படம் | Sampath Samarakoon Photo, Vikalpa

இன்று அனைத்துலக காணாமல்போனோர் தினமாகும் (International Day of the Victims of Enforced Disappearances).

பல தசாப்தகாலமாக பலவந்தமாகவும் தனது விருப்பமில்லாமலும் காணாமலாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான சம்பவங்களை இலங்கை தன்னகத்தே கொண்டுள்ளது. இவ்வாறு இலங்கை பூராகவும் காணாமலாக்கப்பட்ட பெரும் தொகையானவர்களுக்கு நீதி வழங்கும் போர்வையில் பதவிக்கு வந்த அரசாங்கங்கள் ஆணைக்குழுக்களை உருவாக்கி விசாரணைகளையும் நடத்தியிருந்தனர். ஒன்றுக்குப் பின்னர் ஒன்று என்ற அடிப்படையில் அடுத்தடுத்து பல விசாரணைக் கமிஷன்கள் நிறுவப்பட்டு விசாரிக்கப்பட்டபோதிலும் கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள் குறித்து இன்று வரை நீதியை எதிர்பார்த்து இலங்கையர்கள் காத்திருக்கிறார்கள்.

2015ஆம் ஆண்டு ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நிறைவேற்றப்பட்ட “மீள் நல்லிணக்கம், வகைப்பொறுப்பு மற்றும் மனித உரிமைகளைப் பேணல்” என்ற தீர்மானித்தின் படி நிலைமாறு காலத்திற்கான வரைபொன்று இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்தது. அதில் ஒரு வாக்குறுதிதான் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம்.

காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தை நிறுவுவதற்கான சட்ட மூலத்தை கடந்த மே மாதம் 22ஆம் திகதி இலங்கை அரசாங்கம் அறிமுகப்படுத்தியதுடன், அதே மாதம் 27ஆம் திகதி வர்தமானியிலும் பிரசுரித்தது. அத்தோடு, ஆகஸ்ட் 11ஆம் திகதி வாக்கெடுப்பின்றி சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டும் இருந்தது.

இதன் மூலம் சுதந்திரமானதும் நிரந்தரமானதுமான அலுவலகமொன்றைக் கொண்டு காணாமல்போனோர் விடயத்தை கையாள்வதென்பது ஒரு முன்னோக்கிய செயற்பாடாகும் என்று சிவில் சமூக அமைப்புகள் குறிப்பிட்டிருந்தன.

இருந்தபோதிலும், காணாமல்போனோரின் உறவினர்கள் இந்த அலுவலகம் குறித்து நம்பிக்கையற்று இருக்கின்றனர். வரிசையாக வந்த இன்னுமொரு விசாரணைப் பொறிமுறை என்றே அவர்கள் கருதுகிறார்கள்.

காணாமல்போனோர் மீதான அலுவலகம் தொடர்பாக காணாமல்போனோரின் உறவுகள் வெளியிட்ட கருத்துகள் ஒட்டுமொத்தமாக அவநம்பிக்கையைப் பிரதிபலிப்பதாக நல்லிணக்கப் பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணி தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. அதேவேளை, இதுவரை காலமும் இடம்பெறாத ஒன்று இடம்பெறுவதாகவும், இதன் மூலமாவது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்ற பதில் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு அவர்கள் மத்தியில் காணப்படுவதாகவும் செயலணி குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும், சட்ட மூலத் தயாரிப்பின்போது பாதிக்கப்பட்ட மக்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை உள்ளடக்கிய இடைக்கால அறிக்கையை அரசாங்கம் கவனத்தில் கொள்ளாதது ஏமாற்றம் அறிப்பதாகவும் செயலணி குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் என்றால் என்ன? அதன் பணிப்பாணை என்ன? அதிகாரங்கள் என்ன? (திருத்தங்களுக்கு முன்னர்) என்பது குறித்து சிறிய வீடியோ ஒன்று கீழே இணைக்கப்பட்டுள்ளது.