படம் | Eranga Jayawardena/ AP Photo, SRI LANKA BRIEF 

By: ருகி பெர்ணான்டோ, மரிஸா த சில்வா மற்றும் சுவஸ்திகா அருலிங்கம்

யாழ்ப்பாணத்தில் சாவகச்சேரியில் 2016 பங்குனி 30ஆம் திகதி தற்கொலை அங்கி, வெடிப்பொருட்கள் மற்றும் துப்பாக்கி ரவைகள் என்பன கண்டுப்பிடிக்கப்பட்டன. அன்றைய தினத்தில் இருந்து  ஜூன் மாதம் 28ஆம் திகதி வரையில் 28 பேரின் கைது தொடர்பாக  தகவல்கள் வெளியாகின. இவர்கள் அனைவருமே இலங்கையின் வடக்கு – கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த தமிழர்கள். கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் பெண். இவரது கணவரும் கைதுசெய்யப்பட்டிருந்தார். சர்வதேச விமான நிலையத்தில் காகிதத் துண்டுகளை வழங்கிய மேலும் இருவர் (அவர்களும் தமிழர்கள்) மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத விசாரணை பிரிவிற்கு (PTA) அழைக்கப்பட்டனர். விசாரணையின் பின்னர் அன்றே அவர்கள் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

கைதுசெய்யப்பட்ட 28 பேரில் 24 பேரை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் (PTA)  கைதுசெய்யப்பட்டிருந்தனர். ஏனைய நான்கு பேரும் முன்னாள் விடுதலைப் புலி போராளிகள் என்றபோதிலும் மேற்குறிப்பிட்ட சம்பவத்துடன் தொடர்புபடாமல் வேறு ஒரு காரணத்திற்காக கைதுசெய்யப்பட்டுள்ளமை இங்கு வெளிப்படுகின்றது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் திருகோணமலை மனித உரிமை ஆணையகத்திற்குள் முறைப்பாடு செய்து கொண்டிருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

கைது செய்யப்பட்டவர்களுக்கு மேலதிகமாக 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் விசாரணைகளுக்காக 10 தொடக்கம் 12 பேர் வரை யாழ். மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கு பல முறை அழைக்கப்பட்டதாக சாவகச்சேரி மக்கள் எமக்குத் தெரிவித்தனர். இப்பகுதியில் கைது செய்யப்பட்டவர்களின் குடும்பங்களில் அச்சம் நிலைக்கொண்டிருந்தது. சற்று சுதந்திரமாக நடமாடிய மக்கள் தற்போது ஒருவரை ஒருவர் சந்தேக கண்ணுடன் பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கைதுகளில் பெரும்பாலானவை வெடிப்பொருட்கள் மீட்கப்பட்ட வீடுகளுக்கு அருகில் மீட்கப்பட்டதாக கூறப்படும் 5 தொடக்கம் 6 மோட்டார் சைக்கிள்களுடன் தொடர்புடையவர்கள் என மனித உரிமை தொடர்பான சட்டத்தரணி ஒருவர் குறிப்பிட்டார். பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்களின் தொலைபேசி இலக்கங்களை கண்காணித்தல், அவர்களை விசாரணைக்காக அழைத்தல் மற்றும் விசாரணைகளின் போது கைதுசெய்தல் என்பன அதிகரித்துள்ளமையை காணக்கூடியதாக உள்ளது. இதனால், மக்கள் தமது தொலைபேசிகளை ஏனையோர்களுக்கு தற்காலிகமாகக் கொடுப்பதை கூட தவிர்த்திருக்கின்றனர்.

2016 ஜூன் 23ஆம் திகதி வரைக்கும்

  • 48 மணித்தியாலங்கள் கடந்த நிலையிலும் தடுத்தவைக்கப்பட்டுள்ள இடம் தொடர்பில் குடும்பங்களுக்கு அறிவிக்கப்படாத சம்பவங்கள் குறைந்தது 5 காணப்படுகின்றன.
  • கைதுசெய்யப்பட்டவர்களில் 15 பேர் அளவில் முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகள் என்பதுடன், மேலும் 7 பேர் புணர்வாழ்வு பெற்று விடுவிக்கப்பட்டவர்களாவர்.
  • 23 கைது சம்பவங்களின் போது 48 மணித்தியாலம் கடந்தும் சட்டத்தரணிகளுடன் தொடர்பு கொள்வதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதன் பின்னர் சட்டத்தரணிகளுக்கும் குறிப்பிட்டளவு சந்தர்ப்பமே வழங்கப்பட்டதுடன், பெரும்பாலும் குடும்பத்தினரே சட்டத்தரணிகளுடன் தொடர்பில் இருந்தனர்.
  • கைது செய்யபயபட்ட 28 பேரில் 4 பேர் நிபந்தனைகள் இன்றி விடுதலை செய்யப்பட்டனர். அதில் இருவர் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், ஒருவர் ஒரு வருடகால புனர்வாழ்விற்கு அனுப்பப்பட்டிருக்கிறார்.
  • தடுப்புக் காவலில் வைக்கப்பட்டவர்கள் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தமையை அறிய கூடியதாக இருந்ததாக அவர்களை பார்ப்பதற்காகச் சென்ற குடும்பத்தினர் பலர் தெரிவித்திருந்தனர்.
  • குறைந்தது 5 சம்பங்களின்போது கைது செய்யப்பட்டவர்களினதும் அவர்களின் உறவினர்களினதும் தனிப்பட்ட சொத்துக்கள் உரிய பற்றுச்சீட்டு வழங்காது தடுத்து வைக்கப்பட்டிருந்தன. இந்தச் சொத்துக்களில் கையடக்க தொலைப்பேசி, வாகனம் மற்றும் ஒரு இலட்சம் ரூபா பணம் எனபன உள்ளடங்குகின்றன.
  • இலங்கை மனித உரிமை ஆணைக்குழு (HRCSL) சட்டத்தின்[1] பிரிவின் 28 ஆவது உப பிரிவின் அடிப்படையில் பயங்கரவாத விசாரணை பிரிவின் கைது மற்றும் தடுப்பில் வைத்தல் பெரும்பாலானவை இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்படுகின்ற நிலையில், கைதுகளின் இடமாற்றம் மற்றும் தடுப்பில் வைத்தலுடன் தொடர்புடைய விடயங்கள் குறித்து ஆணைக்குழுவிற்கு இன்னும் அறிவிக்கப்படுவதில்லை.[2]
  • தடுப்பில் உள்ளவர்களைப் பார்வையிடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் சட்டத்தரணிகளும் கூறுகின்றனர்.
  • தடுப்பில் வைத்துள்ளமை, கடுமையான விசாரணை, சித்திரவதைகள் மற்றும் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் கிடைத்திருக்கிறது.

கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட 28 பேர் மற்றும் பயங்கரவாத விசாரணை பிரிவிற்கு அழைக்கப்பட்ட மற்றும் விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்ட இருவரின் பெயர் விபரங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. இந்தத் தகவல்கள் ஜுன் மாதம் 23 ஆம் திகதிக்கு மட்டும் செல்லுப்படியாகும் .

  1. கப்பிரியல் எட்வட் ஜூலியன் (எனப்படும் ரமேஸ்) – மார்ச் மாதம் 29ஆம் திகதி பிற்பகல் 7.30 மணியளவில் பொலிஸ் விசேட அதிரடிப்படை, இராணுவம் மற்றும் பயங்கரவாத விசாரணை பிரிவு அதிகாரிகள் என 20 பேர் வரையில் 4 இராணுவ வாகனத்தில் வந்து சாவகச்சேரியில் அமைந்துள்ள ஜூலியனுடைய (எனப்படும் ரமேஸ்) வீட்டை சுற்றி வளைத்ததாக அவரது சட்டதரணி கூறினார். அந்த சந்தர்ப்பத்தில் ஜுலியன் வீட்டில் இல்லாததால் இறுதியில் இரவு 9 மணியளவில் அவரது மனைவியான கப்ரியல் துஷ்யந்தியும் 6 வயது மகளையும் பாதுகாப்புத் தரப்பினர் அழைத்து சென்றனர். மறுநாள் (30) காலையில் ஜூலியனின் வீட்டிலிருந்து வெடிப்பொருட்கள் மற்றும் தற்கொலை அங்கிகள் மீட்கப்பட்டன.[3] 2016ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் திகதி ஜூலியன் கைது செய்யப்பட்டார். பின்னர் ஏப்ரல் 31ஆம் திகதி பாதுகாப்பு தரப்பினர் வானில் ஜூலியனை அவரது சாவகச்சேரி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளதுடன், குடும்பத்தினருக்கு சந்திக்க சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை எனவும் அவரது சட்டத்தரணி குறிப்பிட்டார். 30ஆம் திகதி ஜூலியன் கைது செய்யப்பட்டதாக பாதுகாப்புத் தரப்பினர் குடும்பத்தினருக்கு தெரிவித்திருந்தனர். விடுதலைப் புலிகளின் முன்னாள் போரளியாக ஜூலியன் செயற்பட்டிருந்தார். அவரை தடுத்து வைப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படாத நிலையில் ஜூன் 23ஆம் திகதி வரையில் நீதவான் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதாக அறியவில்லை என சட்டதரணி மேலும் கூறினார். ஜூலியன், அவரது தந்தை மற்றும் அவரது மனைவியின் கையடக்கத் தொலைப்பேசிகள், ஜூலியனின் மோட்டார் சைக்கிள், டாடா பட்டா ரகத்தைச் சேர்ந்த வான் மற்றும் அவர்களது வாகன அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட வங்கிக்கணக்குகளை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைப்பற்றியிருந்தனர். குறித்த சொத்துக்கள் கைப்பற்றியமைக்கான பற்றுச்சீட்டுக்கள் வழங்கப்படாத நிலையில் இன்று வரையில் அந்தச் சொத்துக்கள் விடுவிக்கப்படவும் இல்லை.[4]
  2. இராசத்துரை ஜெயந்தன் என்பவர் விடுதலை புலிகள் இயக்கத்தின் போராளியாவார். பொலிஸார் என கூறிக்கொண்ட சிவில் உடையில் வந்த சிலரினால் 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி சாவகச்சேரி – நுனாவில் பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்து கடத்தப்பட்டார்.[5] [6] ஜெயந்தனிடம் விசாரணை மேற்கொண்டதன் பின்னர் விலங்கிட்டனர். கைதுசெய்யப்பட்டதாகக் கூறப்பட்டாலும் அவரை எங்கு கொண்டு செல்லப்படுகிறார் என்ற விடயம் குடும்பத்தினருக்கு கூறப்படாத நிலையில் கைதிற்கான காரணம் மற்றும் தாம் யார் என்பதை உறுதிப்படுத்த மறுத்துள்ளனர். எவ்விதமான அடையாளங்களும் அற்ற வெள்ளை நிற வானில் அவரை கொண்டுச் சென்றனர். குடும்பத்தினருக்கு அறிவிக்கப்படாத நிலையில் இரகசிய இடம் ஒன்றில் இரண்டு நாட்கள் இராசத்துரை ஜெயந்தன் தடுத்து வைக்கப்பட்டார். ஜெயந்தனின் சகோதரனுக்கு உரித்தான இரண்டு மோட்டார் சைக்கில்கள், அவருடைய கையடக்கத் தொலைப்பேசியுடன் மனைவி மற்றும் தாயாரின் என மொத்தமாக 3 கையடக்கத் தொலைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர் கைது செய்யப்பட்டு இரண்டு மாதங்களை கடந்துள்ள நிலையில் கைப்பற்றப்பட்ட சொத்துக்கள் எவையும் மீள் வழங்கப்படவில்லை. பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களுக்காக பற்றுச்சீட்டுகள் கூட வழங்கப்படவில்லை. ஒருவார காலம் கடந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளமை குறித்து ஜெயந்தனின் குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்டது. எவ்வாறாயினும், அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக 1996 மனித உரிமைகள் சட்டத்தின் 28(1) பிரிவிற்கு அமைவாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கு தொலைநகல் மூலம் அறிவிக்கப்பட்டது. இரண்டு நாட்கள் கொழும்பு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி பூஸா முகாமிற்கு மாற்றப்பட்டிருக்கிறார். 23ஆம் திகதி வரை அவர் அங்கு தடுத்து வைக்கப்பட்டார்.
