படம் | HUTTINGTON POST

இலங்கை தேசிய ஒற்றுமைக்கும் நல்லுறவுக்குமான ஜனாதிபதி அலுவலகத்தின் ஒரு அங்கத்தவரான ராம் மாணிக்கலிங்கம் அண்மையில் ஒரு கட்டுரையிலே தமிழரின் சுயாட்சி பற்றிய விடயம் ஒரு புதிய அரசியலமைப்புச் சட்டத்தினுள் முறைப்படுத்தப்படும் வரைக்கும், திரளான குற்றச்செயல்களையிட்ட பொறுப்புக்கூறலை இலங்கை முன்னுரிமைப்படுத்தக்கூடாதெனவும், அத்துடன் மனித உரிமைகளுக்காகக் குரல்கொடுக்கும் சர்வதேச ஆர்வலர்கள் ஏனைய நல்லுறவுக்கான வடிவங்களுக்கு மேலாக யுத்தக் குற்றச்செயல்கள் விசாரணைக்கு முன்னுரிமை கொடுப்பதை நிறுத்த வேண்டும் எனவும் வாதித்துள்ளார்.

மாணிக்கலிங்கத்தின் கட்டுரையானது நிலைமாற்றுக்கால நீதிக்குள் திரும்பத்திரும்ப இடம்பெறும் இரு விவாதங்களைத் தொட்டுவரையப்பட்டது. அவை இரண்டுமே அந்தத் துறையைப்போலவே தொன்மை வாய்ந்தனவாகும். முதலாவது – சமாதானம் எதிர் நீதி எனும் வாதம். இரண்டாவது – நல்லுறவு தொடர்பான நடவடிக்கைகளின் ஒழுங்குதொடர் பற்றிய பிரச்சினை. அவரது கட்டுரையிலே யுத்தக் குற்றச்செயல்களுக்கான விசாரணைகளைவிட அரசியற்தீர்வே மிக முக்கியம் என்பதனால், அவைகளையிட்ட ஒழுங்குத்தொடரானது அரசியற்தீர்வுக்கு சலாக்கியத்தை வழங்குவதாயும் யுத்த குற்றச்செயல்களையிட்ட விசாரணையானது பின்பு இடம்பெறுவதாயும் இருக்கவேண்டும் என யோசனை தெரிவித்திருக்கிறார். இந்தக் கட்டுரையிலே தேசியப் பிரச்சினைக்கான அரசியற்தீர்வையும் குற்றச்செயல்களின் அட்டூழியத்துக்கான பொறுப்புக்கூறலையும அவர் இரண்டாகத் துருவப்படுத்தியிருப்பது பிழை என்பதையும், குற்றச்செயல்களின் அட்டூழியங்களை விசாரிக்கும் சட்டக் கட்டமைப்பின் நிர்மாணமானத்தை பின்னையதற்கு முன்னாக நிலைநாட்டுவது மேம்பட்ட உபாயமெனவும் கூற விழைகிறேன்.

இலங்கைத் தேசியப் பிரச்சினைக்கான அரசியற்தீர்வானது வழக்குத்தொடுத்தலுக்கும் விட முக்கியமானது எனும் வாதம் குறிப்பிட்ட அளவுக்கு உள்ளார்ந்த ரீதியிலே கவர்ச்சிகரமானதுதான். இருந்தாலுங்கூட, இப்படியான பகுப்பாய்வானது இனப்பிரச்சினைக்கு எண்ணெய் வார்க்கும் மோசமான குற்றச்செயல்களைப் புரிந்தவர்களைத் தண்டிக்கும் அதன் வகிபங்கைக் கவனத்திற் கொள்ளத் தவறுவதால், இது வெறும் மேலோட்டமானதே. சமத்துவத்துக்கான தமிழர் அரசியற் போராட்டமானது இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னதாகவே இருந்து வந்துள்ளது; குறைந்தபட்சம் இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்தாவது அதற்கெதிராகப் பல்வேறு மட்டங்களிலே வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டு அவை தண்டிக்கப்படாது விடப்பட்டமை தொடர்ச்சியாக இடம்பெற்று வந்துள்ளது. தண்டிக்கப்படாமல் விடப்பட்ட வன்முறை அத்தியாயங்கள் ஒவ்வொன்றுமே இன முறுகல்களுக்குப் புதிய எண்ணெய் வார்த்து இறுதியிலே இருதிறத்திலும் கட்டுப்பாடுமீறிய வன்முறைகளுக்கு இட்டுச்சென்றுள்ளது. 1983 இனப்படுகொலைகள் – இலங்கை சுதந்திரம் அடைந்த பின்பு எந்த ஒரு இனத்துக்கும் எதிராக விடுக்கப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் என ஐயமின்றிக்கூறக்கூடியதான அவைகள் – ஒரு வாலிப புரட்சியைத் துரிதமாக முழு அளவிலான யுத்தமாக, பேரழிவையேற்படுத்தும் அளவுக்கு மாற்றியமைத்துவிட்டது. தண்டனையின்மையும் அதனால் விளைந்த வன்முறையும், அவை தண்டிக்கப்படாமையால் அத்தகைய வன்முறையானது எவ்வேளையிலும் பொறிதட்டப்படலாம் எனும் அச்சமுந்தான் சுயாட்சிக்கான கோரிக்கையின் இதயபீடமாய் அமைந்துள்ளது. இதனாலேதான் தமிழ் அரசியல்வாதிகள் பொலிஸ் அதிகாரங்களுக்கான உரிமையை வலியுறுத்தி வந்துள்ளனர்; தமது நிதிய மற்றும் பொருளாதார அதிகாரங்களுக்கு மேலாக, தமது சரீரகப் பாதுகாப்பின் மீதான கட்டுப்பாடானது சரியாகவோ அல்லது தப்பாகவோ மிகவும் அவசரமானதும் அத்தியாவசியமானதுமான கரிசனையாக அவர்களால் கணிக்கப்படுகிறது. எனவே, தண்டனையின்மையை முடிவுக்குக் கொண்டுவராமல் தேசியப்பிரச்சினைக்கு உண்மையான தீர்வு இருக்கமுடியாது. இனப்பிரச்சினைக்கு பொறுப்புக்கூறாத அதிகாரப்பகிர்வு மாத்திரமே சர்வநிவாரணி எனும் எடுகோளானது, சுயாட்சிக்கான கோரிக்கைகளுடன் திரட்சியான குற்றறச்செயல்களுக்கான தண்டனையின்மையானது இரண்டறக் கலந்துள்ளது எனும் நிஜத்தைப் புறக்கணிப்பதுடன், இன்னுமொரு பரந்தளவிலான அட்டூழியத்தைக் கட்டுப்படுத்த இயலாத அரசியலுக்கு வழிவகுத்து, இனங்களிடையேயான சகவாழ்வுக்கான சாத்தியங்கள் எதனையும் நிரந்தரமாகப் பாதித்தும் விடக்கூடும்.

