படம் | பாப் மார்லியின் உத்தியோகபூர்வ தளம்

பாப் மார்லி. யார் இந்த பாப் மார்லி? ஏன் மார்லியை உலகம் கொண்டாடுகிறது. சேகுவேராவுக்கு அடுத்தபடியாக அதிகமான இளைஞர்களின் டிஷர்ட்களில், த்ரீவீல்களில் இடம்பெறும் அளவுக்கு இவர் என்ன செய்திருக்கிறார்?

பாப் மார்லியின் சிக்கு கொண்ட தலைமுடித் தோற்றமும், கஞ்சா புகைக்கும் முகமும், ஏசுவைப் போன்ற கண்களின் வெளிச்சமும், அவனது வித்தியாசமான நடனமும் கூட அதன் காரணங்களல்ல.

அவரது பாடல்களில் புதைந்திருக்கும் அரசியல் உணர்வு, விடுதலை வேட்கையே அதற்கான காரணங்களாகும். அப்போதைய சமூக மற்றும் அரசியல் நிலவரம் தொடர்பான அவரது வெளிப்பாடு சாதாரண தொழிலாளர் வர்க்கத்திலிருந்து பணக்காரர்கள் வரை ரசிகர்களை தேடித்தந்திருந்தது. தற்போதைய காலத்துக்கும் அவரது பாடல் வரிகள் பொருந்திப் போகின்றன.

மார்லியின் பாடல்களில் பிரதிபலிக்கும் விடயங்கள் அனைத்தும் அவர் சிறு வயதில் கண்ணுற்றவைகள். அவரது தந்தை நார்வல் சின்க்லயர் மார்லி. இங்கிலாந்து லிவர்பூலைச் சேர்ந்தவர். இவர் பிரித்தானியக் கப்பலொன்றில் வேலை பார்த்துவந்தார். மார்லியின் கருப்பின தாயான பிடெல்லாவை 1944ஆம் ஆண்டு நார்வல் சந்திக்கிறார். அந்த நேரம் பிடெல்லாவுக்கு 18 வயது மட்டுமே. சிறு பழக்கத்துடன் திருமணத்தை முடித்துக்கொள்ளும் இந்த கருப்பு – வெள்ளை தம்பதியினருக்கு 1945ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி ஜமைக்காவின் செயின்ட் ஏன் பாரிஸ், நைன் மைல் எனும் இடத்தில் ஆண் குழந்தை ஒன்று பிறக்கிறது. குழந்தைக்கு நெஸ்டா ரொபர்ட் மார்லி என பெயர் வைக்கப்படுகிறது. பின்னாளில் பொப் மார்லி என்ற பெயரில் உலகின் தலைசிறந்த பாடகனாக சரித்திரத்தில் இடம்பிடிப்பான் என கனவிலும் அவனது பெற்றோர்கள் நினைக்கவில்லை.

மார்லி பிறந்து சில நாட்களுக்குப் பின்னர் நார்வல் இவர்கள் இருவரையும் விட்டு பிரிந்துவிடுகிறார். இருப்பினும், பண கொடுப்பனவுகள் செய்வதை அவர் மறக்கவில்லை. மார்லி சிறு வயதில் தனது தாயுடன் நைன் மைல் எனும் பின்தங்கிய கிராமத்திலேயே வாழ்ந்து வந்தார். மார்லிக்கு 10 வயதாக இருக்கும்போது அவரது தந்தை மாரடைப்பு ஏற்பட்டு இறக்கிறார். 10 வருடங்களில் ஒரே ஒரு தடவை மாத்திரமே மார்லியை நார்வல் சந்தித்திருக்கிறார். இதன் பின்னர் பிடெல்லா குழந்தையை வைத்துக்கொண்டு வாழ்க்கைப் போராட்டத்தை எதிர்கொள்ளத் துவங்குறாள். வேலையொன்றைத் தேடிக்கொண்டு மார்லியுடன் ட்ரென்ச் டவுன் (Trench Town) பகுதிக்கு வருகிறார்.

