படம் | Forbes

அவமானகரமான பெருந்தோல்வி (Fiasco) என்பது ஒரு கடுமையான சொல்லாக இருக்கக்கூடும். ஆனால், ஊடகவியலாளரைக் கடற்படை நடத்திய முறையைப் பார்க்கும்போது அது பொருத்தமான சொல்லாகவே இருக்கிறது எனலாம். இந்தப் பெருந்தோல்வி காரணமாக அதை விடவும் பெரிய பிரச்சினை அல்லது பெரிய தோல்வி சிறிது காலத்துக்கு மங்கலாகிப்போயிருக்கிறது. இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியின் தற்போதைய கட்டத்தில் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சீனக்கம்பனியொன்றுக்கு (China Merchants Ports Holding Company) 99 வருடங்களுக்கு வெறுமனே 112 கோடி அமெரிக்க டொலர்களுக்கு குத்தகைக்கு விடுவதென்பது நீண்டகால நோக்கில் நாட்டுக்குப் பாரிய விளைவுகளைக் கொண்டுவரும். இந்தப் பேரம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அக்கறையற்ற முறையில், மேலோட்டமான முறையில் தெரிவித்திருக்கும் கருத்து மிகுந்த அச்சந்தருவதாக இருக்கிறது. “கடனுக்கு பங்குகளைப் பரிமாற்றம் (Debt to equity swap) குறித்தும் கைத்தொழில்மயமாக்கல் குறித்தும் நாம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றோம்” என்று ‘இந்து’ செய்திப் பத்திரிகைக்கு (15 டிசம்பர் 2016) அளித்த பேட்டியில் அவர் கூறியிருக்கிறார். மஹிந்த ராஜபக்‌ஷ நாட்டைக் கொண்டுபோய் வீழ்த்தியிருக்கும் கடன்பொறி குறித்து நாமெல்லோரும் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால், விக்கிரமசிங்கவோ அந்தக் கடனுக்கு பங்குகளையும் கைத்தொழில்மயமாக்கத்தையும் பரிமாற்றம் செய்து சமாளித்திருப்பதாக நம்பிக்கொண்டு சந்தோசமாக இருக்கிறார்.

கடன் பொறி

அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை நிர்மாணித்ததன் காரணமான கடன் சுமார் 150 கோடி டொலர்களாகும். ஆனால், விக்கிரமசிங்க பேசுகின்ற பரிமாற்றம் இந்த முழுத்தொகையையும் உள்ளடக்கவில்லை. மிகவும் நடுத்தரமான மதிப்பீட்டின் அடிப்படையில் நோக்குகையில், குறைந்தபட்சம் 3,800 கோடி டொலர்களை (வட்டியும் சேர்த்து) திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும். அரசாங்கம் முழு விபரங்ளையும் வெளியிடுவதாக இல்லை. சீனாவிடம் கடனின் முழுத்தொகை 800 கோடி டொலர்கள் எனக் கூறப்படுகிறது. கடனைக் கழிப்பதற்காக பங்குகளை பரிமாற்றம் செய்வது என்ற அரசாங்கத்தின் தர்க்க நியாயத்தின் படி நோக்கும்போது சீனாவிடம் பெற்ற முழுக்கடனையும் கழித்துவிடுவதற்கு இலங்கை எத்தனை தொழில் முயற்சி நிறுவனங்களை (Enterprises) குத்தகைக்கு விடவேண்டும்?

எவ்வளவுதான் உகந்த முறையில் திட்டமிடப்படாததாக இருந்தாலும், அம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணித்ததன் நோக்கம் அதை நாட்டுக்கு இலாபம் சம்பாதித்துக் கொடுக்கும் ஒரு தொழில் முயற்சியாக்குவதேயாகும். ஒரு தொழில் முயற்சி நிறுவனத்தை நிர்மாணிப்பதற்கு கடன் தந்தவருக்கே அதை இலாபம் சம்பாதிப்பதற்காக 99 வருடங்களுக்கு குத்தகைக்கு விடவேண்டுமென்றால், அவ்வாறே கடனைப் பெறுவதில் எந்த அர்த்தமுமில்லை. எனவே, இந்தப் பெருந்தோல்விக்கு கடந்த அரசாங்கமும் இன்றைய அரசாங்கமுமே முழுப்பொறுப்பாகும்.

அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை ஒரு கூட்டுத்தொழில் முயற்சியாக மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம் என்பது உண்மையே. அரசாங்க – தனியார் கூட்டுப் பங்காண்மை வணிகம் (Public Private Partnership – PPP) என்று அதற்கு பெயரும் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், அம்பாந்தோட்டை துறைமுக பேரமோ ஒரு விசித்திரமான அரசாங்க – தனியார் கூட்டுப் பங்காண்மையாகும். அரசாங்கத்துக்கு 20 சதவீத பங்குகள் மாத்திரமே. தனியார் பங்காளிக்கு 80 சதவீதப் பங்குகள். இந்தப் பேரத்தில் தனியார் பங்காளி ஒரு உள்ளூர் கம்பனியல்ல. அது ஒரு வெளிநாட்டுக் கம்பனியாகும். உகந்த முறையிலான உள்ளூர் அரசாங்க – தனியார் பங்காண்மையாக இருந்தால்கூட, அரசாங்கத்துறை குறைந்தபட்சம் 55 சதவீதப் பங்குகளை தன்வசம் வைத்திருக்கவேண்டும். தனியார் பங்காளி ஒரு வெளிநாட்டு கம்பனியாக இருக்கும்போது அரசாங்கத்துறை வசம் இருக்கவேண்டிய பங்குகள் 55 சதவீதத்துக்கும் அதிகமானதாகவே இருக்கவேண்டும்.

அரசாங்க – தனியார் கூட்டுப்பங்கான்மை என்று இது அழைக்கப்படுகின்ற போதிலும், நடைமுறையில் அவ்வாறில்லை. இது அத்தகைய கூட்டுப்பங்காண்மை தொடர்பில் நிலவுகின்ற பொதுக்கருத்தின் ஒரு கோணலான அல்லது உருத்திரிப்பான வடிவமேயாகும். இது குத்தகை வைத்திருப்பவர் (சீனக்கம்பனி) துறைமுக அதிகாரசபைக்கு 20 சதவீத பங்குகளை வழங்கும் வகையிலான 99 வருட குத்தகை உடன்படிக்கையேயாகும். அரசாங்கத்துக்கு இது சில வருமானங்களைத் தருவதாக இருக்கலாம். ஆனால், நிறுவனம் சம்பாதிக்கக்கூடிய இலாபத்திலேயே தங்கியுமிருக்கிறது. சீனக்கம்பனி அதற்கு அவசியமான இலாபம் சம்பாதிக்கப்படுவதை உறுதி செய்துகொள்ளும் என்பதில் சந்தேகமில்லை. இத்துறைமுகத்தை சீனா ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்குடனான சொந்தக் கப்பல் வாணிபத்துக்குப் பயன்படுத்தலாம்.

அம்பாந்தோட்டைத் துறைமுகம் தொடர்பில் தற்போதைய அரசாங்கத்துடனும் கடந்த அரசாங்கத்துடனும் செய்துகொண்ட பேரம் மற்றும் உடன்படிக்கைகளில் சீனா மிகுந்த துடிப்புடனும் கெட்டித்தனத்துடனும் நடந்துகொண்டுள்ளது. அதை நாம் குறைகூற முடியாது. சீனர்கள் மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தைக் கொண்டு கடனை எடுக்கவைத்து தங்களது சொந்த தொழில் நிறுவனத்துக்கே (China Harbour and Sinohydro Corporation) செலவிடவும் வைத்தனர். சில இலங்கைத் தொழிலாளர்களும் பொறியியலாளர்களும் சீன நிறுவனத்துக்காக வேலை செய்தது உண்மைதான். சீனாவின் எக்சிம் வங்கியே (China Exim Bank) கடனைக் கொடுத்தது. இப்போது அது சைனா மேர்ச்சண்ட்ஸ் போர்ட்ஸ் நிறுவனத்துக்கே திருப்பிக்கொடுக்கப்படுகிறது. பார்த்தீர்களா? எத்தகைய நுட்பமான கடன்பொறி என்று? ஒரு சொற்ப காலத்துக்கு அம்பாந்தோட்டைத் துறைமுகம் மஹிந்த ராஜபக்‌ஷ துறைமுகம் என்று அழைக்கப்பட்டது மாத்திரமே முன்னாள் ஜனாதிபதி சந்தோசப்படக்கூடியதாக இருந்த அம்சம். இப்போது அதுவும் போய்விட்டது. துறைமுகம திறந்துவைக்கப்பட்ட போது பெரும் கேளிக்கைகள் அரங்கேற்றப்பட்டன. அதில் சில கலைஞர்கள் நன்றாக இலாபம் உழைத்தார்கள்.