  3. கணேசபிள்ளை அறிவழகன் (எனப்படும் கலையரசன்) – விடுதலை புலிகள் இயக்கத்தின் புலனாய்வு பிரிவின் முக்கியஸ்தர் என்பதுடன், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை அலுவலகத்தில் முறைப்பாடு செய்கையில் 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.[7] கைது செய்வதற்கு முதல் நாள் அதாவது, 25ஆம் திகதி சிவில் உடையில் சென்ற மூவர் அறிவழகனின் வீட்டிற்குச் சென்று அவரது மனைவியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அறிவழகன் எங்கு தொழில் செய்கின்றார்? எப்போது வருவார்? எந்த பாதையில் வருவார் போன்ற கேள்விகளை இதன்போது கேட்டுள்ளனர். அந்தக் காலப்பகுதியில் பெரும் தொகையான முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டிருந்தமையினால் அறிவழகன் மறுநாள் காலை திருகோணமலை சட்ட உதவி அலுவலகத்திற்கு சென்றுள்ளார். திருகோணமலை மனித உரிமை அலுவலகத்தில் முறைப்பாடு செய்யுமாறு அவருக்கு இதன் போது ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. சட்ட உதவி அலுவலகத்திற்கு அருகில் முச்சக்கர வண்டியில் ஏறுகையில் பாதையின் மறுபக்கம் (கடல் பக்கம்) சீருடையில் மூன்று பொலிஸார் இருந்ததை மனைவி கண்டுள்ளார். ஆனால், அதனை அவர்கள் பெரிதாக பொருட்படுத்தியிருக்கவில்லை. எவ்வாறாயினும், அவர்கள் அங்கிருந்து புறப்பட்டபோது கறுப்பு கண்ணாடியைகட கொண்ட வெள்ளை மற்றும் சாம்பல் நிறத்திலான வான் ஒன்று பின்தொடர்வதை அவர்கள் கண்டுள்ளனர். ஒரு இடத்தில் முச்சக்கர வண்டியை முந்திக் கொண்டு செல்லவும் குறித்த வான் முற்பட்டுள்ளது. இந்நிலையில், மனித உரிமை அலுவலகத்திற்கு அருகில் செல்லுகையில் அந்த வான் நெருங்கி வருவதை கண்டமையினால் அச்சம் கொண்ட அறிவழகன் மனித உரிமை அலுவலகத்திற்குள் ஓடியுள்ளார். வானில் இருந்து இறங்கிய சிவில் உடையில் வந்த ஒருவர் ஆணைக்குழுவிற்குள் சென்று அவரை கைது செய்தார். இதன்போது அலுவலகத்தில் இருந்த பெண் அதிகாரி ஒருவர் வானில் இருந்து இறங்கு வந்தவரை யார் என வினாவினார். கொழும்பு பயங்கரவாத தடுப்புப் பிரிவில் இருந்து தான் வந்ததாக குறித்த நபர் தெரிவித்துள்ளார். இதேவேளை, சிவில் உடையில் வந்த மேலும் 4 பேர் மனித உரிமைகள் அலுவலகத்திற்குள் நுழைந்துள்ளனர். அத்துடன், பொலிஸ் சீருடையில் வந்த மூன்று அதிகாரிகளும் அலுவலகத்திற்குள் சென்றுள்ளனர். திருகோணமலை பொலிஸ் நிலையத்திலிருந்து வந்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் அறிவழகன் செயற்பட்டதாக கூறியே அறிவழகனை கைதுசெய்வதாக முதலாவதாக மனித உரிமைகள் அலுவலகத்திற்கு சென்ற அதிகாரி தெரிவித்துள்ளார். கைது குறித்து அறிவழகனின் மனைவிற்கு அறிவிக்கப்பட்டது. ஜூன் மாதம் 23ஆம் திகதி வரை அவர் கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டார். ஒவ்வொரு வாரமும் அவரது மனைவி கொழும்பிற்குச் செல்கின்ற நிலையில் அதிகாரிகள் அருகில் இருக்கின்றமையினால் அறிவழகனுடன் சுதந்திரமாக பேச முடியவில்லை என குறிப்பிட்டார். இரண்டு மாதத்திற்குள் கணவர் விடுவிக்கப்படுவார் எனவும் ஒரு சந்தர்ப்பத்தில் அதிகாரிகள் அறிவழகனின் மனைவிற்கு தெரிவித்துள்ளனர்.
  4. முத்துலிங்கம் விஜயகுமார் கேதீஸ்வரன் என்பவர் 10ஆம் திகதி கிளிநொச்சி நகரில் வைத்து கைது செய்யப்பட்டார். 2014 மே மாதத்தில் 18 வயதாக இருக்கையில் கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எழுதுகையில் கைதுசெய்யப்பட்டிருந்த இவர் 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். மறுபடியும் பாடசாலைக்குச் செல்ல முடியாது என்பதால் முச்சக்கர வண்டியொன்றினை வாங்குவதற்காக தந்தையிடம் பணம் கேட்டிருந்தார். பண்ணையை விற்பணை செய்து பணத்தை மகனின் வங்கி கணக்கில் வைப்பிலிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சாவகச்சேரியில் மீட்கப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பில் பணம் கிடைத்துள்ளது என்ற சந்தேகத்தின் பேரில் கேதீஷ்வரன் தற்போது தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. வவுனியா மற்றும் பூஸா முகாமில் தடுத்து வைக்கப்பட்ட காலப்பகுதியில் மகனை பார்ப்பதற்காகச் சென்றிருந்தபோது அவர் கடுமையாகத் தாக்கப்பட்டிருந்ததாக தந்தை குறிப்பிடுகின்றார். கிளிநொச்சி மனித உரிமைகள் அலுவலகத்தில் ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி குடும்பத்தினர் முறைப்பாடு (HRC/KI/056/2016) ஒன்றினை பதிவு செய்துள்ளனர்.கேதீஷ்வரன் கைது செய்யப்பட்டதன் பின்னர் அவரது சகோதரியான கிழக்கு பல்கழைக்கழக மாணவிக்கு 021-2283707 என்ற தொலைபேசி இலக்கத்தில் இருந்து அச்சுறுத்தலான அழைப்புகள் பல வந்துள்ளன. பல்கலைக்கழகம் குறித்த மாணவியின் பாதுகாப்பு தொடர்பில் செயற்பட்டதுடன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடும் (HRC/BCO/99/2016)  செய்யப்பட்டுள்ளது. கேதீஸ்வரன் தடுத்துவைக்கப்பட்டதன் பின்னர் அவரது தந்தையும் பாடசாலை செல்லும் மற்றுமொரு சகோதரனும் அடையாளமிடப்படாத பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு பலமுறை அழைக்கப்பட்டனர்.[8] ஜூன் மாதம் 23ஆம் திகதி வரையில் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.[9]