ட்ரென்ச் டவுன் பகுதிதான் பாடகராக வேண்டும் என பசித்திருந்த பாப் மார்லிக்கு உணவு தந்தது. அதுமட்டுமல்லாமல் வாழ்க்கையின் ஆழமான உணர்வுகளை, தொழிலாளர் வர்க்கத்தின் வலிகளை, ஆளும் வர்க்கத்தின் கோர முகத்தை சிறு வயதான மார்லியால் கண்டுகொள்ள முடிந்தது.

வாழ்க்கையை கொண்டுசெல்ல பிடெல்லா பெரிதும் கஷ்டப்பட்டார். தாய் படும் கஷ்டத்தை கண்ணுற்ற மார்லி தனது 14 வயதில் பாடசாலையை விட்டு வெளியேறி வேல்டிங் தளமொன்று வேலைக்குச் சென்றார். ஆனால், இசை மீதான நாட்டத்தை, முயற்சியை அந்தச் சிறுவன் கைவிடவில்லை. நேரம் கிடைக்கும்போது தாய் பிடெல்லாவை உட்காரவைத்து, தான் பாடும் பாட்டைக் கேட்கச் சொல்வார். ஆனால், இவர் எங்கும் யாரிடமும் இசையைக் கற்றுக்கொள்ளவில்லை.

பனி லிவிங்ஸ்டன் மற்றும் பீற்றர் டொஸ் ஆகியோரால் நடத்தப்பட்டு வந்த வெய்லர்ஸ் (Wailers) இசைக் குழுவினூடாக தனது இசைப் பயணத்தை 1962ஆம் ஆண்டு பாப் மார்லி ஆரம்பித்தார். இந்த ஆண்டு ‘Judge not’, ‘One cup of coffee’ போன்ற பாடல்களை வெளியிட்டனர். இந்தப் பாடல்கள் பெரிதாக அனைவரது கவனத்தையும் ஈர்க்கவில்லை. இருப்பினும், மார்லி தனது முயற்சியை கைவிடவில்லை. கடும் முயற்சியின் பலனாக மார்லி ரெகே என்ற இசை முறையை உலகுக்கு அறிமுகப்படுத்தினார். கிதாரின் சீரான தாள அமைப்பு ரெகே இசையின் முக்கிய அம்சமாகும். இந்த இசையில் விடுதலை போராட்டம், விடுதலை கொண்டாட்டம், வலி, ஒற்றுமை எல்லாம் இருந்தது. அது அந்த ரெகே இசையின் மகத்துவமா அல்லது பாப் மார்லியின் மந்திரமா எனத் தெரியவில்லை.

இந்த மூவர் இணைந்த குழு ‘Simmer Down’ என்ற பாடலை 1964ஆம் ஆண்டு வெளியிட்டது. இந்தப் பாடல் ஜமைக்கா பாடல் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. இந்த வெற்றி பாப் மார்லிக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது. பின்னர் 1963 குழுவில் ப்ரெய்த்வெய்ட், பெவர்லி கெல்ஸோ மற்றும் செரி ஸ்மித் ஆகியோர் இணைந்துகொண்டனர். ஜமைக்கா முழுவதும் இந்த இசைக்குழு மிகவும் பிரபலமானது. ஆனால் அவர்கள் புதிதாக ஆல்பமொன்று வெளியிடுவதற்கு முதலீடு பெற்றுக்கொள்வதில் சிக்கலை எதிர்கொண்டார்கள்.

