படம் | Sangam

பின் முள்ளிவாய்க்கால் (பின் போர் என்ற பதத்திற்கு ஈடாக பின் முள்ளிவாய்க்கால் என்ற பதம் பயன்படுத்தப்படுகின்றது. 2009 மே யின் பின் கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பது war by other means என்ற தெளிவு வடக்கு கிழக்கிலே செறிவாக உள்வாங்கப்பட்டுள்ளது) வரலாற்று இயங்குதள வெளிக்குள் பாதிக்கப்பட்டவர்களின் முன் தாரளமாக தரவிறக்கப்பட்ட அறிவியல் சொல்லாடல்களாக, நிலைமாறுகால நீதி, நல்லிணக்கம், அமைதி, சமாதானம் போன்றவை தேசிய முன்னுரிமைகளாய் நிறுத்தப்பட்டு தேசிய நலனில் அக்கறையுள்ளவர்களினதும் ஆர்வலர்களினதும் பேசுபொருளாக பரிணமித்திருப்பதை பின் முள்ளிவாய்க்கால் வரலாறு எங்களுக்கு தெட்டத்தெளிவாகப் புகட்டியுள்ளது.

அறிவியல் சொல்லாடல் பயன்பாட்டின் பின்னுள்ள அரசியல் சர்வதேச ஆதிக்க நலன் சார்ந்து வடிவமைக்கப்பட்டிருப்பினும், அதனூடாக தமிழர் அரசியல் காய் நகர்த்தல்கள் எதிர்காலம் சார்ந்து எவ்வாறு இருக்க வேண்டும் என்பது அவசியமாகின்றது. விட்டுக்கொடுப்பு, அரசியல் சாணக்கியம் பொய்த்துப்போன அல்லது நீர்த்துப்போன அரசியல் மூலோபாயமாக வரலாற்றினூடு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்ற பட்டறிவையும் அரசியல் தலைமைகள் உற்றுநோக்குவது அவசியமாகின்றது.

மேற்கூறப்பட்ட அறிவியல் சொல்லாடல்கள் பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து கட்டமைக்கப்படுவதான தோற்றப்பாடு மிகக்குறைவாகவே தென்படுகின்றது, அவ்வாறு பாதிக்கப்பட்ட சமூகம் சார்ந்து கட்டமைக்கப்பட்டிருப்பின் அது ஒரு வகுப்பு சார்ந்தவர்களின் கருத்தாடல்களாகவே கட்டமைக்கப்படுவதை காண்கின்றோம். இதற்குப் பின்னுள்ள இருமை (Binary) அரசியலையும் விளங்கிக் கெண்டே கருத்துருவாக்கங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது எனது வாதம். விழிப்பு நிலையில் இருந்து முன்னெடுக்கப்படும் நகர்வுகளின் பின்விளைவுகள் எதிர்வு கூறப்படலாம். இவ்விழிப்புநிலை நகர்வுகளின் ஒழுக்கவியல் பொறுப்புடைமையை வலியுறுத்துகின்றது. பாதிக்கப்பட்ட புவியியல் பரப்பிற்கு வெளியே இருந்து திணிக்கப்படும் அறிவியல் சொல்லாடல் கருத்துருவாக்கத்தை சிக்கலுக்குட்படுத்தி, மண்மயப்படுத்தி, பாதிக்கப்பட்ட மக்கள் மைய பொறிமுறையை வடிவமைப்பதில் தற்சிந்தனையாற்றலுடையவர்களின் வகிபாகம் கேள்விக்குட்படுகின்றது. புறத்தூண்டுதலுக்கு எதிரான அக எதிரியக்கம் செய்கின்ற குழுமங்களாகத்தான் இன்று தமிழர் தரப்பில் இருக்கின்ற கல்வியுலகு இருக்கின்றதா? என்ற கேள்வியும் என்னுள் எழாமலில்லை.