  5. முத்துலிங்கம் ஜெயகாந்தன் என்பவர் முல்லைத்தீவை வதிவிடமாக கொண்ட விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளியாவார். போரின் பின்னர் தொழில் நிமித்தம் வெளிநாடு ஒன்றிற்குச் சென்று 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி நாடு திரும்புகையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் தடுத்து  வைக்கப்பட்டு 7 மணித்தியாலம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இதன் பின்னர் அவர் விடுவிக்கப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைக்காக ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவின் 2ஆம் மாடிக்கு அழைக்கப்பட்டார்.[10] முற்பகல் 11.15 மணியளவில் விசாரணைப் பிரிவிற்குள் அழைத்து செல்லப்பட்ட நிலையில் பிற்பகல் 2.15 மணிக்கு அவர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் அறிவித்ததுடன், கைது குறித்து எழுத்து மூலமான அறிவிப்பு வழங்கப்படவில்லை என அவரது சகோதரி தெரிவித்தார்.[11] ஜெயகாந்தனை பார்வையிட அவரது சகோதரிக்குப் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் அன்றைய தினம் அனுமதியளிக்க வில்லை. மாறாக ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி) வந்து பார்க்குமாறு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். ஜெயகாந்தன் இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பதுடன் குடும்ப சூழல் காரணமாக அவர் வெளிநாடு சென்றிருந்தார். அவர் இறுதியில் புதிய மெகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டதுடன், 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22 ஆம் திகதி வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமிற்கு ஒரு வருடகால புனர்வாழ்விற்காக அனுப்பப்பட்டார்.
  6. விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் கட்டளையதிகாரியாக செயற்பட்ட இதிமலசங்கம் அரிச்சந்திரன் (எனப்படும் ராம்) 2016 ஏப்ரல் 23ஆம் திகதி அம்பாறை தம்புலுவிலில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்து கடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. இரண்டு நாட்களுக்கு பின்னர் பொலிஸ் பேச்சாளர் ஒருவரை சுட்டிக்காட்டி[12] ராம் பயங்கரவாத விசாரணைப் பிரிவில் உள்ளதாக ஊடகம் செய்தி வெளியிட்டதுடன், மேலதிக விசாரணைக்காக அவர் கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். 2009ஆம் போர் முடிவடைந்த பின்னர் ராம் புனர்வாழ்வுப் பெற்று 2013ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டார். அன்றிலிருந்து விவசாய நடவடிக்கைகளில் ஈடுப்பட்டதாக தெரியவருகின்றது.
  7. மற்றுமொரு விடுதலை புலிகள் இயக்கத்தின் கேனல் தர ஒருவரான கிருஷ்ணபிள்ளை கலைநேசன் (எனப்படும் லெப்டினன் கேனல் பிரபா) 2016 மே மாதம் 2ஆம் திகதி மட்டக்களப்பில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும், மேலதிக விசாரணைகளுக்காக கல்முனையில் அமைந்துள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இரண்டு குழந்தைகளின் தந்தையான கலைநேசன் கைது செய்யப்படும்போது மனைவியுடன் உணவகம் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்துள்ளார்.[13] [14] போரின் பின்னர் அவர் காணாமல்போயுள்ளதாக ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட போதிலும் இராணுவம் கைதுசெய்துள்ளமை கண்டறியப்பட்டது. பின்னர் 2009ஆம் ஆண்டிலிருந்து 2013ஆம் ஆண்டு விடுவிக்கப்படும் வரை புனர்வாழ்வு பெற்றார். ஜூன் மாதம் 23ஆம் திகதி வரை கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
  8. கணபதிப்பிள்ளை சிவமூர்த்தி (எனப்படும் நகுலன்) விடுதலை புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தராக செயற்பட்டவர். ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி யாழில் வைத்து இவர் கடத்தப்பட்டார்.[15] பின்னர் கொழும்பு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவில் உள்ளமை கண்டறியப்பட்டது. வடக்கில் கண்டுப்பிடிக்கப்பட்ட ஆயுத களஞ்சியசாலை ஒன்று தொடர்பாக சிவமூர்த்தி கைதுசெய்யப்பட்டார். புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளிகளில் இவரும் ஒருவரென அமைச்சரவை இணை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்ததாக[16] ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது. 28ஆம் திகதி வரை பயங்கரவாத விசாரணைப் பிரிவில் தடுத்து வைக்கப்படிருந்ததாக அறிவிக்கப்பட்டது.[17]
  9. தமோதரம்பிள்ளை ஜெயகாந்தன் கிளிநொச்சி – முருகண்டியில் வைத்து 2016 ஏப்ரல் 20ஆம் திகதி பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டார். 23ஆம் திகதி கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