1966ஆம் ஆண்டு பெப்ரவரி 10ஆம் திகதி பாடகியான ரீட்டா எண்டர்சனை மார்லி திருமணம் செய்துகொண்டார். ரீட்டா மூலம் ரஸ்தபாரி எனும் மதம் மார்லிக்கு அறிமுகமானது. பின்னர் அந்த மதத்தையே மார்லி தழுவினார். டொஸ் மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோரும் ரஸ்தபாரி மதத்தையே தழுவினர். எத்தியோப்பிய மன்னன் இந்த மதத்தின் கடவுளாக கருதப்படுகிறார். கிறிஸ்தவர்களுக்கு எதிராக ஆபிரிக்க பழங்குடிகள் தங்களது கலாசார பின்னணியுடன் உருவாக்கிக்கொண்ட பிரத்தியேக கிறிஸ்தவ மதம் ரஸ்தபாரி மதமாகும். ஜமைக்காவில் அதிகமாக கஞ்சா விளைந்தது. அது ரஸ்தபாரி மதத்தில் புனிதப் பொருளாக பார்க்கப்பட்டது. மேலும் மூலிகையாகவும், தியான நிலைக்கு உகந்ததாகவும் கருதப்பட்டது. மார்லி மாமிசம் உண்பதை தவிர்த்து சைவ உணவுகளை உண்ணத் தொடங்கினார். மேலும், இந்த மதத்தைப் பின்பற்றுவோரின் தலைமுடி சிக்கு பிடித்தது போல் இருக்கும். இந்த இரண்டையும் பின்பற்றினார் மார்லி. பின்னர் அவரது இந்த சிகை அலங்காரம் உலகப் புகழ் பெற்றது.

தாய் பிடெல்லா வாழ்ந்துவரும் அமெரிக்காவுக்கு மார்லி பயணமானார். 8 மாதங்களுக்குப் பின்னர் ஜமைக்கா திரும்பிய மார்லி மீண்டும் லிவிங்ஸ்டன், டொஸ் ஆகியோருடன் இணைந்துகொண்டு மீண்டும் தனது இசை பயணத்தை ஆரம்பித்தார். இவர்களோடு எஸ்டன் மற்றும் அவரது சகோதரரான கார்ல்டன் ஆகியோரும் இணைந்துகொண்டனர்.

1972ஆம் ஆண்டு வெய்லர்ஸ் இசைக்குழுவுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்தது.  ‘ஐலண்ட்ஸ் ரெக்கோர்ட்ஸ்’ அணுசரணையுடன் முதல் தடவையாக முழு ஆல்பமொன்றை வெய்லர்ஸ் உருவாக்கினர். தீயைப் பிடி (Catch a Fire) என்ற பெயரிலேயே அந்த ஆல்பம் வெளிவந்தது. பிரித்தானியா, அமெரிக்கா சென்று இசை நிகழ்ச்சி நடாத்த இந்த ஆல்பம் உதவியது. பின்னர் அதேயாண்டு பர்னின் (Burnin) என்ற ஆல்பமும் வெளியிடப்பட்டது. இந்த ஆல்பத்தில் வரும் ‘I shot the Sheriff’’, ‘Get Up Stand UP’ ஆகிய பாடல்கள் மிகவும் பிரபலமாகின. இந்தப் பாடல்கள் மூலம் சர்வதேச அங்கீகாரத்தை மார்லி பெற்றுக்கொண்டார். இவரது பாடல்களை இன வேறுபாடின்றி கேட்கத் தொடங்கினர்.

‘Get Up Stand UP’ பாடலில் தங்களது உரிமைகளுக்காக எழுந்து போராடுங்கள் என கருப்பின மக்களைப்பார்த்து அரைகூவல் விடுக்கிறார்.

எழுந்து நில்லுங்கள்

உங்களது உரிமைகளுக்காக…

வானத்திலிருந்து கடவுள் வந்து

அனைத்து துக்கங்களையும் எடுத்துக்கொண்டு

சந்தோஷத்தை வழங்குவாரென்று நீங்கள் அனைவரும் நினைப்பீர்கள்…

ஆனால், வாழ்க்கையின் பெறுமதியை புரிந்துகொண்டீர்களானால் உங்களது வாழ்க்கையை இந்த பூமியில்தான் தேடுவீர்கள்…

அப்போது நீங்கள் வெளிச்சத்தைக் காண்பீர்கள்…

அதனால் எழுந்து நில்லுங்கள்…

நினைத்துபார்க்க முடியாத அளவுக்கு உலகம் பூராகவும் உள்ள ரசிகர்களை அவர்களது உரிமைகளுக்காக எழுந்து நிற்கவைக்க மார்லியால் முடிந்தது.

