்லது கொல்லப்பட்ட வேறு ஊடகவியலாளர்கள், செயற்பாட்டாளர்கள், சிவிலியன்கள் போன்று அவரது விடயமும் தொடர்ந்துமே விசாரிக்கப்படாமல் இருப்பதுடன், குறைத்தே அறிக்கையிடப்பட்டுமுள்ளது.

சம்பவம்

ராமச்சந்திரன் காணாமல்போவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் வர்த்தகர்களினதும், இராணுவ அலுவலர்களினதும் தொடர்புடன் இடம்பெறுகின்ற சட்டவிரோதமான மண் அகழ்தல் மற்றும் ஏற்றி இறக்குவது தொர்பாக கட்டுரையொன்றை அவர் எழுதியிருந்தார். இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து, இந்நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட வாகனமொன்றைப் பறிமுதல் செய்யுமாறு உத்தரவொன்றை நீதிபதியொருவர் பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகின்றது. அதேவேளை, வர்த்தகர்களுக்குச் சொந்தமான இன்னொரு வாகனத்தை எல்.ரி.ரி.ஈ. தீவைத்துள்ளது. இக்கட்டுரையினால் கோபமடைந்த நபர்களே அவரைக் கடத்தியவர்கள் என ராமச்சந்திரனின் நண்பர்கள் நம்புகின்றனர்.

நேரில் கண்ட சாட்சிகளின் பிரகாரம், சம்பவம் நடந்த நாளன்று வேலையின் பின்னர் ராமச்சந்திரன் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். யாழ்ப்பாணத்தில் மாலை 6.00 மணிக்குப் பின்னர் ஊரடங்குச் சட்டமொன்றைப் பிறப்பிப்பது வழமையான காரியமாகும். அவர் செல்லும் வழியில் அவரது வீட்டிலிருந்து கிட்டிய தூரத்தில், கலிகைச் சந்தி இராணுவ முகாமில் அவர் நிறுத்தப்பட்டார். அவரை விசாரிப்பதற்காக சில இராணுவ வீரர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டதாக நேரில் கண்ட சாட்சியாளர்கள் கூறியுள்ளனர். மாலை 7.00 மணி போல் மின்னொளி இல்லாத போது இராணுவ வாகனமொன்று (பஃவல்) வரும் சத்தத்தை அயலவர்கள் கேட்டுள்ளதுடன், இவ்வேளையிலேயே ராமச்சந்திரன் கொண்டு செல்லப்பட்டிருப்பார் என அவர்கள் நம்புகின்றனர்.

இரவு 8.00 மணி வரை ராமச்சந்திரன் வீடு திரும்பாததினால் அவரது வீட்டுக்கு அருகில் வாழ்கின்ற அவரது சகோதரி ஜெயரத்தினம் கமலாசனி குழப்பமடையத் தொடங்கினார். அந்த இரவு அவர் இரு தடவைகள் ராமச்சந்திரனுடன் தொலைபேசி ஊடாக அழைப்பினை ஏற்படுத்தியிருந்தார். இரு சந்தர்ப்பங்களிலும், கவலையடைய வேண்டாம் எனவும், முகாமொன்றில் தான் விசாரிக்கப்படுவதாகவும், விரைவிலேயே திரும்பி வந்துவிடுவதாகவும் அவர் கூறியுள்ளார். காலை 4.00 மணி வரை தனது சகோதரன் திரும்பி வராததினால், அடுத்த நாள் காலை, அவரை மீண்டும் தொலைபேசி மூலம் சகோதரி அழைத்துள்ளார். இத்தடவை, தொலைபேசித் தொடர்பு தனக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடும் என்பதனால் மீண்டும் தனக்கு அழைப்பை ஏற்படுத்த வேண்டாம் என ராமச்சந்திரன் கூறியுள்ளார். இதன் பின்னர், தனது தந்தையுடன் கமலாசினி தமது வீட்டுக்கு மிக அருகில் உள்ள முகாமுக்கு தனது சகோதரனைப் பற்றி விசாரிப்பதற்காக விரைந்துள்ளார். ராமச்சந்திரன் பற்றி அவர்கள் விசாரித்தபோது, அவரைப் பார்த்தது அல்லது விசாரித்தது பற்றிய தடயங்களை தாம் கொண்டிருக்கவில்லை என அங்கிருந்த இராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர். ராமச்சந்திரன் பற்றிய தகவலைத் தருமாறு குடும்பத்தினர் வற்புறுத்தியபோது அவர்களைக் கைதுசெய்யப்போவதாக இராணுவ அதிகாரிகள் பயமுறுத்தி அவர்களை அங்கிருந்து துரத்தியுள்ளனர்.

