படம் | Forbes

இலங்கை போன்ற இயற்கை வளங்களால் ஆசீர்வதிக்கப்பட்ட, பெருமளவு கல்வி அறிவுள்ள மக்களைக் கொண்ட ஒரு அழகிய சிறிய நாட்டுக்கு 200 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பது மிகவும் பெரிய ஒரு தொகையாகும். உள்நாட்டு நாணயப் பெறுமதியின் படி ஒரு டொலருக்கு குறைந்தது 145 ரூபா என்ற ரீதியில் பார்த்தாலும் இந்தத் தொகை சுமார் 29,000 பில்லியன் ரூபாய்களாகும்.

ஆனால், இவ்வளவு பெரிய தொகை இந்த நாட்டில் எதற்காக செலவிடப்பட்டது. கல்விக்காகவா? சுகாதார நலன்களை மேம்படுத்தவா? அல்லது கைத்தொழில் வர்த்தக முயற்சிகளில் முதலீடு செய்யப்பட்டதா? இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு திட்டத்தில் செலவிடப்பட்டதா? உள்ளக கட்டமைப்பு அபிவிருத்திக்காக பயன்படுத்தப்பட்டதா? மக்களின் வாழ்க்கைத் தர அல்லது வாழ்வாதார மேம்பாட்டுக்காகப் பயன்படுத்தப்பட்டதா? வறுமை ஒழிப்புத் திட்டங்களில் செலவிடப்பட்டதா? அவ்வாறு செய்யப்பட்டிருந்தால் இந்த நாடு எல்லாவிதத்திலும் ஒரு சொர்க்கப்புரியாக மாறியிருக்கும். உலகுக்கே உதாரணமாக நமது சுதந்திரத்தின் ஆரம்ப காலத்தில் இருந்தது போல் இந்த நாடு மாறியிருக்கும்.

ஆனால், மிகவும் துரதிஷ்டவசமாக இவ்வாறான உருப்படியான எந்தத் திட்டத்திலும் செலவிடப்படாமல் இந்தப் பணம் செலவிடப்பட்டமை நாசத்தை உண்டாக்கிய யுத்தத்தில் என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். சுமார் மூன்று தசாப்தகாலமாக நீடித்த யுத்தத்தில் செலவிடப்பட்ட தொகை கிட்டத்தட்ட 200 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பது தற்போது தெரியவந்துள்ளது. இந்த நாட்டின் பிரதான அரசியல் கட்சிகளின் குறுகிய நோக்கம் கொண்ட அழிவை ஏற்படுத்தும் இனவாத சிந்தனைகளின் விளைவாக உருவாக்கப்பட்டதே இந்த உள்நாட்டு யுத்தம்.

இந்தியாவின் முன்னாள் வெளியுறவு செயலாளரும் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான ஷிவ் சங்கர் மேனன் அண்மையில் எழுதிய இந்திய வெளியுறவு கொள்கையை வகுப்பதில் உள்ள தெரிவுகள் எனும் தலைப்பிலான புத்தகத்தில் இலங்கையில் இடம்பெற்ற அர்த்தமற்ற உள்நாட்டு யுத்தத்தில் 200 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன என்ற தகவலைத் தெரிவித்துள்ளார்.

இந்தச் செலவில் சந்தர்ப்ப செலவுகளை தான் மதிப்பிடவில்லை என்றும் மேனன் தெரிவித்துள்ளார். இலங்கை தெற்காசிய பிராந்தியத்தில் ஒரு காலத்தில் மிகவும் துரிதமாக வளர்ச்சி கண்டு வந்த பொருளாதாரமாகத் திகழ்ந்தது என்ற விடயத்தையும் அவர் நினைவுபடுத்தியுள்ளார்.

இந்தப் புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களின் படி 1983 முதல் 2009 வரையான காலப்பகுதியில் இலங்கையில் உள்நாட்டு யுத்தம் காரணமாக 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரையான மரணங்கள் சம்பவித்திருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றுள் 30ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையான அப்பாவி பொது மக்கள் மரணம் அடைந்துள்ளனர். 27,693 விடுதலைப் புலிகள் உறுப்பினர்களும், 23790 இராணுவத்தினரும், 1155 இந்திய சமாதான படையினரும் கொல்லப்பட்டுள்ளனர்.

யுத்தத்தின் கடைசிக் கட்டத்தில் சுமார் மூன்று லட்சம் மக்கள் அகதிகளாக்கப்பட்டனர் அல்லது உள்நாட்டில் இடம்பெயர்ந்தனர். வடக்கிலும் கிழக்கிலும் 16 லட்சம் கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டன.