1975ஆம் ஆண்டு வெய்லர்ஸ் குழுவிலிருந்து மூவர் வெளியேறினர். மார்லியின் மனைவி ரீட்டா உட்பட மார்ஷியா, மோவாட் ஆகிய மூன்று பேரும் பாடகிகளாக சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். பிறகு பாப் மார்லியும் வெய்லர்ஸூம் (Bob Marly & the Wailers) என குழுவின் பெயர் மாற்றப்பட்டது. இந்தக் குழு ரெகே இசையை உலகம் பூராகவும் கொண்டுசேர்க்க கடுமையாக முயற்சி செய்தது. இதன் பலனாக ‘No Woman No Cry’ என்ற பாடல் வெளியாகி மிகவும் பிரபலமானது. உலகம் முழுவதும் கண்ணீர் சிந்தும் கோடிக்கணக்கான பெண்களுக்காக அவர் இந்த பாடலை இயற்றினார்.

தான் ஒரு கலப்பினத்தைச் சேர்ந்தவன் என தெரிந்திருந்தும் மார்லி தன்னை ஆபிரிக்க வம்சாவளிசைச் சேர்ந்த கருப்பினத்தவன் என்று அறிமுகம் செய்துகொள்ள – அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பினார். வெள்ளையர்களால் அடிமைத்தனமாக கருப்பினத்தவர்கள் அடிமைப்படுத்தப்படுகின்றமையைக் கண்ணுற்றதனாலேயே மார்லி இந்த முடிவுக்கு வந்தார்.

“எனக்கு ஒரே ஒரு வேண்டுதல் இருக்கிறது. அந்த சந்தர்ப்பத்தைக் காண என் மனம் அலைபாய்கிறது. கருப்பு, வெள்ளை, சீனம் என்ற அனைத்து இன மக்களும் மனிதன் என் அடிப்படையில் ஒன்று சேர்வதே எனது கனவாகும். எனது அப்பா வெள்ளையர். அம்மா கருப்பினத்தைச் சேர்ந்தவர். நான் இவ்விரு இனத்தையும் சேராதவர் என கூறுகிறார்கள். உண்மைதான். நான் எவரின் பக்கத்தையும் சார்ந்திருக்க விரும்பவில்லை. நான் கடவுளின் பக்கம் இருக்கிறேன். என்னை இந்த உலகத்துக்கு அனுப்பிய கடவுளையே நான் சார்ந்திருக்கிறேன்”

நிறவெறியை வெளிப்படுத்துபவர்களுக்கு எதிராக பாப் மார்லி இவ்வாறானதொரு கருத்தை முன்வைத்திருந்தார். ஜமைக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடிய மார்க்ஸ் கிரேவின் அரசியல் செயற்பாடுகளுக்கு மார்லி உதவினார். ஆபிரிக்காவில் மட்டுமன்றி உலகம் பூராகவும் வாழும் நீக்ரோ மக்களின் வளர்ச்சி – அபிவிருத்தி குறித்து மட்டுமன்றி ஆபிரிக்கா நீக்ரோ மக்களின் புனித பூமியாக விளங்கவேண்டும் என்ற இலக்குடன் மார்லி செயற்படத் தொடங்கினார். அத்தோடு, உலக நாடுகளில் இன்னல்களை அனுபவித்துவரும் நீக்ரோ மக்களை புனித பூமியை நோக்கி வருமாறு அழைப்புவிடுக்கும் பாடல் ஒன்றையும் மார்லி பாடியுள்ளார்.

