படம் | Getty Images, THE NEW YORKER

வெளிப்படைத்தன்மை என்பது தேசிய பாதுகாப்புக்கும் பொது நலனுக்கும் விரோதமானது என்பது பெரும் செல்வாக்கு கொண்டவர்கள், பணம்படைத்தவர்கள் மற்றும் சிறப்புரிமை கொண்டவர்களால் பெரிதும் நேசிக்கப்பட்ட பொய்யொன்றாகும். வெளிப்படைத்தன்மை இல்லாத மற்றும் எதிர்ப்பை தெரிவிப்பதற்கான உரிமை கிடையாத இடங்களில் தேசிய பாதுகாப்பும் பொது நலனும் பெரும் தீங்கினால் பாதிக்கப்படுகின்றன.

இலங்கையில் ராஜபக்‌ஷவின் மோசமான அட்டூழியங்களை வெளிப்படுத்துவதில், குறிப்பாக ராஜபக்‌ஷவின் ஆட்சி காலத்தின் போதும் கூட ஊழலை அம்பலப்படுத்துவோரும் (Whistleblowers) ஊடகங்களும் முக்கிய வகிபாகமொன்றை கொண்டிருந்தன. வீண் விரயம், ஊழல், குடும்ப ஆதிக்கம் மற்றும் ஏனைய அதிகார துஷ்பிரயோகங்கள் ராஜபக்‌ஷக்களுடன் முடிவுக்கு வந்துவிடவில்லை. அம்பலப்படுத்துவோரும் ஊடகங்களும் தொடர்ந்தும் ஆற்ற வேண்டிய பணி இருக்கிறது. மத்திய வங்கியில் இன்னுமொரு பிணைமுறி மோசடி சாத்தியம் மற்றும் விவசாயிகள் மாநாடொன்றை நடத்துவதற்கு 31 மில்லியன் ரூபா செலவு என்பன வெளிப்படுத்தல்களின் சமீபத்திய சுற்றில் உள்ளடங்குகின்றன[i].

அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு உண்மையை சொல்லவும் அதிகாரத்தில் இருப்பவர்கள் பற்றி உண்மையை வெளிப்படுத்தவும் ஊடகங்கள் தயாராக இல்லாவிட்டால், ஜனநாயகம் என்பது பெயரளவிலானதாக மட்டுமே காணப்படும். ஆட்சேபிப்பதற்கு நாம் அக்கறை கொள்ள வேண்டும். நாம் அறிந்திருக்கும் பட்சத்தில் மட்டுமே எம்மால் அக்கறை கொள்ள முடியும்.

பனாமா ஆவணங்களின் பின்விளைவான பெறுதல் மற்றும் கொந்தளிப்பு நிலைமை என்பன பொறுப்புக்கூறல் மற்றும் நீதி பற்றிய சிறு விடயத்தை கூட உறுதிசெய்வதில் சுதந்திர ஊடகத்தினதும் ஈடுபாடுடைய குடிமக்கள் தொகுதியினதும் அதிமுக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறன.

பனாமா ஆவணங்களுக்கு வடிவமளிக்கும் 11.5 மில்லியன் கோப்புகளானது 2015ஆம் ஆண்டில் ஜேர்மன் செய்தித்தாளான சுயாடொயெட்ஸே ஷய்டங்கிற்கு (Sueddeutsche Zeitung) கசியவிடப்பட்டிருந்தன[ii]. இந்த கசியவிடலானது ‘ஜோன் டோ’ என்று தம்மை அழைத்துக்கொள்ளும் ஊழலை அம்பலபடுத்துபவரால் தொகுப்புகளாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆவணங்களானது பகிரங்கப்படுத்தப்படுவதற்கு முன்னதாக, ஆரம்பத்தில் புலனாய்வு ஊடகவியலாளர்களின் சர்வதேச கூட்டமைப்பினாலும் (International Consortium of Investigative Journalists) அதன் பின்னர் உலகம் முழுவதிலும் இருந்தான சுமார் 100 ஊடகவியலாளர்கள் மற்றும் ஆசிரியர்களினது பங்களிப்புடனும் முழுமையாக ஆராயப்பட்டுள்ளது. இந்தப் பணியில் அவ்வளவு பெரிய எண்ணிக்கையிலானோர் ஈடுபட்டிருந்த போதிலும் இரகசியத்தன்மை பேணப்பட்டுள்ளது. இந்த துர்நாற்றம் கிளப்பும் குண்டை செலழிக்கச் செய்வதற்கு காலம் கடந்துவிட்ட கட்டம் வரும்வரை என்ன நடந்துக்கொண்டிருக்கிறது என்பதை அரசாங்கங்களோ அல்லது புலனாய்வு முகவரமைப்புகளோ அறிந்திருக்கவில்லை.

