படம் | HikeNow

1,000 பெற்றுத் தருவதாக உறுதியளித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தலவாக்கலையில் வைத்து தேர்தல் வாக்குறுதியளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 1,000 ரூபாவுக்கு ஆதரவு தெரிவித்து சத்தியாக்கிரகம் இருந்த தமிழ் முற்போக்குக் கூட்டணியினர் தற்போது தோட்டத் தொழிலாளர்களுக்கான 730 ரூபா சம்பள உயர்வுக்கு எவ்வாறு இணங்க முடியும் என்று கேள்வி எழுப்பியிருக்கும் மலையக சமூக நடவடிக்கைகள் குழு, புதிய ஒப்பந்தத்தின்படி வாரத்திற்கு 3 நாட்கள் வேலை வழங்க முன்வந்திருப்பது 2003ஆம் ஆண்டு கைச்சாத்திட்ட பிரதான கூட்டு ஒப்பந்தத்தின்படி ஒரு வருடத்திற்கு 300 நாட்கள் வேலை வழங்கவேண்டும் என்ற ஏற்பாட்டை மீறுவதாகவும் ஏற்கனவே பெற்ற சம்பளத்தை குறைப்பதாகவும் இருப்பதாக கவலை தெரிவிக்கிறது.

அதேவேளை, 2003ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட பிரதான கூட்டு ஒப்பந்தத்தில் உள்ளதன் படி ஒப்பந்தம் காலாவதியான தினத்திலிருந்து புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் வரையிலான நிலுவை சம்பளம் வழங்கப்படவேண்டும் என்றும் மலையக சமூக நடவடிக்கைகள் குழு வலியுறுத்துகிறது.

தற்போது இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை கைச்சாத்திடப்படும் சம்பள அதிகரிப்பிற்கான ஒப்பந்தத்தை மூன்று வருடங்களுக்கு ஒருமுறை என புதுப்பிக்கப்பட வேண்டுமென பெருந்தோட்டக் கம்பனிகள் விதிக்கும் நிபந்தனை மிகவும் அநீதியானது என்பதனால் இதனையும் எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் நடவடிக்கைகள் குழு கூறுகிறது.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளவு உயர்வு தொடர்பாக கைச்சாத்திடப்படவிருக்கும் கூட்டு ஒப்பந்தம் குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையிலே மேற்கண்டவாறு மலையக சமூக நடவடிக்கைகள் குழு தெரிவித்திருக்கிறது.

அறிக்கையை முழுமையாக கீழே வாசிக்கலாம்,

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அநீதி இழைக்கும் பெருந்தோட்டத் தொழிற்துறையை நாசத்திற்கு இட்டுச் செல்லும், தொழிற் சட்டங்களுக்கு முரணாக மேற்கொள்ளப்படவுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பற்றிய கூட்டு ஒப்பத்தை எதிர்க்கின்றோம்.

கடந்த வருடம் (2015) மார்ச் மாதம் புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டிய சம்பள உயர்வு பற்றிய கூட்டு ஒப்பந்தமானது பெருந்தோட்ட கம்பனிகளுக்கும், கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றபோதும் இன்னும் புதுப்பிக்கப்படாமல் இருக்கிறது.

கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களின் படி எதிர்வரும் 14-10-2016 அன்று சம்பள உயர்வு பற்றிய கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக அறியமுடிகிறது. அதன்படி பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளமானது 730 ரூபா ஆக உயர்த்தப்படுமெனவும், அத்துடன் அந்த சம்பளத்திற்கு வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படுமெனவும், உயர்த்தப்படும் சம்பளத்திற்கு ஏற்ப கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கொடுக்கப்பட வேண்டிய பாக்கி சம்பளம் வழங்கப்படமாட்டாதெனவும், இனிவரும் காலங்களில் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறையன்றி மூன்று வருடங்களுக்கு ஒருமுறை சம்பள அதிகரிப்பிற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் நிபந்தனைகள் சுமத்தப்பட்ட இருப்பதாக தெரிகிறது.

