படம் | SrilankaBrief

இதுவரை சம்பந்தன் தொடர்பில் பேசப்பட்டு வந்த விடயங்கள் அனைத்தும் இவ்வாண்டில் கூட்டமைப்பின் விடயங்களாக உருமாறவுள்ளன. தொடர்ந்தும் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் என்னும் பெயர்களை முன்னிறுத்தி விவாதங்கள் செய்துகொண்டிருக்க முடியாது. அது ஆரோக்கியமான ஒன்றுமல்ல. இதுவரை சம்பந்தன் மற்றும் சுமந்திரன் தொடர்பில் முன்வைக்கப்பட்டுவந்த குற்றச்சாட்டுக்கள், அவர்கள்தான் சகல விடயங்களையும் கையாளுகின்றனர், எனவே அவர்கள்தான் அனைத்துக்கும் பதில் சொல்ல வேண்டும் என்பதாகவே இருந்தது. ஒரு வகையில் அது சரியாக இருப்பினும் கூட, அவர்களது அனைத்து முன்னெடுப்புக்களும் அதன் இறுதிக் கட்டத்தை அடைந்துவிட்ட நிலையில், அதனை ஏற்பதா அல்லது இல்லையா என்னும் முடிவை எடுக்க வேண்டிய பொறுப்பு தற்போது அனைவரையும் சார்ந்த ஒன்றாக உருமாறியிருக்கிறது. எனவே, இப்பத்தி இனி பொதுவில் கூட்டமைப்பு என்றே அழுத்திக் குறிப்பிடவுள்ளது. ஆனால் ஒரு மக்கள் கூட்டத்தின் பிரதான அரசியல் கூட்டொன்றின் தலைவர் என்னும் வகையில், அனைவரது செயற்பாடுகளிற்கும் இறுதியில் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு சம்பந்தரையே சாரும். இது ஒரு வகையில் அவரால் தவிர்த்துச் சொல்ல முடியாத ஒன்றும் கூட.

அரசியல் யாப்பு தொடர்பான விடயங்கள் இம்மாதம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. விவாதம் இடம்பெறுகிறதோ இல்லையோ அரசியல் தீர்வு தொடர்பான விடயங்கள் ஏதோவொரு வகையில் அதன் இறுதிக்கட்டத்தை அடைந்திருக்கின்றன. இந்த நிலையில், கூட்டமைப்பு ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. கூட்டமைப்பு என்பது அதில் அங்கம் வகித்துவரும் நான்கு கட்சிகளையும் குறிக்கும். இதுவரை முன்வைக்கப்பட்டு வந்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் நோக்கினால், கூட்டமைப்பில் நான்கு கட்சிகள் இருந்தாலும் கூட, கூட்டமைப்பின் சார்பில் அனைத்து முடிவுகளும் இலங்கை தமிழரசு கட்சியைச் சேர்ந்த சம்பந்தன் மற்றும் சுமந்திரனாலேயே மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் இலங்கை தமிழரசு கட்சியை சேர்ந்த சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட அரசியல் முன்னெடுப்புக்களின் விளைவுகளுடன் ஏனையவர்கள் ஒத்துப்போவதா அல்ல இல்லையா என்னும் இறுதி முடிவை எடுப்பதற்கான சூழல் கனிந்திருக்கிறது. இனி இதிலிருந்து ஏனைய கட்சிகள் தப்பித்துக்கொள்ள முடியாது. ஒருவேளை, சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரது முடிவுடன் உடன்படாதவர்கள் அதனை பகிரங்கமாக மக்கள் முன்னால் வைப்பதற்கான காலம் வந்துவிட்டது. வெறும் குற்றச்சாட்டுக்களை மட்டும் முன்வைத்துவிட்டு, ஏனைவர்கள் தொடர்ந்தும் நழுவிக் கொண்டிருக்க முடியாது. சம்பந்தனுடன் ஒத்துப் போகக் கூடியவர்கள் ஒத்துப் போவதும், உடன்பாடு இல்லாதவர்கள் விலகிச் செல்வதும் பிரச்சினைக்குரிய விடயமல்ல. அதுவும் ஒரு ஜனநாயக அனுகுமுறையே! அதேபோன்று சம்பந்தனும் தனது நிலைப்பாட்டை மிகவும் வெளிப்படையாக மக்கள் முன்னால் முன்வைக்க வேண்டும். அப்போதுதான், கட்சியரசியலுக்கு வெளியில் சிந்திக்கும் ஊடக தரப்பினர், புத்திஜீவிகள் மற்றும் சிவில் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துவோர் என பலரும் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வர முடியும்.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என்பதை முன்னிறுத்தி இடம்பெற்ற அரசியல் முன்னெடுப்புக்களின் விளைவாக, இதுவரை கிடைக்கப்பெற்ற ஒரேயொரு தீர்வு என்றால், அது மாகாணசபை முறைமை ஒன்றுதான். அதன் பின்னர் சுமார் 30 வருடங்களுக்கு பின்னர் மீண்டுமொரு அரசியல் தீர்வுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தச் சந்தர்ப்பத்தை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளுவது? பயன்படுத்திக் கொள்ளக் கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றனவா? அப்படி இருப்பது உண்மையாயின் எந்தெந்த வழிகளில் அவை பயனுடையவை? அதனை ஏற்பதால் வரப்போகும் நன்மை என்ன? நிராகரிப்பதால் வரப்போகும் நன்மை என்ன? உடன்படுவதால் உனடியாகவும் நீண்டகாலத்திலும் வரப்போகும் நன்மை, தீமைகள் என்ன? அதேபோன்று நிராகரிப்பதால் வரப்போகும் உடனடி, நீண்டகால நன்மைகள் என்ன? இப்படியான கேள்விகளை முன்னிறுத்தி சிந்திப்பவர்களுக்கு கூட்டமைப்பு தெளிவான பதிலை அளிக்க வேண்டியிருக்கிறது. எந்தவொரு முடிவிலும் நன்மை தீமை என்று, இரண்டும் கலந்தே இருக்கும். நூறுவிகிதம் சாதகமான முடிவு என்று ஒன்றில்லை. அதேபோன்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றும் இல்லை. அந்த வகையில் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் தலைவர்கள் அனைவரும் தங்களின் தீர்க்கமான முடிவை அறிவிப்பதில் தொடர்ந்தும் மௌனம் சாதிக்க முடியாது.

