படம் | TheStar

பாகம் – 1 (நீதியினை அணுகுதலும் முஸ்லிம் பெண்களும்)

###

சில காலங்களுக்கு முன்பு காதிமார்கள் கல்வி கற்றவர்களாகவும் வயதில் மூத்தவர்களாகவும் சமுதாயத்திலே மரியாதையினையும் நன்மதிப்பினையும் பெற்றவர்களாகவும் இருந்தனர். ஆனால், இன்று நிலைமை மாறிவிட்டது. நீதிச்சேவை ஆணைக்குழுவே காதிமாரினை நியமிக்கின்ற போதிலும் தகைமைத் தேவைப்பாடுகள் இல்லாத காரணத்தினால் சில காதிமாரின் நியமனமானது அரசியல் ரீதியானதாக இருக்கின்ற அதேவேளை, அங்கீகாரத்திற்காகவும் சிலர் இவ்வாறான நியமனங்களைக் கோரி வருகின்றனர். தமது வாழ்க்கையினை சட்டத்தரணிகளாகத் தொடங்கி தொழிலாண்மைமிகு சட்டக்கல்வியினை பெற்று அதன்பின்னர் சிரேஷ்ட சட்டத்தரணிகளாக மாறி பின்னாட்களில் நீதிமன்றங்களிலே நீதிபதியாக வருவோரைப் போல் அல்லாது காதிமாருக்கு இதற்குச் சமமான எந்தப் பயிற்சியும் வழங்கப்படுவதில்லை. நியமிக்கப்பட்ட பின்னர்கூட அவர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்படுவதில்லை. நான் சந்தித்த எந்தவொரு காதிமாரும் 2005ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட குடும்ப வன்முறைச் சட்டம் பற்றி அறியாதவர்களாக இருந்தனர். நீதிச்சேவை ஆணைக்குழுவினால் வழங்கப்படுகின்ற 1-2 நாள் பயிற்சியையே காதிமார் பெற்றுக்கொள்வதுடன், இவர்களில் பெரும்பான்மையானோர் இது உரியமுறையில் நடத்தப்படாத காரணத்தினால் இதில் கலந்துகொள்வதும் இல்லை.

காதிமார்களாக சட்டத்தரணிகள் மாத்திரமே நியமிக்கப்படல் வேண்டுமென்கின்ற ஆலோசனைகள் சமுதாயத்தில் இருந்து முன்வைக்கப்படுகின்றன. காதிமார்கள் நீதிபதியின் வகிபாத்திரத்தினை வகிக்கவேண்டுமென பெரிதும் எதிர்பார்க்கப்படாத சூழ்நிலை, பாரம்பரிய முஸ்லிம் சட்டக் கோட்பாடுகளின் காரணத்தினாலேயே சாதாரண நபர்கள் காதிகளாக நியமிக்கப்படும் மரபு ஏற்பட்டிருக்கின்றது. ஆனால், இவர்களின் தேவைப்பாடானது ஒரு மத்தியஸ்தருக்குரிய முறையிலே நடந்து கொண்டு தமக்கு முன்னால் வைக்கப்பட்டிருக்கின்ற பிரச்சினையை முறைசாரா விதத்திலும், நட்பான முறையிலும், அச்சுறுத்தாத முறையிலும் அணுகவேண்டுமென்பதேயாகும். இதைத்தவிர காதிமார்கள் தம்முடைய தீர்ப்புக்களை அமுல்படுத்த அல்லது கண்காணிக்க கட்டமைப்பு ரீதியான அதிகாரமற்றவர்களாக இருக்கின்றனர்.

மேலும், சில மாவட்டங்களில் நீதிவான் நீதிமன்றத்திலே மேன்முறையீடு செய்யும் பெண்களுக்கு உதவுவதற்கு பெரும் தயக்கம் காணப்படுகின்றது (பராமரிப்பினை தொடர்ச்சியாக செலுத்தத் தவறுகின்ற நிகழ்வுகளின்போது). இதன் காரணமாக காதிகளின் முன்னால் தரப்பினரை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு சட்டத்தரணிகள் அனுமதிக்கப்படுவதில்லை. ஒவ்வொரு வழக்கிலும் பிரயோகிக்கத்தக்கதான சட்டம் மற்றும் செயல்விதிகள் தொடர்பாக காதிமார் தாமே தரப்பினரை அறிவுறுத்தி வழிநடத்த வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது. பெண்கள், விவாகரத்துக்காக வழக்கினைத் தாக்கல் செய்யும் சந்தர்ப்பங்களில் இறுதித் தீர்ப்பானது நீண்ட நாட்களுக்கு சிலவேளை, அது பல தசாப்தங்களுக்கு இழுத்தடிக்கப்படுகின்றமையினையும் நாம் அவதானித்திருக்கின்றோம்.

