படம் | TravalDiaries

இன்று இலங்கையில் 69ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. அரசாங்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பு காலிமுகத் திடலில் முப்படைகளின் அணிவகுப்புடன் இராணுவ பலத்தை வெளிக்காட்டியவாறு சுதந்திரம் வழமைப்போல் இன்றும் கொண்டாடப்பட்டது.

மிக நீண்டகால காலனித்துவ ஆட்சியிலிருந்து மீண்டு 1947ஆம் ஆண்டு பெப்ரவரி 4ஆம் திகதி பிரிட்டிஷாரிடமிருந்து இலங்கை மக்களுக்கு சுதந்திரம் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் இந்த நாள் கொழும்பில் பாதைகள் மூடப்பட்டு, ஒத்திகைகள் மேற்கொள்ளப்பட்டு, அணிவகுப்பு நடத்தப்பட்டுத்தான் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், உண்மையிலேயே மக்கள் சுதந்திரத்தை உணர்கிறார்களா?

‘மாற்றம்’ தளத்துக்கு சிலர் வழங்கிய கருத்துக்களைக் கீழே பார்க்கலாம்.


ஜெரா
, ஆவணப்பட இயக்குனர், சுயாதீன ஊடகவியலாளர்

நான் சுதந்திரத்தையே உணராத நாடொன்றின் சுதந்திரத்தை எப்படிக் கொண்டாடுவேன்? இன்றைய நாள் காலையில் நெஞ்சை நிமிர்த்தி நிமிர்ந்து பார்த்து, காற்றில் ஆடும் வாளேந்திய சிங்கக்கொடிக்கு வணக்கம் வைத்துப் பெருமிதப்பட எங்களுக்கு இந்தக் கொடி தொடர்பான நினைவுகளும், இந்த வானம் தொடர்பான நினைவுகளும் சந்தோசமானதாக இல்லை. என்றைக்கு வாளேந்திய சிங்கக் கொடி வானில் சுதந்திரமாகப் பறக்கத் தொடங்கியதோ, அன்றையிலிருந்தே, இதே வாளேந்திய சிங்கக் கொடியின் பின்னணியில் தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்டே வந்தனர். கொடியை ஏந்தியபடியே முப்படையினரும் தமிழர்கள் மீது செய்த கொலைகள் இந்தக் கொடியைப் பார்த்தவுடனேயே வந்து போகின்றன.

சரி, கடந்தவைகள்தான் காட்டுமிராண்டித்தனமான யுகம் ஒன்றில் நடந்துவிட்டன, இனிமேல் மனித பண்புகளுடன், சக தமிழினத்தின் உரிமைகளை மதித்து, இந்நாட்டுக்கு வெள்ளையர்களிடமிருந்து கிடைத்த சுதந்திரம் பரவலாக்கப்படும் எனப் பார்த்தால், நிலைமை முன்யுகத்தைவிட மோசமாகிக்கொண்டிருக்கின்றது. தன் நாட்டின் சுதந்திரத்தைக் கொண்டாடும் பெரும்பான்மையினரும், அவர்களை அடையாளப்படுத்தும் இராணுவமும், தமிழர்களின் நிலத்தை அபகரித்து வைத்துக்கொண்டிருக்கிறது. இவ்வேளையிலும் அதனை மீட்பதற்கான போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இராணுவம் நிலத்தை விட்டு வெளியேற முடியாதபடி வேலியிட்டு நிற்கிறது. தமிழர்கள் இந்நாட்டின் சொந்தக் குடிகள், அவர்களுக்கும் இந்நாட்டு மக்களுக்குரிய அனைத்து உரிமைகளும் உண்டு எனக் கருதியிருந்தால், இன்று கேப்பாப்புலவு மக்கள் போராடிக்கொண்டிருப்பார்களா? இது ஒரு பிரச்சினை மட்டுமே. இப்படியாக எத்தனை உரிமை மீறல்கள், மறுப்புக்கள்? எல்லா உரிமைகளையும் பறித்து வைத்துக்கொண்டு, பெப்ரவரி 4ஆம் திகதியில் சிங்கக் கொடியை எங்கள் கைகளில் திணித்து சுதந்திரமாக பறக்கவிடுங்கள், சுதந்திரத்தை உணருங்கள் என்றால் எப்படி அதை செய்வது?