எந்த அரசியல் வர்க்கமும் ஊழலுக்கு விடுபட்டதொன்றல்ல என்பதை நினைவூட்டுவதாக பனாமா ஆவணங்கள் அமைந்துள்ளன. (குறிப்பிடப்பட்டுள்ளவற்றின் மத்தியில் 3 இலங்கை நிறுவனங்களும் இருக்கின்றன. இருப்பினும், அவற்றின் பெயர்கள் இன்னும் வெளிச்சத்திற்கு வரவில்லை). இதுவரை 148 அரசியல்வாதிகள் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ள பனாமா சட்ட நிறுவனமான மொசெக் பொன்செகாவிலிருந்தான கோப்புகள் இனம், மதம் மற்றும் கருத்தியல் நம்பிக்கை தொடங்கி ஒவ்வொரு பிரிவிலும் பரவியுள்ளன. பொருளாதார பிரபலங்கள், விளையாட்டு மற்றும் கலாசார முக்கியஸ்தர்கள் மற்றும் உலகளாவிய ஊழல் எதிர்ப்பு கண்காணிப்பு அமைப்பான ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனலின் சிலி கிளையின் தலைவர் (அதன் பின்னர் அவர் இராஜிநாமா செய்துள்ளார்) போன்றவர்களும் மேற்படி கோப்புகளில் உள்ளடங்குகின்றனர்.

இந்த ஊழல் விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் பொதுவான அம்சமொன்றை கொண்டுள்ளனர். அதாவது, ஏதேனும் ஒரு வகையில் அதிகாரத்தையும், அந்த அதிகாரத்தை தமது சொந்த நிதி அனுகூலத்துக்காக பயன்படுத்தும் விருப்பதையும் தமக்கே கொண்டிருந்துள்ளனர்.

இயங்கு நிலையிலுள்ள ஜனநாயகமொன்றில் பொறுப்புக்கூறலின் படிநிலையொன்றை அடைதலுக்கு நிமிடம் அல்லது குறுங்காலத்திலான சிறிய சந்தர்ப்பமொன்றேனும் காணப்படுகின்ற போதிலும், ஜனநாயகம் இல்லாத நிலைமையில் அவ்வாறான சாத்தியம் எதுவும் இருப்பதில்லை. ஐஸ்லாந்து பிரதமர் ‘பதவி விலக’ நிர்ப்பந்திப்பட்டார் (சொற்பொருள் ஆய்வின் மூலம் ஆறுதல் தேடி, தாம் இராஜினாமா செய்யவில்லை என்று அவர் கூறியிருந்தார்). இந்த ஊழல் விவகாரத்தில் தமது நெருங்கிய கூட்டாளிகள் ஊடாக தொடர்புப்பட்டுள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு அவ்வாறான நிலை நேரிடுவதற்கான வாய்ப்புகள் காணப்படவில்லை. தமது தந்தையின் கடல் கடந்த நிதி விடயத்தில் தமது ஈடுபாடு தொடர்பில் பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரூன் நெருக்கடியில் இருக்கிறார். சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் மைத்துனர் உட்பட அந்நாட்டின் பல முன்னணி அரசியல்வாதிகளின் குடும்பங்கள் இந்த ஊழல் விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ளன. எனினும், இந்தத் தகவல் கசிவுகளை அடிப்படையற்றது என்று நிராகரிப்பதும் இணைய கட்டுபாடுகளை மேலும் இறுக்குவதுமே இது தொடர்பில் பெய்ஜிங்கின் பதில் நடவடிக்கையாக அமைந்துள்ளது[iii]. ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதியும் சவூதி அரேபிய மன்னரும் இதில் சம்பந்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருக்கின்ற போதிலும் கூட சவூதியர்களும் ஐக்கிய அரபு இராச்சியத்தினரும் எதையும் செய்திருக்காத அதேநேரம், தமது பிள்ளைகளின் கடல் கடந்த கணக்குகள் தொடர்பில் சுயாதீன விசாரணையொன்றை நடத்துவதாக பாகிஸ்தான் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார் (மிகவும் இறுக்கமான மத அடிப்படைவாதம், ஊழலுக்கு எந்த வகையிலும் தடையாக அமைந்திருக்கவில்லை என்பது தெளிவாகிறது).

