படம் | DALOCOLLIS

ஒரு குறிப்பிட்ட இனத் தொகுதியினரின் அடிப்டை வாழ்வுரிமைகள், அவர்களின் தொழில் உரிமைகள் மிக நீண்டகாலமாக மறுக்கப்படுவதும் இனி வருங்காலங்களிலும் அது அவர்களுக்கு கிடைக்கவோ, அதனைப் பெற்றுக் கொள்வதற்காக மக்கள் சக்தி ஒன்று திரள்வதையோ திட்டமிட்டு அதை தடுக்கவும் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதி மட்டுமல்ல, வன்முறையை அவர்கள் மீது கட்டவிழ்த்து விடுவதாகவும் பொருள் கொள்ளலாம். அம்மக்கள் ஆரவாரமின்றி சிதைப்பதற்கு அப்பிரதேசத்திலிருந்து அவர்களை புலம்பெயர வைப்பதற்கும் முன்னெடுக்கப்படும் செயல் எனலாம்.

மலையக மக்கள் குறிப்பாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மேற்கூறிய வகையில் மிக நீண்டகாலமாக தொடர்ச்சியாக வன்முறைக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இவர்கள் மீது மேற்கொள்ளப்படும் வன்முறைகள் அரசியல், சமூக, கலாச்சார ரீதியிலான சக்திகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் அரச பின்புலத்துடனான ஆதரவு சார்ந்தும் மேற்கொள்ளப்படுகின்றன.

குறலற்றவர்களாகவும், வலுவற்றவர்களாகவும், பிளவுண்ட மக்களாகவும், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வாழ்விடத்திலேயே வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலைக்கு தொழிற்சங்கங்களும், பெருந்தோட்டக் கம்பனிகளும், அரசும் ஒன்றோடு ஒன்று இணைந்தும் தனித்தும் செயற்படுகின்றன. மக்கள் மேற்சொன்ன சக்திகளிடத்து தமது நம்பிக்கையை தொழில் ரீதியாகவும் சந்தாவாகவும், வாக்குகளாகவும் வெளிப்படுத்திய போதும் அவையெல்லாம் புறந்தள்ளப்பட்டு மக்கள் வாழ்வுக்காக ஏங்கி நிற்கின்றனர்.

தொழிற்சங்க ரீதியாகவும், அரசியல் கட்சி சார்ந்தும் தலைவர்களுக்கிடையே நிகழும் போட்டி நேரடியாகவும் மறைமுகமாகவும், தொழிலாளர்களை பாதிக்கின்றது. இந்நிலை நீடிக்கின்ற போதும், சுயநல, கபட, அரசியல் காய்நகல்த்தல்களின் காரணமாக தொழிலாளர் சமூகம் வன்முறைக்கு முகம் கொடுக்கின்றது.

சுதந்திர இலங்கையின் வரலாற்றில் இலவசக் கல்வி 1940களில் அறிமுகப்படுத்தப்பட்ட போதும் அதனை சுதந்திரமாக சுவாசிக்க 40 ஆண்டு காலம் இடம் கொடுக்கப்படவில்லை. 1980ஆம் ஆண்டிற்கு பின்னரே இலவசக் கல்விக்குள் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் உள்வாங்கப்பட்டனர். 40 ஆண்டு காலம் கல்வி மறுக்கப்பட்டமை பின்தள்ளப் பட்டவை வன்முறையின் மாற்று வடிவம் எனலாம்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பில் ஈட்டப்பட்ட அந்நிய செலாவணியால் நாடு பல்வேறு துறைகளில் அபிவிருத்தி கண்டது. கட்டடங்கள் எங்கும் எழுந்தன. பாடசாலைகள், வைத்தியசாலைகள் நிர்மாணிக்கப்பட்டன. ஆசிரியர்களும், அரச பணியாளர்களும் அரசத் துறைக்கு உள்வாங்கப்பட்டனர். ஆனால், பெருந்தோட்டங்களில் இவைகள் ஒன்றும் உருவாக்கப்படவில்லை. தற்போது ஆங்காங்கு பாடசாலை சார்ந்து கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டாலும், அரச பணிக்கு உள்வாங்கப்பட்டாலும் அவை எல்லாம் கட்சி அரசியல் சக்திகளுக்கான சலுகைகளாக கொடுக்கப்படுகின்றனவே தவிர மலையக மக்களின் வளர்ச்சிக்காகவும், அபிவிருத்திக்காகவும் செய்யப்படுவதாக தோன்றவில்லை. இதுவும் வன்முறையே (1990களில் ஜனசவிய திட்டத்தின் கீழ் ரூ. 1000 சம்பளத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதும், 35 ஆண்டுகளின் பின்னர் தற்போது அடிப்படை சம்பளமற்ற ஆசிரியர்களாக உயர்தரம் படித்தவர்கள் உள்வாங்கப் படுவதும் ஒன்றே).

