“அமைதியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு வன்முறையின்போதும், வெறுக்கத்தக்க பேச்சுக்களின் மத்தியிலும் இறுதி வரை உறுதியாக நின்று தமது கருத்துக்களை அமைதியாக முன்வைத்த அனைவரையும் முன்மாதிரியாகக் காண்கிறோம். மக்களாகிய எமது சக்தி பாரியது என்பதுடன் நாம் ஒதுக்கப்படுதல்களுக்கு எதிராக மேலும் அமைதி காக்காது அனைத்து மக்களும் ஒன்றிணைந்து நீதி, சமத்துவத்திற்காக குரல் கொடுக்க முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறோம். இவ் “வேற்றுமையில் ஒற்றுமை” விழிப்புணர்வு நிகழ்வு ஒரு முடிவல்ல, ஆரம்பம் மட்டுமே. இனவாதத்திற்கு எதிராகவும் அனைத்து விதமான ஒதுக்குதல்களுக்கு எதிராகவும் பொது நிகழ்வுகளினூடாகவும், சமூக வலைத்தளங்களின் ஊடாகவும் தொடர்ந்தும் பொது மக்களை ஒன்றுபடுத்துவதற்கான நம்பிக்கையுடன் இருக்கிறோம்” – இவ்வாறு “வேற்றுமையிலும் சமத்துவம்: சமத்துவத்துக்கும் ஜனநாயகத்திற்குமான இயக்கம்” அறிக்கையொன்றை வெளியிட்டு கருத்து தெரிவித்திருக்கிறது.

அறிக்கையை முழுமையாக கீழே வாசிக்கலாம்,

இந்நாட்டின் பல தரப்புகளையும் சேர்ந்த பிரஜைகள் குழுவான நாங்கள், வேற்றுமையிலும் சமத்துவம் என்ற அடிப்படையில் 2016, ஆகஸ்ட் 15ஆம் திகதி கொழும்பு – 07 இலுள்ள பௌத்தாலோக மாவத்தையில் ஒன்று கூடினோம்.

அண்மைய காலங்களில் இனவாதம் மற்றும் சகிப்புத்தன்மையின்மை போன்றன தொடர்ந்து வரும் சூழ்நிலையினை பற்றி கூடிய கவனம்கொண்ட நாங்கள், எமது சமூகத்தில் நீதியும் சமத்துவமும் மேம்படுத்தப்பட வேண்டும் என்ற தேவையின் அடிப்படையில் இத்தகையதொரு பிரச்சாரத்தை மேற்கொள்வதற்கான கலந்துரையாடல்களை ஆரம்பித்தோம். இதேவேளை, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமூகங்களின் மீதும் அவர்களுடைய வணக்கஸ்தலங்களின் மீதும் நடாத்தப்படும் தாக்குதல் சம்பவங்கள் பற்றியும் நாங்கள் கவனம் செலுத்தினோம். இவ்வாறாக முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மக்களின் சமய நடவடிக்கைகளையும் ஒன்று கூடல்களையும் வன்முறையாக குழப்பும் நடவடிக்கைகளில் சில குழுக்கள் ஈடுபட்ட பல சம்பவங்கள் (2016இல்) பற்றியும் நாங்கள் அறிந்துகொள்ள முடிந்தது. அத்துடன், இலங்கையானது “சிங்கள – பௌத்த” தேசம் என்று பிரச்சாரங்களில் ஈடுபடும் சில குழுக்கள் பற்றியும் கவனம் கொண்டோம். இவ்வாறான ஓரங்கட்டல் சித்தாந்தத்திற்கு எதிராக செயற்படுவது தொடர்பிலான எமது பொறுப்புணர்வு தொடர்பில் நன்றாகவே தெரிந்து வைத்துள்ள பிரஜைகள் என்ற ரீதியில் நாம், எந்தவொரு சமூகமும் பாகுபாடின்றி சமத்துவமாக நோக்கப்பட்டு இந்நாடு முன்னோக்கி கொண்டு செல்லப்பட வேண்டுமென்பதை உறுதியாக நம்புகிறோம். எமது பல்வகைமையுடனும் பன்மைத்துவத்துடனும் உருவாக்கப்பட்ட எமது இலங்கை திருநாடு அவ்வாறாகவே தொடர்ந்திருக்க வேண்டும்.