அன்றிரவு, நோர்வேயில் உள்ள இன்னொரு சகோதரி ராமச்சந்திரனுடன் தொலைபேசி மூலம் பேசியுள்ளார். இதுவே தனது குடும்பத்தினருடன் ராமச்சந்திரன் இறுதியாக கதைத்தது. அக்காவை கவலையடைய வேண்டாம் என்றும், விரைவிலேயே தான் வீட்டுக்கு வந்துவிடுவேன் என்றும் ராமச்சந்திரன் கூறியுள்ளார். இதன் பின்னர், 2012 வரை அவரது குடும்பத்தினர் கிரமமாக அவருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முயன்றுள்ளனர். தொலைபேசி மணியடிக்கும், ஆனால், அதற்கு யாருமே பதில் அளிக்கமாட்டார்கள். 2012இல் அந்த இலக்கத்திற்கான பாவனையாளரைத் தொலைபேசி நிறுவனம் மாற்றியுள்ளது. எனவே, அதன் பின்னர் அந்தத் தொடர்பும் இடைநின்று போனது.

நீண்ட தேடலும், தம்மால் ராமச்சந்திரன் கூட்டிச்செல்லப்பட்டதாக சம்பந்தப்பட்டவர்கள் ஏற்றுக்கொள்ளலும்

சம்பவத்தின் பின்னர் உடனடியாகவே, காணாமல்போனவர்களின் பெருமளவு குடும்பத்தினர் போன்று, தனது சகோதரன் பற்றிய சில தகவல்கள் கிட்டும் என்ற நம்பிக்கையில் இராணுவத்தின் சிவில் அலுவல்கள் அலுவலகத்தில் மணித்தியாலக் கணக்கில் கமலாசினியும், அவரது தந்தையும் காத்து நிற்பார்கள். கமலாசினி அடிக்கடி சென்று வந்ததால் அது பலனை அளித்தது. உயர் அதிகாரிகளிடமிருந்து கிடைத்த உத்தரவுகளின் காரணமாகவே ராமச்சந்திரனை இராணுவத்தினர் கொண்டு சென்றதாக இரக்கச்சுபாவத்திலான புலனாய்வு அலுவலர் ஒருவர் கமலாசினிக்குக் கூறியிருந்தார். அப்போதைய அமைச்சர் ஒருவரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி.) தலைவருமான டக்ளஸ் தேவானந்தவைச் சந்தித்து கலந்துரையாடுமாறு கமலாசினியிடம் புலனாய்வு அலுவலர் பணித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து வழக்கறிஞர் ஒருவரும் ஈ.பி.டி.பிக்கான ஆலோசகர் ஒருவருமான அமைச்சரின் செயலாளரான மகேஸ்வரி வேலாயுதத்தை ராமச்சந்திரன் குடும்பத்தினர் சந்தித்தினர். ‘தேவையற்ற’ விடயங்களை செய்ததன் காரணமாகவே ராமச்சந்திரன் கொண்டு செல்லப்பட்டதாக குடும்பத்தினரிடம் தேவானந்தா கூறியிருந்தார். பின்னர் மகேஸ்வரியை அவரது வீட்டில் வைத்து ராமச்சந்திரனின் சகோதரி சந்தித்திருந்தார். ராமச்சந்திரன் தடுத்து வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு ஒரு தடவை குடும்பத்தினர் சந்திப்பொன்றை மேற்கொள்வதற்கு வசதி செய்து தருவதாக அவர் உடன்பட்டிருந்தார். நீதிமன்ற வழக்கொன்றைத் தாக்கல் செய்வதற்கான சாத்தியக்கூற்றினையிட்டும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் பின்னர் எல்.ரி.ரி.ஈனால் மகேஸ்வரி சுட்டுக்கொல்லப்பட்டார். மீண்டும் அமைச்சரை ராமச்சந்திரன் குடும்பத்தினர் சந்தித்ததுடன், அவருக்கும் ராமச்சந்திரனின் தந்தைக்கும் இடையில் வாக்குவாதமொன்று வெடித்தது. இராணுவத்துடன் சேர்ந்து ஈ.பி.டி.பி. வேலை செய்வதாகவும், ஆட்களைக் கடத்துவதாகவும் தந்தை பொருள்படுத்தி குறிப்பிட்டுள்ளார். இராணுவத்தினருக்கு எதிராக எதையும் கூற வேண்டாம் எனவும், அவ்வாறு கூறினால் சுடப்படுவார் எனவும் தந்தையை அமைச்சர் எச்சரித்துள்ளார்.

