படம் | Daily News

அரச நிறுவனங்கள் சுயாதீனமாக செயற்பட வேண்டும் என்பதற்காகவே 19ஆவது திருத்தச்சட்டம் கடந்த ஆண்டு அமுல்படுத்தப்பட்டு சுயாதீன ஆணைக்குழுக்களும் உருவாக்கப்பட்டன. இந்த நிலையில், லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை சுயாதீன ஆணைக்குழுக்களின் சுதந்திரமான செயற்பாட்டை கேள்விக்குறியாக்கியுள்ளன.

இராஜதந்திரமான பேச்சு?

லஞ்ச ஊழல் ஆணைக்குழு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, நிதிமோசடி தொடர்பான பொலிஸ் விசாரணைப் பிரிவு ஆகியவை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ குடும்பத்தையும் அவரின் அரசாங்கத்தில் அங்கம் வகித்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகள் சிலரையும் விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், தனது அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட 19ஆவது திருத்தச்சட்டத்தை மீறியும் ராஜபக்‌ஷ குடும்பத்திற்கு ஆதரவான முறையில் ஜனாதிபதி கடும் தொனியில் கருத்து வெளியிட்டதன் நோக்கம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தி புதிய அரசியல் கட்சி ஒன்றை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ உருவாக்குவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டும் நிலையில், அல்லது மஹிந்த ராஜபக்‌ஷவை மையப்படுத்திய கூட்டு எதிர்க்கட்சிக்கு சிங்கள மக்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்து வருகின்றது என்ற கண்ணோட்டத்தில், மஹிந்தசார்பு அணிக்கு ஆதரவு வழங்கும் சிங்கள மக்களை தம்வசப்படுத்தும் இராஜதந்திரமாக ஜனாதிபதி அவ்வாறு கருத்து வெளியிட்டிருக்கலாம் எனவும் கருத இடமுண்டு. அல்லது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தனது ஆலோசனையின்றி தனிவழிப் போக்கில் அதுவும் ஐக்கிய தேசிய கட்சியை மாத்திரம் மையமாகக் கொண்டு செயற்படுகின்றார் என்ற ஒரு காழ்ப்புணர்விலும் ஜனாதிபதி அவ்வாறு கூறியிருக்கலாம்.

தேசிய அரசாங்கத்தின் பலவீனம்

ஆனால், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவர் லஞ்ச ஊழல் ஆணைக்குழு, புலனாய்வுப் பிரிவு, நிதிமோசடி விசாரணைப் பிரிவு ஆகியவற்றை பொது வெளியில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் பகிரங்கமாக விமர்சித்திருக்கின்றார் என்றால் அதனை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான விமர்சனமாகவே பார்க்க வேண்டும். ஏனெனில், நிதிமோசடி விசாரணைப்பிரிவு என்பது ரணில் விக்கிரமசிங்கவினால் உருவாக்கப்பட்டது. லஞ்ச ஊழல் ஆணைக்குழுவை விட நிதிமோசடி விசாரணைப் பிரிவுதான் ஜனாதிபதிக்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆகவே, ஜனாதிபதி அவ்வாறு கூறியிருக்கின்றமை தேசிய அரசாங்கத்தின் பலவீனமான அரசியல் நகர்வுகளையே கோடிட்டு காண்பித்திருக்கின்றது.

குறிப்பாக இரண்டு விடயங்களை நோக்கலாம். ஒன்று, யுத்தம் முடிவடைந்த நிலையில் மஹிந்த ராஜபக்‌ஷ எதிர்கொண்ட சர்வதேச அழுத்தங்களை குறைக்கும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா உள்ளிட்ட மூத்த சிங்கள அரசியல் தலைவர்கள் ஒன்று சேர்ந்துதான் நல்லாட்சி எனப்படும் இந்த தேசிய அரசாங்கத்தை தோற்றுவித்தனர். அதற்கு இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் ஆதரவு வழங்கியன. இந்த நாடுகளின் அழுத்தம் காரணமாகவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் சேர்ந்து செயற்பட்டது. இரண்டாவது, இனப்பிரச்சினை தீர்வு மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டம், அரச நிறுவனங்களை சுயாதீனமாக செயற்பட அனுமதிக்கும் 19ஆவது திருத்தச் சட்டம் ஆகியவற்றை உருவாக்க வேண்டும் என்ற அழுத்தங்கள் ஆலோசனைகள் இந்த நல்லாட்சி அரசாங்கத்துக்கு இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளினால் முன்வைக்கப்பட்டன.

இரு பிரதான கட்சிகளின் இணைவு

மேற்படி நாடுகள் மத்திரமல்ல ஐக்கிய நாடுகள் சபை, ஜெனீவா மனித உரிமைகள் பேரவை ஆகிய சர்வதேச அமைப்புகளும் அவ்வாறான அழுத்தங்களுடன்தான் இந்த நல்லாட்சி அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுத்தன. இன்றுவரை கூட இந்த அரசாங்கத்தை மேற்படி நாடுகள்தான் பாதுகாக்கின்றன. ஏனெனில், மஹிந்த ராஜபக்‌ஷவும் அவரது சகாக்களும் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதில் அந்த நாடுகள் கவனமாகவே இருக்கின்றன. இதனால்தான் இரண்டு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றை ஒன்று சேர்ந்து செயற்பட வைத்தார்கள்.