  1. மகாதேவன் பிரசன்னா மற்றும் ஜெசுரத்னம் ஜெகாசெம்சன் (வவுனியா மாவட்டம்) பூவரசம் குளத்தில் வைத்து 2016 ஏப்ரல் 6ஆம் திகதி பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். 23ஆம் திகதியில் இருந்து கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டனர்.[18] இந்தச் சம்பவத்துடன் தொடர்புபட்டார் என நகுலன் என்பவரும் கைது செய்யப்பட்டதுடன் இறுதியாக அவர் நாராஹேன்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக மனித உரிமைகள் தொடர்பான சட்டதரணி ஒருவர் தெரிவித்தார். மேலும், விடுதலை புலிகளின் புலனாய்வு பிரிவு பிரதானி பொட்டு அம்மானின் தொப்பியை வைத்திருந்த குற்றச்சாட்டிலேயே இந்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.[19]
  2. சத்தியசீலன் ஜெயந்தன் பெர்னாண்டோ கிளிநொச்சியில் வைத்து 2016 ஏப்ரல் முதலாம் திகதி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாகவும் 23ஆம் திகதி வரை பூஸா முகாமில் தடுத்து வைக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.[20]
  3. சீதகோபால் ஆறுமுகம் (வவுனியா மாவட்டம்) நெடுங்கேனி பகுதியில் வைத்து ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி கைதுசெய்யப்பட்டார். கைதின்போது அவருடைய உளவு இயந்திரம் மற்றும் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட 100,000 ரூபா பணத்தையும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் பறிமுதல் செய்தனர். இதில் எவையும் குடும்ப உறுப்பினர்களுக்கு மீண்டும் வழங்கப்படவில்லை. 23ஆம் திகதி வரையில் கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.[21]
  4. இரண்டு பிள்ளைகளின் தந்தையான சங்கரலிங்கம் சசிகரன் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் ஊழியர் ஆவார். கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் வைத்து இவர் 2016 மே 30ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.[22] [23] அவர் தற்போது இருக்கும் இடம் மர்மமாக உள்ளது.
  5. மகாலிங்கம் வசந்தராசா கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து 2016ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி கைதுசெய்யப்பட்டதுடன், 23ஆம் திகதி வரை பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.[24]
  6. கணகலிங்கம் கமலக்கண்ணன் என்பவர் யாழ்ப்பாணத்தில் பணமாற்றும் நிலையம் ஒன்றை வைத்துள்ளதுடன் சாவகச்சேரியில் மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பாக ஏப்ரல் – மே மாதத்திற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் யாழில் வைத்து கைதுசெய்யப்பட்டதாக தெரியவந்தது. 23ஆம் திகதி வரை பூசாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.[25]
  7. சுப்ரமணியம் ஜனகராஜ் மற்றும் சுப்ரமணியம் சந்திரகுமார் ஆகிய இருவரும் சகோதரர்களாவர். 2016 ஏப்ரல் 06ஆம் திகதி அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று பகுதியில் உள்ள அவர்களது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் 8ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், 2016 ஏப்ரல் 12ஆம் திகதி நிபந்தனையின்றி விடுவிக்கப்பட்டனர். இந்த இருவரின் மூத்த சகோதரரான சுப்ரமணியம் தேவதாஸை கைது செய்வதற்காகவே இவர்கள் கைது செய்யப்பட்டதாக அவர்களது சட்டதரணிகள் தெரிவித்துள்ள நிலையில், ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டு 23ஆம் திகதி பூஸாவில் தடுத்து வைக்கப்பட்டார்.[26]
  8. சுப்ரமணியம் சிவகுமார் இலங்கை தமிழ் அரசு கட்சியின் (ITAK) வட மாகாண இளைஞர் அமைப்பின் செயலாளர். இவர் 2016 ஏப்ரல் 27ஆம் திகதி மன்னாரில் வைத்து பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பின்னர் மறு நாள் 100,000 ரூபா இரு பிணையில் விடுவிக்கப்பட்டார்.[27] விடுதலை செய்யப்பட்ட நாளிலிருந்து ஒருவருடத்துக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றத்தால் தடைவிதிக்கப்பட்டது.[28]
  9. பத்மநாதன் ரமேஷ்காந்தன் மற்றும் சுப்ரமணியம் கோகிலன் ஆகிய இருவரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதுடன், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் இரண்டு மாதங்கள் தடுப்பில் வைத்துள்ளனர். பின்னர் ஜூன் மாதம் 2ஆம் திகதி நிபந்தனையின்றி விடுவிக்கப்பட்டனர்.[29]
  10. கிரெனியர் செபதாசன் கடார் நாட்டில் வேலை செய்து விட்டு மீண்டும் இலங்கைக்குத் திரும்பிய நிலையில் 2016 ஏப்ரல் 18ஆம் திகதி மு.ப 10.00 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, கொழும்பு – 01 இல் அமைந்துள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவின் 2ஆம் மாடிக்கு விசாரணையின் நிமித்தம் வருமாறு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் அழைக்கப்பட்டார். குறித்த அழைப்பில் பிரிவின் பொறுப்பதிகாரியே கைச்சாத்திட்டிருந்தார். செபதாசன் விசாரணையின் பின்னர் 18ஆம் திகதி விடுவிக்கப்பட்டார்.[30]
  11. குணசேகரன் விஜயகுமார் ஏப்ரல் 27ஆம் திகதி கிளிநொச்சியில் இருந்த போது பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கொழும்பிலுள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவின் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு மறுநாள் விடுவிக்கப்பட்டார்.[31]

