படம் | Colombo Gazette

புதிய அரசியல் கட்சி ஒன்றை உருவாக்குவதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். ஆட்சி அதிகாரத்தை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்பதை விட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பண்டாரநாயக்க என்ற பாராம்பரியத்தை நீக்கி ராஜபக்‌ஷ என்ற பாரம்பரியம் நிலை நித்தப்பட வேண்டும் என்பதுதான் இங்கு முக்கியமானதாக நோக்கப்படுகின்றது.

கட்சியின் புதிய வடிவம்

சுதந்திரக் கட்சியின் வரலாறு என்பது எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கவினால் தோற்றுவிக்கப்பட்டது. குறிப்பாக கொழும்பின் புறநகர் பகுதியான அத்தனகல தேர்தல் தொகுதி அந்தக் கட்சிக்கு முக்கியமானதாகவும், காலம் காலமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பண்டாரநாயக்க குடும்பத்தை மையமாகக் கொண்டுதான் தேர்தல்களில் போட்டியிட்டு வருகின்றது. 2005ஆம் ஆண்டு மாத்திரமே மஹிந்த ராஜபக்‌ஷ பண்டாரநாயக்க குடும்பத்தின் ஆதரவு இன்றி வெற்றிபெற்று ஜனாதிபதியாக பதவியேற்றார்.

அன்றில் இருந்து பண்டாரநாயக்க குடும்பம் அல்லாத நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மாற்றியமைக்க வேண்டும் என அவர் நினைத்திருந்தார். அதற்கு வசதியாக அவர் ஜனாதிபதியாகவும் கட்சித் தலைவராகவும் செயற்பட்டார். ஜனாதிபதியாக பதவியேற்று அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற முதலாவது மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட மஹிந்த ராஜபக்‌ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை புதிய வடிவில் செயற்படுத்த வேண்டிய காலம் உருவாகிவிட்டதாக கூறியிருந்தார். அதற்கு கட்சித் தொண்டர்கள் பிரதேச வேறுபாடுகள் இன்றி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற யோசனைகளையும் அவர் முன்வைத்திருந்தார்.

யுத்தம் இடமளிக்கவில்லை

ஆகவே, 2005ஆம் ஆண்டில் இருந்தே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பண்டாரநாயக்க குடும்பத்தின் செல்வாக்கில் இருந்து மாற்றியமைக்க வேண்டும் என்ற நிலைப்பாடு மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஏற்பட்டிருந்தது. ஆனால், அப்போது புலிகளுடன் இடம்பெற்ற போர் நடவடிக்கைகள் காரணமாகவும் சர்வதேச அழுத்தங்களினாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை புதுப்பிக்கும் அவருடைய திட்டம் அன்று நிறைவேறவில்லை. கட்சியுடன் செலவழிக்கும் நேரம் மிகவும் குறைவாகவே இருந்தது. ஆனாலும், அம்பாந்தோட்டையை மையப்படுத்திய தென்பகுதி சிங்கள மக்களிடம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இருக்க வேண்டும் என்ற வேலைத்திட்டங்கள் மெதுவாக இடம்பெற்று வந்தன.

எனினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பண்டாரநாயக்க குடும்பத்தின் செல்வாக்கில் இருந்து தனிமைப்படுத்தி ராஜபக்‌ஷ குடும்பத்தை பிரதானப்படுத்திய கட்சியாக மாற்றியமைக்கும் திட்டத்திற்கு அப்போது கட்சியின் செயலாளராக பதவிவகித்த தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட மூத்த உறுப்பினர்கள் மனதளவில் விரும்பியிருக்கவில்லை. ஆனாலும், மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியாகவும் கட்சித் தலைவராகவும் இருந்தமையினாலும் அதிகாரம் அவருடைய குடும்பத்தை மையப்படுத்தியிருந்ததாலும் அந்த நிலைப்பாட்டுக்கு எதிராக செயற்பட முடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது.

கவனம் செலுத்த முடியவில்லை

ஆனாலும், மைத்திபால சிறிசேன, உள்ளிட்ட கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தனர். ஆனாலும், யுத்தம் தீவிரமாக இடம்பெற்றுக் கொண்டிருந்தமையினால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பண்டாரநாயக்கா குடும்பத்தின் செல்வாக்கில் இருந்து பிரிக்கும் திட்டத்திற்கும் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலர் அதற்கு ஒத்துழைப்பு வழங்கமாட்டார்கள் என்ற விடத்தை பற்றியும் மஹிந்த ராஜபக்‌ஷவினால் பெரியளவில் கவனம் செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது.

