படம் | SrilankaBrief

அனைவராலும் வெகுசன ஊடகம் தொடர்பான உணர்வை இன்னொருவரிடம் ஏற்படுத்த முடியாது. இந்த விடயம் தொடர்பாக தர்க்க ரீதியான அறிவு கொண்டவருக்கே  அப்படியான உணர்வை ஏற்படுத்த முடியும். ஊடகம் தொடர்பான உணர்வை தன்னோடு இருந்தவர்களுக்கும் ஏனையவர்களுக்கும் லசந்த விக்கிரமதுங்க என்ற ஊடகவியலாளரால் ஏற்படுத்த முடிந்துள்ளது. அவர் எந்நேரமும், என்ன நடந்தது என்பதைவிட, என்ன நடக்கப்போகிறது என்பது தொடர்பாக விழிப்புடன் இருந்த பத்திரிகையாளராவார். அதனாலேயே அவர் எந்நேரமும் வேறெவரும் சந்தித்திராத ஓர் ஊடக உலகை எதிர்கொண்டிருந்தார். அந்த உலகில் தனித்து சுயநல நோக்கில் அவர் வாழவில்லை. ஏனையவர்களுடன் தகவல்களைப் பரிமாறிக்கொண்டார். அலுவலகத்தில் எந்நேரமும் எதிர்கொள்பவர்களிடம் அவர் ஆங்கிலத்தில் கேள்வியொன்றைக் கேட்பார்.

என்ன நடக்கிறது?

தனக்கு என்ன நடக்கப்போகிறது என்பதையும் அவர் அறிந்திருந்தார். இருந்தபோதிலும் தனக்கு நேரவிருக்கும் ஆபத்தை விட மற்றையவர்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்கள் குறித்து மனவேதனையில் இருந்துள்ளார், கோபத்துடன் இருந்துள்ளார். அவர்களின் பிரச்சினை தொடர்பாக எழுதியுமுள்ளார்.

லசந்த நடுவீதியில் வைத்து மெனிக்கப்பட்டது அதனால்தான். அவரால் தன்னுடைய வேலையை மட்டும் பார்த்திருந்திருக்க முடியும். அவர் அதனை புறந்தள்ளினார். ஏனையோரின் வாழ்வதற்கான உரிமைக்காக போராடினார்.

லசந்த உயிரிழந்து 8 வருடங்கள் ஆகிவிட்டன. இருந்தபோதிலும் அவருக்கு நியாயத்தை வழங்க எம்மால் முடியாது போயுள்ளது. லசந்தவின் 8ஆவது நினைவுநாள் ஜனவரி 8ஆம் திகதி நினைவுகூரப்பட்டது. அவரை பலியெடுத்தவர்கள் தோல்வியடைந்ததும் அதே ஜனவரி 8ஆம் திகதியாகும். வெற்றியீட்டியவர்கள் லசந்தவுக்காக, அவரது உறவுகளுக்காக, நண்பர்களுக்காக நீதியை நிலைநாட்டுவார்கள் என்று நம்பிக்கொண்டிருந்தோம். ஆனால், அது பிழையான எதிர்பார்ப்பு என்பதை நடராஜா ரவிராஜ் நேற்று, முன்தினம் நமக்கு கூறிவிட்டுச் சென்றிருக்கிறார்.

அன்பான லசந்த,

நீங்கள் உயிரிழந்து 8 வருடங்களில் இப்படியென்றால் 9 வருடங்களாகும்போது நாங்கள் என்ன கூறுவோம்? அன்று இன்றளவாவது கூறவிளைவோமா? இல்லை முடியாமல்போகுமா? அந்தக் கேள்விக்கான பதிலை நாங்கள்தான் கூறவேண்டும், காலம் அல்ல.

கசுன் புஸ்ஸவெல