இவ்வாறுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் நலன் சார்ந்த விடயநோக்கு உண்மைகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கோமி பாபா குறிப்பிடுகின்ற மூன்றாம் வெளியை (Third space) பாதிக்கப்பட்ட மக்களே கட்டமைக்கின்ற வரலாற்றுக் கட்டாயம் உருவாகின்றது. இச் சூழமைவில் மைய மறுப்பு சார்ந்த அடையாள விளக்கவியலை அகவயப்படுத்திய, பாதிக்கப்பட்ட மக்களின் தேசிய சொல்லாடல் அவசியமாகின்றது. முன் கருதலுடன் திட்டமிடப்பட்ட அரசின் நிகழ்ச்சித்திட்டங்கள் மூன்றாம் வெளிக்குள் கட்டுடைக்கப்படுகின்றது. இவற்றின் அடிப்படையில் நல்லிணக்கத்திற்கன அணுகு முறைகள் கட்டமைக்கப்பட்ட வேண்டும்.

நல்லிணக்கம், அமைதி, சமாதானம் ஆகிய அறிவியல் சொல்லாடல்கள், அரசியல், சமூகவியல், புவியியல் சூழமைவு சார்ந்து விளக்கவியலைப்பெறுகின்றது. உதாரணமாக சிலி அரசின் வரலாற்றில் ‘நல்லிணக்கம்’ சொல்லாடல் அரசியல் குற்ற மன்னிப்பை ஊக்குவிக்க பயன்படுத்தியதாக Cath Collins குறிப்பிடுகின்றார். அதேவேளை, ‘நல்லிணக்கம்’ நீதி சார்ந்து, எதுவுமே முன்னெடுக்கப்படக் கூடாதவர்களின் குறியீட்டு வார்த்தைகளாகப் பிரயோகிக்கப்பட்டதாக ‘Reconciliation was a code word for those who wanted nothing done’.[1] முன்னாள் ஆஜென்ரினா ஆர்வலரும் இன்னாள் ஐ.நா. சிறப்புப் பிரதிநிதியுமான குவான் மென்டிஸ் குறிப்படுகின்றார்.

நல்லிணக்கம் என்பது ஒரு கருத்தியல் சார்ந்தது மாத்திரமல்ல, அது ஒரு செயல்முறை (Process). அச்செயல் முறையில் நல்லிணக்கத்தை முதன்மைபடுத்துவோர் நீதியை இரண்டாமிடத்திற்கு நகர்த்துவதாக நீதிப்பொறிமுறை வரலாற்று அறிஞர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். இது தண்டனையிலிருந்து தப்புவதற்கான சாணக்கியமாக பிரயோகிக்கப்பட்டதையும் மறுப்பதற்கில்லை. நல்லிணக்கத்திற்கும், மன்னிப்புக்குமான உறவுநிலை அந்நியோன்னியமானதே. இவ்வணுகுமுறை நீதியை குறிப்பாக குற்றத்திற்கான தண்டனையைத் தவிர்த்து ‘பாதீடு’ (Reparations) மாற்று வழிமுறையாக முன்வைக்க முயலுகின்றது. பாதீடு பொறிமுறை இழப்பீட்டை மட்டும் முன்னுரிமைப்படுத்துவதல்ல. பாதீடு பொறிமுறை:

  1. மீட்டழிப்பு Restitution: பாதிக்கப்பட்ட நபரை அல்லது அவர்களின் உறவினரை மீண்டும் பழையநிலைக்கு கொண்டுவருதல். இது தனிநபர் சுதந்திரத்தை, சமூகநிலையை குடும்பச்சூழலை, வாழ்விடத்தை, சொத்தை, வேலைவாய்ப்பை மீளளித்தல் தொடர்பானது. இவ் மீளழிப்பு இழைக்கப்பட்ட குற்றங்கள் சீரமைக்கக்கூடுமாயின் செல்லுபடியாகும் (For the wrongs that can be repiraed). சீரமைக்க முடியாத குற்றங்களுக்கு இவை செல்லுபடியற்றதாகும் (For the wrongs that cannot be repaired). உதாரணமாக பாலியல் வன்புணர்வு, கொலை.
  2. இழப்பீடு compensation: இழைக்கப்பட்ட குற்றங்களின் அளவீட்டின் அடிப்படையில் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். பொருளாதார இழப்பீட்டை மாத்திரம் கொண்டிராமல், உடல், உள ரீதியான பாதிப்புக்கள், இழக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் குறிப்பாக கல்வி சார்ந்து, இழக்கப்பட்ட வருவாயுடனான சேமிப்பு, இழக்கப்பட்ட நன்மதிப்பு, மதிப்பு வாய்ந்த பதவி, சட்ட ஆலோசனைக்கான செலவு, மருத்துவச்செலவு போன்றவை உள்ளடங்கும்.
  3. மறுவாழ்வு Rehabilitation: பாதிக்கப்பட்டவர்க்கான சமூக, மருத்துவ, உளவியல், சட்ட ஆதரவைக் குறித்து நிற்கின்றது.
  4. Satisfaction and guarantees of non-recurrence: மனநிறைவளிப்பதும், மீண்டும் ஏற்படாதவாறு தடுத்தலும், மீண்டும் ஏற்படாதவாறு தடுத்தல் நிகழ்சி நிரலுக்குள் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவரல், உண்மையை சரிபார்த்தல், உத்தியோகபூர்வமான மன்னிப்புக் கோரல், நீதிசார்ந்து பாதிக்கப்பட்டவர்கள் தகுதியையும், நன் மதிப்பையும் மீள் நிறுவுதல், உண்மையை வெளிக்கொணர்தல், காணாமல் ஆக்கப்பட்டவர் இறந்திருந்தால் அதற்கான ஆதாரங்களைத் தேடிக் கண்டடைதல், குற்றவாளிக்கு சட்டத்தீர்ப்பு வழங்குதல், நிறுவனச் சீரமைவு (Institutional reform).[2]

மனத்திருப்தி அளிக்கும் செயற்பாட்டினுள் அடையாள நடவடிக்கைகளாக (Symbolic measures) இறுதிச்சடங்குகளை நிறைவேற்றல், இறப்பு உறுதிப்படுத்தப்பட்டிருப்பின் குற்றத்தின் பாரதூரத்தன்மையை ஏற்றுக்கொள்ளல், குற்றத்தை நிவர்த்தி செய்யக்கூடிய பொதுவேலைத் திட்டங்களை ஊக்குவித்தல், நினைவு கூரல் நாட்களை அறிமுகப்படுத்தல், அருங்காட்சியகங்களை உருவாக்கல், வீதிகளையும், பொது இடங்களையும் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பெயரிடல்.

இவை எல்லாமே பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதை மையமாகக் கொண்ட நிகழ்சிநிரலை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். இவை மீண்டும் நிகழாதிருக்க கட்டமைக்கப்பட்ட அநீதிகளை கட்டுடைக்க வேண்டும்.

நல்லிணக்கம், அமைதி என்பது பல்வேறு நபர்களுக்கு பல்வேறு அர்த்தங்களை வழங்குகின்றது. ஒவ்வொரு தனிநபரும், சமூகமும் தத்தமது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப பொருள் விளக்கம் கொள்ளலாம்.

கடந்த காலத்தில் இழைக்கப்பட்ட உரிமை சார்ந்த குற்றங்களை கையாளுதல் தொடர்பில் சமாதானத்தை அல்லது அமைதியை முன்னெடுப்பதா சமாதானத்தை அல்லது நீதியை நிலைநாட்டி அடுத்த கட்டத்திற்கு நகர்வதா? என்கின்ற விவாதம் ஆரம்பத்திலிருந்தே பல்வேறு தளங்களில் நிகழ்ந்து வந்திருக்கின்றது. இரண்டுமே நிலையான சமாதானத்திற்கு தேவையானவை என்பதில் யாருக்குமே முரண் கருத்து இருக்க முடியாது.

நல்லிணக்கம் ஒரு செயல்முறை என நம்புகின்றவர்கள் நீதிக்கு ஊடாக பயணித்தே ஆகவேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்படுகின்றார்கள். நிலைமாறுகாலநீதி குறிப்பிடுகின்ற எதிர்காலத்தில் மீண்டும் நடைபெறாவண்ணம் தடுத்தல் என்பதற்கான நீதிப்பொறிமுறை அவசியம். சமாதானத்தையும் நீதியையும் எதிர்முரண்பாடாக கருதும் சிந்தனைப் பற்றுள்ளவர்கள் அதை நிரப்புத்தன்மை (complimentarity) கொண்டதாக அணுகுதல் அவசியம்.

