படம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் | அண்மையில் ஜனாதிபதியால் திறந்துவைக்கப்பட்ட உலோக வீடு.

சர்ச்சைக்குரிய 65,000 உலோக்கத்திலான வீட்டுத்திட்டதை பற்றி மீண்டும் ஒரு வாக்குவாதம் எழுந்துள்ளது. மார்ச் மாதம் 24ஆம் திகதி நடந்த நாடாளுமன்ற அமர்வுகளில் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சரிடம் இவ்வீட்டுத்திட்டத்தில் ஏற்பட்ட முறைதவறுகளை சுட்டிக்காட்டி எதிர்த்தரப்பில் இருந்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அமைச்சர், இத்திட்டத்தை அமுல்படுத்தப்போகும் நிறுவனமாகிய ஆர்சிலர் மிட்டல் நிறுவனத்தைப் பற்றி பலவாறு புகழ்ந்து கூறியதோடு, ஊடகங்கள் இவ்வீடுத்திட்டதை பற்றி பிழையான செய்திகளை பரப்பிவருவதாகவும் கூறினார். அமைச்சர் கூரியகருதுக்களில் உண்மைத் தன்மை உள்ளதா? இவ்வீட்டுத்திட்டம் வட கிழக்கு மக்களுக்கு நன்மை பயர்க்குமா? 2.18 மில்லியன் ரூபாய் பெறுமதியான இவ் உலோக வீடுகள் உண்மையிலேயே நிரந்தர வீடுகளா? போன்ற கேள்விகள் பலமட்டங்களில் எழுகின்றன.

ஆர்சிலர் மிட்டல்

இவ்வீடுத்திட்டதை பற்றி கதைக்கும்போது அதை அமுல்படுத்தப்போகும் எனக்கூறப்படும் நிறுவனத்தை பற்றியும் பேசியாக வேண்டும். ஆர்சிலர் மிட்டல் எனப்படும் பல்தேசிய நிறுவனம் கடந்த வருடம் 79.3 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக பதிவு செய்ததாகவும், அறுபதுக்கு மேற்பட்ட கிளை காரியாலயங்களை கொண்டதாகவும், சர்வதேச பங்குச்சந்தைகளில் பதிந்திருப்பதாகவும், இத்தகைய நிறுவனம் இலங்கையில் முதலீடு செய்வது எமது நாடு செய்த அதிஷ்டம் எனவும் அமைச்சர் பலவாறு புகழ்ந்து கூறியிருந்தார்.

எனினும், லக்சன்பெர்க்கை தலைமை காரியாலயமாகக் கொண்ட இந்த நிறுவனம் 2015ஆம் ஆண்டு எட்டு பில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டத்துக்கு முகம் கொடுத்திருந்தது. உருக்கின் விலை உலக சந்தையில் வீழ்ச்சி அடைந்ததே இதற்கான காரணம் என ‘புளூம்பெர்க்’ வர்த்தக இணையத்தளம் கூறுகின்றது. நியூயோர்க் பங்கு சந்தையிலும் ஆர்சிலர் மிட்டலின் பங்குகளுக்கு 60% வீழ்ச்சி காணப்பட்டதாகவும் இவ் இணையத்தளம் கூறுகின்றது. எனவே, ஆர்சிலர் மிட்டல்  ஆனது தனது இலாபப்பங்கை (dividends) இரத்துச்செய்து நிறுவன விஸ்தீகரிப்புக்கான திட்டங்களை நிறுத்தி ஏற்கனவே இயங்கிக்கொண்டிருக்கின்ற தொழிற்சாலைகளை மூடி நிறுவனத்தின் மொத்த கடன் தொகையாகிய 15.7 பில்லியன் அமெரிக்க டொலர்களை மீளக்கட்டுவதற்கு முயற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றது. ஆர்சிலர் மிட்டல் தனது பண்டகசாலையில் மிதமாக விற்கமுடியாமல் இருக்கும் இரும்புகளை இலங்கையில் குவிப்பதனால் இலாபத்தை ஈட்டும் எனவும், இதனாலேயே சில சலுகைகளை இலங்கை அரசாங்கத்துக்கு வழங்குகிறது எனவும், இதே கட்டுமானங்களை கல்வீடுகளாக அமைக்கும்படி கேட்டிருந்தால் இச்சலுகைகள் கிடைக்கபெற்றிருக்காது எனவும் பொறியலாளர் Dr. முத்துக்கிருஷ்ண சர்வானந்தன் குறிப்பிட்டிருக்கின்றார். ஆகமொத்தத்தில் லைபீரியா போன்ற போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் அரசியல்வாதிகளுடன் சேர்ந்து ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டப்பட்ட இந்நிறுவனத்தின் மிதமிஞ்சிய இரும்புகளை கொட்டும் இடமாக வட கிழக்கை ஆக்கிவிட்டது மீள் குடியேற்ற அமைச்சு.