ஹஸனாஹ் சேகு இஸ்ஸதீன், சட்டத்தரணி, மனித உரிமை செயற்பாட்டாளர்

இலங்கை சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்த வேளையில் பெண்களைப் பொறுத்தளவில் சுதந்திரம் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. இலங்கைப் பெண்களின் கல்வியறிவு மிகவும் அதிகமாகக் காணப்படுகின்ற அதேவேளை, பெண்கள் பலவிதமான துன்புறுத்தல்களுக்கும், பாரபட்சங்களுக்கும் ஆளாக்கப்படும் நிலைமையும் சேர்ந்தே காணப்படுகின்றது. அதிலும் பெண்தலைமைக் குடும்பங்களாகவோ, தனித்து வாழும் பெண்களாகவோ, மாற்றுத் திறனாளிகளாகவோ, மாற்றுப்பாலியல் விருப்புக் கொண்டவர்களாகவோ, இடம்பெயர்;ந்தவர்களாகவோ, முன்னாள் போராளிகளாகவோ அல்லது விளிம்பு நிலையில் இருக்கும் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அவர்கள் மீதான வன்முறையும், சமூகரீதியான, சட்டரீதியான பாரபட்சங்களும் இன்னும் இரண்டு அல்லது மூன்று மடங்காக அதிகரிக்கும் நிலைமையும் காணப்படுகின்றது. இலங்கை ஒரு ஜனநாயக நாடாகவும், நல்லாட்சிக்குரிய நாடாக தன்னைக் காட்டிக்கொள்ள எத்தனிக்கும் நிலையிலும் இன்னும் பெண்களின் சுதந்திரம் என்பது பெயரளவிலேயே காணப்படுகின்றது.

பெண்கள் உரிமைகள் சார்ந்து வேலை செய்கையில் பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. உதாரணமாக அண்மைக்காலத்தில் தமது உரிமைகள் சார்ந்து குரல் கொடுத்த முஸ்லிம் பெண்கள் மீதான அச்சுறுத்தல்களையும், மிரட்டல்களையும், அவர்களைப்பற்றி சமூக ஊடகங்கள் செய்த அவதூறுகளையும் குறிப்பிடலாம். நீண்டகாலமாக அப்பெண்கள் அனுபவித்து வரும் அநீதியைப்பற்றி முறையிட அவர்களுக்குள்ள கருத்து சுதந்திரத்திற்கு என்னவானது? அப்பெண்கள் தமது வீடுகளை விட்டும் வெளியேற முடியாத வகையில் மிரட்டல்களை விடுக்கையில் அவர்களின் நடமாடும் சுதந்திரத்துக்கு, வாழ்வுக்கான சுதந்திரத்துக்கு என்ன நடக்கிறது? என்ன பிரச்சினை என்பதனை கண்டறிவதை விடுத்து பெண்கள் என்றபடியால் அவர்களுக்கெதிராக எதுவும் பேசலாம் என்ற நிலை மாற வேண்டும். பால், பால்நிலை, சமயம், மொழி, இனம், சாதி போன்ற எந்த வேறுபாடுகளும் இன்றி அனைவரும் சமத்துவமாக தத்தமது உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் வாழ இடமளிக்கும் போதுதான் உண்மையான சுதந்திரத்தை உணர முடியும்.


சரவணன் கோமதி நடராசா, சுயாதீன ஊடகவியலாளர்

காலனித்துவத்திலிருந்து நவகாலனித்துவத்துக்கு கைமாற்றும் சதியே நமது சுதந்திர நாள். ஆட்சியையும், அதிகாரங்களையும், பொறுப்புகளையும் தமிழர்களிடமிருந்து பறித்து சிங்களவர்களிடம் ஒப்படைத்த நாள் இது. தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை நசுக்குவதற்கான அரச இயந்திரத்தை சிங்களவர்களிடம் கொடுத்த நாள் இது. இலங்கையின் சனத்தொகையில் 11 வீத இந்திய வம்சாவழித் தமிழர்களை நாடற்றவர்களாக ஆக்குவதற்காக வழங்கப்பட்ட லைசன்ஸ் இந்த சுதந்திரம்.