செயலில் குடியுரிமை

ஊடக வெளிப்படுத்தல்களால் மட்டும் தனித்து பொறுப்புக்கூறலையும் நீதியையும் உறுதிசெய்ய முடியாது. சமூக அக்கறைகள் மற்றும் பொது எதிர்ப்புகள் மூலம் அவற்றுக்கு ஆதரவளிக்கப்பட வேண்டும்.

ஜனநாயகம் இல்லாத நிலைமையில் போலன்றி,  ஜனநாயகமொன்றில் (மக்களாட்சி) உள்ள பிரஜைகள், தவறுகள் பற்றிய தகவல்களை பெறுவதற்கும், அதேபோல் அந்தத் தவறுகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்குமான இடப்பரப்பை கொண்டுள்ளனர். அரசியல்வாதிகளுக்கு பெரிதும் தேவையாக இருக்கும் மூடி மறைப்புகளை, ஊழலை அம்பலப்படுத்துவோர், ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் ஆதரவளிப்புகளுடன் இருக்கும் போது ஜனநாயகமொன்றில் செய்வது அவர்களுக்கு மிகக் கடினமானதாகவே இருக்கும்.

ராஜபக்‌ஷ ஆட்சிக்கும் சிறிசேன – விக்ரமசிங்க அரசாங்கத்துக்கும் இடையிலான பிரதான வித்தியாசங்களில் இதுவும் ஒன்றாகும். அப்போது, தகவல்கள் வெளிவருவது கடினமாக இருந்ததுடன், எதிர்ப்பதற்கு பொதுமக்கள் மிகவும் மாறுபாடுடையவர்களாகவும் இருந்தனர். தற்போது, தவகல்கள் மிகவும் சுதந்திரமாக வெளிவருவதுடன், பொதுமக்கள் அவர்களது குரல்களை எழுப்புகின்றனர். ஜனநாயக அரசாங்கங்களின் பொதுத்தன்மையைப் போன்று தற்போதைய ஆட்சியானது ஒப்பீட்டளவில் பொதுமக்கள் அபிப்பிராயங்களை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது. ஏற்கனவே, அதிகளவில் உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உதவித்தொகைகளை அதிகரிப்பதற்கான முட்டாள்தனமான திட்டமொன்றின் ரத்து மற்றும் பெறுமதி சேர் வரி (வற்) அதிகரிப்பின் ஒத்திவைப்பு என்பன இதற்கு சிறந்த உதாரணங்களான விடயங்களாகும்.