இரண்டாயிரம் ஆண்டுகள் கொண்ட வரலாற்றை

அவ்வளவு சீக்கிரம் அழித்துவிட முடியாது…

இரண்டாயிரம் ஆண்டுகள் கொண்ட கருப்பின மக்களின் வரலாற்றை

அவ்வளவு சீக்கிரம் அழித்துவிட முடியாது…

‘Zion Train’ என்ற பாடலில் கருப்பின மக்களில் வரலாறு தொடர்பாக குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் ‘Black Surviour’, ‘Bady Lon System’ ஆகிய பாடல்கள் மூலம் வெள்ளையர்கள் கருப்பின மக்களின் உழைப்பையும் உரிமைகளையும் சுரண்டுகின்றனர் என்றும் – அதற்கு எதிராக எழவேண்டும் என்றும் மார்லி மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜோன் லெனன் மற்றும் மைக்கல் ஜாக்சன் ஆகியோரிடமும் மனிதம் நேயம் குறித்த பாடல் வரிகள் காணப்பட்டன. ஜாக்சனின் ‘Black or White’ மற்றும் ‘Earth’ பாடல்கள்தான் அவருக்கு இப்போதும் பெயர் தக்கவைக்கும் பாடல்கள். ஆனால், அத்தனையும் தாண்டியதாக பாப் மார்லியின் பாடல்கள் தகுதிபெற்று விளங்கக்காரணம், அவர் வாழ்க்கையிலும் தன் எண்ணங்களை எவ்வாறு கடைபிடித்தார் என்பதே. இந்த விடயத்தில் ஜாக்சன் உள்ளிட்ட மற்றவர்கள் பலரும் தங்களது புகழை தங்களது சொந்த வாழ்வுக்காக பயன்படுத்தியவர்களாக இருந்தனர் என்பது எவரும் மறைக்க முடியாத உண்மை.

இவ்வளவு தூரம் நம் வாழ்க்கைக்கு நெருக்கமான உண்மையை வேறு எந்த இளைஞனும் கூறியதில்லை. உண்மையில் மேற்கிலிருந்து பிறந்த Rock and Roll, Disco ஏன் நாம் ரசித்து ருசித்து கேட்கும் தென்னிந்திய திரை இசைப்பாடல்கள் அனைத்தும் பெரும்பாலும் கற்பனையை அல்லது தனிமனித பிரச்சினையை மட்டுமே பாடிவந்துள்ளன, பாடியும் வருகின்றன. ஆனால், தன்னோடு வாழ்ந்த மக்களுக்காக அவர்களது துயரங்களுக்காக, வலிகளுக்காக பாடல்கள் பாடிய ஒரே கலைஞன் பாப் மார்லிதான்.

ஒரு போராளியின் சிந்தனையுடன் கூடிய இவ்வாறான வரிகள் மார்லியின் பாடல்களில் வெளிப்பட்டதால் அவற்றைக் கேட்டு மக்கள் எழுச்சி பெறுவதைக் கண்டு அதிகார வர்க்கம் சற்று அதிர்ந்தது என்றுதான் கூறவேண்டும். புரட்சி ஏதும் ஏற்பட்டுவிடுமோ என அஞ்சியது. அதனால் அவரை கொல்ல அதிகாரவர்க்கம் முடிவுசெய்தது. 1976ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் திகதி இரவு கிங்க்ஸ்டன் தேசிய வீரர்கள் பூங்காவில் இடம்பெறவிருந்த இசை நிகழ்ச்சிக்காக ஒத்திகையில் ஈடுபட்டிருந்தபோது ஆயுததாரிகளால் மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சியிலிருந்து மார்லி தப்பியிருந்தார். துப்பாக்கிப் பிரயோகத்தில் கையிலும், மார்பெலும்பிலும் மார்லிக்கு காயம் ஏற்பட்டது. ரீட்டாவுக்கு தலைப்பகுதியில் துப்பாக்கி ரவை துளைத்தது. மார்லியின் முகாமையாளருக்கு 5 தடவைகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. பின் பல சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு அவர் காப்பாற்றப்பட்டார். ‘ஸ்மைல் ஜமைக்கா’ என்ற அந்த இசை நிகழ்ச்சியில் மார்லியும் ரீட்டாவும் சம்பவம் இடம்பெற்று இரண்டு நாட்களுக்குப் பின்னர் பங்குபற்றினர். மார்லிக்கு கிதாரை இசைக்க முடியவில்லை. இருப்பினும், வெற்றிகரமாக அந்த இசை நிகழ்ச்சியை நடாத்தி முடித்தார். இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டும் ஏன் மேடைக்கு வந்தீர்கள் என பலர் அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு அவர்,

“இந்த உலகத்தை மோசமான பாதைக்கு இட்டுச்செல்ல நினைப்பவர்கள் என்ன நடந்தாலும், ஒரு நாளாவது விடுமுறை எடுத்துக்கொள்வதில்லை. அவர்களே அப்படி என்றால், உலகத்துக்கு நல்லது செய்ய விளையும் நானும் அப்படித்தான்” என பதலளித்தார்.

