படம் | Tasman Council

அரசாங்கம், அரசாங்க அதிகாரிகள் மற்றும் கூட்டுத்தாபனங்கள், திணைக்களங்கள் போன்றவை எவ்வாறு செயற்படுகின்றன என்பதை சாதாரண மக்களும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதே தகவல் அறியும் உரிமைச் சட்டம். இது இலங்கையில் மாத்திரமல்ல 112 நாடுகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இலங்கையில் இந்த ஆண்டுதான் இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

நல்லாட்சியை நிரூபிக்க வேண்டிய தருணம்

அதுவும் ஜெனீவா மனித உரிமை பேரவையில் ஏற்பட்ட அழுத்தங்கள் மற்றும் நல்லாட்சி என்பதை நிரூபித்தாக வேண்டிய தேவை போன்றவற்றினால்தான் இந்தச் சட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது எனலாம். மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சி முறையில் இருந்து நல்லாட்சி அரசாங்கம் வேறுபட்டது என்பதை வெளிப்படுத்த வேண்டிய தேவையும் இருந்திருக்கலாம். எவ்வாறாயினும், இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டமை பாராட்டுக்குரியது. ஆனால், இரண்டு பிரதான கேள்விகள் உள்ளன. ஒன்று, இந்தச் சட்டம் நேர்மையான முறையில் எந்தளவு தூரம் நடைமுறைப்படுத்தப்படும் என்பது. இரண்டாவது, ஜனநாயக கட்டமைப்பை ஏற்படுத்தக் கூடிய 17ஆவது திருத்தச்சட்டத்திற்கு நேர்ந்த கதி இந்தச் சட்டத்திற்கும் ஏற்பட்டு விடுமா என்பது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது பொதுமக்களுக்கானது. அது தனியே ஊடகத்துறைக்கு மாத்திரம் உரித்தானது அல்ல. ஆனால், அரசாங்கம் இந்தச் சட்டத்தை ஊடகத்துறையின் மறுசீரமைப்பு என்றுதான் பிரச்சாரம் செய்கின்றது. இந்தச் சட்டத்தை ஊடகவியலாளர்கள் தமது செய்தி சேகரிப்புக்கான சுதந்திரமான கருவியாகப் பயன்படுத்த முடியும். ஆனால், ஊடகவியலாளர்களை விட பொது மக்களுக்குத்தான் இந்தச் சட்டம் முற்று முழுதாகப் பயனுடையது. எனவே, அரசாங்கம் இந்த உண்மையை பொதுமக்களுக்கு நேர்மையான வழியில் தெரியப்படுத்துமா என்பது பிரதான கேள்வியாகும். அதேவேளை, பொதுமக்களில் எத்தனைபேருக்கு இந்தச் சட்டம் மூலம் குறித்த விளக்கங்கள் உண்டு என்பது மற்றுமொரு கேள்வியாகும்.

மக்களிடம் அரசியல் தெளிவுகூட இல்லை

தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பாக ஐரோப்பிய நாடுகளில் பொதுமக்கள் பலருக்கும் தெளிவுபடுத்தப்பட்டிருக்கும். பாடத்திட்டங்களில் கூட சட்டங்கள் பற்றிய விளக்கங்கள் உண்டு. பொதுவாகவே ஐரோப்பிய நாடுகளில் சட்டங்கள் பற்றிய குறைந்தபட்ச விளக்கம் பொதுமக்களிடம் உண்டு. அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், பொதுமக்களை தவறான வழியில் கொண்டு செல்ல முடியாது. ஆனால், இலங்கையில் சட்டம் பற்றிய விளக்கம் மாத்திரமல்ல அரசியல் ரீதியான தெளிவுகூட பொதுமக்களிடம் இல்லையென்றே கூறலாம். ஆகவே, இவ்வாறான ஒரு சூழலில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் எவ்வளவு தூரம் வெற்றியளிக்கும் என்ற கேள்விகள் எழுவது இயல்பானது.

அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தச் சட்டத்தின் உள்ளடக்கம் கூட இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை. நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டம் குறித்து இடம்பெற்ற விவாதத்தின்போது அமைச்சர்கள், உறுப்பினர்கள் ஆற்றிய உரைகளின் மூலமாக சில விடயங்களை நாளேடுகள் மூலமாக அறிந்துகொள்ள முடிந்தது. குறிப்பாக தேசிய பாதுகாப்பு என்ற போர்வைக்குள் இராணுவம், பொலிஸ் மற்றும் பிரதான அமைச்சுக்கள் சிலவற்றின் விபரங்களை ஊடகவியலாளர்கள் உட்பட யாரும் பெறமுடியாது. அத்துடன், காணாமல்போனோர், கடத்தப்பட்டவர்கள் பற்றிய விபரங்களை உறவினர்கள், நண்பர்கள் பொலிஸ் நிலையங்களில் அல்லது இராணுவ முகாம்களில் சுநத்திரமாக பெறக்கூடிய ஏற்பாடுகளும் இந்தச் சட்டத்தில் இருப்பதாகத் தெரியவில்லை.

