படம் | Eranga Jayawardena /AP, photoblog.nbcnews

ஜெனீவாவில் இருக்கும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் மனித உரிமைகள் பேரவையின் செயற்பாடுகளுக்கு உறுதுணையாகவிருக்கின்ற குழுவினர்தான் அதன் தூதுவர்கள் எனக் கூறப்படும் Special Rapporteurs ஆவார்கள். Rapporteurs என்பது ஒரு பிரெஞ்சுப் பதமாகும். விவாதித்துத் தீர்மானம் எடுக்கும் ஓர் அமைப்பிற்குத் தேவையான தகவல்களை அறிக்கை செய்பவர்கள் என இது பொருள்படும். உலகத்தில் சமாதானத்தைப் பேணும் அமைப்பாக ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் உருவாக்கப்பட்டபொழுது அதன் செயற்பாடுகளை ஆராய்தல், கண்காணித்தல், ஆலோசனை கூறுதல், பகிரங்கமாக தெரியப்படுத்துதல் என வகை பிரித்தார்கள். பிரச்சினை ஏற்படும் பட்சத்தில் அதனைத் தீர்ப்பதற்கு உதவும் கருவிகளே இவை. இந்தப் பணியைச் செய்வதற்காக ஐ.நா ஸ்தாபனம் Rapporteurs என அழைக்கப்படும் இந்த விசேட தூதுவர்களை நியமிக்கின்றது. ஒவ்வொரு தூதுவரும் ஒரு விடயம் குறித்தோ அல்லது குறிப்பிட்ட ஒரு நாட்டின் நிலைமைகள் குறித்தோ மனித உரிமைகள் ஆணையாளருக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டப்படுகின்றனர். சமீபத்தில் காணாமல்போனோருக்கான விசேட தூதுவர் இலங்கைக்கு வந்திருந்ததை நாம் அறிவோம். ராதிகா குமாரசுவாமி அவர்கள் பெண்கள் மீதான வன்முறை தொடர்பான விசேட தூதுவராக நியமிக்கப்பட்டிருந்தவர். இத்தூதுவர்கள் கொடுக்கின்ற அறிக்கைகளை வைத்துக்கொண்டும் தான் நேரடியாகச் சென்று அறியும் விடயங்களை வைத்துக்கொண்டுமே ஆணையாளர் மனித உரிமைகள் பேரவைக்கு ஒரு நாட்டைக் குறித்த தனது சிபாரிசுகளை சமர்ப்பிக்கின்றார். இவருடைய அறிக்கையின் அடிப்படையில்தான் அங்கு அங்கத்துவ நாடுகளினால் பிரேரணைகள் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படுகின்றன.

கடந்த வாரம் ஒன்று கூடுதலுக்கான உரிமை மற்றும் அமைப்பாக இயங்கும் உரிமை ஆகிய அடிப்படை மனித உரிமைகளுக்கு பொறுப்பாகவிருக்கும் திரு.மைனா கியாய் என்பவர் தனது பணிகள் தொடர்பாக ஆசிய நாடுகளில் செயற்படும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளைச் சந்தித்தார். ஜனநாயகத்துக்கான உலக இயக்கத்தினரால் சிங்கப்பூரில் ஏற்பாடு செய்யப்பட்ட இச்சந்திப்புக்கு சீனா, மொங்கோலியா, வியட்நாம், லாவோஸ், தாய்லாந்து, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், மலேசியா, மியன்மார், நேபாளம், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் இருந்தெல்லாம் பிரதிநிதிகள் வருகை தந்திருந்தனர். சிங்கப்பூரிலிருந்தும் பல செயல்வாதிகள் கலந்துகொண்டிருந்தனர். இந்நாடுகளில் ஒன்று கூடும் உரிமையை மீறும் அரசின் செயற்பாடுகளை திரு.கியாயின் அறிக்கைகளில் பிரதிபலிக்க வைப்பதே இச்சந்திப்பின் நோக்கமாக இருந்தது. அதற்காகப் பொதுக்கலந்துரையாடல்களும் குழு ரீதியான கலந்துரையாடல்களுமாக இது வடிவமைக்கப்பட்டிருந்தது.