டொனமூர் யாப்பு தொடக்கம் இறுதி யாப்பு வரை தமிழர்கள் எதிர்த்தே வந்துள்ளனர். சோல்பரி யாப்பு மாத்திரம் விதிவிலக்கு. சுதந்திரத்துக்கு வித்திட்ட அந்த யாப்பு தமிழர்களை நசுக்க மட்டுமே பயன்பட்டது.

“சுதந்திரம்” என்பதை விட தமிழர்களுக்கு அது ஆங்கிலேயர்களும், சிங்களவர்களும் சேர்ந்து செய்த “தந்திரம்” மட்டுமே. சுதந்திர நாள் என்பது தமிழர்களுக்கு ஒரு கரி நாள். சட்டபூர்வமாக உரிமை பறிபோன நாள். அவ்வப்போது சற்று தணிந்தும், கொதித்தும் வந்த போதும் பண்பளவில் எந்த மாற்றமும் நிகழ்ந்ததில்லை. யுத்தத்திற்குப் பின்னர் தமிழ் மக்கள் தரப்பிலும் சுதந்திர தினத்தில் தம்மையும் இணைத்து அனுஷ்டிக்கும் போக்கு ஆங்காங்கு காண முடிகிற போதும். உணர்வுபூர்வமான பங்களிப்பாக அது இல்லை என்பதே நிதர்சனம். அகதிகளாகவும், அனாதரவாகவும், குடும்பங்கள், சொத்துக்கள் இழந்தவர்களாகவும், அரசியல் உரிமைகளையும் அடிப்படை உரிமைகளை பரிகொடுத்தவர்களாகவும் இருக்கும் ஒரு சமூகத்துக்கு சுதந்திரம் ஒரு கேடா என்கிற நிலை. சமத்துவமும், சக வாழ்வும், சமவுரிமையும் சகல மக்களுக்கும் கிடைக்கக் கூடிய நாளே இலங்கைக்கு உண்மையான சுதந்திர நாள்.


கே. நிஹால் அஹமட், மனித எழுச்சி நிறுவனம்

அம்பாறை மாவட்டத்தில் சிறுபான்மை விவசாயிகளால் பரம்பரை பரம்பரையாக அபிவிருத்தி செய்யப்பட்டு வந்த காணிகள் பறிக்கப்பட்டும், திட்டமிட்ட குடியேற்றக்காரர்களிற்கு பகிரப்பட்டும், குடியேற்றக்கிராமங்களில் இருக்கும் இனக்குரோதமுள்ள காணி ஆக்கிரமிப்புக் குழுக்களினது அடாவடி அச்சுறுத்தல்களினால் இக்குடியேற்ற எல்லைகளில் மிகுதமுள்ள விவசாயக் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு அபகரிக்கப்பட்டும் உள்ளது. அதனை அரச நிர்வாகமானது கண்டும் காணாதது போன்று இருப்பது இம்மக்களிற்கு இழைக்கப்படும் உரிமை மீறலும் அநீதியுமாகும்.

வனம், வனவிலங்கு பாதுகாப்பிற்கென வகுக்கப்பட்டுள்ள புதிய புதிய எல்லை நிர்ணயங்களும், தொல் பொருள் புனித பூமிக்கெனவும், பாதுகாப்புக்கான முகாம்கள் அமைப்பதற்கும், கூட்டுத்தாபனங்களின் பெயர்களிலும் திட்டமிட்டு எல்லைப்படுத்தப்பட்டுள்ளதுடன், இக்காரணங்களால் சிறுபான்மை மக்களின் பாரம்பரிய விவசாய நிலங்களுக்குள் செல்லத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

“தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் அதிகாரம் எனக்கு தேர்தல் மூலமாகவே வழங்கப்பட்டது” என 68ஆவது சுதந்திர தினவுரையில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களால் கூறப்பட்டதானது, வெறுமனே நீதி, நியாயம், இனங்களின் ஐக்கியம், நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு என்பன பெருமைக்காகக் கூறிச்செல்லும்/ கூக்குரலிடும் வாய்வார்த்தைகளாகிவிடக்கூடாது என்பதுடன் இவையனைத்தும் நடைமுறையில் நிலைநாட்டப்படவேண்டிய கடப்பாட்டையே சுட்டிக்காட்டுகின்றது. சமாதானத்தின் பெயரால் புறாக்களை விடுவிப்போர் சந்தர்ப்பம் வரும்போது இனவாதத்தின் தீப்பிழம்புகளாய் மாறிநிற்கின்றனர்.


ஜெயசூரியன், உப செயலாளர், இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம்

ஆட்சியாளர்கள் 69 ஆவது சுதந்திர தினத்தை இன்று வழமைபோல கொண்டாடுகின்றார்கள். உண்மையில் இது ஜனநாயக ஆட்சி எனின் பொது மக்களால் சுதந்திர தினம் கொண்டாடப்படவேண்டும். அந்த விடயத்தில் இலங்கை பெற்ற சுதந்திரம் யாருக்கானது என்பது பிரச்சினைக்குரிய விடயமாகவே இருக்கிறது. ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் சுதந்திர தினம் முக்கியமான ஓர் நிகழ்வாக இருக்கும் என எதிர்ப்பார்த்த ஊடகத்துறைக்கு ஏமாற்றம் தான். மாற்றம் எதுவும் இல்லை. மஹிந்த ஆட்சியில் நடந்தேறிய ஆடம்பரம் இன்றும் நடக்கிறது. ஆரவாமில்லாமல்.

நல்ல ஆட்சிக்கான மாற்றம் நடந்து இரண்டு வருடத்தை முற்றாக நிறைவு செய்து எல்லாம் எல்லோருக்கும் கிடைத்துவிட்டதாக கூறும்  அரசாங்கம் இன்னும் ஊடகங்கள் மீதான கடும்போக்கு நிலையிலிருந்து மாறவில்லை. முப்படைகளின் தலைவர், பாதுகாப்பு அமைச்சர் என அனைத்து அதிகாரங்களையும் வைத்திருக்கும் நல்லாட்சியின் ஜனாதிபதிக்கு கொலைசெய்யப்பட்ட, காணாமல்போன, கடத்தப்பட்டஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பாக எந்தவித நடவடிக்கை எடுக்கமுடியாதது விமர்சிக்கத்தக்கது.

கடந்த அரசாங்கத்தில் நடந்த அனைத்துக்கும் அடுத்து வந்த அரசாங்கம் பொறுப்பேற்கவேண்டும். இங்குள்ள விஷேடம் என்னவென்றால் ஆட்சிமாற்றத்துக்கு உதவுங்கள், நாங்கள் உங்கள் பிரச்சினைகளை தீர்த்துவிடுவோம் என்று கூறியவர்கள் இன்றைய ஆட்சியாளர்கள். ஆனால், தற்போது எல்லாம் வழமையான தேர்தல் வாக்குறுதிகளாகிவிட்டன. இந்த நிலையில் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதுவரை யுத்தவெற்றி விழாவாகக் கொண்ணடாடப்பட்ட சுதந்திர தினம் இன்று கடும்போக்கு ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றுவிட்டதாக கூறியே நடக்கிறது. சுதந்திர தினத்தின் தத்துவம் மாறி வாக்குறுதி அரசியலுக்கான ஓர் களமாக சுதந்திர தினம் மாற்றப்படுகிறது. அதேநேரம் சுதந்திர தினமன்று தேசிய கொடியை பறக்கவிடவேண்டுமென்ற வலுக்கட்டயாயத்துக்கும் மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.