முறைதவறிய வீட்டுத்திட்ட கோரல் செயல்முறை

போரினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வாழும் 65,000 மக்களுக்கு வீடுகள் வழங்குவதற்கு 2015ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் தீர்மானம் எடுத்தது. ஆனால், இதற்கு முன்னரே ஆகஸ்ட் மாதத்தில் இத்திட்டத்தை அமுல்படுத்தப்போகும் நிறுவனத்தின் பெயரை புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் தன்னிடம் தெரிவித்து இருந்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்திருந்தார்.

அமைச்சரவை தீர்மானத்திற்கு 12 நாட்களின் பின்னர் பத்திரிகைகளில் இத்திட்டத்திற்கான கோரல்களை மிக விரைவாக விளம்பரம் செய்தது புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு. விளம்பரம் பிரசுரித்து கோரல்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் விளம்பரத்தில் போடப்பட்ட நிபந்தனைகள் மாற்றப்பட்டன. இம்மாற்றங்களை உள்ளடக்கிய கோரல்களை மீண்டும் முன்வைப்பதற்கு ஏலக்காரர்கள் கோரிக்கை விடுத்தபோதிலும் அவர்களுக்கு மூன்று வேலை நாட்கள் மட்டுமே வழங்கப்பட்டது.

கிடைக்கப்பெற்ற 35 விண்ணப்பங்களில் 15 விண்ணப்பங்களே முதலில் ஏற்றுக்கொள்ளப்பட்டன. நிபந்தனைகள் திடீரென்று மாற்றப்பட்டதால் இறுதியில் எட்டு விண்ணப்பங்களே அமைச்சிடம் கையளிக்கப்பட்டன.

இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று மீள் குடியேற்ற அமைச்சர் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றிற்கு தெரிவித்திருந்தாலும், இதற்கான கோரலை ஆர்சிலர் மிட்டல் நிறுவனமே பெற்றுள்ளதாக உத்தியோகபூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

சிவில் சமூக உறுப்பினர்களினதும்  துறை சார்ந்த நிபுணர்களினதும் எதிர்ப்பு

இவ்வீட்டுத்திட்டதைப் பற்றி இவ்வருடம் ஜனவரி மாதம் அளவில் வட கிழக்கை சேர்ந்த சிவில் சமூக உறுப்பினர்களும் துறைசார்ந்த நிபுணர்களும் அறிக்கையொன்றை விடுத்தனர்.

வீடுகள் வழங்குவதற்கு அமைச்சரவை எடுத்த முடிவை தாம் வரவேற்பதாகவும் அதன் பின் மீள்குடியேற்ற அமைச்சால் ஏற்பட்ட முறைதவறிய செயன்முறையினால் மக்களுக்கு கொடுக்கப்படவிருக்கும் உலோக வீட்டுத்திட்டத்தை கண்டிப்பதாகவும் இவ்வறிக்கை கூறியது.

மேலும், போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்ளூர் காலநிலைக்கு பொருத்தமான வீடுகளை அரசு வழங்க வேண்டும் என்றும், இவ்வீடுத்திட்டம் வட கிழக்கு பொருளாதாரத்தை தூண்டுவதாகவும், வீடுகளை தானாகவே கட்டமுடியாமல் இருக்கும் குடும்பங்களை கருத்தில் கொள்ளும் ஒரு பொறிமுறையை கொண்டதாகவும், காணியற்றோரின் பிரச்சினை போன்றவற்றையும் கருத்தில் கொண்ட திட்டமாகவும் அமைய வேண்டும் என்றும் கோரிக்கைகளை இவ்வறிக்கை விடுத்திருந்தது.