தொழில் பிரச்சினை

துறைமுகம் குத்தகைக்கு விடப்படவிருக்கின்றது என்று அறிய வந்ததும் தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்ட விரக்தி அண்மைய பெருந்தோல்வியின் பிரகாசமான சான்றாகும். அவர்கள் கடந்த அரசாங்கத்தினால் ஒழுங்கற்ற முறையில் சமயாசமய ஊழியர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டவர்களாவர். தங்களது தொழிலைப் பாதுகாத்துக் கொள்வதற்கான சகல உரிமைகளும் அவர்களுக்கு இருக்கிறது. மேலதிக பயிற்சிகள் அவர்களுக்குத் தேவைப்பட்டிருந்தால் அவற்றைக் கொடுத்திருக்கவேண்டும்.

ஆனால், தொழிலாளர்கள் தங்களது உயிருக்கு ஏற்படக்கூடிய ஆபத்தையும் பொருட்படுத்தாமல், ‘ஹைபேரியன் ஹைவே’ என்ற ஜப்பானியக் கப்பலை 4 நாட்களாகத் தடுத்துவைத்திருந்த செயலை எவரும் ஏற்றுக்கொள்ள முடியாது. அது ஒரு ‘கடற்கொள்ளை’ செயலோ இல்லையோ, அது வேறு விடயம். ஆனால், தொழிற்சங்கப் போராட்டத்துக்கான வழிமுறையாக அது ஒருபோதும் இருக்கக்கூடாது என்பதே எனது அபிப்பிராயம். தொழில் பிணக்குகளைத் தீர்க்கும் வகையிலான எந்தவிதமான பேச்சுவார்த்தையையும் நடத்துவதற்கு அனுமதிக்காமல் கடற்படை செய்த தலையீடு உண்மையில் ஒரு அத்துமீறலேயாகும். இலங்கையிலே பல பிரச்சினைகளும் உறவுகளும் குழப்பகரமானவையாக மாறும் போக்கு அதிகரித்துக்கொண்டே வருகிறது. மறுபுறத்தில், இத்தகையதொரு கடுமையான நடவடிக்கையில் தொழிலாளர்கள் இறங்கியிருக்காவிட்டால், அவர்களது கோரிக்கைகள் அரசாங்கத்தின் கவனத்தைப் பெற்றிருக்காது.

கடற்படையின் தலையீடு எதிர்காலத்தில் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எவ்வாறு கையாளப்படப் போகின்றன என்பதற்கு கட்டியம் கூறுவதாகவும் அமைகிறது. இலங்கையில் அரசியல் ஸ்திரமின்மை அதிகரித்துவருவது குறித்து சீன அரசாங்கம் ஏற்கனவே அதன் விசனத்தை வெளிக்காட்டியிருக்கிறது. அது பேரம் பேசலில் ஒரு துருப்புச் சீட்டாகவும் இருக்கலாம். ‘கம்யூனிஸ்ட்’ என்று பெயரில் இருந்தாலும் சீனப் பங்காளிகள் (அரசாங்கம் உட்பட) பணம், இலாபம் என்று வரும்போது மிகவும் கடுமையான பேரக்காரர்கள். இலங்கைத் தரப்பில் இது பெரிய குறைபாடாக இருக்கிறது. சைனா மேர்ச்சண்ட்ஸ் ஹோல்டிங் கம்பனி எதிர்காலத்தில் கடற்படையிடமிருந்து முழுமையான பாதுகாப்பைக் கோரும். முழுச்செலவையும் இல்லாவிட்டாலும் பெரும் பகுதி செலவை இலங்கை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டியிருக்கலாம். வேறு சாத்தியப்பாடு எதுவும் தென்படுவதாக இல்லையென்பதால் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன போன்றவர்கள் அவ்வாறு செய்வதில் மகிழ்ச்சி அடையக்கூடும்.