அரசியல் தீர்வைப் பொறுத்தவரையில் அது எவ்வாறு வடிவம் பெறப் போகிறது என்பது வெளித்தெரியா விட்டாலும் கூட, அதன் தோற்றம் தெளிவாகவே தெரிகிறது. அதாவது, ஒற்றையாட்சி முறைமை நீக்கப்படப் போவதில்லை. அதேபோன்று வடக்கு – கிழக்கு இணைப்பும் சாத்தியமில்லை. ஒற்றையாட்சி இல்லையெனின் சமஸ்டி இல்லையென்பதை அழுத்திக் கூற வேண்டியதில்லை. எனவே, வரவுள்ள அரசியல் தீர்வில் மேற்படி விடயங்களை கழித்தே விடயங்களை நோக்க வேண்டும். இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவாக இருக்கப் போகிறது – அதாவது கூட்டமைப்பிலுள்ள கட்சிகளின் நிலைப்பாடு? இவ்வாறானதொரு சந்தப்பத்தில் கூட்டமைப்பின் முன்னால் இரண்டு தெரிவுகள் மட்டுமே உண்டு. ஒரு இடைக்கால ஏற்பாடு என்னும் அடிப்படையில் உடன்பட்டுச் செல்வது அல்லது முற்றிலுமாக நிராகரித்துவிட்டு வெளியேறுவது. வெளியேறுவது என்று முடிவெடுத்தால் அது அர்த்தமுள்ள வெளியேற்றமாக இருக்க வேண்டும். தற்போது கூட்டமைப்பின் வசமிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் பதவி, நாடாளுமன்ற குழுக்களின் தலைவர் பதவி மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பதவிகள் என அனைத்திலிருந்தும் வெளியேறுவதாக இருக்க வேண்டும். அவ்வாறில்லாது வெறும் வாய்ச்சொல் வெளியேற்றமாக இருக்கக் கூடாது. அப்படியொரு வெளியேற்றத்திற்கு கூட்டமைப்பு தயாராக இருக்கின்றதா? கூட்டமைப்பிலுள்ள கட்சிகள் தயாராக இருக்கின்றனவா?