உலகின் மிகப்பெரிய உலோக வியாபார நிறுவனம் ஆர்சிலர் மிட்டலின் தேர்வு

கோரல்களில் அடக்கப்பட்ட நிபந்தனைகளில் இத்திட்டத்தை அமுல்படுத்தப் போகும் நிறுவனமானது கடந்த ஐந்து வருடங்களில் 25 பில்லியன் ரூபாய் திட்டம் ஒன்றை அமுல்படுத்தி இருக்க வேண்டும் என்றும், 650 மில்லியன்  ரூபாய்க்கான ஒப்பந்தப்பத்திரத்தை கொண்டிருக்க வேண்டும் என்றும், ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேலான நிதி ஏற்பாடுகளை வழங்க கூடிய தன்மையை கொண்டுள்ளதாகவும் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. உள்நாட்டு நிறுவனங்களை தட்டிக்களிப்பதற்கே இத்தகைய பாரிய நிபந்தனை கோரல்கள் கொண்டதாகவும் சில நிபுணர்கள் கருத்து வெளியிட்டனர்.

எனவே, இறுதியாக இரண்டு சர்வதேச நிறுவனங்களாகிய ஆர்சிலர் மிட்டல்  மற்றும் EPI-OCPL எனப்படும் இந்தியாவைச் சேர்ந்த கூட்டுச்சங்கம் ஆகியவை மட்டுமே அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட ஆலோசனை குழுவின் பரிசீலனைக்கு தேர்வு பெற்றன. அதிலும் நிதி சார்ந்த ஏற்பாடுகளில் ஆர்சிலர் மிட்டல் நிறுவனம் மாத்திரமே மிகப்பொருத்தமான ஏற்பாட்டை கொண்டிருந்தது என ஆலோசனைக்குழு தீர்மானித்தது.

மாசி மாதம் நடுப்பகுதியளவில் அரசாங்க அமைச்சரவை இந்த வீட்டுத் திட்டத்தை பரிசீலிப்பதற்காக உபகுழு ஒன்றை நியமித்தது. கட்டுமான அமைச்சர் சஜித் பிரேமதாச இந்த வீட்டுத்திட்டத்திற்கு எதிர்ப்பை தெரிவித்திருந்ததினாலும், ஒரு வீட்டிற்கு 2.1 மில்லியன் ரூபாய் செலவைக்கொண்ட இந்தத் திட்டத்தை சாதாரண முறையில் அமுல்படுத்தினால் ஒரு வீடு ஒரு மில்லியன் ரூபாவிற்கு கட்ட முடியும் என்று அவர் கூறியதனாலும் இவ் உபகுழு நியமிக்கபட்டது.

இதன் பின்பு 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6ஆம் திகதி அரசு வீட்டுத்திட்டத்தை உள்நாட்டு நிறுவனங்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக ‘சண்டே டைம்ஸ்’ செய்தி வெளியிட்டது. இந்த அறிக்கையின் படி இலங்கையின் பிரதான கட்டுமான அமைப்புகளின் சங்கத்திற்கு, தேசிய திட்டமிடல் திணைக்களம், இத்திட்டமானது உள்நாட்டு நிறுவனங்களினாலும் உள்நாட்டு கட்டுமானப் பொருட்கள், ஊழியம் ஆகியவற்றைப் பயன்படுத்தி அமுல்படுத்தமுடியும் எனவும் தெரிவித்திருந்தது. எனவே, இலங்கையின் பிரதான கட்டுமான அமைப்புகளின் சங்கத்தை, இதற்கேற்ப திட்டமொன்றை தயாரிக்குமாறு தேசிய திட்டமிடல் திணைக்களம் பணித்திருந்தது.

இவ்வேளையில் மீள்குடியேற்ற அமைச்சு மக்களின் ஆலோசனையை பெறவேண்டும் என்ற பெயரில் அதேவாரமே தனது திட்டத்திற்கு அமைய முதலாவது இரும்பு வீட்டை பொருத்தி, உரும்பிராயில் வசிக்கும் ஒரு குடும்பத்திற்கு கையளித்தது. மார்ச் மாதம் ஜனாதிபதியின் யாழ். விஜயத்தின் பொது இவ்வீட்டை அவர் பார்வை இட்டார்.