டார்வின் துறைமுகம்

இன்று உலக வணிகத்தில் காணப்படக்கூடியதாக இருக்கின்ற போக்குகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது வெளிநாட்டுக் கம்பனியொன்றுக்கு துறைமுகமொன்றை குத்தகைக்குக் கொடுப்பதென்பது ஒன்றும் வழமைக்கு மாறான செயற்பாடு அல்ல. இந்த முயற்சிகளில் சீனா மேம்பட்டு நிற்கிறது. அவுஸ்திரேலியாவின் டார்வின் துறைமுகம் 2016​ ஆரம்பத்தில் சீனாவின் லாண்ட்பிரிட்ஜ் கோர்பரேசனுக்கு (Landbridge Corporation) 50 கோடி அவுஸ்திரேலிய டொலர்களுக்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதுவும் 99 வருட குத்தகைதான். இதை அறியும்போது இலங்கைத் தரப்பினர் சந்தோசப்படக்கூடும். டார்வின் துறைமுகத்துடன் ஒப்பிடும்போது அம்பாந்தோட்டை உடன்பாடு நல்லதொரு பேரமாகத் தோன்றக்கூடும். ஏனென்றால், இது 112 கோடி  அமெரிக்க டொலர்கள். ஆனால், அதுவல்ல நிலை.

டார்வின் ஒரு சிறிய துறைமுகமாகும். அம்பாந்தோட்டையினூடாக இடம்பெறக்கூடிய கப்பல் போக்குவரத்துடன் ஒப்பிடும்போது டார்வினில் பெரிய அளவுக்கு போக்குவரத்து இல்லை. எனவே, டார்வின் குத்தகை விலை அவுஸ்திரேலியாவுக்கு இலாபகரமானது என்று கருதப்படுகிறது. அத்துடன், அடுத்த 25 வருடங்களுக்கு அத்திட்டத்தில் சுமார் 74 கோடியை முதலீடு செய்வதற்கு லாண்ட்பிரிட்ஜ் கோர்பரேசன் சட்டரீதியாக இணங்கிக் கொண்டிருக்கிறது. அம்பாந்தோட்டைக்காக நாம் அத்தகைய உடன்பாடு எதையும் செய்திருக்கிறோமா? இது ஐயத்துக்குரியது. டார்வின் குத்தகை உடன்படிக்கை அவுஸ்திரேலியாவின் சமஷ்டி அலகான வட பிராந்தியத்தின் (Northern Territory) நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அம்பாந்தோட்டை உடன்பாடு தொடர்பில் எம்மிடம் அத்தகைய சட்டமூலம் ஏதாவது இருக்கிறதா? ஒட்டுமொத்த தொகை இலக்கத்தைத் தவிர உடன்பாட்டின் எந்த நிபந்தனைகள், விதிமுறைகள் குறித்தும் விபரங்கள் தெரியவில்லை. எல்லாமே ஒரே இரகசியமாக இருக்கிறது. டார்வின் உடன்பாட்டைப் பொறுத்தவரை, அது துறைமுக  முகாமைத்துவ சட்டம் (Ports Management Act – 9 June 2016) என்று அழைக்கப்படுகிறது.

டார்வின் உடன்பாடும் கூட சர்ச்சைக்கு மத்தியில்தான் செய்துகொள்ளப்பட்டது. அவுஸ்திரேலியாவில் அந்த விவகாரம் இன்னும் விவாதிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. குறிப்பாக, அந்த உடன்பாடு தேசிய பாதுகாப்பு மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்தே பிரதானமாக விவாதிக்கப்படுகிறது. டார்வின் உடன்பாடு தொடர்பாக அமெரிக்கா விசனம் வெளியிட்டது. ஆனால், அத்துறைமுகப் பகுதியின் ஒரு முனையில் அமெரிக்கா நீண்டதூர குண்டுவீச்சு விமானங்களை நிறுத்திவைத்திருக்கிறது. அம்பாந்தோட்டை துறைமுகத்தின் உத்தேச குத்தகை உடன்பாடு போலன்றி, டார்வினில் துறைமுகத்தை உள்ளடக்கிய ஒரு சிறிய பகுதியே குத்தகைக்கு விடப்படுகிறது.