இரண்டாம் உலக யுத்தத்தின் பின் யூத இன அழிப்பு சார்ந்து நீதி முன்னெடுக்கப்பட்டது. அதன் பின் இன்று வரை உருவாகிய நீதிப்பொறிமுறைகளையும் அது தொடர்பான நிறுவனங்களையும் ஒப்பு நோக்கும்போது, சமாதான நல்லிணக்கத்தின் நீடித்த தன்மைக்கு நீதிப்பொறிமுறையின் அவசியம் தெளிவாகப் புலப்படுகின்றது. ஐ.நாவைப் பொறுத்தவரையில் பின்மோதல் (post-conflict) நீதி Nuremburg நீதிமன்ற விசாரணையோடு ஆரம்பிக்கப்படுகின்றது.

இவ்வணுகு முறையானது, குற்றவாளிகள் தண்டனையில் இருந்து விலக்கீட்டுரிமை கொண்டிருந்தால், உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட சட்டத்தின் ஆட்சியை அமுல்படுத்துவது சாத்தியமாகாது என்ற எடுகோளிலிருந்து பிறந்ததாகும்.

இவ்விசாரணை நீதிப் பொறிமுறை வரலாற்றில் ஒரு திருப்பு முனை. Nuremburg நீதி விசாரணைகளின் 60 ஆண்டுகளை பூர்த்தி செய்தவேளை (2009) அப்போதிருந்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிரதான வழகுரைஞர் L.M. Ocampo குறிப்பிட்ட நோக்கங்களுக்காக அமைக்கப்பட்ட தீர்ப்பாயங்களின் (ICTY, ICTR) பங்களிப்பு பற்றி விளக்கும்போது, அத்தீர்ப்பாயங்கள் நீடித்த சமாதானத்திற்கு ஆற்றிய பங்களிப்பினை மறுக்கமுடியாது எனக் குறிப்பிடுகின்றார். இப்பொறிமுறைகள் தண்டனை விலக்கீட்டுரிமையைச் சிக்கலுக்குட்படுத்தி குற்றவாளிகள் தண்டனைக்குரியவர்கள், குறிப்பாக சர்வதேச சட்டவரையறைகளை மீறுவோர் தண்டனைக்குரியவர்கள் எனத் தீர்ப்பளித்தது. இச்செயன்முறை, பழிதீர்ப்பது என்கின்ற தவறான தெளிவுரையிலிருந்து மீண்டும் இவ்வாறான தவறுகள் நடைபெறாத வண்ணம் காப்பாற்றவே என்கின்ற சரியான தெளிவுரைக்கு மக்கள் சிந்தனை நகர்த்தப்பட வேண்டும்.

இன நல்லிணக்கத்திற்கு முன்னுதாரணமாக அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் நாடுகளுள் தென்னாபிரிக்கா முக்கியத்துவம் பெறுகின்றது. தென்னாபிரிக்க நல்லிணக்க முயற்சிகள் ரோம் சட்டவாக்கத்திற்கு முன்னர் நிகழ்ந்தேறியவை. தற்போது சர்வதேச நீதிப்பொறிமுறை சொல்லாடல்களிலும் சர்வதேச மட்டத்திலும், 1998ஆம் ஆண்டு ரோமில் 120 நாடுகள் ஒன்று கூடி எடுத்த தீர்மானத்தில் நிரந்தர சமாதானத்திற்கு நீதி இன்றியமையாதது, ‘Lasting peace requires justice’ இதற்கு அமைவாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் Hagueல் நிறுவப்பட்டது. L.M.Ocampo மிகத்தெளிவாக மேலும் குறிப்பிடுகின்றார், எக்கட்டத்திலும் சட்டத்திலும், பொறுப்புக்கூறலிலும் எவ்வித அரசியல் விட்டுக்கொடுப்பிற்கும் இடமில்லை. “There can be no political compromise on legality and accountability”.[3] இச்சட்டம் பல தசாப்தங்களாக உண்டான பட்டறிவிலிருந்து உருவானது, சர்வதேச சமூகம் மக்களை பாதுகாக்கத் தவறிய அனுபவங்களிலிருந்து உருவானது. இத்தோல்விகள் மீண்டும் நிகழாதவாறு தடுக்க உருவானது தான் ரோம் சட்டம்.

