படம் | 30yearsago.asia

இன்றைய நாளை சரியாகத்தான் நினைவு வைத்திருக்கிறோமா?

இது படுகொலையின் மாதம். தமிழிலும் சரி, ஆங்கிலத்திலும் சரி இந்த மாதத்தின் பெயரை எழுதிப் பார்த்தால் குருதி கொப்பளிக்கும். பயங்கரக் கொலைகளை உலகிற்கும், தமிழர்களுக்கும் அறிமுகம் செய்து வைத்ததும் இந்த மாதம்தான். அதனால்தான் இதனை மாற்ற முடியவில்லை. நினைவுகளின் ஆழ அடுக்குகளில் இறுகிக் கிடக்கும் வடுவாக இது இருக்கின்றது.

இந்தப் படுகொலைக்கும் வரலாறு இனக் கலவரம் என்றே பெயரிட்டது. அதன் பெயரிலேயே ஜூலை கலவரம் என்று தனி அடையாளப்படுத்தல்களை வழங்கியது. இதனை இனக் கலவரம் என்று வரைவிலக்கணப்படுத்திப் பார்ப்பது பொருத்தமானதா?

கலவரம் எனப்படுவது இரு தரப்பினர் மோதிக் கொள்வதையே குறிக்கின்றது. ஓர் இனம் இன்னோர் இனத்தின் மீது காட்டுமிராண்டித்தனங்களை கட்டவிழ்த்து விடுவதையும், அடிவாங்கும் இனம் திருப்பித்தாக்காமல் ஓடுவதையும் இனக்கலவரம் என்று குறிப்பிட முடியுமா? எனவே, இதனை இனச் சுத்திகரிப்பு எனக் குறிப்பிடுவதே பொருத்தமாகும்.

ஜூலை படுகொலையை இனச் சுத்திகரிப்பு எனப் பிரகடனம் செய்தவதற்கான போதிய தடயங்களை அது விட்டுச் சென்றிருக்கின்றது. இனச் சுத்திகரிப்பின் பிரதான இலக்கு, அழிக்கப்பட வேண்டிய இனத்தை முற்றாக அழிப்பது அல்லது பேரழிவுகளை ஏற்படுத்தி, அந்த இனத்தைக் குறித்த பிராந்தியத்திலிருந்து அகற்றிவிடுவது. 1983ஆம் ஆண்டில் தெற்கில் வாழ்ந்த தமிழர்கள் தம் சொத்துக்களையும், வாழ்வு மரபுகளையும், பொருளாதார தேட்டங்களிலும் மேலாண்மை கொண்டிருந்தனர்.

தமிழின சுத்திகரிப்பில் ஈடுபட்டிருந்தவர்கள் முதலில் செய்த வேலை தமிழர்களின் பொருளாதார மையங்களை சிதைத்தமை ஆகும். கொள்ளையடிப்பு, தீவைப்பு, போன்ற நடவடிக்கைகளில் தமிழர்களின் கடைகளும் வயல்நிலங்களும் அழிக்கப்பட்டன. இதனூடாகத் தமிழர்களை ஏதுமற்றவர்களாக்கும் நிலையை உருவாக்க முடிந்தது. சம நேரத்தில் கண்ணில்படும் தமிழர்களையெல்லாம் வெட்டிச் சாய்த்துப் போடுவதற்கான அனுமதியை அரசும் வழங்கியிருந்தது.

இந்த இரு நடவடிக்கைகளும் தெற்கில் இனி தமிழர்கள் வாழ்வது அச்சத்துக்குரியது என்ற நிலையை உருவாக்கின. பயப்பீதியில் உறைந்து, இரக்கம் கொண்ட சிங்களவர் வீடுகளில் பதுங்கிக் கிடந்த தமிழர்களை அந்தப் பிராந்தியத்திலிருந்தே வெளியேற்றுவதற்கான ஒழுங்குகளை அப்போதிருந்த தென்னிலங்கை அரசே செய்து கொடுத்தது. இந்தியாவின் உதவியும் இந்த இனச் சுத்திகரிப்பிற்குப் போதுமானளவு கிடைத்தது. தெற்கிலிருந்து தமிழர்களை அடியோடு அகற்றுவதற்கு இந்தியக் கப்பல்கள் பேருதவி புரிந்தன. ஆக, ஓரினத்தை குறித்த பிராந்தியத்திலிருந்து முற்றாக அழித்தல் அல்லது அகற்றுதல் என்ற இனச் சுத்திகரிப்பின் பிரதான பண்பு ஜூலை வன்முறைகளில் நிகழ்த்தப்பட்டிருந்தது.

ஆனால், அந்தக் கோரமான நாட்களை தமிழர்கள் நினைவு வைத்திருக்கின்றனரா? தம் அழிக்கப்பட்ட கதையை முழுவிபரங்களோடு பதிவுசெய்து வைத்திருக்கின்றனரா என்று கேட்டால் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். தமக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களைப் பேசவும், பதிவுசெய்யவும் விரும்பாத சமூகமாக தமிழர்கள் மாறிவிட்டனர். எனவேதான் வேட்டையாடியவன் சொல்லிய வரலாறே தமிழர்களின் வரலாறாகவும் மாறிவிட்டது. இவ்வாறு புனையப்பட்ட வரலாற்றை வாசிக்கும் புதிய தலைமுறை, காலம் முழுவதும் அழிக்கப்பட்ட தமிழர்களின் தலையில் முழுத் தவறையும் கட்டியடித்துவிட்டு, பெரும்பான்மையினர் ஓரம் ஒதுங்கிக் கொள்கின்றனர்.

sway.com என்ற வலைதள நுட்பத்தைப் பயன்படுத்தி 1983, கறுப்பு ஜூலை குறித்த சாட்சியங்களை முன்வைக்கிறோம்.

கீழ் உள்ள இணைப்பினூடாகவும், இங்கு கிளிக் செய்வதன் மூலமும் பார்க்கலாம்.

ஆசியர் குறிப்பு:

ஜெரா எழுதிய இக்கட்டுரை முதலில் ‘துளியம்’ தளத்தில் வௌியாகியிருந்தது. மூல கட்டுலையின் தலைப்பு மாற்றப்பட்டுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.