படம் | கட்டுரையாளர்

மூன்று சகோதரிகள், ஒரு சகோதரரைக் கொண்ட குடும்பத்தில் டெல்றொக்‌ஷன் மூத்தவராவார். 1995ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் புனித பெற்ரிக் கல்லூரியில் கலைப்பிரிவில் உயர்தரப் பரீட்சையில் தோற்றிய டெல்றொக்‌ஷன் 3 புள்ளிகள் வித்தியாசத்தில் பல்கலைக்கழக அனுமதியை பெறத் தவறியிருந்தார். டெல்றொக்‌ஷனின் தந்தை கிறிஸ்தோபர் மறியதாஸ் மீன்பிடித் தொழிலை செய்துவருபவர்.

விடுதலைப் புலி சந்தேகநபர் என்ற அடிப்படையில் 2009ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி இராணுவத்தினரால் வவுனியாவில் வைத்து டெல்றொக்‌ஷன் கைதுசெய்யப்பட்டுள்ளார். 2012ஆம் ஆண்டு வவுனியா சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் மீது தாக்குதல் நடத்தப்படும் வரை டெல்றொக்‌ஷனைக் காண அவர்களது பெற்றோர் பல பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ளனர். பல தடவைகள் 4ஆவது மாடிக்கும், வவுனியா சிறைச்சாலைக்கும் டெல்றொக்‌ஷனின் தந்தை சென்று கெஞ்சியுள்ளார், கெஞ்சியும் கேட்பார் யாருமில்லை. மனமுடைந்துபோன பெற்றோர் மகன் இறந்துவிட்டார் என்றே எண்ணினார்கள்.

வவுனியா சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருந்த கைதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, அவர்களுள் தில்ருக்ஸன் என்ற ஒருவரும் உள்ளார் என அயல்வீட்டைச் சேர்ந்த ஒருவர் பத்திரிகையில் வெளிவந்த செய்தியொன்றை மறியதாஸிடம் காட்டியுள்ளார். கைதிகள் அனைவரும் மஹர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என பின்னர் மறியதாஸ் அறிந்துகொண்டார். மகன் இருக்கிறான் என்று சந்தோசப்படுவதா? அவன் என்னுடைய மகன் டெல்றொக்‌ஷன்தானா? அவனுக்கு என்ன நடந்திருக்கும் எனக் கவலை கொள்வதா என தந்தை மறியதாஸின் உள்ளம் அலைமோதிக் கொண்டிருந்தது.

பிறகு வவுனியா சிறைச்சாலையில் கிறிஸ்தவ வழிபாட்டு முறையை மேற்கொள்ளும் ராஜ்குமார் என்ற பாதிரியாரை அணுகிய மரியதாஸ் தாக்குதலுக்குள்ளானவர் தில்ருக்ஸனா? டெல்றொக்‌ஷனா? என தனது மகனின் அங்க அடையாளங்களையும் சொல்லி அறிந்து தெரிவிக்கும்படி கூறியிருக்கிறார். பாதிரியாரும் தாக்குதலுக்குள்ளானவர் உங்கள் மகன் டெல்றொக்‌ஷன்தான் என உறுதிப்படுத்தியுள்ளார். மிகுந்த சந்தோஷமடைந்த மரியதாஸ் மறுகணம் மகனது உடல்நிலை குறித்து சிந்தித்துள்ளார்.

மறுநாள் மஹர சிறைச்சாலைக்கு சென்ற மரியதாஸ் அங்கிருந்து ராகம வைத்தியசாலைக்குச் செல்லுமாறு அதிகாரிகளால் உத்தரவிடப்பட்டார். பல வருடங்கள் காணாமலிருந்த தனது மகனைக் காணும் சந்தோசத்தில் இருந்த அவர் அதிதீவிரி சிகிச்சை பிரிவினுள் அனுமதிக்கப்பட்டார். 3 வருடங்களாக தேடி அலைந்த மகனின் நிலைகண்டு மரியதாஸ் நிலைகுலைந்து போனார்.

உணர்விழந்த, மயக்கநிலையில் இருந்த தனது மகனின் தலையில் பலத்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், உடல் முழுவதும் இரத்தக்காயங்கள் காணப்பட்டன என்றும் மரியதாஸ் கூறுகிறார். பல தடவைகள் டெல்றொக்‌ஷனைப் பார்க்க ராகமை வைத்தியசாலைக்குச் சென்ற பெற்றோரை மஹர சிறைச்சாலையில் சென்று அனுமதி பெற்றுவருமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அனுமதி கிடைத்த போதிலும் பெற்றோருக்கு 4,5 நிமிடங்களே வழங்கப்பட்டிருக்கிறது.

சங்கிலியால் கட்டிலோடு பிணைக்கப்பட்டு கோமா நிலையிலிருந்த டெல்றொக்‌ஷன் 2012 ஓகஸ்ட் 8ஆம் திகதி உயிழந்தார்.

7771837712_9e54dca9d8_o

டெல்றொக்‌ஷன் கொல்லப்பட்டு இன்றோடு நான்கு வருடங்கள் ஆகின்றன. ஆனால், அவரது கொலைக்கு நீதி வழங்கப்படவில்லை. நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இல்லை. இருந்தபோதிலும் டொல்றொக்‌ஷன் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் அவரது பெற்றோர்கள் சேகரித்து வைத்திருக்கிறார்கள். தனது மகனின் கொலை தொடர்பாக நீதி விசாரணை நடக்கும், அப்போது இவை பயன்படும் என்ற நம்பிக்கை அவர்களிடம் இப்போதும் இருக்கிறது.

“எனது மகனுக்கு என்ன நேர்ந்தது என்பதை நாங்கள் அறியவேண்டும்” – கடந்த ஏப்ரல் மாதம் சந்தித்தபோது டெல்றொக்‌ஷனின் தந்தை இவ்வாறு கூறினார். “புதிய அரசாங்கம் வந்தவுடன் எனது மகனுக்கு என்ன நடந்தது என்பது பற்றி விசாரணை செய்வார்கள் என்று நம்பியிருந்தோம். ஆனால், அப்படியொன்றும் நடப்பதாகத் தெரியவில்லை” – மரியதாஸின் இந்த வேதனைக் குரல் எப்படியும் நல்லாட்சிக்குக் கேட்கப் போவதில்லை.

செல்வராஜா ராஜசேகர்

###

தொடர்புபட்ட கட்டுரைகள்:

நிமலரூபன்: சித்திரவதை மாரடைப்பான கதை

உடலத்தின் மீதும் தோற்றுப்போன அரசியல்