மலையகத்தின் பல்வேறு மலைகளிலிருந்து நதிகள் ஊற்றெடுத்துப் பாய்கின்றன. இந்நீரை தடுத்து பல பாரிய நீர்த் தேக்கத் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மின்சார உற்பத்தி செய்யப்படுவதோடு, பல பிரதேசங்களில் விவசாயத்திற்கும் நீர் கொண்டு செல்லப்படுகிறது. ஆனால், மலையகப் பெருந்தோட்டத் துறைக்கு முழுமையான மின்சார வசதியோ குடிக்க மற்றும் ஏனைய சுகாதாரத் தேவைகளுக்கு நீர் பெற்றுக் கொடுப்பதில் தயக்கம் காட்டப்படுகின்றது. இது கம்பனிகளின் செயற்பாடா? அல்லது உள்ளூராட்சி நிறுவனங்களின் பராமுகமா? இதுவும் வன்முறையே.

மலையகப் பிரதேசங்களில் பொதுப் போக்குவரத்து, பொது சுகாதாரம், பாதைகள், வைத்தியசாலைகள், பணியாளர் பற்றாக்குறை, வைத்தியசாலைகளில் போதுமான அளவு மருந்தின்மை, வேலைவாய்ப்பின்மை என பிரச்சினைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். அவை மலை போல் குவிந்து விடும். அதிகாரத்திற்கு வருவதற்கான வாய்ப்பை பெற்றுக் கொடுத்தும் பிரச்சினைகளை அணுகாமல் இருப்பது, தீர்வை ஒத்தி வைப்பது அதனை பாராது இருப்பது, பாதிக்கப்படும் மக்கள் மீது வன்முறையை அவிழ்த்து விடுவதற்கு ஒத்ததாகும்.

கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் மாதத்தோடு முற்றுப்பெற்ற பெருந்தோட்டத் தொழிற்சங்கங்களுக்கும், முதலாளிமார் சம்மேளனத்திற்குமான ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாது தொழிலாளர்கள் கைவிடப்பட்டுள்ளனர். கண்காட்சி போராட்ட நாடகமொன்று கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக அரங்கேற்றப்பட்டது. அதில் பங்கேற்றவர்கள் அடுத்த தேர்தலுக்கு தம்மை உசார்படுத்துவதற்காக முகம் காட்டிக் கொண்டார்கள். தொழிலாளர்களும் அவர்கள் பிள்ளைகளும் வறுமைக்குள் தள்ளப்பட்டு போசாக்கின்மையால் கல்வி, தொழில், நோய்கள் போன்றவற்றிக்கு தினம் முகம் கொடுக்கின்றார்கள். இத்தகைய ஏமாற்றம் வன்முறையும் வேறொரு வடிவமே.

சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கையில் ஆட்சியாளர்களால் நிலம் இனவாத கண்ணோடே நோக்கப்பட்டது, பொருளாதாரமும் அவ்வாறே நோக்கப்பட்டது. சிங்களவர்கள் தவிர்ந்த வேறு இனத்தவர்களின் நிலமும், பொருளாதாரமும் பறிப்பதற்காக பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு திட்டங்கள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வடக்கு கிழக்கெங்கும் அப்பிரதேசத்திற்கு பரிட்சையமற்ற விவசாய மக்கள் பலவந்தமாக குடியேற்றப்பட்டனர். அவர்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவைக் காண வீட்டுக்காணி விவசாயக் காணியென ஒரு ஏக்கர் முதல் ஐந்து ஏக்கர் வரையிலான காணிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டதோடு நீர்ப்பாசன வசதிகளும் மின்சாரமும், பெற்றுக் கொடுக்கப்பட்டதோடு வீடுகட்டவும் விவசாயத்திற்குமாக மானியங்கள் வழங்கப்பட்டன. 2013ஆம் ஆண்டு அமைச்சராக இருந்த நிமால் சிரிபால டி சில்வா முல்லைத்தீவு மாவட்டத்தில் கிராமங்களை உருவாக்கி அப்பிரதேசத்திற்கு அந்நியமானவர்களை குடியேற்றினார். அன்று குடியேறிவர்களுக்கு தற்போதைய நல்லாட்சி அரசாங்கமும் பண உதவி அளித்துள்ளது.

1971ஆம் ஆண்டு தெற்கிலே ஏற்பட்ட இளைஞர்களின் எழுச்சியைத் தொடர்ந்து, 1972ஆம் ஆண்டு தனியார் பெருந்தோட்டங்கள் அரசுடமையாக்கப்பட்டன. சங்குவாரி போன்ற சில தோட்டங்களில் இருந்து தொழிலாளர்கள் துரத்தப்பட்டனர். கிராமங்களோடு ஒட்டியிருந்த பல தோட்டங்கள், கிராமத்தவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. ஒன்றுமற்றிருந்த கிராமத்து சிங்கள அடிநிலை மக்கள் நில உரிமையாளராக்கப்பட்டனர். ஆனால், தொழிலாளர்கள் தொடர்ந்து உழைக்கும் அரை அடிமை கூலிகளாகவே வைக்கப்பட்டனர்.

தொடர்ந்து 1994ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து மலையகத் தொழிலாளர்களுக்கும் 7 பேர்ச் காணி கொடுப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. தற்போதைய நல்லாட்சியிலும் அதேநிலை தொடர்ந்து கடைப்பிடிக்கப் படுகின்றது. மலையக மக்களுக்கு பொருளாதாரத்தில் வளர்ச்சிக் காண்பதற்கு ஏற்ற வகையிலான போதுமான அளவுக் காணிகள் கொடுக்காது, கூலித் தொழிலாளர்களாகவே தொடர்ந்து இருக்கச் செய்வது வன்முறையே. மலையகத் தமிழ் மக்கள், பெருந்தோட்டத் தொழிலாளர்கள், அரச காணிகள் பெற்று பொருளாதாரத்தில் தன்னிறைவு காணக் கூடாது என திட்டமிடுவதும், அதனைப் பாதுகாப்பதும் வன்முறையே.

தொழிலாளர்களைத் தவிர்த்து பாடசாலையை விட்டு இடை விலகியோரும், பாடசாலைக் கல்வியை முடித்துக் கொண்டோரும் தொழில் செய்யக்கூடிய முதிர்ந்தோரும், சுயமாகவே தம் வாழ்விடங்களை விட்டு நகர் புறங்களை நோக்கி புலம் பெயர்வதற்கான சூழல் மறைமுகமாக மேற்கொள்ளப் படுகின்றது. பிறந்த மண்ணை விட்டு அம்மண்ணின் மக்களையும் வெளித் தள்ளுவது வன்முறையாகும்.