கால தாமதமின்றித் தீர்க்கப்படுகின்ற வழக்குகளைப் பொறுத்தளவில் அவை எல்லாம் வேறொரு பெண்ணைத் திருமணம் முடிப்பதற்காக ஆண்கள் தாக்கல் செய்த விவாகரத்து வழக்குகளாகவே இருக்கின்றன. விவாகரத்து வழக்கானது இறுதித் தீர்மானத்துக்கு உட்படுத்தப்படுவதற்கு முன்னரே தமது இரண்டாவது அல்லது மூன்றாவது மனைவியரை ஆண்கள் திருமணம் செய்த சம்பவங்களும் இருக்கின்றன. பாதிக்கப்பட்ட பலரும் குறிப்பிடுகையில் தமது கணவன்மார்கள் சமுதாயத்தினுள் குற்றச்செயல்கள் செய்பவர்களாக நன்கு அறியப்பட்டவர்களாக இருந்தாளும் அக்கணவன்மாரிடத்திலே தாம் தவறினைக் காணும்போது பாசா விவாகரத்தினை தம்மால் துரிதமாக பெற்றுக்கொள்ள முடியாதிருப்பதாகவும் குறிப்பிட்டனர். ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தையினைக் கொண்டிருப்பதாக கூறி ஆண்கள் பெண்களுக்கெதிராக விவாகரத்தினைத் தாக்கல் செய்யும்போது ஆறு மாதங்களில் அல்லது அதற்குக் குறைவான காலப்பகுதியில் தலாக் வழங்கப்படுகின்றது.

தற்போது இருக்கின்ற காதிநீதிமன்றக் கட்டமைப்பினால் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். குறிப்பாக, பலவருடங்களாக தமக்கான கொடுப்பனவினை கணவன்மார்கள் செலுத்தத் தவறுகின்ற சந்தர்ப்பங்களில் தமது பராமரிப்பினைக் கோரி வழக்குத்தாக்கல் செய்யும் போது அவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். காதிகளும், காதிச் சபைகளும், நீதவான் நீதிமன்றங்களும் இந்த ஆண்களிடமிருந்து பராமரிப்பினைப் பெற்றுக்கொடுப்பதில் செயற்திறனற்றவையாக இருக்கின்றன. தவணை தவறுகின்ற கணவன்மாரினைக் கைதுசெய்யுமாறு பல கட்டளைகளை நீதவான்கள் பிறப்பித்த போதும் இந்த வழக்குகளை பொலிஸார் புறக்கணிப்பதாகவே தென்படுகின்றது. இதனால், பல சந்தர்ப்பங்களில் தமது கணவன்மார்கள் எங்கே ஒழிந்திருக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்து பெண்களே அவற்றினை பொலிஸாருக்கு அறிவிக்க வேண்டிய சூழ்நிலைகளே அதிகமாகக் காணப்படுகின்றது. காதிச் சபையினைச் சந்திப்பதற்கு பெண்கள் தனியாக கொழும்புக்கு பயணம் செய்ய வேண்டியிருக்கின்றது. இதனால், பெண்களுக்கு இச்சபையினை அணுகுவதில் அதிக சிரமங்கள் இருப்பதை சில சமுதாய உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர் (இது செலவுமிக்கதும் கூட). இவர்களைப் பொறுத்தளவில் ஆண்களினால் மாத்திரமே காதி சபையினை இலகுவாக அணுகக்கூடியதாக இருக்கின்றது.

மேலும், அவர்கள் இறுதித் தீர்வு இல்லாமல் வழக்கினை இழுத்தடிப்பதற்கு அல்லது பராமரிப்புக் கொடுப்பனவினை தாமதிப்பதற்கோ, விவாகரத்தினை வழங்குவதற்கோ இந்த மேன்முறையீட்டு நீதி முறைமையினைப் பயன்படுத்துகின்றனர். காதிகளினால் பெண்களுக்கு எதிராக தவறான அல்லது நியாயமற்ற தீர்வு வழங்கப்படும்போது அவர்களின் தரப்பில் வகைப்பொறுப்பு காணப்படுவதில்லை.

“ஒவ்வொரு மாவட்டத்திலும் நடமாடும் காதிச் சபைச் சேவை நடாத்தப்படவேண்டும். இதனை மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை நடாத்த முடியும். இதில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் அல்லது சட்டத்தரணிகளை மாவட்டங்களில் ஆரம்ப விசாரணை நடத்துவதற்கு தமது பிரதிநிதிகளாக காதிச் சபை நியமிக்கலாம்” என சமுதாயத் தலைவர் ஒருவர் ஆலோசனைகள் முன்வைத்தார்.