சர்வதேச அக்கறைகள்

அம்பாந்தோட்டை உடன்பாட்டில் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருக்க முடியுமா? இருக்க முடியும். அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே குறிப்பாக டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக தெரிந்தெடுக்கப்பட்ட பிறகு பதற்றம் அதிகரித்து வருகிறது. வெளிப்படையாக இது வர்த்தக விவகாரங்கள் தொடர்பானதாக தோன்றினாலும், இராணுவ அக்கறைகளாக விரிவடையக்கூடிய அரசியல் பதற்றமாகவும் அது இருக்கிறது. அண்மையில், சீனா அமெரிக்கக் கடற்படையின் ஆளில்லா நீர்மூழ்கியொன்றை கைப்பற்றியது. டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியாக வருவதற்கு முன்னதாகவே, “எமக்கு அந்த நீர்மூழ்கி வேண்டாம்” என்று ருவிட்டர் சமூக ஊடகத்தில் பதிவு செய்ததைக் காணக்கூடியதாக இருந்தது. அமெரிக்கா மீது சீனாவுக்கு இருக்கின்ற பகைமையுணர்வைச் சுட்டிக்காட்ட அவர் விரும்பினார். இரு நாடுகளுக்கும் இடையில் கெடுபிடிப்போர் (Cold War) அதிகரித்து வருகிறது. இத்தகைய பின்புலத்திலே அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாட்டைச் செய்வதன் மூலமாக இலங்கை ஆபத்தை தேடிக்கொள்ள வேண்டுமா? நியாயபூர்வமான பதில் நிச்சயமாக ‘இல்லை’ என்பதேயாகும். இவ்விரு பெரும் வல்லரசுகளுக்கு இடையிலான எந்தவொரு எதிர்கால தகராறிலும் அம்பாந்தோட்டைத் துறைமுகம் சர்ச்சைக்குரியதொரு விவகாரமாக மாறக்கூடும்.

சர்வதேச பாதுகாப்புப் பிரச்சினைகளை எதிர்காலத்துக்காக புறந்தள்ளி வைத்தாலும், வர்த்தக உடன்படிக்கை என்ற வகையில் அம்பாந்தோட்டை துறைமுகக் குத்தகை ஒரு கெடுதியான ஏற்பாடேயாகும். சைனா மேர்ச்சண்ட்ஸ் போர்ட்ஸ் ஹோல்டிங் கம்பனி இலங்கையின் 112 கோடி அமெரிக்க டொலர்கள் கடனை எக்சிம் வங்கிக்கு செலுத்துகின்றது என்பது குறித்து அறிவிலிகள் மாத்திரமே சந்தோசப்பட முடியும். உண்மையில் அது முகப்பு மதிப்பில் பார்க்கும்போது பாரிய தொகைதான். 80 சதவீதப் பங்குகளை அந்தச் சீனக்கம்பனிக்குக் கொடுக்கின்ற குத்தகைக் காலப்பகுதியை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது பெருமளவு பொறுப்புகள் அதில் சம்பந்தப்பட்டிருக்கின்றன. தற்போதைய பேரமும் உத்தேச உடன்பாடும் 2010ஆம் ஆண்டில் சீன அரசாங்கத்துடன் முன்னைய இலங்கை அரசாங்கம் இணக்கிக் கொண்டவற்றின் தர்க்க ரீதியான ஒரு விரிவாக்கமாக இருப்பது சாத்தியமே. துறைமுக அதிகார சபையின் முன்னாள் தலைவரான பிரியந்த் பண்டு விக்கிர இதுதொடர்பில் 2014ஆம் ஆண்டில் சில அறிகுறிகளைக் சுட்டிக்காட்டியிருந்தார்.