கூட்டமைப்பின் நிலைமை இதுவென்றால், கூட்டமைப்பின் முக்கியமாக சம்பந்தனின் நகர்வுகளை விமர்சிக்கும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் அவருக்கு ஆதரவாளர்களும் ஒரு தீர்க்கமான முடிவை அறிவிப்பதற்கான காலம் கனிந்துவிட்டது. இனியும் வெறுமனே அறிக்கைகளை வாசித்துக் கொண்டும் மேடைகளில் பேசிக் கொண்டும் இருக்க முடியாது. ஏனெனில், இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் போது மறுபுறமாக கொழும்பு விடயங்களை முன்னகர்த்திக் கொண்டிருக்கிறது. அதனை தடுத்து நிறுத்துவதற்கான வழிகள் தொடர்பில் சிந்தித்து அதற்கு செயல்வடிவம் கொடுக்க வேண்டிய பொறுப்பு, சம்பந்தனை எதிர்க்கும் அரசியல் தரப்பினருக்குண்டு. எனவே, அந்த வகையில் இது அனைவரும் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டிய காலமாகும். தென்னிலங்கையின் நிலைமை 30 வருடங்களுக்கு முன்னர் எவ்வாறிருந்ததோ அவ்வாறுதான் தற்போதும் இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்தவை அனைத்துமே தென்னிலங்கையை ஒரு வழிக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகள்தான். இதில் விடுதலைப் புலிகளின் வழி, தென்னிலங்கையை முற்றிலுமாக தோற்கடித்து, தங்கள் இலக்கை அடைவதாக இருந்தது. இந்த பின்புலத்தில் நோக்கினால், 30 வருடங்களுக்கு முன்னர் எவ்வாறு ஒரு தீர்விற்கு அனைத்து சமூகங்களின் ஆதரவும் தேவையென்னும் வாதத்தை கொழும்பு முன்வைத்ததோ, அவ்வாறானதொரு வாதத்தைத்தான் தற்போதும் அது முன்வைக்கவுள்ளது. 30 வருடங்களுக்கு முன்னர் மாகாண சபை தீர்வு யோசனை முன்வைக்கப்பட்ட போது கூட, அது ஒரு இலங்கை தழுவிய தீர்வு யோசனையாகவே முன்வைக்கப்பட்டது. இந்தியாவின் அழுத்தங்களுக்கு பணிந்து வடக்கு – கிழக்கு மாகாணங்களை தற்காலிகமாக இணைக்கும் முடிவுக்கு கொழும்பு இணங்கியது. ஆனால், இன்று அந்த இந்திய அழுத்தமும் இல்லை. இவ்வாறானதொரு இக்கட்டான நிலையில்தான் தமிழர் அரசியல் 2017இல் வந்து நிற்கிறது.

இவை அனைத்தையும் கூட்டியும் கழித்தும் விடயங்களை தொகுப்பதாயின், பின்வரும் மூன்று தெரிவுகள் தொடர்பிலேயே சிந்திக்க முடியும். ஒன்று, ஒருவேளை சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் ஒரு இடைக்கால ஏற்பாடு என்னும் வகையில் தற்போது சில விடயங்களை ஏற்றுக் கொள்ளுவதென்று முடிவெடுத்தால், அதனுடன் ஏனைய கட்சிகள் ஒத்துப்போவது. இரண்டு, சம்பந்தனின் முடிவை நிராகரித்து, முன்னெடுப்புக்களிலிருந்து வெளியேறுவது – வெளியேறுவது என்பது இப்பத்தியாளர் மேலே குறிப்பிட்டவாறு அதன் முழுமையான அர்த்தத்தில் – அதனோடு வடக்கு – கிழக்கு மாகாண சபைகளில் அங்கம் வகிக்கும் வடக்கு முதலமைச்சர் உள்ளடங்கலாக, கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் வெளியேறி தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்துவது. இதன் மூலம் புதிய அரசியல் யாப்பை முற்றிலும் தமிழ் மக்கள் நிராகரிக்கின்றனர் என்னும் உண்மையை வெளிப்படுத்துவது. மூன்று, அவ்வாறு வெளிப்படுத்தியதோடு நிற்காமல், முதலமைச்சர் மற்றும் ஏனைய அதிருப்தியாளர்கள் அனைவரும் ஒன்றுபட்டு வடக்கு – கிழக்கு தழுவிய வகையில் அரசியல் போராட்டங்களை முன்னெடுப்பது. ஆரம்பத்தில் இதற்கு மக்கள் பெருமளவில் ஆதரவு தரக்கூடிய நிலையிருக்காது. எனினும், தலைவர்களின் தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் பார்த்து பின்னர் மக்கள் பெருந்திரளாக இணைந்து கொள்ளக்கூடும். இதில் எத்தனை தலைவர்கள் தெரிவு செய்யப் போகின்றனர்? இந்த இடத்தில் பிறிதொரு விடயத்தையும் இப்பத்தி சுட்டிக்காட்ட விரும்புகிறது – ஒருவேளை தென்னிலங்கை அரசியல் குழப்பமடைந்து, மஹிந்த மீளெழுச்சி பெற்றால் இவை அனைத்துக்கும் வேவையில்லாமலும் போகலாம் அல்லது மஹிந்தவின் அணியை சமாளிக்க முடியாமல் மைத்திரி கையை விரிக்கலாம். அத்துடன், அரசியல் தீர்வு விவகாரம் கிடப்பிற்குச் செல்லலாம். இலங்கையின் அரசியல் நிலைமைகள் தொடர்ந்தும் ஒரு சக்கரம் போல் சுழன்று கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் மேற்குறிப்பிட்ட விடயங்களில் எதுவும் நிகழலாம்.

யதீந்திரா