மீள்குடியேற்ற அமைச்சருக்கும் வடக்கு முதல் அமைச்சருக்கும் இடையிலான கருத்து மோதல்

ஜனாதிபதியின் விஜயத்தின்போது நடந்த நிகழ்வில் வட மாகாண முதல் அமைச்சரும் மீள்குடியேற்ற அமைச்சரும் மேடையில் கருத்து மோதினர்

“போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் அமைத்துக் கொடுக்கும் வீடுகளைப் பார்த்தோம். அது எங்கள் சுற்றாடல், காலநிலை, கலாசாரத்துக்குப் பொருத்தமானவையாக இல்லை. அத்துடன், மக்களுக்கு வழங்கப்படும் சில வசதிகள் குறிப்பாக காஸ் வசதிகளை மக்கள் தொடர்ந்தும் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ளனர்” என்று கூறிய முதலமைச்சருக்கு,

“குறித்த வீடுகள் காலநிலைக்கு பொருத்தமானவையாக இல்லை என முதலமைச்சர் கூறுவதை ஒத்துக்கொள்ள முடியாது. காரணம் வெளியில் வெப்பம் அதிகமாக இருக்கும்போது உள்ளே வெப்பம் மிக குறைவாக இருக்கும் வகையில் அந்த வீடுகள் அமைக்கப்படுகின்றன. வசதிகள் குறித்து முதலமைச்சர் இங்கே கூறினார். மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் இவ்வாறான நவீனத்துவங்களைப் பின்பற்றியே வளர்ச்சியடைந்தன. தவிர இந்த வீடுகளை அமைக்கும் நிறுவனம் உலகளவில் தேர்ச்சி பெற்றதுடன் முன்னணி வகிக்கும் நிறுவனமாகும்” என மீள்குடியேற்ற அமைச்சர் பதிலளிடி கொடுத்தார்.

இருவரையும் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, “முதலமைச்சர் விக்னேஸ்வரனும் மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனும் வீட்டுத்திட்டம் தொடர்பாக தங்கள் கருத்துக்களைக் கூறினார்கள். அவர்களுடைய விவாதம் தேவையற்றது. இந்த வீடுகளில் நானோ, விக்னேஸ்வரனோ, சுவாமிநாதனோ தங்கப்போவதில்லை. இவ் வீடுகளில் மக்களே தங்கப்போகின்றார்கள். மக்கள் விரும்பும் வீடுகளையே நாம் கட்டிக்கொடுக்க வேண்டும். மாகாண அரசுடன் இணைந்து வீட்டுத்திட்டம் தெடர்பாக விரைவில் மக்களின் கருத்துக்களைப் பெற்று அவைபற்றி நாங்கள் ஆராய்வோம்” என்று கூறினார்.

வீட்டுத்திட்டதிற்கான விண்ணப்பம் கோரல்

இதைத் தொடர்ந்து மக்களிடம் கருத்துக்களை பெரும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆனாலும், இது நடைபெற்றுக்கொண்டு இருக்கும் வேளையிலேயே வீட்டுத்திட்டம் பெற விரும்புவோர் தமது விபரங்களை கிராமசேவையாளர்களோடு பதிவுசெய்யும்படி பத்திரிகைகளில் விளம்பரம் பிரசுரிக்கபட்டது. இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை அனுப்பிவைக்க வேண்டுமென்றும் கூறப்பட்டது. எனவே, மக்களின் கருத்துக்களை கேட்பது என்பது மீள்குடியேற்ற அமைச்சு ஒரு வெளிவேடதுக்கு செய்யும் போலியான நடவடிக்கை என்பதில் ஐயமில்லை.

65,000 உலோக வீடுகளும் மக்களிடம் மறைக்கப்படும் உண்மைகள்

இந்த வீட்டுத்திட்டத்தின் கீழ் பொருத்தப்படும் வீடுகள் இரும்பிலான கட்டமைப்புக்களினையும், ஏற்கனவே தொகுதியாக்கப்பட்ட அமைப்புக்களினையும் கொண்டிருக்கும்.

ஒவ்வொரு வீட்டுக்குமான செலவு ரூபாய் 2.1 மில்லியன் ஆகும். இந்தத் தொகை இதற்கு முன்னர் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத்திட்டங்களுக்கான செலவுகளுடன் ஒப்பிடுகையில் நான்கு மடங்குகள் அதிகமானது. இதன் அடிப்படையில் பார்க்கையில் இத்திட்டதிற்கான செலவு ரூபாய் 136 மில்லியன்கள் (அதாவது கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) ஆகும்.

ஒரு கொங்கிரீட் வீட்டிற்கு அதிகபட்சம் ரூபாய் 1 மில்லியன் மாத்திரமே செலவாகும் என துறைசார் நிபுணர்கள் கூறுகின்றனர். வடக்கு கிழக்கின் மொத்த வீடுகளின் தேவை 137,000 என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு கூறி உள்ளது. எனவே, ரூபாய் 136 மில்லியன்களுக்கு வட கிழக்கின் மொத்த வீட்டுத்திட்டத்தின் தேவையையும் பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்கும்.