குடிமக்களின் ஈடுபாடு வேறுபட முடியும். விடயம் எதுவாக இருப்பினும், அக்கறையின் ஒவ்வொரு அடையாளமும் எதிர்ப்பின் ஒவ்வொரு செயலும், தேர்தல்களுக்கு இடையில் தங்களது தனிப்பட்ட செயலெல்லைகளில் இருந்து வெளிப்படுவதற்கும் பொது ஸ்தானத்தில் வகிபாகமொன்றை கொண்டிருப்பதற்கும் இலங்கை குடிமக்களின் பங்கு தொடர்பில் புதிய ஆர்வமொன்றை சுட்டிக்காட்டுகிறது. இதுவே ஊக்குவிக்கப்பட வேண்டிய போக்காகும். அதிகாரமானது வெறுமனே ஒழுக்கங்கெட மட்டும் செய்யவில்லை. அது மனதை குழப்பவும், அடிப்படை பொது அறிவை சாகடிக்கவும், அதேபோல், சுய அழிவுக்கான அழிவுச்செயல்களை ஊக்குவிக்கவும் செய்கிறது. சிறிசேன – விக்ரமசிங்க நிர்வாகமானது ராஜபக்‌ஷவின் பாதையில் அதிக தூரம் செல்லாதிருப்பதை உறுதிசெய்து கொள்வதற்கு பொது மக்களின் ஈடுபாடு அத்தியாவசியமானதாக இருக்கும்.

நாட்டின் மின்சக்தி நெருக்கடிக்கு தீர்வாக அதிக நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணித்தலுக்கு அப்பால் சிந்திப்பதற்கான ராஜபக்‌ஷவின் இயலாமையை ஒத்த புதிய அரசாங்கத்தின் இயல்பை உதாரணத்துக்கு எடுத்து கொள்வோம். நிலக்கரி மின் உற்பத்தியை தழுவிக்கொள்வதானது நாம் நிலக்கரி சுரங்கங்களை கொண்டிருப்பதான பொருளாதர உணர்வில் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். நாம் செய்யக்கூடாது. அத்துடன், நாம் மிகுதியாக கொண்டிருக்கும் மூலவளமொன்றை நோக்கி பிரவேசிப்பதற்கு பதிலாக சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்காததுடன் மட்டுமல்லாது, பொருளாதார ரீதியாக எந்த அர்த்தமும் இல்லாத மின்சக்தி உற்பத்தி முறைமையொன்றுக்கு நாம் சூரிய சக்தியை தெரிவுசெய்கிறோம். உலளகளாவிய நிலக்கரி விலைகளில் இதுவரை இல்லாத வீழ்ச்சி ஏற்பட்டாலுமே கூட ரூபாவுக்கான அந்தஸ்தை வழங்கி நாம் நிலக்கரியை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும். இலங்கை பாவனையாளர்களுக்கு மலிவான மின்சக்தி என்பது கனவாகவே தொடர்ந்துமிருக்கும்.

அடிக்கடி பழுதடையும் நிலக்கரி மின் உற்பத்தி நிலையமொன்று எம்மிடம் தற்போது இருக்கிறது. இது சீனாவின் அன்பளிப்பொன்றாகும். இன்னுமொரு நிலக்கரி மின் உறபத்தி நிலையமொன்று நிர்மாணிக்கப்படவுள்ளது. இது இந்தியாவின் அன்பளிப்பொன்றாகும்.

நிலக்கரி உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் சீனா முதலிடத்திலுள்ளது. இந்தியா அதில் மூன்றாவது ஸ்தானத்தை கைப்பற்றியுள்ளது. சீனாவும் இந்தியாவும் முன்னணி சூரிய சக்தி உற்பத்தியாளர்கள் என்பதும் இங்கு சுவாரஸ்யமான விடயமாகும். இந்த இரு நாடுகளும் சூரிய சக்தியை தழுவிக்கொள்ளும் அதேநேரம், எதற்காக அவை இலங்கையில் நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிக்கின்றன? தங்களுக்கு தேவையற்ற நிலக்கரியை குவிக்கும் இடமாக அவர்கள் இலங்கையை பயன்படுத்துகின்றனரா?