சந்தேகத்திற்கிடமான ஏனைய கைதுகள்

இராமசந்திரன் கணேஷ், நவரத்னராஜா ரஞ்சித் மற்றும் முத்துலிங்கம் யோகராசா ஆகிய மூவரும் தண்டனை நிறைவடைந்த நிலையில் மாலைத்தீவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டனர். இவர்கள் தற்போது வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவரின் தடுப்பு தொடர்பில் எந்தவொரு தகவலோ, எதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்று கூட அறியா நிலையே உள்ளது.

2007 மே மாதம் மாலைத்தீவு கடற்பரப்பில் வைத்து மாலைத்தீவு அதிகாரிகளால் அவர்கள் கண்டுப்பிடிக்கப்பட்ட நிலையில் துப்பாக்கிகளை அருகில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர். தம்மை இலங்கை, இந்திய மற்றும் மாலைத்தீவு அதிகாரிகளினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக கைதில் உள்ளவர்கள் குறிப்பிட்டனர். வழக்கு விசாரணை மற்றும் தீர்ப்பு வழங்குதல் என்பன ஒரு நாளில் மேற்கொள்ளப்பட்டது. மலையாளம் மொழியில் நிபுணத்துவம் கொண்டவர்களே தமக்கு வழங்கப்பட்டிருந்ததாக தெரிவித்த கைதிகள், தமிழ் மொழியை பேசாத ஒரு மொழிபெயர்ப்பாளர் வழக்கு விசாரணையின் போதும் இறுதி வரையிலும் இருந்த நிலையில் தமக்கு எதிரான தீர்ப்பும் குறித்து அறியாத நிலையிலேயே இருந்ததாகத் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிகளை வைத்திருந்த குற்றச்சாட்டிலேயே தங்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக நீதிமன்றில் இருந்து வெளியில் கொண்டு செல்லுகையில் அதிகாரியொருவர் குறிப்பிட்டதாக கைதிகளின் தெரிவித்தனர். மாலைத்தீவிற்கான இலங்கை தூதுவர் அவர்களை சிறையில் சந்தித்து இலங்கை செல்வதற்கு விருப்பமா? எனக் கேட்டுள்ளதுடன், மேன்முறையீடு தொடர்பான பொறிமுறையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு சென்றால் 2016ஆம் ஆண்டு புத்தாண்டில் விடுதலை பெறலாம் எனவும் தூதுவர் உறுதியளித்துள்ளார். மேன்முறையீட்டு நடவடிக்கை 2016ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வரையில் இழுப்படும் என்பதால் தூதுவரின் ஆலோசணைக்கு கைதிகள் விருப்பம் தெரிவிக்க தீர்மானித்தனர். கடற்படை கப்பலில் ஏப்ரல் மாதம் கைதிகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டனர். இரண்டு நாட்கள் கடலில் பயணித்ததாக கைதிகள் தெரிவித்தனர். கொழும்பு துறைமுகத்தில் இறக்கப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சில நாட்களின் பின்னர் அவர்கள் மெகசின் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதுடன் தற்போதும் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சட்டத்தரணிகள் மற்றும் குடும்பத்தினர் சிலரை தவிர வேறு யாரும் அவர்களைச் சந்திக்கவில்லை.

விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ளமையை மூவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். எவ்வாறாயினும் விருப்பத்தின் அடிப்படையில் புலிகளுடன் இணைந்து கொண்டதாக ஒருவர் மாத்திரமே ஏற்றுக் கொண்டுள்ளார். இதில் ஒருவர் 16 வயதில் புலிகள் இயக்கத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். 2007ஆம் ஆண்டில் கப்பலில் இலங்கைக்கு ஆயுதங்களை கொண்டு வருவதற்காக தம்மை அனுப்பியதாக தெரிவித்தனர். இதன்போதே மாலைத்தீவு அதிகாரிகள் அவர்களை கைது செய்துள்ளனர். ஆனால், இதன் போது அவர்கள் வசம் எவ்விதமான ஆயுதங்களும் இருக்கவில்லை என கைதிகள் குறிப்பிட்டனர். மாலைத்தீவு அதிகாரிகள் தம்மை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்தபோது படகில் தாம் இருந்தாகவும் குறிப்பிட்டனர். படகை செலுத்தியவர் இதன்போது உயிரிழந்தார்.[32]

ஜூன் மாதம் 02ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வீட்டில் தாய் மற்றும் மூத்த சகோதரியின் முன்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் ரேணுகரூபனை தாக்கி பலவந்தமாக வேனில் ஏற்றிச் சென்றதாக வேலாயுதப்பிள்ளை ரேணுகரூபனின் குடும்பத்தினர் தெரிவித்தனர். பல நாட்களின் பின்னரே அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த இடத்தை கண்டுபிடித்தாக அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.[33] யாழ். சிறைச்சாலையில் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். ஜூன் மாதம் 15ஆம் திகதி பினை மணு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் 16ஆம் திகதி சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சரீர பிணையில் விடுவிக்கப்பட்டார். வழக்கு முடியும் வரை வெளிநாட்டு பயணம் தடை செய்யப்பட்டதுடன், கடவுச்சீட்டும் நீதிமன்றினால் பறிமுதல் செய்யப்பட்டது.

ரேணுகரூபனின் வீட்டிற்கு அத்துமீறி நுழைந்தமை மற்றும் தாக்கியமை குறித்து ஜூன் மாதம் 22ஆம் திகதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததாக தெரிவித்த அவரது சட்டத்தரணிகள், ரேணுகரூபன் குற்றவாளியில்லை எனத் தெரிவித்த நிலையில் வழக்கு விசாரணை ஜூலை மாதம் முதலாம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதற்கு முன்னர் 2016 ஆண்டு ஜனவரி மாதம்  இலங்கைக்கு வந்த சந்தர்ப்பத்தில் ரேணுகரூபன், அவரது உறவு முறை மாமன் மற்றும் மூவரினால் தாக்கப்பட்டுள்ளார். தமக்கு எதிரான வழக்கு தொடர்பில் ரேணுகரூபன் அறியாமல் நாட்டை விட்டு வெளியேறியிருந்தார்.  எவ்வாறாயினும் அவரை கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் யாழ்ப்பாணத்திற்கு வந்த உடனேயே கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர். அவர் பிரித்தானிய பிரஜாவுரிமையை பெற்றிருந்தார்.