மேலும், “காதி நீதிமன்றத்திலும் காதிச் சபைகளிலும் காதிகளாகவும் ஜூரிகளாகவும் பெண்கள் நியமிக்கப்பட வேண்டும்” என உறுதியான கோரிக்கை பல பாதிக்கப்பட்டவர்களினாலும் செயற்படுனர்களினாலும் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. இது, நியாயமான விசாரணைக்கும் பொறுப்பான தீர்ப்புக்கும் ஒரு தளத்தினைத் திறந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்கள் நீங்கலாகத் தற்போது சகல மாவட்டங்களும் குறைந்தளவு ஒரு காதியினையாவது கொண்டிருக்கின்றது. புத்தளத்திலே இடம்பெயர்ந்த முஸ்லிம்களுக்கு என ஒரு காதி இருந்து வருகின்றார். மன்னார் தீவிலே இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை காதி நீதிமன்ற விசாரணை நடைபெற்று வருவதுடன், யாழ்ப்பாணத்திலே மாதத்திற்கு ஒரு தடவை விசாரணை நடைபெற்று வருகின்றது. வடக்கிற்குத் திரும்பி வருகின்ற சில பெண்கள் புத்தளத்திற்கோ அல்லது வவுனியாவிற்கோ வழக்கு விசாரணைகளுக்காக வரவேண்டியிருக்கின்றது. இது நீதி முறைமையினை அணுகமுடியாததாக ஆக்கியிருப்பதுடன், மீள்குடியேற்றத்திற்காக திரும்பிச் செல்கின்ற பெண்களுக்கு செலவுமிக்கதாகவும் ஆக்கியிருக்கின்றது. மீள்குடியேற்றப் பிரதேசத்திலே தமது வாழ்க்கையினை பூச்சியத்தில் இருந்து ஆரம்பிப்பதற்கு இந்த மக்கள் அல்லல்படுகின்ற போது இது அவர்களுக்கு பெரும் சுமையாக இருக்கின்றது என்பதை அவதானிக்க முடிந்தது.

முஸ்லிம் திருமண, விவாகரத்து சட்ட முறைமையினால் முஸ்லிம் பெண்கள் இருமடங்கான அடக்குமுறைக்கு உட்படுவதையே நான் சந்தித்த பெண்களின் ஊடாக தெரியக்கூடியதாக இருக்கிறது. பொதுவாக பெண்களின் சமமான உரிமையினை குடும்பத்தினுள் புறக்கணிக்கின்ற குறைபாட்டினைக் கொண்டுள்ளதாகவே பொதுச்சட்ட முறைமை காணப்படுகின்றது. இக்குறைபாட்டினை மிகவும் தீவிரமானதாக காதி நீதிமன்றம் ஆக்கியிருக்கின்றது. தீர்ப்பினை வழங்குவதற்கான நியாயாதிக்கத்தினைக் கொண்டுள்ள காதிமார்கள் முஸ்லிம் திருமண விவாகரத்து சட்டத்திலோ அல்லது ஷரீயா சட்டத்திலோ, நாட்டின் பொதுச்சட்டத்திலோ அறிவற்றவர்களாக இருந்தபோதிலும் அதனையும் பொருட்படுத்தாது பாரதூரமான பின் விளைவுகளைக் கொண்ட தீர்ப்புக்களை வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். பொதுச்சட்டத்தின் ஆளுகைக்கு கீழ் வருகின்ற முஸ்லிம் அல்லாத பெண் ஒருவர் குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் முஸ்லிம் பெண்ணை விட விரைவாக சிறப்பான நீதியினைப் பெற்றுக்கொள்கின்றார்.

அதேவேளை, முஸ்லிம் பெண்கள் இந்த ஆணாதிக்க சட்டத்திற்கு அடங்கிப்போக வேண்டி இருப்பது மட்டுமல்லாது பாரம்பரியத்தினுள் கட்டுண்டு கிடக்கும் கற்றறிந்திராத ஆணாதிக்கமிக்க ஆண்கள் அவர்களின் நடத்தையினையும் பால்நிலைத் தன்மையினையும் அடிப்படையாகக் கொண்டு வழங்கும் தீர்ப்பினை ஏற்றுக் கொள்ளும் கட்டாய நிலைக்கும் முகம்கொடுக்கின்றனர். முஸ்லிம் திருமண, விவாகரத்துச் சட்டம், ஷரீயா சட்டம், குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம் போன்றவற்றிலே சமுதாயப் பெண்கள் அறிவூட்டப்படல் வேண்டும். மேலும், தவறாகத் தீர்ப்புக்கள் வழங்கப்படும்போது அதற்கு சவால்விடுக்க சட்ட உதவி வழங்கப்பட வேண்டும். சாத்தியமானபோதெல்லாம் கட்டாயப்படுத்தப்பட்டு துன்புற்று வாழ்கின்ற வன்முறை வாழ்க்கைக்கும் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் சூழ்நிலைகளிற்குப் பதிலாக பொதுச் சட்டத்தினை அணுகுவதற்கு சட்ட உதவிகள் வழங்கப்படல் வேண்டுமெனவும் நேர்காணப்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்திக் கூறுனார்கள்.

முற்றும்.

2004-shreensaroor_1474306387ஷிரீன் அப்துல் ஷரூர்