படம் | Aljazeera

இலங்கையில் தமிழ் மக்கள் தொடர்ந்து ஒடுக்கப்பட்டு வரும் சூழலில் புதிய வருடத்தை தமிழ் மக்கள் நிறைந்த எதிர்பார்ப்புக்களுடன் வரவேற்கத் தயாராகிவிட்டனர். 2009இல் ஆயுதப்போராட்டம் முடக்கப்பட்ட பின் என்பதனை விட 2002, மாசி, 29ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட சமாதான உடன்படிக்கைக்குப் MOU (Memorandum of Understanding) பின் தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைகளைப் பெறவும், மனிதத்துவத்துடன் வாழவும் சர்வதேச உதவிகளை நாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

ஈழத்தமிழர்கள் தமது நீதியைப் பெற்றுக் கொள்வதற்கு, இராஜதந்திர ரீதியில் கிடைக்கப் பெற்றுள்ள மூன்றாம் தரப்பு ஆவணங்கள்:

  1. 1987ஆம் ஆண்டில் உருவான இந்திய – இலங்கை ஒப்பந்தம்.
  2. 2002ஆம் ஆண்டில் நோர்வே அனுசரணையில் உருவான அமைதி உடன்படிக்கையும், தமிழீழ விடுதலைப் புலிகளுனான 5 சுற்றுப் பேச்சு வார்த்தைகளும், இதன்போது உருவாக்கப்பட்ட SLMM (Sri Lanka Monitoring Mission).
  3. ஐ.நா. செயலாளர் நாயகம், இலங்கை ஜனாதிபதியின் 2009ஆம் ஆண்டு கூட்டான பிரகடனம் (மஹிந்த பான் கீ மூன் பிரகடனம்).
  4. ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை (UNSG expert Panel Report) ஐ.நா. செயலாளர் நாயகம் நியமித்த நிபுணர்குழு அறிக்கை – 2013
  5. ஐ.நா. மனித உரிமை அவையின் தொடர் தீர்மானங்களும் 2017ஆம் ஆண்டின் 34ஆவது கூட்டத் தொடரில் எதிர்பார்க்கப்படும் தீர்மானமும்.
  6. 2010இல் Dublin Permanent People’s Tribunal தீர்மானம். Dublin Permanent People’s Tribunal 2010 தீர்மானத்தில் இலங்கை அரசு மீது போர்க்குற்றச்சாட்டுகள், மனிதாபிமானத்துக்கு எதிரான செயல்களுக்கான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
  7. 2013 மார்ச் 27 தமிழக சட்டப் பேரவைத் தீர்மானம். மாண்புமிகு முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் கொண்டு வரப்பட்டது. அதில் இந்தியா, இலங்கையை நட்பு நாடான நிலையை நீக்கி, பொருளதாரத்தடைகளை விதித்து, இலங்கைத் தமிழர்கள் மீதான இன அழிப்பு தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஈழத்தமிழர்களின் அரசியல் இராஜதந்திர நகர்விற்கு மேற்கூறிய 7 சர்வதேச தீர்மானங்கள் மிகவும் ஆணித்தரமான மூலங்களாகும். இதனை எமது இளம் சந்தியினர் முற்றாகக் கற்றறிதல் வேண்டும். அடுத்து ஐ.நா. மனித உரிமை அமர்வின் 34ஆம் கூட்டத்தொடர் எதிர்வரும் பங்குனி மாதம் 2017ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்கள் நாடாளுமன்ற கட்சி அரசியலுக்கு அப்பால், எமக்குத் தேவைப்படும் மனிதத்தைப் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும்.