கொலை முயற்சியின் பின்னர் சக நண்பர்களின் வற்புறுத்தலால் மனைவி ரீட்டாவுடன் ஜமைக்காவை விட்டு வெளியேறிய மார்லி 1976-1978 காலப்பகுதியில் இங்கிலாந்தில் வாழ்ந்துவந்தார். இந்தக் காலப்பகுதியில் மார்லி வெளியிட்ட ‘எக்ஸோடஸ்’ (Exodus) ஆல்பம் மிகவும் பிரபலமானது. 20ஆம் நூற்றாண்டுக்கான சிறந்த ஆல்பமாக ‘டைம்’ சஞ்சிகை தெரிவுசெய்திருந்தது. இந்த ஆல்பத்தில் உள்ள ‘Jamming’, ‘Waiting in Vain’ மற்றும் ‘One Love/People Get Ready’ ஆகிய பாடல்கள் சர்வதேச தரம் வாய்ந்தவையாக போற்றப்பட்டன. அதன் தொடர்ச்சியாக 1978ஆம் ஆண்டு காயா (Kaya) ஆல்பத்தை வெளியிட்டார். ‘Is This Love’ மற்றும் ‘Satisfy My Soul’ ஆகிய பாடல்களும் மிகவும் பிரபலமாகின.

இங்கிலாந்தில் இருந்தபோது 1977ஆம் ஆண்டு ஜூலை மாதம் கால் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக சிகிச்சைப்பெற்றார். அவ்வேளை, மார்லியை பரிசோதித்த வைத்தியர் விரல் காயம் மூலம் புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் கால் ஒன்றை இழக்கவேண்டி ஏற்படலாம் என்றும் தெரிவித்திருக்கிறார். உடனே சத்திரசிகிச்சை ஒன்றை செய்துள்ளார். தன்னுள் வேறூன்ற ஆரம்பித்திருக்கும் நோயிலிருந்து தனது கடவுள் காப்பாற்றுவார் என மார்லி நம்பியிருந்தார். மார்லி ஜமைக்காவில் நேரம் கிடைக்கும்போது தனது நண்பர்களுடன் கால்பந்து விளையாடுவதை பொழுதுபோக்காகக் கொண்டிருப்பார். அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில்தான் கால் விரலில் காயம் ஏற்பட்டிருக்கிறது.

அதேயாண்டு One Love Peace Concert என்ற இசை நிகழ்ச்சிக்காக மீண்டும் மார்லி நாடு திரும்பினார். அப்போது இவருக்கு மிகுந்த வரவேற்பு வழங்கப்பட்டது. பாப் மார்லி எப்போதும் அரசியல் கட்சி சார்பாகவோ, ஒரு இனம் சார்பாகவோ பாடல்களை பாடவில்லை. அனைவரும் ஒரே மக்கள் என்ற தொனிப்பொருளிலே மார்லி பாடல்களை பாடியுள்ளார். இப்போதைய பாடகர்களைப் போன்று தனிப்பட்ட அரசியல் நோக்கத்துக்காக, ஒரு அரசியல் கட்சிக்கு மட்டும் சார்பாக மார்லி பாடவில்லை. காலங்காலமாக ஆயுத ரீதியாக மோதிக்கொண்ட ஆளும் மற்றும் பிரதான எதிர்க்கட்சியை மார்லி ஒன்று சேர்த்தார். இதுவரை காலமும் முரண்பட்டு வந்த ஜமைக்காவின் பிரதமரும் மக்கள் தேசியக் கட்சியைச் சேர்ந்தவருமான மைக்கல் மன்லே, பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் தலைவர் எட்வர்ட் சீகா ஆகியோரை மேடைக்கு அழைத்து கைகுலுக்க வைத்தார். அன்றைய தினம் ஜமைக்கா அரசியல் வரலாற்றில் முக்கிய ஒரு தினமாக இன்றும் கருதப்படுகிறது.