யாழ்ப்பாண சிறைச்சாலையில் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது சிறைக்குள் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றமையினால் ரேணுகரூபன் தான் அணிந்திருந்த சரத்துடன் சிறைக்கூடத்தில் இருந்து வெளியில் ஓடியுள்ளார். அவரது நெஞ்சுப்பகுதியில் புலி உருவம் பச்சை குத்தப்பட்டிருந்தமையினால் சிங்கள அதிகாரிகளினால் அவர் தாக்கப்பட்டதாக சட்டத்தரணி புனிதநாயகம் தெளிவுப்படுத்தினார். சிறைக்கூடங்களில் CCTV கண்காணிப்பு கமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளமையினால் என்ன நடந்தது என்பதை கண்டறிவது தற்போது கடினமான விடயமல்ல என சட்டதரணிகள் தெரிவித்தனர். தாக்கப்பட்டமையினால் காயங்களுக்கு உள்ளான ரேணுகரூபன் வைத்தியசாலையில் சில நாட்கள் சிகிச்சைப்பெற்றார். பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் ரேணுகரூபனை தாக்கியமை தொடர்பில் அவரது சட்டத்தரணி யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் செய்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் அவசரகால சட்ட விதிமுறை

பயங்கரவாத விசாரணைப் பிரிவு, பொலிஸ் மற்றும் பாதுகாப்பு அமைச்சிற்கு கைது செய்தல், விசாரணை செய்தல், ஒப்புதல் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளல் என்பவை தொடர்பில் பரந்தளவிலான அதிகாரத்தை பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் அவசரகால சட்ட விதிமுறை வழங்குகின்றது. சந்தேகத்தின் அடிப்படையிலேனும் கைது செய்வதற்கான பிடியாணையை பிறப்பிக்க முடியும். விசாரணைக்காக நபர் ஒருவரை வெவ்வேறு இடங்களுக்குக் கொண்டுச் செல்கின்ற நிலையில் நீதிமன்ற வழிநடத்தல் இன்றி சொத்துக்களை முடக்க முடியும். சந்தேக நபரை தடுத்து வைப்பதன் கால எல்லையை 18 மாதங்களாக நீடிக்க முடியும். ஆனால், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்படும் ஒருவர் வழக்கு விசாரணை முடியும் வரை கால வரையரையின்றி தடுத்து வைக்கும் நிலையே நடைமுறையில் இன்று காணப்படுகின்றது. கடந்த ஆண்டில் இரண்டு தமிழ் பெண்கள் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டமையானது முறையே 15 மற்றும் 7 வருடகால தடுப்பு காவலின் பின்னரே ஆகும். கைதில் இருக்கும்போது சித்திரவதைகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்ற நிலையில் அவை நீதிமன்றங்களின் கவனத்திற்கு மிக குறைவாகவே கொண்டு வரப்படுகின்றன. அவ்வாறான சம்பவங்களை நீதிவானின் கவனத்திற்குக் கொண்டுவந்த போதிலும் கைதிகளின் உரிமைகள் மற்றும் நலன்புரி விடயங்களைப் பாதுகாப்பது தொடர்பில் செயற்பட்டமை மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது.  ஏனெனில், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் நீதிவானுக்குத் தலையிடக் கூடிய சந்தர்ப்பங்கள் கிடையாது என்பதாகும். நீதிமன்றத்தைப் பாதுகாப்பு அமைச்சருக்கு கீழானதாகவே பயங்கரவாதத் தடைச்சட்டம் கருதுகின்றது.[34]

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படும் போது அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை கடந்த மே மாதம் மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டது.[35] இதில் கைதின்போது கைது செய்யப்பட்டவரின் தாய் மொழியில் எழுத்து மூலமாக கைதுக்கான உத்தரவை அறிவித்தல், அதிகாரிகள் தம்மை அடையாளப்படுத்தல் மற்றும் பறிமுதல் செய்யப்படும் பொருட்களுக்கு பற்றுச்சீட்டுக்களை வழங்குதல் என்பன உள்ளடங்குகின்றன. ஆனால், இந்தப் பரிந்துரைகள் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள இந்த பரிந்துரைகள் தொடர்பில் ஜனாதிபதியும் பலமுறை பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கு அறிவித்துள்ளார்.

அரசாங்கம் விரைவில் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமான தேசிய பாதுகாப்புச் சட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளதாக 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13ஆம் திகதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.[36] மேலும், இரண்டு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள் – திட்டமிட்ட குற்றங்களுக்கு எதிரான சட்டம் மற்றும் புலனாய்வு சட்டம் என்பவற்றை முன்னெடுக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அரசாங்கம் 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி இணை அனுசரணை வழங்கிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பிரேரணையில் உள்ளங்கியிருந்த பொது மக்கள் பாதுகாப்புச் சட்டத்தை மீளாய்வு செய்வதில் அரசாங்கத்திற்குள்ள கடப்பாடு தொடர்பில் எவ்விதமான அறிவிப்புகளும் காணமுடியவில்லை. 30 ஆண்டுக்காலமாக பயங்கரவாதத் தடைச்சட்டத்தை போன்றே, மிகவும் மோசமான சட்டவிதிமுறைகள் கொண்ட அவசரகால சட்டம் பொது மக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழேயே பலப்படுத்தப்பட்டிருந்தது.

சமநிலைத் தலையீடு (checks and balances), நீதித்துறை சுயாதீனம் மற்றும் மேன்முறையீடு அடங்கலாக பொதுவான சட்டத்தின் கீழ் அனைத்து குற்றங்களும் கையாளப்பட வேண்டும் என்பதே இந்தக் கட்டுரையை வெளியிடும் ஆசிரியர்களின் நிலைப்பாடாகும்.

சமநிலைத் தலையீட்டை நீக்க முயற்சிக்கும், நீதித்துறையின் சுயாதீனத் தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும், தனிநபர்களின் உரிமைகளுக்கும் சுதந்திரத்திற்கும் பாரிய அச்சுறுத்தலாக இருக்கும், நியாயமானதும் நீதியானதுமான கருத்துக்களை அடக்குவதற்கு பயன்படுத்தப்படும் பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும். அத்தோடு, புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களை அறிமுகம் செய்யாமல் இருப்பதும் முக்கியமானதாகவே நாங்கள் கருதுகின்றோம்.