இந்த நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நல்லாட்சி அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் நோக்கில் கருத்துக் கூறியிருப்பது மேற்படி இரண்டு காரணங்களின் எதிர்கால நோக்கத்துக்கு பாரிய சவாலை ஏற்படுத்தியிருக்கின்றது. மஹிந்த ராஜபக்‌ஷ அணிக்கு ஆதரவு வழங்கும் சிங்கள மக்களின் வாக்குகளை தம்வசப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி அவ்வாறு கூறியிருந்தாலும் அது ராஜபக்‌ஷ அல்லாத ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தனி ஆட்சிக்கு வழி சமைத்துள்ளது என ஐக்கிய தேசிய ஆதரவாளர்கள் கருத இடமுண்டு. அவ்வாறான ஒரு சூழல் தென்படுமானால் அது நல்லாட்சி அரசாங்கத்தின் உடைவுக்கு வழிவகுக்கும். அத்துடன், மேற்படி இரு காரணங்களும் இல்லாமலே போய்விடலாம்.

இனப்பிரச்சினை தீர்வு சாத்தியமற்றது

நல்லாட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டமை தற்காலிகமானது என்றும், இலங்கையின் இறைமைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை நீக்கி பின்னர் மீண்டும் சிங்களமயப்பட்ட அரசியலுக்கு வழிசமைக்கும் எனவும் அன்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. ஆனால், அந்த விமர்சனங்களை மேற்படி சர்வதேச நாடுகளும், இராஜதந்திரிகளும் செவிமடுக்க விரும்பவில்லை. ஏனெனில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சிக்கு ஆதரவு கொடுத்தது.

அதேவேளை, புலிகளை போரில் வெற்றிகொண்டவர் என்ற அன்பும் விருப்பமும் இருந்தாலும், சர்வதேச போர்க்குற்ற விசாரணை மற்றும் சர்வதேச அழுத்தங்களை தவிர்ப்பதற்காக மஹிந்த ராஜபக்‌ஷவை பதவியில் இருந்து இறக்க வேண்டும் என்ற நோக்கம் சிங்கள மக்கள் மத்தியில் அன்று பலமாக காணப்பட்டது. தமிழர்களுக்கு மஹிந்த ராஜபக்‌ஷவில் கோபம் இருந்தது. இதன் காரணமாகவே 2015இல் நடைபெற்ற தேர்தலில் மஹிந்த தோல்வியடைந்தார். தற்போது போர்க்குற்ற விசாரணை, சர்வதேச விசாரணை என்ற அச்சங்கள் அனைத்தும் நீங்கிவிட்டன. ராஜபக்‌ஷ ஆட்சிக்காலத்தில் சர்வதேச நாடுகளினால் விதிக்கப்பட்டிருந்த சில வரிச் சலுகைத் தடைகளும் நீக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், மீண்டும் சிங்களமயப்பட்ட அரசியல் நிலைக்குள் செல்வதற்கான ஒரு சூழல் எற்பட்டுள்ளது என்பதையே ஜனாதிபதியின் ரணில் விக்கிரமசிங்வுக்கு எதிரான கருத்து காண்பிக்கின்றது.

ராஜபக்‌ஷவை விட கடுமையான இனவாதம்

ஆகவே, கோட்டபாய ராஜபக்‌ஷவை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் லஞ்ச ஊழல் ஆணைக்கு ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்தார் என்பதை விட, அந்த எச்சரிக்கை மூலமாக அடுத்து வரவுள்ள தேர்தல்களுக்கு முன்பாக ராஜபக்‌ஷ அல்லாத ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலமடையச் செய்வதுதான் நோக்கம் என்றும் கூறலாம். புலிகளை வெற்றிகொண்டது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிதான் என்ற கருத்துக்கள் கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் ஏற்கனவே பேசப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அவர்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பை வெளிக்காட்டுவதன் ஊடாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீள புனரமைக்க முடியும் என்று ஜனாதிபதி சிறிசேன நம்பக்கூடும்.

இதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவும் ஆதரவு கொடுக்கலாம். ஏனெனில், சர்வதேச அழுத்தங்கள் நல்லாட்சி அரசாங்கத்தினால் குறைக்கப்பட்டு இலங்கையின் இறைமை பிளவுபடும் என்ற அச்சமும் நீங்கியுள்ளது. எனவே, ராஜபக்‌ஷவை விஞ்சிய இனவாத அரசியல் தலைதூக்கலாம். இந்த நிலையில், சுயாதீன ஆணைக்குழுக்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஆகியவற்றின் எதிர்காலம் எவ்வாறு அமையும்? நல்லாட்சி அரசாங்கத்தில் கூட இனப்பிரச்சினை தீர்வு பற்றிய பேச்சுக்கள் இடம்பெறவில்லை. ஆகவே, தேசிய அரசாங்கம் பிளவுபட்டால் இனப்பிரச்சினை தீர்வு எவ்வாறு சாத்தியமாகும்? எனவே, யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர உதவிய சர்வதேச நாடுகள் தங்கள் மனச்சாட்சியை தட்டிப்பார்க்க வேண்டும்? இதுதான் இலங்கையின் 60 ஆண்டுகால அரசியல்.

அ. நிக்‌ஸன்