யுத்தம் நிறைவடைந்து 2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான அரசியல் சூழலிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஆட்சியில் இருக்கும்போதே மாற்றியமைக்க வேண்டும் என்ற நோக்கத்தை மஹிந்தவினால் நிறைவேற்ற முடியாமல் போனது. அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, போர்க்குற்றம் தொடர்பான சர்வதேச அழுத்தங்கள், இரண்டாவது, யுத்த வெற்றிக்களிப்பில் மக்கள் தொடர்ச்சியாக தனக்கு ஆதரவு வழங்குவார்கள் என்ற நம்பிக்கையும், மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதியாக பதவியேற்க வேண்டும் என்ற சிந்தனையிலும் செயற்பட்டமை.

மஹிந்தவின் நம்பிக்கையும் வீழ்ச்சியும்

ஆக இந்த இரண்டு காரணங்களின் அடிப்படையிலும் மஹிந்தவினுடைய செயற்பாடு அமைந்திருந்ததினால் கட்சியை மாற்றியமைக்கும் திட்டத்தில் தளர்வு ஏற்பட்டது. யுத்த வெற்றியின் பின்னர் மக்கள் தன்மீது வைத்திருக்கும் நம்பிக்கை என்பது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை முற்று முழுதாக ராஜபக்‌ஷ குடும்பத்தின் செல்வாக்கில் கொண்டு வந்துவிடலாம் என்ற எண்ணப் போக்கு அவரிடம் மேலோங்கியிருந்து. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிதான் எதிர்காலத்தில் தனியொரு தேசிய கட்சி என்று ரூபவாஹினிக் கூட்டுத் தாபனத்துக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் மஹிந்த ராஜபக்‌ஷ அப்போது கூறியிருந்தார்.

ஆக கட்சி தன்னிடம் முழுமையாக வந்துவிடும் எனவும், கட்சியின் மூத்த உறுப்பினர்கள், அடிமட்ட உறுப்பினர்கள் கூட தனது திட்டத்திற்கு ஆதரவாளிப்பார்கள் எனவும் மஹிந்த ராஜபக்‌ஷ நம்பினார். ஆனால், 2010ஆம் ஆண்டு 18ஆவது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டு மூன்றாவது தடவையாகவும் மஹிந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளார் என்ற செய்தி வெளியானது முதல் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுடன் உறவை பலப்படுத்திய விடயம் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு தெரியாமல் போய்விட்டது. அதன் வலியை 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போதுதான் அவர் உணர்ந்துகொண்டார். இதுதான் மஹிந்தவினுடைய வீழ்ச்சிக்குக் காரணமாகியது.

புதிய கட்சி நோக்கமல்ல

ஆனால், 9 வருடங்கள் ஜனாதிபதியாக பதவி வகித்தபோது இருந்த அதிகாரம், அதனுடான செல்வாக்குகள் அனைத்தையும் முடிந்தவரை தற்போது பயன்படுத்தி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பண்டாரநாயக்காவின் செல்வாக்கில் இருந்து அகற்றி ராஜபக்‌ஷ அல்லது குறைந்த பட்சம் அம்பாந்தோட்டையை மையப்படுத்திய தென்பகுதி சிங்கள மக்களிடம் கட்சியை எடுத்துவிட வேண்டும் என்பதுதான் மஹிந்தவின் நோக்கமாகவுள்ளது. அதற்காகவே புதிய அரசியல் கட்சி என்ற பேச்சை மஹிந்த பிரச்சாரப்படுத்தியுள்ளார். ஆனால், புதிய கட்சி அல்ல மஹிந்தவின் நோக்கம். புதிய கட்சி உருவாக்கப்படும் என்ற அச்சத்தை ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவுக்கு கொடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பிளவுபடாத வகையில் தனக்கு கட்சியில் உயர் பதவி கிடைக்க வேண்டும் என்பதுதான் மஹிந்தவின் நிலைப்பாடாகவுள்ளது.

புதிய அரசியல் கட்சியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலர் இணைவர்களோ என்ற அச்சம் மைத்திரிபால சிறிசேனவுக்கு உண்டு. அந்த அச்சத்தைப் பயன்படுத்தியே மஹிந்த புதிய அரசியல் கட்சி என்ற கதையை உலாவ விட்டுள்ளார். இலங்கையின் அரசியல் வரலாற்றில் கட்சி உறுப்பினர்கள் கட்சிக்குரிய விசுவாசத்துடன் செயற்பட்டது கிடையாது. பணம், பதவி, புகழ் என்ற அடிப்படையில் அரசியல்வாதிகளின் மன நிலை இருப்பதால் தன்னுடைய எண்ணத்தை நிறைவேற்ற முடியும் என மஹிந்த நம்புகின்றார். இது மைத்திரிபால சிறிசேனவுக்கும் தெரியும்.

அ. நிக்ஸன்