ஆரம்பத்தில் மைனா கியாய் தனது பணி நோக்கு பற்றியும் பணிகளைப் பற்றியும் கூறிய விளக்கங்கள் எம்மில் பலருக்கு புதிதாகத்தானிருந்தது. விசேட தூதுவர்களாக வருபவர்கள் தொண்டரடிப்படையில்தான் பணி புரிகிறார்கள் என்பதையும் இது அவருடைய முழுநேரப் பணியும் அல்ல என்பதையும் நாம் அங்கு தெரிந்து கொண்டோம். தனது நாடாகிய கென்யாவில் சமூக செயல்வாதியாக செயற்பட்ட அனுபவம் கொண்டவர் கியாய். 2011ஆம் ஆண்டு முதல் விசேட தூதுவராக நியமிக்கப்பட்ட தன்மையினால் பிற நாடுகளுக்குச் சென்ற தனது அனுபவங்களையும் எம்முடன் பகிர்ந்து கொண்டார். மக்களை அமைப்பாக செயற்படாமல் தடுப்பது, அவர்களை ஆர்ப்பாட்ட ஊர்வலங்களில் கலந்துகொள்ள விடாமல் தடுப்பது போன்ற நடவடிக்கைகளில் கிட்டத்தட்ட சகல அரசுகளும் ஈடுபடுகின்றன என்பதை நாம் இவருடைய அனுபவங்களினூடாக அறியக்கூடியதாக இருந்தது. அவற்றின் அதிகாரத்துக்கு இவையெல்லாம் சாவுமணி அடிப்பது போலல்லவோ? உதாரணமாக, ருவாண்டாவில் எந்த அமைப்பும் தனது வருடாந்த நிதிகளில் பத்து வீதத்தினை மட்டுமே வெளிநாட்டு நிதி நிறுவனங்களிலிருந்து பெறலாம் என்கின்ற சட்டம் இருக்கின்றது. ஒரு வறிய நாட்டில் செயற்படும் அமைப்பு உள்ளுரில் நிதிகள் சேகரிப்பது எவ்வாறு சாத்தியப்படும்? இந்தவொரு சட்டத்தின் மூலமேயே சிவில் சமூக அமைப்புக்களின் செயற்பாடுகளை ஒரேயடியாக முறியடித்து விடலாம். சிங்கப்பூரில் ஒரேயொரு இடத்தில் மட்டுமே மக்கள் கூடி நிற்க அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், அந்த இடத்தில் அங்கு கூடுபவர்களைக் கண்காணிக்கும் பொருட்டு சுற்றிவர கமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றனவாம். சீனாவில் யாராவது ஒரு ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை நடத்துவதற்கான அனுமதியைக் கோரி காவல் துறையினருக்கு விண்ணப்பித்தால், அதற்கு அனுமதி கிடைக்கின்றதோ இல்லையோ, உடனேயே அவருடைய தேசிய அடையாள அட்டை மஞ்சள் வண்ணமாக கணினியில் மாற்றப்படும். இது கிட்டத்தட்ட பச்சை குற்றிக் கொள்வது போலாகும்.  இவர் எங்கு சென்றாலும், எந்த உல்லாச விடுதியில் தங்க நேர்ந்தாலும் தனது அடையாள அட்டையைக்கொண்டுதான் பதிவுசெய்ய வேண்டும். அதனைக் கணினியில் பதிவுசெய்யும் பொழுதே மஞ்சள் நிறம் தெரிந்து விட்டால் அவரைத் தங்கவிடாமல் செய்கின்ற விடுதிகளும், அவருக்குத் தேவையான சேவைகளை வழங்கா நிறுவனங்களும் இருக்கின்றனவாம். அரசுக்கு எதிராக செயற்படுபவர்களை தாம் அனுசரித்து நடந்தால் அரசின் கோபத்துக்கு ஆளாகவேண்டுமே என்கின்ற பயம் யாருக்குத்தானில்லை?