கைதிகள் பற்றிய தகவல்கள்

சமூகவிரோத குற்றச் செயல்களில் ஈடுபட்டு பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் சித்திரவதைக்கு உள்ளாகுவது, காயப்படுவது, உயிரிழப்பது போன்ற தகவல்களை உறவினர்கள் அல்லது நண்பர்கள் பெறமுடியுமா என்பது பற்றியும் சரியாக குறிப்பிடப்படவில்லை. இந்த நிலையில், இந்தச் சட்டமூலத்தின் ஊடாக சிறைச்சாலைகளிலும் முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமை பற்றி அறிவது எங்கனம் சாத்தியமாகும்? இலங்கையை பொறுத்தவரை பொதுமக்களுக்கு இரண்டு விடயங்களில் மாத்திரமே தகவல் அறியும் உரிமைச் சட்டம் அவசியமாகின்றது. ஒன்று, பொலிஸ் நிலையங்களில், சிறைச்சாலைகளில், இராணுவ முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டும், கைதிகளின் பாதுகாப்பு பற்றியும், அவர்களுக்கு ஏற்படுகின்ற சித்திரவதைகள் குறித்தும் அறிந்து கொள்வதற்கு. இரண்டாவது, அமைச்சர்கள், அரசியல்வாதிகள், அரச அதிகாரிகளின் ஊழல்மோசடிகளை பகிரங்கப்படுத்துவதற்கு.

ஆனால், மேற்படி இந்த இரண்டு விடயங்கள் பற்றியும் பொதுமகன் ஒருவர் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி சுதந்திரமாக தகவல்களை பெறமுடியுமா? தனியார் நிறுவனங்களில் குறிப்பாக தனியார் வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புகள், வைத்தியர்கள் மேற்கொண்ட சிகிச்சைகளில் ஏற்பட்ட தவறுகள் தொடர்பாக இந்தச் சட்டமூலத்தினால் இலகுவாக அறிந்து சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. ஆனால், சாதாரண பொதுமக்களுக்கு அவசியமான மேற்படி இரண்டு விடயங்கள் பற்றிய தகவல்களை இந்தச் சட்டமூலத்தினால் இலகுவாக பெறமுடியுமா என்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.

யாரையும் காப்பாற்ற முடியாது

தேசிய பாதுகாப்பு என்ற விடயம் ஐரோப்பிய நாடுகளில் கூட முக்கியமானதாகவே பார்க்கப்படுகின்றது. ஒரு அரசின் இறைமைக்கு குந்தகம் ஏற்படக்கூடிய விடயங்களை வெளிப்படுத்த முடியாது என்பது ஏற்புடையதுதான். ஆனால், தேசிய பாதுகாப்பு என்பதற்குள் இராணுவம், பொலிஸ், பிரதான அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் பாதுகாக்கப்டுவதும் அவர்களின் தனிப்பட்ட தவறுகள் மறைக்கப்படுவதையும் ஏற்க முடியாது. அத்துடன், ஒரு குறிப்பிட்ட இனத்தை மாத்திரம் இலக்குவைத்து தேசிய பாதுகாப்பு என்ற கவசத்தை பயன்படுத்துவதையும் அனுமதிக்க முடியாது. ஆகவே, இந்தச் சட்டமூலத்தில் தேசிய பாதுகாப்பு என்பதற்குள் அடங்கப்பட்டுள்ள விடயங்கள் வெளிப்படைத்தன்மையாக அமைய வேண்டும்.

மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தில் ஊழல் மோசடியில் ஈடுபட்ட அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் இந்த சட்டமூலம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னரே விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றார்கள் என்பது உண்மை. ஆனால், அந்த விசாரணைகள் அனைத்தும் பாதிக்கப்பட்ட தமிழச் சமூகம் சார்ந்து முன்னெடுக்கப்படும் விசாரணை அல்ல. அதனை இலங்கையின் இறைமைக்கு சர்வதேச நாடுகளினால் எழக்கூடிய பாதிப்புக்களை தவிர்க்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் என்று கூறலம்.

17ஆவது திருத்தச்சட்டம்

2001ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட 17ஆவது திருத்தச்சட்டம் இனப்பிரச்சினை தீர்வுக்கானது அல்ல. ஆனால், அரச நிறுவனங்களை சுயாதீனமாக செயற்பட அந்தச் சட்டம் அனுமதித்தது. எனினும், அந்தச் சட்டம் ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக செயற்படவில்லை. மாறாக, அந்தச் சட்டமூலம் 2010இல் நீக்கப்பட்டது. எனினும், மைத்திரி அரசாங்கம் அந்தச் சட்டமூலத்தில் இருந்த விடயங்களை உள்ளடக்கி 19ஆவது திருத்தச்சட்டத்தை 2015இல் உருவாக்கியது. ஆனாலும், அரச நிறுவனங்கள் இதுவரை சுயாதீனமாக இயங்கக்கூடிய சூழல் உருவாகவில்லை. இதனை தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கடந்த ஆண்டு சுட்டிக்காட்டியிருந்தார்.

ஆகவே, 17ஆவது திருத்தச்சட்டத்திற்கு ஏற்பட்ட நிலைமை தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கும் வரக்கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளன. ஏனெனில், தகவல்களைப் பெறுவதற்கு சாதாரண பொதுமக்களுக்கு சட்ட உரிமை வழங்கப்படுவதை அரசியல்வாதிகள் விரும்பமாட்டார்கள் என்பது கண்கூடு. அரச நிறுவனங்கள், திணைக்களங்களில் பாதிக்கப்படும் மக்கள் ஒம்புட்ஸ்மன் எனப்படும் குறைகேள் அதிகாரியிடம் நேரடியாக முறையிட்டு உதவிகளை பெறமுடியும். 1994ஆம் ஆண்டு இந்தச் சட்டம் திருத்தம் செய்யப்பட்டது. ஆனால், இந்தச் சட்டம் தொடர்பான அறிவு பொதுமக்களிடம் இருக்கின்றதா? ஒம்புட்ஸ்மன் அலுவலகம் எங்கே அமைந்துள்ளது என யாருக்குமே தெரியாது. அது தொடர்பான விழிப்புணர்வை அரசாங்கம் செய்வதும் இல்லை. இந்த நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டம் எவ்வளவு தூரம் சாத்தியமாகும்?

அ.நிக்‌ஸன்