சுற்றுச்சூழல் என்பது கொழும்பைச் சேர்ந்த வசதிப்படைத்த சிறுபான்மையினருக்கு எளிதில் புரியாத விடயமல்ல. அது முழு நாட்டையும் குறிப்பாக, வருமான படிநிலைகளில் கீழ் முனையில் இருப்பவர்களை பாதிக்கும் விடயமாகும். சுற்றுச்சூழல் சீரழிவுக்கு பொருத்தமற்ற விகிதாசாரத்தில் அதிகமான விலையை செலுத்த அவர்களே நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.

ஐ.நா. தகவல்களின் பிரகாரம் 2015ஆம் ஆண்டே அதிக வெப்பமான வருடமாக பதிவாகியுள்ளது. நாசா தகவல்களுக்கு அமைய பார்க்கும்போது, 2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமானது இதற்கு முந்தைய அனைத்து உலகளாவிய வெப்பநிலை சாதனைகளையும் முறியடித்துள்ளது. உலக வெப்பமயமாதல் என்பது உண்மையொன்றாகும். அது எரிந்துக் கொண்டிருக்கும் யதார்த்தம் என்பதுடன், குறிப்பாக எம்மை போன்ற நாடுகளுக்கு சம்பந்தமுடையதாகும். எந்த மதத்தைச் சேர்ந்த தெய்வங்களினதும் தெய்வீக தலையீட்டை உதவிக்கு அழைப்பதன் மூலம் இந்தச் சவாலை தீர்க்க முடியாது. உலக வெப்பமயமாதலானது பெரும்பாலும் மனிதனால் உருவாக்கப்பட்டதொன்று என்பதால் அந்த தெய்வங்கள் இருந்தாலுமே கூட இந்த விடயத்தில் அவர்களாக ஈடுபடுவதற்கான சாத்தியமில்லை.

பாரம்பரியத்தின் தாங்க முடியாத சுமை

ராஜபக்‌ஷாக்கள் இலங்கையை கடந்த காலத்துக்கு பின்னோக்கி கொண்டு செல்லும் அவர்களது ஓய்வில்லாத முயற்சியில் வன்புணர்ச்சி திருமண சட்டமொன்றை இயற்றி 2014ஆம் ஆண்டில் இன்னுமொரு மைல்கல்லொன்றை பதிவிட முயற்சித்தனர். பாலியல் பலாத்காரம் செய்தவர் அவரால் பாதிக்கப்பட்டவரை திருமணம் செய்தவன் மூலம் சட்ட விசாரணை நடவடிக்கையில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கான இயலுமையை இந்த சட்டம் அளித்திருந்தது. அதிகரித்துவந்த சிறுவர் பாலியல் பலாத்கார அச்சுறுத்தல்களுக்கு இதுவே ராஜபக்‌ஷவின் தீர்வாக இருந்தது. சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த, சபாநாயகர் சமல் ராஜபக்‌ஷ மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோர் இதற்கு வக்காலத்து வாங்கியவர்களில் அடங்குகின்றனர்.

பாலியல் பலாத்காரங்களுக்குப் பொறுப்பானவர்கள் பெண்களே என்றும், ஆண்கள் கிடையாது என்றும் சபாநாயகர் ராஜபக்‌ஷ கருத்தொன்றை முன்வைத்திருந்தார். “பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு யாரும் ஆண்களை பொறுப்பாக்க முடியாது என்பது எனது அபிப்பிராயமாகும். அவற்றுக்குப் பெண்களே பொறுப்பானவர்கள்…”[iv] ஜனாதிபதி ராஜபக்‌ஷ அதற்கும் ஒருபடி மேலே சென்று, பாதிக்கப்பட்ட குழந்தை இணங்கியிருந்தால் பாலுறவு சம்மத வயதுக்கு கீழுள்ள பருவமடையாதவருடன் பாலியல் உறவில் ஈடுபடுவதானது உண்மையில் பாலியல் பலாத்கரமாகாது என்று தெரிவித்திருந்தார். “பருவமடையாத பெண் பிள்ளைகள் பாலுறவு சம்மத வயதுக்கு அடையாத நிலையில் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பினும், அந்த பாலியல் செயலானது இணக்கத்துடனேயே மேற்கொள்ளப்பட்டிருப்பின், குற்றம் புரிந்தவர் பாதிக்கப்பட்டவரை அவரது சம்மதத்துடன் திருணம் செய்துக்கொள்வதை அனுமதிக்கும் சட்டமொன்று இருப்பது உகந்ததாக இருக்கக்கூடும்.”[v]