ஈழத்தமிழர்களுக்கு இன்னமும் தீர்க்கப்படாத மனிதம்

  1. சிறையில் உள்ள தமிழ்க் கைதிகளின் விடுதலை.
  2. தமிழ் குடும்பங்களுக்கு ஏற்பட்ட அழிவுகளுக்கு முறையான இழப்பீடு.
  3. காணாமல் போனவர்களின் விபரங்களை அறிதல்.
  4. காயப்பட்டோர், சித்திரவதைக்கு உட்பட்டோர், உடல் நோய்வாய்ப்பட்டோருக்கான மருத்துவ உதவியும், சமூகப் புனர்வாழ்வும்.
  5. கொல்லப்பட்டவர்களின் நினைவுச்சின்னங்களும், கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுக்கான நிரந்தர உதவிகள்.

சிறை கைப்பப்பட்டுள்ள தமிழ்க்கைதிகளின் முழுவிபரமும் இருட்டடிக்கப்பட்டு உள்ளது. எவ்வித விசாரணையும் இன்றி பல தமிழர்கள் சிறைகளில் 10 வருடங்களுக்கு மேலாகத் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர்.

தமிழ் மனிதத்தை மேம்படுத்துவதற்கான சர்வதேச உடன்பாடுகள்

  1. இலங்கை இந்திய ஒப்பந்தம் (1987)
  2. நோர்வே அனுசரணை அமைதி உடன்படிக்கை (2002)
  3. பான் கீ முன் – மஹிந்த பிரகடனம் (2009)
  4. ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை (2013)
  5. ஐ.நா. மனித உரிமை அவைத் தீர்மானங்கள் (2015)
  6. மக்கள் தீர்ப்பாயம் தீர்ப்பு (2010)
  7. தமிழக சட்டபைத் தீர்மானம் (பங்குனி 27, 2013).

ஈழத்தமிழ் அரசியல் செல்நெறியை முன்னெடுப்பவர்கள் குறிப்பாக இளம் அரசியல் விஞ்ஞானம் கற்போர் தமிழ் மனிதத்தை மேம்படுத்துவதற்கான அடிப்படைகளை அறிதல் வேண்டும்.

பாரிய இன அழிப்பினை நடத்திய அரசு, அதனை உலக ரீதியில் இராஜதந்திரமாக மறைத்தது போக வரலாற்றில் மறைப்பதற்காக தமிழர் தாயகத்தில் பாரிய சிங்களக் குடியேற்றங்களை முன்னெடுக்கின்றது. இதற்காக தமிழ்க் கிராமங்கள் தோறும் புத்தவிகாரைகளை நிறுவுகின்றது. தமிழர் தாயக கடல்வளங்களை காவு கொண்டு உள்ளது. வலிகாமம், வன்னி பெருநிலம் என்பவற்றில் பெருமளவு நிலத்தினை உயர் பாதுகாப்பு வலயமாக தடுத்து வைத்தும் உள்ளது.

எனவே, தற்போதைய அரசினால் மேற்கொள்ளப்படும்,

  1. சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்படல் வேண்டும்.
  2. பௌத்த விகாரைகள் அமைத்தல் நிறுத்தப்படல் வேண்டும்.
  3. இராணுவ ஆக்கிரமிப்பு முற்றாக விலத்தல் வேண்டும்.
  4. கடல் ஆக்கிரமிப்பு முற்றாக விலத்தல் வேண்டும்.
  5. பொதுவிட ஆக்கிரமிப்பு முற்றாக அகற்றப்படல் வேண்டும்.

இறுதியாக இலங்கை அரசு, ஒற்றை ஆட்சிக்குள் அரசியல் தீர்வை வழங்க முனைவது, முழு இலங்கையையும் சிங்களமயமாக்கலுக்கான திட்டமாகவே தமிழர்களால் கருதப்படும். எனவே, சமஸ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வே தமிழ் மக்கள் விரும்பி நிற்பதாகும். அன்றேல் இலங்கையில் மீளவும் போராட்டங்கள் விடுதலையை நோக்கி தொடர வாய்ப்பு உண்டு.

மருத்துவர் சி. யமுனாநந்தா