பிரபாகரன், மலையக ஆய்வாளர்

ஆட்சி அதிகாரம் அந்நியரின் கைகளில் இருந்து சுதேசிகளின் கைகளுக்கு கைமாற்றம் அடைந்த தினத்தையே சுதந்திர தினமாக இன்று உலக நாடுகள் பலவற்றிலும் நினைவு கூறப்படுகிறது. ஆனால், உண்மையான சுந்திரத்தை இன்று இந்த நாடுகளில் வாழும் மக்கள் அனுபவிக்கின்றார்களா என்றால் இல்லை என்ற பதிலே கிடைக்கின்றது.

இலங்கை சுதந்திரமடைந்ததாகக் கூறப்படும் 1948ஆம் ஆண்டில்தான் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வந்த ஆண்டில்தான் மலையத் தமிழர்களின் வாக்குரிமையும் பறிக்கப்பட்டது. இதே சுதந்திர இலங்கையில்தான் 1964ஆம் ஆண்டிலும் 1972ஆம் ஆண்டிலும் இந்தியாவுடன் செய்துகொள்ளப்பட்ட ஶ்ரீமா – சாஸ்த்ரி மற்றும் ஶ்ரீமா – இந்திரா ஒப்பந்தங்களின் மூலம் இலங்கை நாட்டை கட்டியெழுப்பிய மலையகத் தமிழரின் சரி அரைவாசிப் பேர் (அன்றைய நிலையில் ஐந்து இலட்சம் பேர்) பலவந்தமாக இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டனர்.

மலையகத் தமிழர் இலங்கை நாட்டுக்கு வந்து 200 வருடங்கள் பூர்த்தியான நிலையில் சொந்தக் காணியும் சொந்த வீடும் இழந்த சமூகமாக இன்றும் (2017) வாழ்ந்துவரும் நிலையில் இலங்கையில் சுந்திரக் கொண்டாட்டம் யாருக்கு? எதற்கு?


கந்தவேல், காண்டீபன், திட்ட பணிப்பாளர், வலதுகுறைவு சம்பந்தமான அணுகும் வசதி, கண்காணிப்பு மற்றும் தகவல்களுக்கான நிலையம்

ஆட்சி மாற்றம் நடந்து மூன்றாவது சுதந்திரதின கொண்டாட்டங்கள் இடம்பெறும் இவ்வேளையில் அரசாங்கம் மாற்றுத்திறனாளிகள் தொடர்பாக கரிசனைகள் மற்றும் திடமான செயற்பாடுகள் குறித்து பெரிதாக அக்கறைகள் மற்றும் செயற்பாடுகளைக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை.

குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் ஏற்படுத்தப்பட்ட சட்டத் திருத்தவரைபானது மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்புடைய வகையில் இல்லாதிருப்பதும் அவர்களின் பங்களிப்பு மற்றும் கரிசனை தொடர்பில் தற்போதைய அரசாங்கமானது பொறுப்புடன் செயற்படாமலிருப்பதும் வேதனையளிக்கின்றது. அது மட்டுமில்லாமல் யுத்தத்தினால் மாற்றுத்திறனாளியாக்கப்பட்டவர்களின் குறிப்பாக வடக்கு கிழக்கை பொறுத்த வரையில் சரீர புனர்வாழ்வு, நலனோம்புகை செயற்பாடுகள் மற்றும் சமூகத்தில் மீளிணைத்தல் என்பன மிகவும் கடினமான செயற்பாடாகவும் அவர்கள் சமூகத்திலிருந்து ஒதுங்கியிருப்பதற்கு ஏதுவானதாகவுமே அமைகின்றது.

வலுவூட்டப்பட்ட சட்டமூலங்கள் மற்றும் பரந்துபட்ட நலனோம்புகை செயற்பாடுகள் அவசியமாகின்றதுடன் பொதுவான அரசியல் மேடைகளில் வாய்மூல வாக்குறுதிகள் மற்றும் அரசியல்மயமாக்கப்பட்ட செயற்பாடுகளை விடுத்து ஓர் காத்திரமான நடவடிக்கைகள் மேற்கொள்வதனையே எதிர்பார்த்து நிற்கின்றனர். அன்றுதான் மாற்றுத்திறனாளிகளும் சுதந்திரத்தை உணருவர்.