99 வருடங்களுக்குப் பதிலாக இலங்கை ஏன் 33 வருட குத்தகைக்கு உடன்பாட்டுக்குப் போகவில்லை? 99 என்பதில் எந்த மாயமந்திரமுமேயில்லை. குத்தகைக்காலம் எவ்வளவுக்கு நீண்டதாக இருக்கிறதோ நட்டின் எதிர்காலம் அந்தளவுக்கு நிச்சயமற்றதன்மை கொண்டதாக இருக்கும். 20 சதவீத பங்குகளை மாத்திரம் கொண்டிருப்பதற்குப் பதிலாக இலங்கை ஏன் 55 சதவீதப் பங்குகளை வைத்திருக்க முடியாது? உடைமையுரிமை அரசாங்கத்திடம் இருக்கிறது என்று சொல்லிக்கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை. இந்த உடன்படிக்கைகளின் கீழ் குத்தகை எடுத்தவர் உரிமையாளர்களை விடவும் பலம்பொருத்தியவராக இருக்கிறார். குத்தகை உடன்படிக்கையின் கீழான ‘கைத்தொழில்மயமாக்கல்’ குறித்து பிரதமர் விக்கிரமசிங்க பெருமைபடுகிறார். அந்த நோக்கத்துக்காக, துறைமுகத்துக்கு மேலதிகமாக அதேயளவு பணத்துக்கு 15,000 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு அவர் கொடுக்கின்றார்.

இரு பலவீனங்கள்

உத்தேச குத்தகை உடன்படிக்கையின் பின்னால் இருக்கக்கூடிய இரு முக்கியமான குறைபாடுகள் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. வெளிநாட்டு பங்காளர்களுடன் வர்த்தக மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான உடன்பாடுகளில் எமக்கு அனுகூலமான நிபந்தனைகள் குறித்து பேரம்பேசி சாதிப்பதில் இலங்கை தலைவர்களுக்கு உயரதிகாரிகளுக்கும் இருக்கின்ற பலவீனம் முதலாவதாகும். சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, சீனா, இந்தியா அல்லது அமெரிக்காவுடனான பேரம் பேசல்களில் எல்லாம் இந்த பலவீனமே வெளிப்பட்டு வந்திருக்கிறது. பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கையை (Economic and Technical Corporation Agreement – ETCA) 2017 ஜூனில் கைச்சாத்திடவேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. ஆனால், பிரதமர் விக்கிரமசிங்கவோ இந்த உடன்படிக்கையும் ஜனவரியிலேயே கைச்சாத்திட்டுவிட வேண்டும் என்று விரும்புகிறார். 2016இல் கைச்சாத்திட்டிருக்க வேண்டும் என்பதே அவரின் முதல் விருப்பமாக இருந்தது. சில காரணங்களுக்காக வழமைக்கு மாறானதொரு அவசரம் காட்டப்படுவதாகத் தோன்றுகிறது.

இந்த முன்முயற்சிகள் சகலதினதும் பின்னாலுள்ள பொருளாதாரச் சிந்தனையே எல்லாவற்றையும் விடவும் மிகவும் குறைபாடுடையதாகத் தோன்றுகிறது. ‘இந்து’ பத்திரிகைக்கு பிரதமர்  விக்கிரமசிங்க பின்வருமாறு கூறியிருக்கிறார்:

“இந்தியாவுடனான உடன்படிக்கையையும் விரைவாகச் செய்துவிட வேண்டுமென்று நாம் விருமபுகிறோம். ஏனென்றால், இந்திய உடன்படிக்கை 2017 அளவில் இலங்கை, இந்தியா, சிங்கப்பூரை உள்ளடக்கியதொரு முத்தரப்பு (வர்த்தக மற்றும் முதலீட்டு) ஏற்பாட்டுக்கு வழி வகுக்கிறது. வங்காள விரிகுடாவில் முக்கியமான நுழைவாயில்களில் நாம் இருக்கின்றோம் என்பதே எமக்கிடையில் இருக்கக்கூடிய உடன்பாடுகளின் அர்த்தமாகும். வங்காள விரிகுடா பிராந்தியத்திற்குள் நெருக்கமானதொரு பொருளாதார ஒன்றியமாக எம்மால் செயற்பட முடியும். அந்த நோக்கம் வெற்றிபெற வேண்டுமானால், இந்தியாவுடனான உடன்படிக்கை எமக்குத் தேவை.  ஏனென்றால், (தமிழ்நாடு , கர்நாடாகா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் கேரளா ஆகிய) ஐந்து தென்னிந்திய மாநிலங்களும் இலங்கையும் சேர்ந்து மொத்தமாக 50 ஆயிரம் கோடி அமெரிக்க டொலர்களை நிகர உள்நாட்டு உற்பத்தியாகக் கொண்ட பொருளாதாரத்தை உடையவை. ஒரு தசாப்தம் அல்லாது அதற்கும் சற்று கூடுதலான காலகட்டத்திற்குள் அந்த நிகர உள்நாட்டு உற்பத்தியை இரண்டு மடங்காக அதாவது ஒரு ரில்லியன் டொலர்களுக்கு (10 இலட்சம் மில்லியன்) அதிகரிக்கக் கூடியதாக இருக்கும். வாய்ப்புக்கள் பெருவாரியாக இருக்கின்றன. ஏனென்றால், சிங்கப்பூரூடனும் சீனாவுடனுமான எமது உடன்படிக்கைகள் அவர்களின் ‘One Belt, One Road’ என்ற திட்டத்துடன் சம்பந்தப்பட்டவை. அதனால், இந்தியாவுடனான உடன்படிக்கையை சாத்தியமானளவு விரைவாக நாம் கைச்சாத்திட வேண்டியது அவசியமானதாகும்.”

முத்தரப்பு உடன்படிக்கைகள் அல்லது ‘ஒரு வங்காள விரிகுடா வர்த்தக வலயம்’ கோட்பாட்டளவில் இலங்கைக்கு பயனுடையதாக இருக்க முடியும் என்பதில் கேள்விக்கு இடமில்லை. ஆனால், அது மிக மிக தொலைவில் இருக்கின்ற ஒரு யாதார்த்தமாகும். அம்பாந்தோட்டைப் பெருந்தோல்வி வெளிக்காட்டியிருப்பதைப் போன்று அத்தகையதொரு யாதார்த்தத்துக்கு இலங்கையோ அல்லது தற்போதைய அரசாங்கமோ தயாராக இல்லை. அரசாங்க – தனியார் பங்காண்மை வணிகம் என்று அழைக்கப்படுகின்ற திட்டத்தில் முக்கியமான பங்காளராக அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை இலங்கையினால் சமாளிக்க முடியவில்லை என்றால், ஏனைய உடன்பாடுகளில் இருந்து எவ்வாறு அதனால் பயனடைய முடியும்? இலங்கை அதன் சொந்த தொழில் முயற்சிகளையும் முகாமைத்துவ ஆற்றல்களையும் வலுப்படுத்தி வளர்த்துக்கொள்ளவேண்டிய தேவை இருக்கிறது. சர்வதேச உடன்பாடுகளுக்குப் போவதற்கு அதைத் தவிர வேறு வழியில்லை.