18 வயதாகும் வரை இலங்கையர் ஒருவரால் வாக்களிக்கவோ, வாகனம் செலுத்தவோ அல்லது மது அருந்தவோ முடியாது. இவ்வாறான கட்டுப்பாடுகள் உலகளாவிய ரீதியல் விதிக்கப்பட்டுள்ளன. ஏனெனில், முக்கிய விடயங்கள் தொடர்பில் பக்குவமான மற்றும் நன்கறிந்த தெரிவுகளை மேற்கொள்வதில் மனிதர்கள் குறித்தவொரு வயதை அடையும் வரை குறைவான ஆற்றலையே கொண்டுள்ளனர். பாலுறவு சம்மத வயதுக்கு கீழுள்ள பருவமடையாதவருடன் பாலியல் உறவில் ஈடுபடுவது பற்றிய பாலியல் வல்லுறவு தொடர்பான சட்ட ஏற்பாடுகளும் இதே வகையை சேர்ந்தவையே. குழந்தைகளின் அறியாமை, நம்பிக்கை, அனுபவின்மை மற்றும் பேரச்சத்தை தங்களது சுயநலத்துக்காக பயன்படுத்துவதில் இருந்து வயதுவந்தவர்களைத் தடுப்பதே இவற்றின் பிரதான நோக்கமாகும்.

அதிர்ஷடவசமாக ராஜபக்‌ஷ ஆட்சியை வாக்காளர்கள் இரு தடவைகள் நிராகரித்ததை அடுத்து கடந்த காலத்தை நோக்கிய இலங்கையின் கட்டாய நகர்வு முடிவுக்கு வந்தது. ஆனால், அடிப்படை உரிமைகளை மீறும் சிறுவர்களுக்கு தீங்கிழைக்கும் பண்டைய நடைமுறைகளுக்கான விசுவாசமானது அனைத்து சமூகங்களினதும் அனைத்து மதங்களினதும் பழமைவாதிகளுக்கு மத்தியிலேயே பெரும்பாலும் காணப்படுவதை இந்த கருத்துகள் மெய்பித்து காட்டுகிறது. ஞான உபதேச மதிப்புகளை நிராகரிக்கும் யாரேனுமிடருந்தும் பெரும்பாலான ஆண்களுக்கும், அனைத்து பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கும் உரிமைகள் இல்லாத போதான தொலைவிலான நூற்றாண்டில் வாழும் சிந்தனையில் உள்ளவர்களிடமிருந்துமே அது வெளிப்படக்கூடும்.

சிறுவர் திருமணமானது (அது சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் வல்லுறவை சட்டபூர்வமாக்குவதை விட வேறெதுவுமில்லை) சித்திரவதை அல்லது ஏதேச்சாதிகாரமான கைது போன்றே பொதுவான எமது கடந்த காலத்தின் நினைவுச் சின்னமொன்றாகும். பிறப்பின் போது ஆயுட்காலமானது 40 வயதை தாண்டுவதே அரிதாக காணப்பட்ட மற்றும் முடிந்த வரையில் இளம் வயதில் திருமணம் முடித்தல் மக்கள் உணர்வாக இருந்த காலங்களில் பல நூற்றாண்டுகளாகவே சாதாரணமாகக் காணப்பட்டதாக பெரும்பாலான மனிதகுலம் கருதிய நடைமுறையொன்றாக அது இருந்தது. சமூக மனபாங்குகளும் இதில் வகிபாகமொன்றை கொண்டிருந்தது. பிள்ளைகள் தளபாடங்களைப் போன்ற கருதப்பட்டனர். மேற்குலகத்தில் இருந்து கீழைத்தேய உலகம் வரையான பெரும்பாலான கலாசாரங்களில் பிள்ளையை விற்பதற்கான அல்லது கொல்வதற்கான உரிமையை பெற்றோர் கொண்டிருந்தனர்.