இலங்கையின் சகல சமூகங்களும் இந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்டன. சிங்கள இனவாதிகளும் விடுதலைப் புலிகளும் இதற்கு சம அளவில் பொறுப்பு கூற வேண்டியவர்கள் என்று குறிப்பிட்டுள்ள மேனன் யுத்தம் தொடர்பான பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.

2009இல் விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

இந்த யுத்தம் ஏற்படுத்திய பொருளாதார ரீதியான இழப்பு, மரணங்கள் மற்றும் அழிவுகள் சமூகங்கள் மீது அது ஏற்படுத்திய ஒட்டு மொத்தமான தாக்கங்கள் என்பன அறிவுபூர்வமாக சிந்திக்கும் எந்தவொரு மனிதனுக்குள்ளும் பேரினவாதக் கொள்கைகளில் இருந்து விடுபட வேண்டும் என்ற சிந்தனையையே தோற்றுவித்திருக்கும். பேரினவாதப் போக்குள்ளவர்களுக்கு தாம் பின்பற்றிய கொள்கைகள் பற்றி மீளாய்வு செய்வதற்கான ஒரு நல்ல வாய்ப்பை யுத்தத்தின் முடிவு வழங்கியது. பழைய நாசகாரக் கொள்கைகளில் இருந்து விடுபட்டு புதிய சிந்தனைகளுடன் நல்லதோர் எதிர்காலத்தை நோக்கி நகரக்கூடிய அருமையான வாய்ப்பை யுத்தத்தின் முடிவு வழங்கியது.

ஆனால், துரதிஷ்டவசமாக மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான அரசு இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டது. சிறுபான்மை மக்கள் எதிர்நோக்கிய துன்பங்களுக்கு தீர்வுகளை வழங்கத் தவறிய மஹிந்த அரசு தமிழ் மக்களை தொடர்ந்து கஷ்டப்பட விட்டதோடு மட்டுமன்றி, யுத்தத்தின் வெற்றியை தனது சொந்த உரிமையாகக் கருதி யுத்தத்தின் போது தமிழ் மக்களைப் போலவே பல துயரங்களைச் சந்தித்த அப்பாவி முஸ்லிம் சமூகத்தின் குரல் வளைகளை நசுக்கத் தொடங்கியது.

“முதலில் தமிழர்களைக் கவனிப்போம் அதன் பிறகு முஸ்லிம்களைப் பார்த்துக் கொள்வோம்” என்று பேரினவாதிகள் அடிக்கடி கூறி வந்த வாத்தைகளுக்கு மஹிந்த தரப்பு உயிர் கொடுக்கத் தொடங்கியது.

ழுமு உலகும் அதிர்ச்சி அடையும் வகையில் முன்னொரு போதும் இல்லாத அளவுக்கு எந்தவொரு நியாயமான காரணமும் இன்றி முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகளையும் வன்முறைகளையும் மஹிந்த ராஜபக்‌ஷ அரசு கட்டவிழ்த்து விட்டது.

பூகோள பொருளாதார மாற்றங்களை எதிர்நோக்கி உலகம் நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில் அந்த மாற்றங்களுக்கு ஈடுகொடுத்து நாமும் முன்னேற வேண்டும் என்ற இலக்கை தவற விட்டுவிட்டு இங்குள்ள ஒரு சில சிங்கள இனவாதிகள் இந்த நாட்டை மீண்டும் 1915ஐ நோக்கி பின்னோக்கி நகர்த்த முயற்சிக்கின்றனர்.

தெற்காசியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக யுத்தப் பிரகடனம் செய்து ஆசியாவின் பௌத்த பயங்கரவாதி என மேற்குலகால் வர்ணிக்கப்பட்ட மியன்மாரின் அஷின் விராத்து தேரருடன் அவரைப் பின்பற்றும் உள்நாட்டின் தீவிரபோக்கு குழுவான பொதுபல சேனாவினர் கைகோர்த்து செயற்படும் அளவுக்கு அனுமதி வழங்கி மஹிந்த ராஜபக்‌ஷ அரசு இந்த விடயத்தில் பராமுகமாக இருந்தது. இதன் விளைவாக பொதுபல சேனாவும் விராத்து தேரரின் 969 அமைப்பும் விஷேட உடன்படிக்கை ஒன்றிலும் ஒப்பமிட்டன. அவர்கள் பாஷையில் கூறுவதாயின், இஸ்லாமிய பயங்கரவாதம் மற்றும் சமய அடிப்படை வாதம் என்பனவற்றில் இருந்து தெற்காசியாவை விடுவிப்பதற்கான உடன்படிக்கை என்று இது குறிப்பிடப்படுகின்றது.