நாம் குழு வேலைகளில் இறங்கி எமது நாடுகளின் நிலைமைகளைப் பற்றி ஆராய்ந்தபோதுதான் எமது கலந்துரையாடல்கள் மிக சுவாரசியமாகத் திரும்பின. சுகல நாடுகளிலுமிருந்தும் பல பிரச்சினைகள் வெளிக்கொணரப்பட்டாலும், இலங்கைப் பிரச்சினை அதிவிசேஷம்தான் என எல்லோரும் ஒப்புக்கொண்டார்கள். இங்கிருந்து போன எங்களுக்கும் இவ்வளவு மோசமான நாட்டில் நாம் வாழ்கின்றோமா என்பது ஆச்சரியமாகத்தான் இருந்தது. எங்கள் நாட்டின் விசேஷம் என்னவெனில், உரிமைகள் இருக்கின்றன, ஆனால் அவை இல்லாமல் செய்யப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, எமது அரசியலமைப்புச் சட்டத்தில் உறுப்புரைகள் 12 முதல் 14 வரை அடிப்படை மனித உரிமைகள் யாவும் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனால், உறுப்புரை 15இல் தேசியப் பாதுகாப்பு நிமித்தம் இவை மட்டுப்படுத்தப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இதுவும் போதாமல், உறுப்புரை 16இல், இலங்கையில் 1978இற்கு முன்போ அல்லது பிறகோ வேறு ஏதாவது சட்டங்கள் உருவாக்கப்பட்டிருந்தால், அவை அடிப்படை மனித உரிமைகள் கொள்கைகளுக்கு முரணாக அமைந்திருந்தால், அடிப்படை மனித உரிமைகளன்றி அச்சட்டங்களே செல்லுபடியாகும் என வரையப்பட்டிருக்கின்றது. பதினாறு வயதினிலே ரஜனிகாந்தின் பன்ச் டயலொக்கில் சொல்லப் போனால் “இது எப்படியிருக்கு?” எத்தனையோ நாடுகளுக்குப் போயிருக்கின்றேன், ஆனால் நான் இப்படியொரு அரசியலமைப்புச் சட்டத்தினைப் பார்த்ததே இல்லையென வியந்தார் மைனா கியாய். ஒன்றில் உரிமைகள் தரப்படும் அல்லது தரப்படாது. இப்படிக் கொடுத்து வாங்குகின்ற யுக்தியை இங்குதான் பார்க்கின்றேன் என்றார் அவர். அது எமது சிங்களத் தலைவர்களின் அதிவிசேஷத் திறமை என்பது அவருக்குத் தெரியவில்லை.

அதேபோலத்தான் சமூக நிறுவனங்களின் செயற்பாடுகளும். எந்த நிறுவனமும் பதிவுசெய்யப்படலாம். ஆனால், அது செயற்படுவதற்கு  அரசின் அனுமதி வேண்டும். வருடாவருடம் அரசு சாரா நிறுவனங்கள் யாவும் மாவட்ட செயலாளரின் அனுமதி பெற்றுத்தான் அம்மாவட்டத்தில் இயங்க முடியும். இந்த அலுவலர்கள் ஒவ்வொரு நிறுவனத்தின் வேலையின் தரத்தை வைத்து அனுமதியை வழங்கினாலும் பரவாயில்லை. எந்த வேலையை அந்நிறுவனம் செய்ய வேண்டும் என்று தாங்கள் நினைக்கின்றார்களோ, அந்த வேலைக்குத்தான் அனுமதியை வழங்குகிறார்கள்! இதுவும் எப்படியிருக்கு? இதில் கிராம மட்டங்களில் மற்றும் பிரதேச செயலாளர் பிரிவு மட்டங்களில் செயற்படும் அரச அலுவலர்களின் ஊழல் நடவடிக்கைகளைத் தட்டிக்கேட்கும் தைரியத்தை மக்கள் மத்தியில் ஊட்டுகின்ற நிறுவனங்களின் பாடோ திண்டாட்டம்தான். மாவட்ட செயலர் கூட்டத்துக்கு வந்து இவர்கள் என்ன அந்த நிறுவனத்தைப் புகழவா போகின்றனர்? “இது என்ன செய்கின்றது என்பது தொடர்பாக எங்களுக்குத் தெரியாது, எங்களுக்கு ஒன்றுமே தெரிவிப்பதில்லை. இவர்களின் வேலையினால் அப்படியொன்றும் நல்ல விளைவு எற்படவில்லை…” என இவ்வாறு பொய்களை அடுக்குவார்கள். பிறகென்ன, நிறுவனத்துக்கு இயங்க அனுமதி கிடைக்காது. மக்கள்தான் கடைசியில் நல்ல சேவையை இழக்கின்றனர்.

இது மட்டுமல்லாமல், ஒவ்வொரு அமைச்சுக்கும் அரச திணைக்களத்துக்கும் எந்தவொரு அரசு சாரா நிறுவனத்துடனும் இணைந்து செய்ற்படக்கூடாது என்கின்ற பணிப்புரை வழங்கப்பட்டிருக்கின்றது. எங்கு போனாலும் அமைச்சரிடமிருந்து (இதனைக் கொழும்பு அரசு என வாசிக்கவும்) அனுமதி பெற்று வாருங்கள் என்னும் புராணம்தான். போதாக்குறைக்கு ஒவ்வொரு நிறுவனமும் தான் பெற்றுக்கொள்ளும் நிதிகளுக்கான வரியினையும் அரசுக்கு செலுத்தியாக வேண்டும். இதைவிட, வடக்கில் இருக்கவே இருக்கின்றது ஜனாதிபதி செயலணி. இதன் அனுமதியின்றி ஒரு திட்டமும் செயற்படுத்த முடியாது.  இப்படியான விபரங்களுடன் எமது பொது ஆர்ப்பாட்டங்கள் மீது பிரயோகிக்கப்படும் வன்முறையினை பற்றியும் கூற ஆரம்பித்தோம். அவ்வளவுதான், இலங்கை பற்றிய விசேட சம்பவக் கற்கைகள் எழுதித் தரப்படவேண்டும் என்று சபையில் கூறிவிட்டார்கள்.