மார்லியின் இந்த முயற்சிக்காக 1980ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை அமைதிப் பரிசை வழங்கியது.

1978ஆம் ஆண்டு முதல் தடவையாக ஆபிரிக்க நாடுகளான கென்யா மற்றும் எத்தியோப்பியா நாடுகளுக்கு இசை நிகழ்ச்சிக்காக மார்லி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். எத்தியோப்பிய நாட்டுக்கான பயணம் மார்லிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. காரணம், ரஸ்தபாரி மதத்தின் தாய்பூமி எத்தியோப்பியாவாகும். அத்தோடு, 1980ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற சிம்பாப்வே நாட்டின் ஆரம்ப சுதந்திர நிகழ்ச்சியில் பங்குபற்ற பாப் மார்லிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. சுதந்திர சிம்பாப்வேயின் உத்தியோகபூர்வ நிகழ்ச்சியில் மார்லி பெருமிதத்துடன் இசை நிகழ்ச்சியை நடாத்தினார்.

1980ஆம் ஆண்டு அவர் வெளியிட்ட அப்ரைஸிங் (Uprising) என்ற ஆல்பம் சர்வதேச கவனத்தைப் பெற்றது. இந்த ஆல்பத்தில் உள்ள ‘Could You Be Loved’, ‘Redemption Song’ ஆகிய பாடல்கள் மிகவும் பிரபலமாகின. இந்தப் பாடல்கள் மூலம் தான் ஒரு சிறந்த பாடலாசிரியர் என்பதையும் மார்லி நிரூபித்தார். 2011ஆம் ஆண்டு பி.பி.சியால் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட வாக்களிப்பில் உலகின் தலைசிறந்த பாடலாசிரியர்களில் மூன்றாவது நபராக மார்லி தெரிவுசெய்யப்பட்டார்.

1980ஆண்டின் இறுதிக் காலப்பகுதியில் மார்லி ஐரோப்பாவுக்கான மிகப்பெரிய இசை சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். பெரும்திரளான இசை ரசிகர்கள் முன் தனது வேட்கையை வெளிப்படுத்தினார். ஆனால், அவர் நினைத்தது போல் ஐரோப்பாவுக்கான சுற்றுப்பயணம் முழுமை பெறவில்லை. அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தில் இரு இசைநிகழ்ச்சிகள் நடைபெற இருந்தது. அதற்கு முன் நியூயோர்க் மத்திய பூங்காவில் உடற்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது திடீரென கீழே விழுந்தார். புற்றுநோய் அவரது உடல் முழுவதும் ஆட்கொள்ளத் தொடங்கிய நேரம் அது. அவரது மூலை, நுரையீரல் மற்றும் ஈரல் பகுதிகளை புற்றுநோய்க் கிருமிகள் தாக்கத் தொடங்கியிருந்தன.

உடனடியாக ஜேர்மனி கொண்டுசெல்லப்பட்டு மார்லிக்கு சத்திரசிகிச்சை வழங்கப்பட்டது. தன்னால் நீண்டகாலம் உயிர்வாழ முடியாது என மார்லி தெரிந்துகொண்டார். தனது தாயின் இருப்பிடமான அமெரிக்காவுக்கு திரும்பினார். அவரின் கடைசி காலங்களில் அன்புக்குரிய ஜமைக்காவுக்கு செல்ல முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். ஆனால், அவரது பயணம் முழுமை பெறவில்லை. 1981ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் திகதி பாப் மார்லி தனது 36ஆவது வயதில் அமெரிக்காவின் மியாமி நகரிலுள்ள வைத்தியசாலையொன்றில் மரணமடைந்தார்.