ராஜபக்‌ஷவின் ஊழலும் குற்றச் செயல்களும் மலிந்த வர்த்தக மயமாக்கப்பட்ட ஆட்சிக் காலத்தில் சட்டமும் ஒழுங்கும் முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு சீர்கெட்டுப் போயிருந்தது. பொருளாதார ஸ்திரமற்ற நிலையில் முழு நாடும் அச்சத்தை எதிர்நோக்கிய நிலையில் மக்களும் பெரும் அச்சத்துடனேயே வாழ்ந்து வந்தனர்.

இவ்வாறான ஒரு பின்னணியில்தான் மைத்திரிபால சிறிசேன மஹிந்த அரசில் இருந்து வெளியேறி பொது எதிரணி வேற்பாளர் என்ற போர்வையில் மஹிந்தவுக்கு எதிராகக் களமிறங்கினார். மஹிந்த ராஜபக்‌ஷவால் உரிய காலத்துக்கு முன்னர் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தத் தேர்தலின் போது சமாதானத்தை விரும்பும் சிங்கள தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு 2015 ஜனவரி 8ல் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிக்கு வாக்களித்து மஹிந்தவைத் தோல்வியுறச் செய்தனர்.

சட்டமும் ஒழுங்கும் மீள நிலை நிறுத்தப்படும், மக்கள் இழந்த சுதந்திரம் அவர்களுக்கு மீண்டும் பெற்றுக் கொடுக்கப்படும், ஊழலும் குற்றமும் புரிந்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்ற கவர்ச்சிகரமான சுலோகங்களை மைத்திரி இந்தத் தேர்தலின்போது முன் வைத்தார்.

ஆனால், துரதிஷ்டவசமாக இன்று நாம் மீண்டும் ஒரு நாடு என்ற வகையில் பழைய நிலைமைக்கே திரும்பியுள்ளோம். ஜனாதிபதி மைத்திரியும் பிரதமர் ரணிலும் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை இன்று வரை நிறைவேற்றத் தவறியுள்ளனர். பாரிய அளவில் ஊழல் மோசடி புரிந்தவர்கள் இன்னமும் சுதந்திரமாக உலா வருகின்றனர். அரசாங்கம் இவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு பதிலாக அரசாங்கமே அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றது என்பதுதான் பெரும்பாலானவர்களின் கருத்தாக உள்ளது.

மறுபுறத்தில் இந்த அரசாங்கத்தின் ஒட்டு மொத்த செயற்பாடுகளிலும் மக்கள் மத்தியில் ஒரு வகை அதிருப்தியே காணப்படுகின்றது. மக்கள் அரசின் மீது விரக்தி அடைந்தவர்களாகவும் அரசைப் பற்றி பேசவே விருப்பம் அற்றவர்களாகவும் காணப்படுகின்றனர்.

பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசார தேரரின் இஸ்லாத்துக்கு எதிரான அவதூரான கருத்துக்களும் பிரசாரமும் மீண்டும் அதிகரித்துள்ளமை பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சட்டம் தன் கடமையை சரியாகச் செய்திருந்தால் அல்லது சட்டமும் ஒழுங்கும் இந்த நாட்டில் அமுலில் இருந்திருந்தால் அளுத்கம மற்றும் பேருவளை ஆகிய இடங்களில் அவர் விளைவித்த அனர்த்தங்களுக்காக அவர் இன்னமும் சிறையில் இருக்க வேண்டிய ஒரு நபராவார். ஆனால், அவர் இன்று ஜனாதிபதியினதும் நீதி அமைச்சரினதும் முக்கிய ஆலோசகர்களில் ஒருவராகக் காணப்படுகின்றார்.

அவரும் அவருடைய இனவாத சகாக்களும் முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள மக்களைத் தூண்டிவிடுவதில் கணிசமான அளவு பங்களிப்பை வழங்கி சிங்கள மக்களின் மனங்களில் நஞ்சை விதைத்து வருகின்றனர். இந்த நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த வக்கின்றி இந்த அரசும் சட்டத்தையும் ஒழுங்கையும் பறிகொடுத்த ஒரு அரசாகவே காணப்படுகின்றது, இவருக்கு அரசாங்கம் பாதுகாப்பு அளிக்கின்றது. இவருக்கு எதிராக எதுவும் செய்ய முடியாது என்று நீதி அமைச்சரே கையை விரிக்கின்றார். இவை எல்லாவற்றுக்கும் மேலாக சமயத் தலைவர்களுடனான ஆலோசனை கூட்டத்துக்கு ஜனாதிபதியே இவருக்கு அழைப்பும் விடுத்துள்ளார்.

இந்த விடயங்களால் மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர். அவர்களின் நம்பிக்கைகள் குலைந்து போகத் தொடங்கியுள்ளன. இந்த நிலை பற்றி எங்கு யாரிடம் பேசுவது என்பது புரியாமல் மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

லத்தீப் பாரூக்