மேலும், இவ்வாறான தொகுதியாக்கபட்ட இரும்பு வீடுகள் சாதாரண வீடுகளை விட குறைந்த விலையில் கட்டுவதற்கே பயன்படுத்தபடுகின்றன. இதற்கு ஒரு காரணம் இவ்வீடுகள் கட்டப்படுவதில்லை. முன்தயாரிக்கப்பட்ட இரும்புத்தகடுகளை வீடு கட்டப்படும் இடத்தில் பொருத்துவதனால் வீடுகட்டுவதற்கான கூலித்தேவை இல்லாதுபோகிறது. எனவே, முறையான கல்வீட்டை கட்டுவதற்கான தொகையிலும் இரண்டு மடங்கு அதிகமான தொகையை இவ்வீட்டுத்திட்டம் கொண்டிருப்பது கேள்விக்குரிய விடையமாகும்.

உலோகத்தினால் வீட்டின் முழுக்கட்டமைப்பும் உள்ளதால் கட்டமைப்பை அதே நிறுவனத்தின் உதவியின்றி விஸ்தீரனம் செய்ய முடியாது. இரும்பு வீடுகள் எமது காலநிலைக்கு எவ்வளவு காலம் நிலைத்திருக்கும் என்ற கேள்விகளும் எழுப்பப்படுகின்றன.

ஒவ்வொரு வீடும் 520 சதுர அடி பரப்பைக் கொண்டிருக்கும் எனவும், ஒவ்வொரு வீட்டிற்கான நிதியில் தொலைக்காட்சி, சில தளபாடங்கள் மற்றும் சூரியஒளிச் சேகரிப்பான் (சோலர்) போன்றன உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனாலும், வீட்டைச் சென்று பார்வையிட்டவர்கள், பின்வருமாறு கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.

அத்திவாரம் பலமாகப்போடப்படவில்லை. கொங்கிரீட் ஒரு படை அளவே அத்திவாரத்திற்கு போடப்பட்டுள்ளது. யன்னல்களுக்கு கம்பிகள் போடப்படவில்லை. வீட்டு யன்னல்களை பொருத்தும் ஆணிகள் வீட்டின் வெளிப்புறமாகவே காணப்படுகின்றன. வீட்டின் சுவர்கள் வீட்டை பொருத்தி  ஒரு மாததிற்குள்ளேயே பிளவு பட தொடங்கிவிட்டதாகவும் அவதானிப்புக்கள் உள்ளது. வீட்டுக்கு முன்னால் விராந்தைகள் கட்டப்படவில்லை. வீட்டினுள் புகை போக்கிகளோ அடுப்புகளோ அமைக்கப்படவில்லை. இதற்குப் பதிலாக வாயு அடுப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே, இவ் வீடுகளில் வாழும் குடும்பங்கள் எரிபொருளுக்கு வாயு சிலிண்டர்கலையே நம்பி இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். வீட்டை குளிர்மையாக வைத்திருப்பதற்கு வீட்டு சுவர்களின் இடையே போடப்பட்டிருந்த பதார்த்தங்கள் விரைவில் தீப்பற்ற கூடிய தன்மையை கொண்டவையாகவும்,  நச்சுத்தன்மை கொண்டவையாகவும் அமைகின்றன.

உள்நாட்டு பொருளாதாரதுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் 

ஒரு வீட்டை கட்டுவதற்கான செலவில் 25% ஊழிய செலவாகவே காணப்படுகின்றது. ஒரு வீட்டின் பெறுமதி ஒரு மில்லியன் என எடுத்துக்கொண்டால் அதில் ஊழியத்திற்கான செலவினம் 250,000 ரூபா ஆகும். இந்தத் தொகை சாதாரண ஊழியர் ஒருவரின் ஒரு வருட வருமானம் ஆகும். 65,000 வீடுகளை கொண்ட இத்திட்டம் அண்ணளவாக 13,000 தொழிலாளர்களுக்கு ஐந்து வருடங்களுக்கு வேலைவாய்ப்பை ஈட்டித்தரும் என கணிப்பிடலாம். உள்நாட்டு ஊழியத்தையும் பொருட்களையும் பயன்படுத்தி கட்டப்படும் வீட்டுத்திட்டத்தினால் மாத்திரமே இத்தகைய பொருளாதார ஊக்குவிப்பை கொடுக்கமுடியும்.