மார்லி இறக்கும்போது அவரது அடையாளமான சடை முடி நோய் காரணமாக நீக்கப்பட்டிருந்தது. உடல் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டபோது போலியாக ஒரு தலைமுடி மார்லிக்கு போடப்பட்டிருந்தது. ஜமைக்கா மக்கள் மார்லியை ஒரு விடுதலைப் போராளியாகவே கருதினர். 1981ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் திகதி இறுதிக் கிரியை அரச மரியாதையுடன் நடத்தப்பட்டு மார்லியின் பிறந்த இடமான நைன் மைல் பகுதியில் உடல் புதைக்கப்பட்டது. ஜமைக்கா பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உட்பட முப்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் இறுதி நாளில் மார்லிக்கு அஞ்சலி செலுத்தினர். மனைவி ரீட்டா உட்பட தி வெய்லர்ஸ் குழுவினர் அன்றைய தினம் மார்லியின் உயிரோட்டமான பாடல்களை அவருக்கே அர்ப்பணித்தனர்.

மார்லி ரீட்டாவுடன் இணைந்து 11 குழந்தைகளை பராமரித்துவந்துள்ளார். மார்லி, ரீட்டா தொடர்பின் மூலம் 3 குழந்தைகள் பிறந்தன. ஏனைய இரு பெண்களுடன் கொண்ட தொடர்பின் மூலம் 6 குழந்தைகளுக்கு மார்லி அப்பாவானார். இதில் முக்கிய விடயம் என்னவென்றால் ரீட்டாவின் முன்னைய தொடர்பின் மூலம் கிடைக்கப்பெற்ற இரண்டு குழந்தைகளையும் மார்லியே அரவணைத்து பராமரித்துத்து வந்துள்ளார். மார்லியின் வாழ்க்கை தொடர்பான புரிதலை இந்த விடயம் எடுத்துக்காட்டுகிறது.

அத்தோடு, அவரது பிறந்த தினமான பெப்ரவரி 6ஆம் திகதி ஜமைக்காவில் தேசிய விடுமுறை தினமாக அரசால் 1990ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது. ஜமைக்காவின் நைன் மைல் பகுதியில் பாப் மார்லி வாழ்ந்துவந்த வீடு பின்னர் மார்லியின் அருங்காட்சியகமாக மாறியது. மார்லி இறக்கும் வரையில் 4000 குடும்பங்களின் அன்றாட உணவுத் தேவையை நிறைவேற்றி வந்துள்ளார்.

இப்பூமியின் மீதான அனைத்து மக்களையும் பெரும் விடுதலைக்கு அன்பு நிறை உலகத்துக்கு பணம்,  நிறம் வித்தியாசமில்லாத ஒரு பேரன்பான உலகத்துக்கு அழைத்து செல்வதே மார்லியின் எண்ணமாக இருந்தது. மார்லி இறந்து 33 வருடங்களாகியும் இன்னமும் அவரது எண்ணத்தைக் கொண்ட எவரும் உதயம் பெறாதது கவலைக்குரிய விடமே.

செல்வராஜா ராஜசேகர்

Tra

###

மூலங்கள்

http://www.birminghampost.net/comment/birmingham-columnists/more-columnists/2008/05/10/bishop-webley-one-world-one-love-one-bob-marley-65233-20891539/

http://www.allmusic.com/artist/bob-marley-p2907/biography

http://www.guardian.co.uk/film/2012/apr/22/bob-marley-documentary-review

http://www.nytimes.com/2002/12/19/arts/pre-reggae-tape-of-bob-marley-is-found-and-put-on-auction.html

http://www.thirdfield.com/new/timeline.html

http://www.guardian.co.uk/music/musicblog/2011/may/11/bob-marley-playlist

http://www.guardian.co.uk/music/2011/apr/24/bob-marley-funeral-richard-williams#start-of-comments

http://www.biography.com/people/bob-marley-9399524

http://www.lexzyne.com/news/wordpress/2011/02/06/happy-birthday-bob-marley-the-man-the-legend/