21ஆம் நூற்றாண்டில் இருப்பதற்கு ஆட்சேபனையற்ற காரணத்தை சிறுவர் திருமணம் கொண்டுள்ளது. மதம் மற்றும் பாரம்பரியத்தினால் நியாயப்படுத்தப்படும் ஏழ்மை மற்றும் அறியாமை, யுத்தம் மற்றும் பாதுகாப்பின்மை இன்னும் நடத்தப்படுகிறது. பொது உணர்வுகளுக்கு மாறாக இது உலகளாவிய பிரச்சினையொன்றாகும். இஸ்லாமிய நாடுகளுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்ட பிரச்சினையொன்றல்ல. பழங்குடியின நடைமுறைகள் ஆழமாக வேரூன்றியிருக்கும் ஆபிரிக்க நாடுகளில் சிறுவர் திருமணங்கள் உயர் மட்டங்களில் நீடித்திருக்கின்றன. ஐ.நா. ஆதாரங்களின் பிரகாரம் பார்க்கையில், தென் அமெரிக்க மற்றும் கரீபியன் நாடுகளிலும் சிறுவர் திருமணங்கள் காணப்படுகின்றன. டொமினிக்கன் குடியரசு, ஹொன்டுராஸ், பிரேசில், குவாட்டமாலா, நிக்காராகுவா, ஹெய்ட்டி மற்றும் ஈக்குவாடோர் போன்ற இஸ்லாமிய மக்கள் இல்லாத அல்லது புறக்கணிக்கத்தக்க அளவே உள்ள நாடுகளிலேயே இவ்வாறான அதிக சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதன் காரணமாத்தான் சிறுவர் திருமண விவகாரமானது மதத்தில் இருந்து நீக்கப்பட்டு அடிப்படை உரிமைகள் விடயமொன்றாக தீர்க்கப்பட வேண்டியுள்ளது.

சிறுவர் திருணம் என்பது இலங்கையிலும் பிரச்சினையொன்றாகவே இருக்கிறது. அது பெருந்தோட்ட தமிழ் சமூகத்தினர் மத்தியில் குறைந்து வருகின்ற போதிலும், இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க பிரச்சினையொன்றாகவே தொடர்ந்தும் காணப்படுகிறது.

இலங்கையில் திருமணத்துக்கான குறைந்தப்பட்ச வயதை நிர்ணயிக்கும் (பெண்களுக்கு 16 வயது) 1995ஆம் ஆண்டு சட்டத்தில் இருந்து முஸ்லிம்கள் விலக்களிக்கப்பட்டுள்ளனர். பல இஸ்லாமிய நாடுகள் ஐ.நா. வழிகாட்டல்களுடன் இணக்கமானதாக பெண்களுக்கான குறைந்தப்பட்ச திருமண வயதை கொண்டிருப்பதனால் இந்த விதிவிலக்கானது புரிந்துக்கொள்ள முடியாததாக உள்ளது. உதாரணமாக, ஐ.நா. ஆதாரங்களின் பிரகாரம், அல்ஜீரியா, பங்களாதேஷ், ஜோர்தான், ஈராக், மலேசியா மற்றும் மொரோக்கோ ஆகிய நாடுகளில் பெண்களுக்கான குறைந்தப்பட்ச வயதெல்லை 18 ஆகக் காணப்படுகிறது. அதேபோல், டுனிசியாவில் 20 ஆக இருக்கிறது. ஆனால், இலங்கையில் பெண் பிள்ளையொன்று முஸ்லிம் குடும்பமொன்றை சேர்ந்ததாக இருந்தால் 12 வயதில் அல்லது காதி நீதிமன்றத்தின் சம்மதத்துடன் அதற்கு குறைவான வயதிலும் கூட திருமணம் செய்ய முடியும் என்று தெரிகிறது.