ஆட்சி மாற்றம் என்பது “இனப் பிரச்சினைக்கான தீர்வு அல்ல”. ஆட்சி மாற்றத்தினால் தலைமைகளுக்கிடையே ஏற்படுகின்ற இனப் பிரச்சினையைத் தீர்க்கவேண்டும் என்கின்ற முன்கருதலுடன் திட்டமிடப்படாத நேர்மையான அரசியல் விருப்பு, இனப்பிரச்சினைத் தீர்வுக்கான தொடக்கப் புள்ளியாக அமையலாம். நிலைமாறுகால நீதியின் வரலாறு தனி நபர்களை குற்றவாளிகளாக இனங்கண்டு அவர்களை தண்டித்ததாக கூறுகின்றது. ஆனால், நிறுவன மயப்படுத்தப்பட்ட கூட்டு அரச உரிமை மீறலை எவ்வாறு கையாளப் போகின்றது என்பதற்கு இலங்கை உதாரணமாக அமைய வேண்டும்.

இலங்கை அரசும் இக்கூட்டுப் பொறுப்பிலிருந்து, தன்னை தண்டனை விலக்கீட்டுரிமைக்குள்ளாக்க (Impunity) முடியாது, சட்ட விலக்களிப்பு (Immunity) அளிக்கவும் முடியாது.

மன்னிப்பை முன்கருதலுடன் திட்டமிட்டு, நிலைமாறுகால நீதியில் தண்டனைக்குப் பதிலாக மன்னிப்பை முன் மொழிபவர்கள், சர்வதேச குற்றங்களுக்கு மன்னிப்பு அறவே கிடையாது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இக்குற்றங்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டு  தண்டிக்கப்படவேண்டும். இக்குற்றங்களுள் போர்க்குற்றம், மானிட குலத்திற்கு எதிரான குற்றம், இனப்படுகொலையும் அடங்கும்.

இலங்கையில் முன்னெடுக்கப்படும் நிலைமாறுகால நீதிப்பொறிமுறை அரசியல் நிகழ்ச்சி நிரல், பாதிக்கப்பட்டவர்களின் பார்வையில், வெற்றி பெற்றவர்கள், குற்றமிழைத்தவர்கள் முன்னெடுக்கின்ற செயற்திட்டம். பாதிக்கப்பட்டவர்கள் இதற்குள் உள்வாங்கப்படுகின்றார்களே தவிர, பாதிக்கப்பட்டவர்களால் நிலைமாறுகால நிதிப்பொறிமுறை கட்டமைக்கப்படவில்லை. நிலைமாறுகால நீதிப்பொறிமுறையினூடாகப் பயணித்த நாடுகளில் பாதிக்கப்பட்டவர்களே இப்பொறிமுறையைக் கையிலெடுத்தார்கள். அதற்குரிய ஏற்புடைத்தன்மை பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே உள்ளது, குற்றமிழைத்தவர்களிடம் அல்ல. குற்றமிழைத்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் உருவாக்கும் பொறிமுறையில் தாங்கள் இழைத்த குற்றங்களுக்கு பொறுப்பு கூறவேண்டியவர்கள். இலங்கையில் தொடரப்பட்டிருக்கும் நிலைமாறுகால நீதி முயற்சிகள், மையத்திலிருந்து விளிம்பு நிலைக்கு நகர்த்த வேண்டிய வரலாற்றுத் தேவை உள்ளது. இச்செயன்முறை பாதிக்கப்பட்ட மக்களின் பொறி முறையாக வேண்டுமெனில், பாதிக்கப்பட்ட மக்கள் மைய செயன் முறையை அரசு அங்கீகரிக்கின்ற அதே வேளை அரசு அதன் மீது ஏகபோக (Monopoly) உரிமையைக் கொண்டிருக்க முடியாது. அரசு சாரா, பாதிக்கப்பட்ட மக்கள் நலன் சார்ந்து பணி செய்கின்ற சுயாதீன மனித உரிமை அமைப்பு, நிறுவனங்களும் உள்வாங்கப்பட வேண்டும்.