மேலும், இப்பரிமாணத்திலான வீட்டுத்திட்டங்களை அமைப்பதற்கான ஊழியம் வட கிழக்கில் இல்லை போன்ற கருத்துக்களும் தெரிவிக்கப்படுகின்றன. இருந்த போதிலும் யாழ்ப்பாணத்தில் மாத்திரம் அண்ணளவாக 17500 தேர்ச்சி பெற்ற தொழிலாளர்கள் (மின் பொறியியலாளர்கள், தச்சுத்தொழிலார்கள், இரும்பு வேலை செய்வோர், மேசன் தொழிலார்கள் போன்றவர்கள்) உள்ளதாக யாழ். பிரதேச செயலக புள்ளிவிபரவியல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கமம், மீன்பிடி வாழ்வாதாரங்கள் வீழ்ச்சி அடைந்து கொண்டுவருவதனால் இத்தொழில்களில் ஈடுபடுவோரும் தமது வருமானத்தை மேம்படுத்திக்கொள்ள கூலித்தொழில்களில் பங்கேற்கின்றனர். எனவே, வட கிழக்கில் ஊழிய பற்றாக்குறை உள்ளது என்னும் வாதம் அடிப்படையற்றது. இதற்கு மேலும் ஊழியப்பற்றாக்குறை காணப்படுமாயின் வெளிமாவட்டங்களில் இருந்து ஊழியத்தை ஈட்டுவதை கருத்தில் கொள்ளாது வெளிநாட்டு நிறுவனம் ஒன்றிற்கு முழுமுதலையும் வழங்குவதற்கு எடுத்த தீர்மானம் வட கிழக்கு பொருளாதாரத்திற்கோ நாட்டின் பொருளாதாரத்திற்கோ எந்தவித பயனையும் ஊக்கத்தையும் அளிக்காது.

இத்தனை பிரச்சினைகள் இருந்தும் அரசாங்கம் ஏன் இவ்வீடுத்திட்டத்தை முன்னே எடுத்துச்செல்கிறது? ஆர்சிலர் மிட்டல் அரசாங்கத்துக்கு நிதி தொடர்பாக சில சலுகைகளை வழங்கியுள்ளது. உதாரணத்திற்கு ஒருவருட சலுகைகாலமும் பத்து வருட கடன் மீளக்கட்டுவதற்கான காலமும் கொடுக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் டொலர் பெறுமதியில் எடுக்கப்படும் இக்கடனானது, ஏற்கனவே வெளிநாட்டுக்கடனில் மூழ்கி இருக்கும் எமது நாட்டின் பொருளாதாரத்தின் மீது மேலும் சுமையாக வரப்போகிறது என்பதும் அரசாங்கத்துக்கு தெரிதிருக்காமல் இருக்க வாய்ப்பில்லை.

மக்களின் தேவைகளும் பல்தேசிய நிறுவனத்தின் இலாபமும்

வட கிழக்கில் இடம்பெயர்ந்த மக்களின் நன்மைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட வீட்டுத்திட்டம் என்று கூறுவதை விட ஒரு பல்தேசிய நிறுவனத்தின் இலாபத்துக்காக மீள்குடியேற்ற அமைச்சு கொண்டுவந்த திட்டம் இது என்று கூறுவதே சாலப்பொருத்தமாகும். மாதிரி வீட்டொன்றை பொருத்தி அதன் அடிப்படையில் மக்களின் கருத்துக்கள் பெறப்படபோகின்றன என்று கூறுவது, பசித்தவனுக்கு வெறும் கஞ்சியை மாத்திரம் காட்டிவிட்டு வேண்டுமா வேண்டாமா என்று கேட்பதை போன்றதாகும். இது மட்டும்தான் கிடைக்கும் என்றால் உடைந்து ஒழுக்குகள் கொண்ட குடிசைகளில் வாழும் மக்கள் உலோக வீடுகளை வேறு வழியின்றி ஏற்றுக்கொள்வார்கள். இருந்த போதிலும் இவ்வீட்டுத்திட்டம் இத்தனை எதிர்ப்புக்களையும் தாண்டி அமுல்படுத்தப்படுமாயின் வடக்குக் கிழக்கில் வாழும் மக்களை ஏமாற்றுவதற்கு அமுல்படுத்தப்படும் திட்டம் என்பதனையும் மக்கள் அறிந்திருக்க வேண்டும்.

சுவஸ்திகா அருளிங்கம்