அவசரகால சட்டம் விசேட சந்தர்ப்பங்களின்போது, நிர்ணயிக்கப்பட்ட குறுகிய காலப்பகுதியின்போது மாத்திரம் அமுலாக்கப்படுதல், சமநிலைத் தலையிடல் உட்பட மேன்முறையீட்டின் ஊடாக தனிநபரின் உரிமைகள் மீறப்படாமலிருக்க நாடாளுமன்றம் மற்றும் நீதித்துறையின் கடுமையான மேற்பார்வைக்கு உட்படல் போன்றன உறுதிப்படுத்தப்படும் வகையில் பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டம் மீளாய்வு செய்யப்பட்டு திருத்தத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும் என நாங்கள் உணருகின்றோம்.


[1] Parliament of the Democratic Socialist Republic of Sri Lanka, Human Rights Commission of Sri Lanka Act, No.21 of 1996 – http://www.hrcsl.lk/PFF/HRC%20Act.pdf

[2] Preliminary observations and recommendations of the Special Rapporteur on torture and other cruel, inhuman and degrading treatment or punishment, Mr. Juan E. Mendez* on the Official joint visit to Sri Lanka – 29 April to 7 May 2016 –http://www.ohchr.org/en/NewsEvents/Pages/DisplayNews.aspx?NewsID=19943&LangID=E

[3] News First, Suicide vest and explosives found in Chavakachcheri not a threat to national security says Secretary of Defensehttp://newsfirst.lk/english/2016/03/suicide-vest-and-explosives-found-in-chavakachcheri/132191

[4] Information provided by Centre for Human Rights Development (CHRD).

[5] WATCHDOG, White Vans and unlawful detention under the PTA –http://groundviews.org/2016/06/01/white-vans-and-unlawful-detention-under-the-pta/

[6] WD interview with the family.

[7] Based on WD interview with the family, and information provided by Centre for Human Rights Development (CHRD) who are providing legal representation to the detainee, and the Centre for the Promotion and Protection of Human Rights (CPPHR), Trincomalee.

[8] Based on information given by families to the Centre for Human Rights Development (CHRD) who are providing legal representation to the detainees.

[9] Ibid.

[10] Ibid.

[11] CeyloNews, TID arrests another Tamil man on return from abroad – VIDEO –http://www.ceylonews.com/2016/04/tid-arrests-another-tamil-man-on-return-from-abroad-video/

[12] Hiru News, A former LTTE leader Ram arrested by TID –http://www.hirunews.lk/131732/former-ltte-leader-ram-arrested-by-tid

[13] Tamil Guardian, ‘Is this right of the ‘good governance’ government’ asks wife of arrested LTTE member – http://tamilguardian.com/article.asp?articleid=17846

[14] Based on information given by families to the Centre for Human Rights Development (CHRD) who are providing legal representation to the detainees.

[15] Tamil Guardian, Former LTTE commander Nagulan abducted by TID,http://www.tamilguardian.com/article.asp?articleid=17786

[16] Tamil Guardian, Former LTTE commander Nagulan abducted by TID,http://www.tamilguardian.com/article.asp?articleid=17786

[17] Based on information given by families to the Centre for Human Rights Development (CHRD) who are providing legal representation to the detainees.

[18] Ibid.

[19] IBC News, புலிகளின் தொப்பி கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம்; சி..டியின்வேண்டுகோளை மறுத்தது நீதிமன்றம் – http://ibctamil.com/news/index/23112

[20] Based on information given by families to the Centre for Human Rights Development (CHRD) who are providing legal representation to the detainees.

[21] Ibid.

[22] Tamil Guardian, Tamil NGO worker arrested by TID in Kilinochchi,http://www.tamilguardian.com/article.asp?articleid=20039

[23] His arrest has been confirmed by the HRCSL, Jaffna.

[24] Based on information given by families to the Centre for Human Rights Development (CHRD) who are providing legal representation to the detainees.

[25] Based on information given to a human rights lawyer by the detainee when the lawyer met him at the Magistrate Court, Colombo.

[26] Based on information given by families to the Centre for Human Rights Development (CHRD) who are providing legal representation to the detainees.

[27] LankaSri News, Sivakaran Releasedhttps://www.youtube.com/watch?v=E9GRBrTt7P4

[28] Daily News, I was arrested to cripple our democratic struggle: Sivakaran –http://www.dailynews.lk/?q=2016/04/30/law-order/80314

[29] Information provided by the Centre for Human Rights Development (CHRD) who are providing legal representation to the detainees.

[30] Based on information given by families to the Centre for Human Rights Development (CHRD) who are providing legal representation to the detainees.

[31] Ibid.

[32] WD interview with all three detainees, one family of a detainee and prison officials;

[33] The Guardian, British Tamil ‘tortured and detained’ during Sri Lanka wedding trip –http://www.theguardian.com/law/2016/jun/11/sri-lanka-british-tamil-velauthapillai-renukaruban-tortured-wedding

[34] Parliament of the Democratic Socialist Republic of Sri Lanka, Human Rights Commission of Sri Lanka Act, No.21 of 1996 – http://www.hrcsl.lk/PFF/HRC%20Act.pdf

[35] Directives issued by the Human Rights Commission of Sri Lanka on arrest and detention under the Prevention of Terrorism Act – http://hrcsl.lk/english/wp-content/uploads/2016/05/Directives-on-Arrest-Detention-by-HRCSL-E-.pdf

[36] Daily Mirror, National Security Act to replace PTA – http://www.dailymirror.lk/110900/National-Security-Act-to-replace-PTA?fbrefresh=refresh

Continuing abuse under PTA: Abductions, Arbitrary Arrests, Unlawful Detentions and Torture என்ற தலைப்பில் கிரவுண்விவ்ஸ் தளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.