அம்பாந்தோட்டை குத்தகை போன்ற உடன்படிக்கைகள் துரிதமான பணத்தையும் பயனையும் அரசாங்கத்துக்குக் கொண்டுவரக்கூடும். அது மத்திய வங்கி பிணைமுறி முறைகேட்டிலிருந்து துரிதமான பணத்தைப் பெறுவதற்கு நிகரானதாகும். எவ்வாரெனினும், இறுதியில் இழப்புகளைச் சந்திக்கப்போவது நாடும் மக்களுமேயாகும். பிணைமுறி விவகாரத்தில் பயன்கள் உள்ளாட்டுக் கம்பனியான பேப்புச்சுவல் ரெசறீஸூக்குப் போனதென்றாவது வைத்துக்கொள்வோமே. ஆனால், அம்பாந்தோட்டையில் பயனடையப் போவது சைனா மேர்ச்ண்ட்ஸ் கம்பனியேயாகும். தாங்கள் இன்னமும் செய்யப்போகின்ற ஏனைய பல உடன்பாடுகள் பற்றியும் ரணில் விக்கிரமசிங்க விளக்கிக் கூறியிருக்கிறார். பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்தும் இருக்க வேண்டுமா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்காக கடந்த ஜூன் மாதத்தில் நடத்தப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பில் பிரிட்டிஷ் மக்கள் ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கு ஆதரவாக வாக்களித்திருந்ததையும் (பிரெக்சிட்) அமெரிக்காவில் கடந்த மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஹிலாரி கிளின்டனைத் தோற்கடித்து டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றதையும் சுட்டிக்காட்டி சில யதார்த்த நிலைமைகளை பிரதமரின் கவனத்துக்குக் கொண்டுவர ‘இந்து’ பேட்டியாளர் என். ராம் முயற்சித்தார். ஆனால், பிரதமரால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

இத்தகையதொரு பின்புலத்திலேயே, பிரதமர் கடனுக்கு பங்குகளைப் பரிமாற்றம் செய்வது குறித்தும் கைத்தொழில் மயமாக்கம் குறித்தும் மாத்திரம் பெரிதாகப் பேசவில்லை, திருகோணமலையை சிங்கப்பூர் (சுர்பனா யுரோங்), இந்தியா மற்றும் ஜப்பானுக்கு குத்தகைக்கு விடுவதைப் பற்றியும்கூட பேசுகிறார்.

இந்தப் பேரம் பேசல்களிலோ உடன்பாடுகளிலோ எதுவுமே ஒளிவுமறைவு அற்றவையாக இல்லை. டார்வின் துறைமுக விவகாரத்தில் நான் சுட்டிக்காட்டியதைப் போன்று இலங்கையில் அம்பாந்தோட்டைக்காக துறைமுக முகாமைத்துவ சட்டம் என்று எதுவுமே இல்லை. குறைந்தபட்சம் எதிரணியும் மக்களுமாவது தற்போதைய பேரம் பேசலை நிறுத்துமாறும், இலங்கைக்கு அனுகூலமான நிபந்தனைகளை உள்ளடக்கியதாக புதிதாக பேச்சுவார்த்தைகளைத் தொடங்குமாறும் அரசாங்கத்தை வலியுறுத்திக் கேட்பதற்கு இன்னமும் காலம் இருக்கிறது. உடன்படிக்கை ஜனவரி தொடக்கத்தில் கைச்சாத்திடப்படவிருப்பதாக கருதப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்திருந்ததைப் போன்று வடக்கில் 65 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கான ஆர்சிலர் மிட்டல் நிறுவனத்துடனான உடன்பாடு கூட, ஊழல் சூழ்ந்ததாகவே இருக்கிறது. உலகளாவிய அல்லது பிராந்திய பொருளாதாரக் கட்டமைப்பு எல்லாம் உன்னதமானதாக இருப்பதாக கருதப்படுகின்ற ‘பிரெக்சிட்டுக்கு’ முன்னதான கனவுலகில் பிரதமர் விக்கிரமசிங்க வாழ்கிறார். அதுவல்ல யதார்த்த நிலை. சர்வதேச பேரங்கள், உடன்படிக்கைகள் எல்லாவற்றுக்கும் முன்னதாக உறுதியானதும் வலிமையானதுமான தேசிய பொருளாதாரம் ஒன்று முக்கியமானதாகும்.

கலாநிதி லக்சிறி பெர்னாண்டோ எழுதி “Hambantota Fiasco & Implications For Future” என்ற தலைப்பில் ‘கொழும்பு ரெலிகிராப்’ இல் வௌிவந்த கட்டுரையின் தமிழாக்கம் இங்கு தரப்பட்டுள்ளது.

 

தொடர்புபட்ட கட்டுரைகள்:

இலங்கையின் கடன் நிலவரம் மிகவும் மோசமான நிலையில் முழுக்கடன் எவ்வளவு என்பதே தெரியாத நிலையில் அரசாங்கம்

பனாமா ஆவணங்கள் தொடக்கம் சிறுவர் திருமணம் வரை