சிவில் யுத்தம் முடிவடைந்து சில மாதங்களின் பின்னர் பொலிஸையும் இராணுவத்தையும் சேர்ந்த ஆறு நபர்கள் கமலாசினியைச் சந்தித்துள்ளார்கள். ராமச்சந்திரனின் கல்விசார் சான்றுப்பத்திரங்கள் உட்பட அவரது சகல தனிப்பட்ட ஆவணங்களை அவரிடம் அவர்கள் கோரியுள்ளார்கள். பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் ஆவணங்களை அவரது தந்தை கையளித்தபோது ராமச்சந்திரனுக்கு தொழில் ஒன்றை வழங்குவதற்கே இந்த ஆவணங்கள் கோரப்பட்டதாக அவரிடம் கூறப்பட்டது.

மேலும் நேரில் கண்ட சாட்சிகள்

ஒரு முறை காங்கேசன்துறை உயர் பாதுகாப்பு வலயத்திலும், இன்னொரு முறை 524 பிரிகேட்டுக்குச் சொந்தமான புலோப்பளை இராணுவ முகாமிலும் 2013இன் பிற்பகுதியில் ராமச்சந்திரனைக் கண்டதாக இரு வேறுபட்ட நேரடி சாட்சிகள் கூறின என கமலாசினி குறிப்பிட்டிருந்தார். 2009க்கும், 2010க்கும் இடையில் இடம்பெற்ற முதலாவது சந்தர்ப்பத்தில், ராமச்சந்திரனுடன் சாட்சிகள் பேசியுள்ளார்கள் எனக் கூறப்படுவதுடன், அவரது புகைப்படங்களைக் குடும்பத்தினர் காட்டியபோது அது ராமச்சந்திரனே என பின்னர் உறுதிப்படுத்தியிருந்தனர். தன்னை விடுவிப்பதாக இராணுவத்தினர் வாக்குறுதியளித்திருப்பதாகவும், ஆனால் அவ்வாறு செய்யாமல் தன்னை வைத்திருப்பதாகவும் சாட்சிகளுக்கு ராமச்சந்திரன் கூறியுள்ளார். இரண்டாவது சந்தர்ப்பத்தில், புலோப்பளை இராணுவ முகாமுக்கு இராணுவத்தினருடனான கூட்டமொன்றுக்கு அரசாங்க அலுவலர் சென்றுள்ளார். தனக்கு ராமச்சந்திரனை சுட்டிக்காட்டிய புலனாய்வு அலுவலர் ஒருவர், “உங்கள் கிராமத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரை நாம் வைத்திருக்கிறோம்” எனக் கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவமே ராமச்சந்திரனைக் அழைத்துச்சென்றதாக கமலாசினியிடம் கூறிய அதே புலனாய்வு அலுவலரின் பெயரே இந்தப் புலனாய்வு அலுவலரினதும் பெயராகும்.

பொலிஸாரின் செயலின்மையும், பரணகம ஆணைக்குழுவுக்கு செய்யப்பட்ட சமர்ப்பணமும்

சம்பவத்தின் பின்னர் சில நாட்களில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை ராமச்சந்திரனின் தந்தை செய்திருந்தார். ஆனால், இன்று வரை பதிலிறுப்புக்கள் இருக்கவில்லை. யாழ்ப்பாணத்தில் உள்ள ஊடகவியலாளர் ஒருவரின் கூற்றுப்படி, சம்பவம் பற்றிய தகவலைப் பருத்தித்துறையில் உள்ள நீதவான் கண்ட பின்னர் சம்பவம் பற்றி விசாரிக்குமாறு பொலிஸாரை அவர் கேட்டுக்கொண்டார். அதன் பின்னர் பொலிஸார் ராமச்சந்திரனின் சகோதரியின் வீட்டுக்குச் சென்று, அவரைப் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, காலை 11 மணியிலிருந்து இரவு 7 மணி வரை விசாரித்துள்ளனர். கலிகை முகாமில் உள்ள இராணுவ வீரர்களினால் ராமச்சந்திரன் அழைத்துச் செல்லப்பட்டார் என்பதை எவ்வாறு அவர் அறிந்திருந்தார் என்பதைச் சுற்றியே பெருமளவு கேள்விகள் அமைந்திருந்தன. ராமச்சந்திரனை உண்மையாகவே கண்டுபிடிப்பதற்கு முயலாமல் நேரடிச் சாட்சிகளையும், மூலங்களையும் அடையாளம் காண்பதிலேயே பொலிஸார் அதிகளவு ஆர்வத்தினைக் கொண்டிருந்ததாக கமலாசினி உணர்ந்தார்.