விசேட தூதுவர்களின் அறிக்கைகளில் சிபாரிசுகள் பகுதியே மிகக் கடினமானது என்று மனந் திறந்தார் கியாய். “நாம் எல்லோரும் ஒரே வகையான சிபாரிசுகளைத்தான் திரும்பித் திரும்பி எழுதுகின்றோம். புதிய யுக்திகள் ஏதாவதிருந்தால் கூறுங்களேன்…” என்று கோரினார். ஐ.நாவின் ஒவ்வொரு உறுப்பு நாடும் Review of Human Rights எனப்படும் மனித உரிமைகள்  பற்றிய மீளாய்வுக்குத் தன்னை ஒவ்வொரு நான்கு வருடங்களும் உட்படுத்த வேண்டும். இம்மீளாய்வினில் மீளாய்வுக்கான காலகட்டத்தில் அரசுக்கெதிராக ஏற்பாடு செய்யப்பட்ட எத்தனை ஆர்ப்பாட்டங்கள் அமைதியாகத் தடையின்றி நடத்த விடப்பட்டன என்னும் எண்ணிக்கைகளைக் கோரலாமே என நான் முன்வைத்தேன். இங்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காகவேனும் சில ஆர்ப்பாட்டங்களை அவர்கள் அனுமதிக்க முயற்சி செய்வார்கள் அல்லவா? அதுபோலவே சமூக நிறுவனங்களின் செயற்பாட்டிற்கான நிதிகளை வழங்குவதற்கானதொரு விசேட பொறிமுறையையும் ஐ.நா. ஸ்தாபனம் ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டோம். இவை பற்றியெல்லாம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு எற்படுத்துவதற்கு செயற்படும் வகையில் தொடர்பூடகங்களுக்கு ஐ.நா. நிதிகள் மூலமாகப் பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும் எனவும் சிபாரிசு செய்யப்பட்டது.

அரசுகளின் எதேச்சாதிகாரத்திற்கான ஒரேயொரு மாற்று சிவில் சமூக அமைப்புக்களாகும். மக்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதும், ஒரு விடயப்பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் கொள்கை மாற்றங்களை அரசில் கொண்டுவருவதற்கான அழுத்த சக்தியாக செயற்படுவதும், அரசுகளின் உரிமை மீறல்களைப் பகிரங்கப்படுத்துவதும், மக்களைத் திரட்டி அரச அதிகாரத்துக்கு சவால் விடச் செய்வதும் இவைதான். பாதுகாப்பினையும், அபிவிருத்திச் செயற்பாடுகளை நெறிப்படுத்தும் வலுவினையும் கொடுக்கும் செயற்பாட்டினை மக்களே மிக அக்கறையுடன் ஆதரித்து ஊக்குவிக்க வேண்டும். எமது கலாசாரத்தில் கோயில்களுக்குக் கொடுக்கும் பழக்கம்தான் எங்கள் மத்தியில் இருக்கின்றது. இதனைச் சற்று மாற்றி நல்ல நிறுவனங்களை இனங்கண்டு அவற்றின் செயற்பாடுகளுக்கு நிதிகளை வழங்க மக்கள் முன்வரவேண்டும்.  அரசு சாரா நிறுவனங்களின் செயற்பாடுகளை ஆதரிக்கும் இக்கோரிக்கை  எமது அரச ஊழியர்களுக்கும் பொருந்தும். கட்டளையிட்டதை சிரமேற்கொண்டு செயற்படுத்துவதை விடவும் மக்களின் நீண்டகால நலனைக் கருத்தில்கொண்டு செயற்படும் கடமை அவர்களுக்கு உண்டு. நாம் நினைத்தால் ஒன்றிணைந்து இந்த அரசின் நிகழ்ச்சிநிரலை நிச்சயம் தோற்கடிக்கலாம்.

அடி என்னடி உலகம், இதில் எத்தனை கலகம்

தினக்குரல் பத்திரிகைக்காக சாந்தி சச்சிதானந்தம் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.