தொடக்கத்தில் நாம் விதிமுறைகளற்றதொரு குழுவாக, எமது கருத்துக்களையும் சிந்தனைகளையும் சமூக வலைத்தளங்களினூடாகவும் ஏனைய வலையமைப்புகளினூடாகவும் ஏனைய பொறுப்புள்ள பிரஜைகளிடமும் முன் வைத்தோம். இதன் பின்னரே, மக்களால் ஒன்றினைந்து முன்னெடுக்கப்படும் விழிப்பூட்டலை எமது சொந்த நிதியைப் பயன்படுத்தியே நேற்று ஏற்பாடு செய்திருந்தோம். இதில் பல்வேறு சமூகத்தையும் பல பின்னணிகளையும் கொண்டவர்கள் இவ் விழிப்பூட்டலில் தாமாகவே பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

இதன் போதே “சிங்ஹ லே” எனும் குழுவை பிரதிநிதித்துவப் படுத்துவதாக கூறப்படும் ஒரு குழுவினர் மூர்க்கத்துடன் புகுந்து இவ் விழிப்பூட்டல் நிகழ்வில் குழப்பங்களை ஏற்படுத்தினர். இக்குழு அவர்களது இனவாத மற்றும் வெறுக்கத்தக்க பேச்சுக்களை அவ்விடத்தில் பிரச்சாரம் செய்தனர். இவ்வேளையில் விழிப்பூட்டல் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களையும் “சிங்ஹ லே” குழு தூண்டியதனால் இரு குழுக்களுக்குமிடையில் முரண்பாடு உருவானது. விழிப்புணர்வு பிரச்சாரத்தில் கலந்துகொண்ட அனைவரும் தமது கருத்துக்களில் உறுதியாக அவ்விடத்திலேயே இருந்த அதேவேளை, மிக பொறுமையுடனும், அமைதியாகவும், சமாதானமாகவும் நடந்து கொண்டமையால் மற்றய குழு மழுங்கடிக்கப்பட்டது. இறுதியாக “வேற்றுமையிலும் ஒற்றுமை” குழுவானது ஒற்றுமையையும் சமாதானத்தையும் வலியுறுத்தும் பாடல்களை பாடியதுடன் ஊடகங்களுக்கு தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் தமது அறிக்கைகளை வழங்கியதுடன், “சிங்ஹ லே” குழு கலைந்து செல்வதற்கு முதலே அவ்விடத்திலிருந்து கலைந்தோம். இது எமது முடிவே அன்றி வேறில்லை.

நாங்கள் எந்த ஒரு அமைப்பை சேர்ந்தவர்களுமல்லர். எங்களை ஏதாவதொரு கட்சியுடன் சம்பந்தப்படுத்துவதையும், ஏதாவதொரு தனிநபருடன் சம்பந்தப்படுத்துவதையும் நாம் முற்றாக மறுக்கிறோம்.

ஊடகம்

நீதியும் சமத்துவமுமான இலங்கையை வலியுறுத்தி ஒன்று கூடியவர்கள் என்ற ரீதியில் நிகழ்வில் கலந்துகொண்ட பெரும்பாலான ஊடகங்களின் நடத்தைகளை கண்டு நாம் மனம் வருந்துகிறோம். அவர்கள் “வேற்றுமையிலும் ஒற்றுமை, சமத்துவத்துக்கான விழிப்புணர்வு” நிகழ்வு பற்றிய செய்தி சேகரிக்க வந்திருந்த போதும் இந்நிகழ்வுக்குப் பதிலாக குழப்பக் காரணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்தி சேகரிக்க ஆரம்பித்தனர். பெரும்பாலான ஊடகங்களின் ஒளிப்படக்கருவிகள் இவ் விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்டவர்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள முயற்சிக்காது, நடுநிலையாக செயற்படாது வெளிப்படையான நாடகமொன்றின் பக்கமாக திரும்பின. பல ஊடகங்கள் வேற்றுமையில் ஒற்றுமை பற்றியும் இவ் விழிப்பூட்டல் உள்நோக்கங்களைக் கொண்டதாக அறிக்கையிட்டிருந்தன. ஒரு ஊடகவியலாளர் உண்மைகளைத் தேடி அறிந்து கொள்ள வேண்டும் என்ற வகையில் செயற்பட்டு, அங்கு எவ்வித கேள்விகளுக்கும் பதிலளிக்க காத்திருந்த ஊடகப்பேச்சாளர்களை தொடர்பு கொண்டிருப்பின் இவற்றை தவிர்த்திருக்க முடியும். ஊடகங்கள் சமமான நேரங்களை ஒதுக்கி பல்வேறு கோணங்களிலும் செய்திகளை சேகரித்து அவற்றை அணுகுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதனூடாக ஊடகங்களின் பொறுப்புணர்வை உணர்ந்து செயற்படுதலை உறுதி செய்ய வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறோம்.