நாள் சம்பளமாக 1,000 ரூபா வேண்டும்

நாள் சம்பளமாக 1,000 ரூபா வேண்டுமென கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் சங்கங்களில் ஒன்றான இ.தொ.கா. முன்வைத்திருந்தாலும், கைச்சாத்திட்டு வரும் ஏனைய தொழிற்சங்கங்களான இ.தே.தோ.தொ. சங்கமும், பெருந்தோட்ட கூட்டு தொழிற்சங்க கமிட்டு என்பனவும் ஏற்றுக் கொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. அரசாங்கமும் ஏற்றுக் கொண்டிருந்தது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலவாக்கலையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும் போது அரசாங்கம் பதவிக்கு வந்ததும் 1,000 ரூபா சம்பளமாக பொற்றுத்தரப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். தமிழ் முற்போக்குக் கூட்டணியும் 1,000 ரூபா தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று தலவாக்கலையில் சத்தியாகிரகம் மேற்கொண்டிருந்தது.

தொடர்ந்து நடந்து வந்த போச்சுவார்தைகளுக்கு மத்தியில் கடந்த வருட இறுதியில் 830 ரூபா நாட் சம்பளமாக வழங்க கம்பனிகள் உடன்பட்டதாக தொழில் அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்திருந்தார்.

தற்போது அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்கள் 730 ரூபா ஏற்றுக்கொள்ள வேண்டுமென தொழில் அமைச்சர் ஜோன் செனவிரத்ன, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க ஆகியோர் ஊடாக வற்புறுத்தி வருகிறது.

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்களும் 730 ரூபா ஏற்றுக் கொண்டுள்ளதாகவே தெரிகிறது. தமிழ் முற்போக்கு கூட்டணி 730 ரூபா அறிவிக்கப்பட்டப் பின்னர் தான் முன்னெடுக்க இருந்ததாக கூறிய போராட்டங்களை கைவிட்டுள்ளது.

பெருந்தோட்டக் கம்பனிகள் தொடர்ந்து கூறிவரும் உண்மையில்லாத கதையான தோட்டங்கள் நடத்தில் இயங்குவதாக கூறிக் கொண்டு மிகவும் தயக்கத்துடன் 730 ரூபாவுக்கு இணங்குவதாகக் காட்டிக் கொள்கிறது.

1,000 ரூபா என்ற கோரிக்கை தற்போது தொழிலாளர்களின் கோரிக்கையாகியுள்ளதுடன், அதற்காக கடந்த இரண்டு வாரங்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. தற்போதைய வாழ்கைச் செலவு அதிகரிப்பிற்கு 1,000 ரூபா என்பதே போதாது. அவ்வாறிருக்கும் போது 730 ரூபா இற்கு இணங்க முடியாது.

கம்பனிகள் இலாப நட்டக்கணக்கு கால நிலை போன்ற கதைகளின் அடிப்படையில் சம்பளம் தீர்மானிக்கப்பட முடியாது. வேலைக்கு ஏற்றகூலி என்ற அடிப்படையிலேயெ சம்பளம் தீர்மானிக்கப்பட வேண்டும்.

எனவே, 1,000 ரூபா என்பது நியாயமான கோரிக்கை என்பதால், அதனை தோட்டக் கம்பனிகள் வழங்க வேண்டும். அதனை பெற்றுக் கொடுக்க தொழிற்சங்கள் நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும்.

வாரத்திற்கு 03 நாட்கள் மாத்திரம் வேலை

தற்போதைய 620 ரூபா சம்பளத்திற்கு 5 அல்லது 6 நாட்கள் வேலை செய்தே தொழிலாளர்கள் வாழ்க்கை ஓட்ட முடியாதிருக்கின்றனர்.