2015 டிசம்பர் 13 அன்று, காணாமல்போனவர்கள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு (பரணகம ஆணைக்குழு) கமலாசினி விரிவான வாய்மொழி மூலம் சமர்ப்பணமொன்றைச் செய்தார். தான் கேள்விப்பட்ட நேரடி சாட்சிகளின் விபரங்களை அவர் குறிப்பிட்டிருந்தார். 2016 ஜனவரி 26 அன்று, அவருக்குக் கடிதமொன்றை ஆணைக்குழு அனுப்பியிருந்தது. விசாரணைக்காக விடயம் அனுப்பப்பட்டுள்ளதாகக் கடிதம் குறிப்பிட்டிருந்தது. அவர் உரித்தினைக் கொண்டுள்ள பொருளாதார உதவியைப் பெறுவதற்காக அரசாங்க அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அது மேலும் பணித்திருந்தது.

காணாமல்போகச் செய்தல்களுக்கும், ஊடகங்கள் மீதான தாக்குதல்களுக்கு தண்டனையிலிருந்து விலக்கீட்டுரிமை எப்பொழுது முடிவுக்கு வரும்?

2010 ஜனவரியில் காணாமல்போன சிங்கள ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் விடயத்தையிட்டு கைதுகள் மேற்கொள்ளப்பட்டதுடன், நீதிமன்றத்தில் விசாரணையும் நடக்கின்றது. இவ்விசாரணையானது பெரிதுமே அவரது மனைவியினாலும், குடும்பத்தினராலும் செய்யப்பட்ட திடசங்கற்பத்திலானதும், துணிகரமான பிரச்சாரத்தின் காரணமாகவுமே இடம் பெறுகின்றது. முன்னணி ஆங்கிலச் செய்திப்பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலையை விசாரிப்பதற்கு அரசாங்கத்தினால் சில பகிரங்கமான அர்ப்பணிப்புக்கள் செய்யப்பட்டுள்ளன. எனினும், உண்மையான முன்னேற்றம் அறியப்படவில்லை. ஆனால், ஊடகவியலாளர்களினதும், ஊடக ஊழியர்களினதும், ஊடக நிறுவனங்களினதும் மீதான வேறு தாக்குதல்கள் மீது செய்யப்பட்ட முன்னேற்றம் மீது மௌனமான அமைதியொன்று நிலவுகின்றது.

வடக்கிலும், கிழக்கிலும் பாரதூரமான தீ வைத்தல், தாக்குதல்கள் உட்பட தமிழ் ஊடகவியலாளர்களினதும், ஊடக ஊழியர்களினதும் மற்றும் ஊடக நிறுவனங்களினதும் மீது பலதரப்பட்ட கொலைகள், காணாமல்போகச் செய்தல்கள், தாக்குதல்கள், பயமுறுத்தல்கள், கட்டுப்பாடுகள் ஆகியன இருந்துள்ளன. வடக்கில் மிகவும் பிரசித்தமான தமிழ் தினசரியான ‘உதயன்’ அத்தகைய தாக்குதல்களை அனுபவித்துள்ளன. உரிமையாளரினதும், ஆசிரியரினதும் கூற்றுப்படி, ஒரு சம்பவம் தொடர்பில் கூட முன்னேற்றமிருக்கவில்லை.

காணாமல்போனதன் பின்னர் காணாமல்போனவருக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்துவதற்கு நிர்ப்பந்திக்கின்ற சாட்சியமும், நேரில் கண்ட சாட்சியங்களும் உள்ள ஒரு சில சம்பவங்களில் ராமச்சந்திரனின் சம்பவமும் ஒன்றாகும். இது அவர் காணாமல்போய் 6 வருடங்களின் பின்னர் 2013இல் குறிப்பிட்டதொரு இராணுவ முகாமில் அவர் காணப்பட்டதாகக் கூறப்படும் அறிக்கைகளை உள்ளடக்குகின்றது. எனினும், சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து தகவலைப் பெறுவதற்கு ஏதேனும் முயற்சிகள் குறித்து குடும்பத்தினருக்கு அறிவிக்கப்படவில்லை. ஒரு நாள் ராமச்சந்திரன் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையில் பத்து வருடங்களாக அவரது குடும்பத்தினர் காத்திருக்கின்றனர். ராமச்சந்திரன் என்றாவது வீட்டுக்கு மீளத்திரும்பி வருவாரா? அவர் காணாமல்போன பின்னர் அவருக்கு என்ன நடந்தது என்பது மீது அரசாங்கத்திடமிருந்து பதில்களை என்றாவது அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் பெறுவார்களா?

ருகி பெர்னாண்டோ மற்றும் சுவாஸ்திகா அருள்லிங்கம்

(சுப்ரமணியம் ராமச்சந்திரம் காணாமல்போய் 9 வருடங்கள் நிறைவை முன்னிட்டு கடந்த வருடம் வௌியான கட்டுரையை மீண்டும் பதிவுசெய்கிறோம். )