எவ்வாறெனினும், உண்மையான அறிக்கைகளை வழங்குவதற்கு கடினமாக உழைத்த முன்னணி ஊடகங்களுக்கும், சமூக வலைத்தளங்களிலுள்ள ஊடகங்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

பொலிஸ்

எமது அமைதியான, சமாதானமான இவ் விழிப்புணர்வு நிகழ்வு தொடர்பில் எமது குழுவை  பிரதிநிதித்துவப்படுத்தும் சிலரினால் கொழும்பு கருவாத் தோட்ட பொலிஸ் நிலையத்துக்கு தெரியப்படுத்தப்பட்டிருந்தது. எங்களுடனும், எங்களைப் போன்று சமத்துவத்துக்கான பேரணிகளை அமைதியாகவும், இடையூறின்றியும் நடாத்துவோருக்கு ஆதரவாக பொலிஸாருக்கு பொறுப்பு உண்டென்று நாங்கள் நம்புகிறோம்.

எனினும், இடையூறுகள் ஏற்பட்ட வேளையில் சில பொலிஸ் அதிகாரிகள் விழிப்புணர்வு நிகழ்வின் ஓரமாக ஒதுங்கி நின்றனர். வேற்றுமையிலும் ஒற்றுமை குழுவினர், ஏதாவது செய்யுங்கள் என்று வேண்டிக்கொண்ட போதும் பொலிஸ் பொறுப்பதிகாரி வரும் இறுதி நேரம் வரை அவர்கள் எதுவுமே கண்டு கொள்ளவில்லை. தேவையானளவு பொலிஸார் அவ்விடத்தில் இருந்தமையால் அவர்கள் இதனை மிக சாதுரியமாகவும் வினைத்திறனாகவும் கையாண்டு கட்டுப்படுத்தியிருக்க முடியும் என நாம் உறுதியாக நம்புகிறோம்.

பொலிஸ் இறுதியில் உறுதியாக இருந்த போதும், விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்டோரை செயற்படாமலும் எதிர்கொள்ளாமல் இருக்குமாறும் வேண்டிக்கொண்டனர். அவர்கள் “சிங்ஹ லே” குழுவினருக்கும் விளக்கமளித்தனர். எனினும், பொலிஸார் இதனை விடவும் சிறப்பாக செயற்பட்டிருக்கலாம். அத்துடன், “சிங்ஹ லே” குழுவினர் நாங்கள் அறிந்த வரையில் சட்டவிரோதமான தேசிய கொடியை ஏந்தியிருந்தனர். எனவே, எதிர்காலத்திலேனும் இத்தகைய விடயங்களில் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நாம் பொலிஸாரை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

எப்படியாயினும், பொலிஸார் அங்கு சமூகமளித்தமைக்கு நன்றி கூறிக்கொள்கிறோம்.

இறுதியாக, இந்நிகழ்வில் கலந்துகொண்டு வன்முறையின்போதும், வெறுக்கத்தக்க பேச்சுக்களின் மத்தியிலும் இறுதி வரை உறுதியாக நின்று தமது கருத்துக்களை அமைதியாக முன்வைத்த அனைவரையும் முன்மாதிரியாகக் காண்கிறோம். மக்களாகிய எமது சக்தி பாரியது என்பதுடன் நாம் ஒதுக்கப்படுதல்களுக்கு எதிராக மேலும் அமைதி காக்காது அனைத்து மக்களும் ஒன்றிணைந்து நீதி, சமத்துவத்திற்காக குரல் கொடுக்க முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறோம். இவ் “வேற்றுமையில் ஒற்றுமை” விழிப்புணர்வு நிகழ்வு ஒரு முடிவல்ல, ஆரம்பம் மட்டுமே. இனவாதத்திற்கு எதிராகவும் அனைத்து விதமான ஒதுக்குதல்களுக்கு எதிராகவும் தொடர்ந்தும் பொது மக்களை ஒன்றுபடுத்துவதற்காக பொது நிகழ்வுகளினூடாகவும், சமூக வலைத்தளங்களின் ஊடாகவும் தொடர்ந்தும் நம்பிக்கையுடன் உள்ளோம்.

தொடர்புபட்ட கட்டுரைகள்:

அமைதி ஆர்ப்பாட்டத்தில் ‘சிங்க லே’ புகுந்து குழப்பம் (Video)

இரத்தப் பசிக்கு முன்னுரிமை கொடுக்கும் இலங்கை பொலிஸ் (வீடியோ)