730 ரூபா சம்பளமென தீர்மானித்துவிட்டு வாரத்திற்கு 3 நாட்கள் வேலை வழங்குவதென்பது 2003 ஆண்டு கைச்சாத்திடப்பட்டுள்ள பிரதான கூட்டு ஒப்பந்த்தின்படி ஒரு வருடத்திற்கு 300 நாட்கள் வேலை வழங்க வேண்டும் என்ற ஏற்பாட்டை மீறவதாகவும், ஏற்கனவே பெற்ற சம்பளத்தை குறைப்பதாகவும் இருக்கும்.

ஏற்கனவே, அனுபவிக்கும் உரிமையை பறிப்பதாகவும், தொழிற் சட்டங்களில் இருக்கும் உரிமைளை மீறுவதாகவும் கூட்டு ஒப்பந்த ஏற்பாடுகள் இருக்க முடியாது.

எனவே, கைச்சாத்திடப்படவுள்ள ஒப்பந்தத்தில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ, ஏற்கனவே எற்றுக்கொண்டுள்ள வேலை நாட்களை குறைப்பதாகவோ அல்லது சம்பளத்தை குறைப்பதாகவோ இருக்கும் எந்த ஏற்பாடும் சேர்த்துக் கொள்ளப்படலாகாது.

பாக்கி சம்பளம்

பழைய சம்பள ஒப்பந்தத்தின்படி சம்பளமாக 620 ரூபாவுக்கும் கூட்டப்பட்டுள்ள சம்பளத்திற்கும் இடையில் அதிகரிக்கப்பட்ட சம்பளம் பழைய ஒப்பந்தம் காலாவதியான பின்பு ஏப்ரல் 2013 இலிருந்து வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்கப்பட வேண்டுமென 2003ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட பிரதான கூட்டு ஒப்பந்ததில் ஏற்பாடு இருக்கின்றது. அதுவே கூட்டு ஒப்பந்தங்களில் பின்பற்றப்பட்டு வரும் வழமையாகும்.

அவற்றுக்கு மாறாக பாக்கி சம்பளம் வழங்க முடியாதென புதிய ஏற்பாடுகள் எதுவும் செய்ய முடியாது.

மூன்று வருடங்களுக்கு ஒருமுறை வேதன ஒப்பந்தம் புதுப்பித்தல்

தற்போது இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை சம்பள அதிகரிப்பிற்கான ஒப்பந்தம் புதுப்பிக்கப்பிக்கப்பட வேண்டும் என்ற ஏற்பாடு இருக்கிறது. அப்படி இருக்கும்போதே கடந்த 18 மாதங்கள் இழுத்தடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இனிமேல் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை சம்பள அதிகரிப்பிற்கான ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட வேண்டுமென பெருந்தோட்டக் கம்பனிகள் விதிக்கும் நிபந்தனை மிகவும் அநீதியானது என்பதனால் இதனையும் எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

எனவே, உத்தேச சம்பள அதிகரிப்பு ஒப்பந்தத்தில் மேற்படி நாம் நிராகரித்த விடயங்கள் சேர்க்கப்பட கூடாதென்றும், 730 நாள் சம்பளத்தை ஏற்றுக் கொள்ள முடியாதென்றும் கூறிக்கொள்ள விரும்புகிறோம்.

இது எமது மலையக சமூக நடவடிக்கை குழுவில் அங்கம் வகிக்கும் அமைப்புகள் மட்டுமன்றி, இங்கு எமக்கு ஒத்துழைப்பு வழங்க வந்திருக்கும் அமைப்புகள், தனிநபர்களும் ஏற்று அங்கீகரிக்கப்படுகிறது.

எமது இந்தக் கருத்துக்களை மீறி கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுமாயின் அதற்கு எதிராக நாம் அனைவரும் ஐக்கியப்பட்டட கூட்டு நடவடிக்கைகளில் இறங்கவுள்ளோம் என்பதையும் தெரிவிக்கின்றோம்.