இலங்கை முஸ்லிம் குழந்தைகள் முஸ்லிம் அல்லாத அவர்களது சகோதரர்கள் போன்ற அதே உரிமைகளை அனுபவிப்பதை உறுதிப்படுத்துவதோடு, இதனை புதிய அரசியலமைப்பு முடிவுக்குக் கொண்டு வரக்கூடும். மொத்தத்தல் எப்படியிருந்தாலும், இஸ்லாமிய பெரும்பான்மை நாடான இந்தோனேஷியா முஸ்லிம் பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயதாக 16ஐ கொண்டிருக்கையில், இலங்கையில் ஏன் கூடாது?

பழைய நம்பிக்கைகளை எதிர்த்து போராடுவதற்கு பெரும்பாலும் சட்டங்கள் போதுமானதாக இல்லை. ஆப்கானிஸ்தானில் குறைந்தப்பட்ச திருமண வயது 18 என்பதுடன் சேர்த்து சிறுவர் திருமணங்களின் தாக்கம் அதிகளவில் காணப்படுகிறது. விழிப்புணர்வுகள் மற்றும் ஊக்கமளிப்புகளினால் ஆதரவளிக்கப்படும் போதே சட்டங்கள் செயற்படுகின்றன. தங்களது மகள்மாரை தொடர்ந்து பாடசாலைகளுக்கு அனுப்புவதற்கு குடும்பங்களுக்கு நிதிச் சலுகைகளை வழங்குவதன் மூலம் சிறுவர் திருமணத்துக்கு எதிரான சில நடவடிக்கைகளை இந்திய மாநிலமான ஹரியானவும் அதேபோல், எத்தியோப்பியாவும் மேற்கொண்டுள்ளன.

அனைத்து மனித உரிமைகளையும் போன்று சிறுவர் உரிமைகளும் உலகளாவிய ரீதியிலானதாகும். இந்நிலையில், பாரம்பரியம், குடும்பம் அல்லது கடவுள் என்ற பெயரில் அந்த உரிமைகளை எதிர்க்கும் சக்திகள் இருக்கின்றன. இனம் அல்லது மதம் எதுவாக இருந்தாலும் இலங்கைக் குழந்தைகளை பாதுகாப்பதற்கான பொறுப்பும் அக்கறை கொள்வதற்கான உரிமையும் அனைத்து இலங்கையர்களுக்கும் உரியதாகும்.

From Panama Papers to Child Marriage: Food for Thought, Battles to Wage” என்ற தலைப்பில் ‘கிரவுண்விவ்ஸ்’ தளத்தில் திஸரணி குணசேகரவால் எழுதப்பட்ட கட்டுரையின் தமிழாக்கமே இது.

###

[i]http://asianmirror.lk/news/item/15851-government-spends-rs-31-million-on-farmers-conference-see-detailed-estimated-expenditure

[ii]http://www.newsweek.com/panama-papers-icij-journalism-investigation-finance-445987

[iii]http://www.theguardian.com/news/2016/apr/06/panama-papers-reveal-offshore-secrets-china-red-nobility-big-business

[iv]http://www.therepublicsquare.com/politics/2014/03/12/speaker-chamal-rajapaksa-says-violence-against-women-is-their-own-fault/

[v] http://www.dailynews.lk/?q=local/no-one-can-take-law-their-hands-no-casinos-president

[vi] http://www.unfpa.org/sites/default/files/pub-pdf/MarryingTooYoung.pdf