மேலே கூறப்பட்ட பொறி முறைகளின் வீரியம் உண்மையை நிறுவுவதிலேயே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. உண்மையைக் கண்டறிவது நிலைமாறுகால நீதியில் உண்மையை அறியும் விசாரணை குழுக்களூடே நடந்தேறியது. இலங்கை இவ்வுண்மையை கண்டறியும் ஆணைக்குழுக்களின் பொறிமுறைக்கு புதியது அல்ல. இற்றைவரை ஏறத்தாழ 9 ஆணைக்குழுக்கள்  உண்மையை கண்டறிவதற்காக அமைக்கப்பட்டிருக்கின்றது. இவைகள் கண்டறிந்த உண்மைகளுக்கு என்ன நடந்தது என்பது இன்னும் வெளிவராத புதிராகவே இருக்கின்றது. கண்டறியப்பட்ட உண்மைகள் பகிரங்கப்படுத்தப் படவில்லை அவற்றிற்கான பொறுப்புக்கூறலும் இடம்பெறவில்லை. இந்நிலையில், கடந்த காலத்தில் என்ன நடந்தது என்ற கசப்பான உண்மைகளை கண்டறிவதற்கு இன்னொரு உண்மை அறியும் ஆணைக்குழு தேவையா என்பதை பாதிக்கப்பட்ட மக்கள்தான் தீர்மானிக்கவேண்டுமே தவிர அரச தலைவர்கள் அல்ல. இல்லாவிடின் இதற்கு மாற்றீடாக இன்னொரு உண்மை அறியும் பொறிமுறையை முன்வைக்கலாமா?

மாற்று முன்மொழிவை சமர்ப்பிப்பதற்கு உண்மை அறியும் ஆணைக்குழுக்களின் ஆணை/ பணி என்ன என்பதை கட்டவிழ்க்கவேண்டிய தேவை உள்ளது. Hayner என்கின்ற நூலாசிரியர் தனது Unspeakable Truths: Confronting state terror and atrocity (2001) என்னும் நூலில், “உண்மை அறியும் ஆணைக்குழுக்கள் மிகவும் வரையறுக்கப்பட்டவை. இவ்வாணைக்குழுக்கள் தரவுகளை சேகரித்து, உறுதிப்படுத்தி, அதைப் பகிரங்கப்படுத்தி, சாட்சியங்களைத் தேடி ஆதாரங்களைப் பலப்படுத்துவது இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பில். ஆனால், இவ் ஆணைக்குழுக்கள் நீதித்துறையை சார்ந்தது அல்ல. இவ் ஆணைக்குழுக்கள் குற்றமிழைத்தவர் மீது குற்றப்பொறுப்பையோ விதிமுறைத் தண்டத்தையோ சுமத்த முடியாது” என்று குறிப்பிடுகின்றார். ஆகவே, ஏற்கனவே பொது வெளியில் உள்ள நிரூபிக்கப்பட்ட உண்மைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அரசு நீதிசார் (Judicial Truth) உண்மைகள் வெளிக்கொணர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், காலத்தை இழுத்தடிக்காது. இதய சுத்தியுடன் கூடிய இனப்பிரச்சினையின் மூல காரணத்திற்கான அணுகு முறை மீண்டும் முள்ளிவாய்க்கால் முடிவை தடுக்கும்.

அருட்பணி. எழில் றஜன்

இணை ஊடகப் பேச்சாளர், தமிழ் சிவில் சமூக அமையம்

[1] Cath Collins, Post-transitional Justice: Human Rights Trials in Chile and El Salvador, The Pennsylvania state university press, 2010, pg, 11

[2] Pablo de Greiff, The Handbook of Reparations, Oxford university press, 2006, pg. 452

[3] Ibid, pg.12