மறைந்த சௌமிய மூர்த்தி தொண்டமானின் காலத்தில் 1994இல் தலவாக்கலை ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் “மலையக கலைகளின் காப்பகம்” உருவாக்கப்படல் வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இரண்டு தசாப்தங்களைக் கடந்தும் எல்லா அரசுகளிலும் பல மலையகத் தலைவர்கள் அமைச்சரவையை அலங்கரித்து தமது சுகபோக கலாச்சாரத்தை வளர்த்துக் கொண்டார்களே தவிர மலையகக் கலையை வளர்க்க அதனைப் பாதுகாக்க எத்தகைய நடவடிக்கையும் எடுக்காதிருப்பது மலையக மக்கள் கலாச்சார ரீதியாகவும் அழிய வேண்டும் எனும் நோக்கமே.

கடந்த ஆட்சி காலத்தில் மலையகத்திற்கென தனியான பல்கலைக்கழகம் உருவாக்கப்படல் வேண்டும் என அப்போதைய அமைச்சர் டிலான் பெரெரா கருத்து முன்வைத்த போதும் அதற்கான ஆதரவுத் தளம் மலையக முற்போக்கு சக்திகளாலும், அரசியல்வாதிகளாலும் முன்னெடுக்கப்படாது மௌனித்திருப்பதும் அடித்தள மக்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் வன்முறையல்லவா?

கடந்த வருடம் உருவாக்கப் பட்ட தமிழ் முற்போக்குக் கூட்டணி மலையகத் தேசியம் தமது உயிர்நாடி எனக் குறிப்பிட்டது. 2015 ஜூன் 14ஆம் திகதி தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர்களின் ஒருவரான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திகாம்பரம் தினக்குரலுக்கு வழங்கியிருந்த செவ்வியில் தமது பரந்துபட்ட வேலை திட்டத்தில் மலையகத் தேசியம் பிரதான அம்சம் எனக் குறிப்பிட்டுள்ளார். இது வரவேற்க வேண்டியதே. ஆயினும், மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்கான 7 பேர்ச் காணி விடயத்தில் விடாப் பிடியாக நிற்பதும், சுய பொருளாதார வளர்ச்சிக்காக போதுமான காணிகளைப் பெற்றுக் கொடுக்க செயற்படாதிருப்பதும், ஆங்காங்கே பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டும் வீடுகளைக் கட்ட அடிக்கல் நடுவதும் (இரண்டு வருடங்களுக்கு முன்பு மண்சரிவால் பாதிக்கப்பட்ட பண்டாரவல, மீரியபெத்த மக்களுக்கு வீடுகள் கட்ட முடியாதிருப்பதும், கட்டப்பட்ட வீடுகள் கொடுக்கப்படாதிருப்பதும் காரணம் தெரியவில்லை) அமைச்சரின் குறைபாடல்ல. முதலாளித்துவ அரசாங்கத்தின் செயற்பாடே அது. முதலாளித்துவம் எப்போதும் நிலம் தமக்குச் சொந்தமானது என்றே நினைக்கும். கொல்லை இலாபம் ஈட்டலுக்கு இதுவே வழி வகுக்கும். தொழிலாளர்களை நசுக்கும். இதுவும் வன்முறையே.

இருநூறு ஆண்டுகளை தமதாக்கி நாட்டின் பொருளாதாரத்திற்காக, வளர்ச்சிக்காக உயிரீந்தவர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடுவது என்பது ஒடுக்கப்படும் அனைத்து சமூகங்களிலும் மேற்கொள்ளப்படும் வன்முறையாகும். இனம் கடந்து மொழி கடந்து, பிரதேசம் கடந்து ஒடுக்கப்படும் மக்கள் விழிப்படைந்தால் மட்டுமே நாட்டுக்கு விடுதலை, ஒடுக்கப்படும் மக்களுக்கு விடுதலை.

அருட்தந்தை. மா சத்திவேல்