படம் | Anthony

IMAG3724

கடத்தப்பட்டு காணாமல்போயுள்ள தனது கணவரை மீட்டுத்தருமாறு கோரி ஜனாதிபதி செயலகத்தின் முன் மூன்று பிள்ளைகளின் தாயான மயூரி நடத்திய சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று காலை முடிவுக்கு வந்தது. கணவர் காணாமல்போனமை குறித்து ஜனாதிபதியைச் சந்தித்து கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பமொன்றைத் தருமாறு கோரி அவர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போதும் இறுதி வரை ஜனாதிபதி செவிசாய்க்கவில்லை.

அநுராதபுரம் புதிய பஸ் நிறுத்தும் இடத்தில் பழக்கடை ஒன்றை நடத்தி வந்த மயூரியின் கணவரான மதுஷ்க ஹரிஸ் த சில்வா 2013ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி கடத்திச் செல்லப்படுகிறார். நண்பர்கள் இருவருடன் முச்சக்கர வண்டியில் வந்துகொண்டிருந்தபோது வெள்ளை வானில் வந்த இனந்தெரியாதோரால் மூவரும் கடத்தப்படுகின்றனர். நண்பர்கள் இருவரும் விடுதலை செய்யப்பட அன்றிலிருந்து இன்று வரை மதுஷ்கவைக் காணவில்லை.

2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி இலங்கையில் ஏற்பட்ட மாற்றத்தின் பின்னர் மயூரிக்கும் அவரோடு இணைந்து போராடியவர்களுக்கும் ஒரு நம்பிக்கை பிறந்தது. அந்த எதிர்பார்ப்புடன் 2015 மார்ச் மாதம் தனது பிள்ளைகளுடன் நேரடியாக ஜனாதிபதிக்கு தனது கணவர் குறித்த விடயத்தை தெரிவிக்க ஜனாதிபதி செயலகத்தின் முன்னால் கணவரின் படத்துடன் அமர்ந்திருந்தார். ஜனாதிபதி செயலக அதிகாரிகள் மயூரியைச் சந்தித்து மனுவைப் பெற்றுக் கொண்டதுடன், ஜனாதிபதிக்கு இது குறித்து அறிவிப்பதாகக் கூறிச் சென்றனர். அதன் பிறகு ஜனாதிபதி காரியாலயத்திலிருந்து கடிதங்கள் வந்தபோதிலும் கணவரைத் தேடிக் கண்டுபிடிப்பது குறித்து எதுவித உறுதிமொழியும் அதில் இருக்கவில்லை என்று மயூரி கூறுகிறார்.

இந்த நிலையில், கணவர் கடத்தப்பட்டு 1010 நாட்கள் கடந்த நிலையில் ஜூன் மாதம் ஜனாதிபதி செயலகத்தின் முன்னால் நீதிகோரி மயூரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். அன்றும் ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரிகள், “இன்னும் ஒருவார காலப்பகுதியில் அறியத்தருகிறோம்” என்று கூறியிருந்தனர்.

இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில் இன்னும் ஜனாதிபதியிடமிருந்து பதில் கிடைக்கவில்லை.

கணவர் மதுஷ்க கடத்தப்பட்டு இன்றோடு 3 வருடங்கள் ஆகின்ற நிலையில் நேற்றிலிருந்து இன்று வரை, 24 மணித்தியாலம் தனது இரண்டு பிள்ளைகளுடன் ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் சத்தியாகிரகப் போராட்டத்தில் மயூரி ஈடுபட்டிருந்தார். அவருக்கு ஆதரவாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சிலரும் இரவு பகல் பாராது அவருடன் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

நேற்று மாலை வரை ஜனாதிபதி செயலகத்திலிருந்து பல அதிகாரிகள், பொலிஸ் உயரதிகாரிகள் போராட்டம் நடந்த இடத்திற்கு வந்து மயூரியைச் சந்தித்திருந்தனர். அவர்கள் அனைவரும் போராட்டத்தைக் குழப்பும் எண்ணத்துடன், ஜனாதிபதியின் ஒருங்கிணைப்புச் செயலாளரைச் சந்தித்து விடயத்தைக் கூறுமாறு மயூரியிடம் கேட்டனர். அவர்களது வேண்டுகோளை மறுத்த மயூரி தான் ஜனாதிபதியைச் சந்தித்து விடயத்தைக் கூறவேண்டும், அதற்கான ஏற்பாட்டைச் செய்யுங்கள் என்று வலியுறுத்திக் கூறியிருந்தார்.

இருந்தபோதிலும் இன்று காலை வரை ஜனாதிபதியிடம் இருந்து பதில் வரவில்லை. மாறாக காணாமல்போன கணவரின் படத்துடன் ஜனாதிபதி செயலகத்தை நோக்கி செல்ல முயன்ற மயூரி ராஜபக்‌ஷ பாணியில் பொலிஸாரினார் தடுக்கப்பட்டார்.

நல்லாட்சி நாட்டில் நிலவுவதாகவும், அனைத்து பிரஜைகளின் குரலுக்கும் செவிசாய்ப்பேன் என்று கூறிக்கொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு பிள்ளைகளுடன் வெயிலிலும் மழையிலும் காத்திருந்த மயூரியின் கண்ணீருக்கு பதில் வழங்க முன்வரவில்லை.

மக்களின் குரலுக்கு மதிப்பளிக்காத, சர்வாதிகாரப் பாதையில் பயணித்த மஹிந்த ராஜபக்‌ஷவைத் தோற்கடித்து ஜனநாயகத்தை, மனித உரிமைகளைப் பேணுவதற்காக ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவை மக்கள் தேர்வுசெய்தனர். ஆனால், தற்போது அவர் தனது கட்சியைப் பாதுகாப்பதிலேயே முழு மூச்சாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்.

அவரால் 5 நிமிடங்கள் மயூரிக்காக ஒதுக்க முடியவில்லை.

14212735_1390644060949995_2165316206664162326_n

14199177_1390418257639242_8605574203182512734_n