மாணிக்கலிங்கத்தின் கட்டுரையானது இலங்கையின் இனப்பிரச்சினையின் மூலாதார இயக்கசக்தியையும் புறக்கணிப்பதாக உள்ளது. தேசியத் தலைவர்களால் முறித்துப்போடப்பட்ட வாக்குறுதிகளின் சம்பவக்கோர்வைகள் தமிழ் அரசியலின் உணர்வலைகளின் இதயபீடத்திலே கசிந்துள்ளது. இந்தப் பின்புலத்திலே, பொறுப்புக்கூறல் பற்றி இலங்கை வழங்கிய மேலும் ஓர் வாக்குறுதியை இலங்கை அரசு கனப்படுத்தத் தவறும்பட்சத்திலே, அது இன நம்பிக்கையீனத்துக்கு மேலும் பங்களிப்புச்செய்வதாக ஆகிவிடும். பண்டா – செல்வா ஒப்பந்தம், டட்லி – செல்வா ஒப்பந்தம் ஆகியவை அடுத்தடுத்து வந்த அரசுகளால் ஒருதலைப்பட்சமாக தூக்கியெறியப்பட்டது மட்டுமன்றி தொடர்ந்த கால ஓட்டத்திலே மேலும் பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமையானது இலங்கையின் இனப்பிரச்சினைகள் பற்றிய எந்த ஒரு பக்கச்சசார்பற்ற கணிப்பிலும் பூதாகாரமாகித் தெரிகிறதாய் உள்ளது. அதேபோல, கடந்த ஒக்டோபர் 2015 இலே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திலே தற்போது உள்ளடக்கப்பட்டுள்ளதான, பொறுப்புக்கூறுதலுக்கான இலங்கையின் அர்ப்பணிப்பானது, இருதரப்பினராலும் இழைக்கப்பட்ட அட்டூழியங்களுடன் எப்படி இடைப்படுவது என்பதிலே அரசுக்கும் தமிழ் அரசியற் தலைவர்களுக்கும் இடையே அரசியல் இசைவுக்காக அடித்தளத்தை அமைத்துள்ளது. தமிழ் மக்களிடையே தீவிரப்போக்கான ஒரு சாராரின் கடும் எதிர்ப்பு நிலவினாலுங்கூட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையானது பணயப்பங்காளிகளுடன் ஜெனீவாத் தீர்மானத்திலே ஒரு சில கூர்மிய திருத்தங்களைச் செய்யும் விடயத்தையிட்டுக் கலந்துரையாடி, அத்திருத்திய தீர்மானம் பேரவையிலே நிறைவேற்றப்படுவதற்குத் தனது ஒத்துழைப்பை வழங்கியிருந்தது. அதுமுதற்கொண்டு அந்தத் தீர்மானமானது வெறுமனே சர்வதேச சமூகத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தமாக மாத்திரமன்றி, இலங்கை அரசுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே அதேயளவுக்கு முக்கியமானதாக இருக்கிறதாகக் கூட்டமைப்பு கோரியும் வந்துள்ளது. அந்த அடிப்படையிலேயே, அந்தத் தீர்மானத்தின் நிபந்தனைகளை முற்றாக அமுல்படுத்தும்படியாக அது கூறிவந்துமுள்ளது. இந்த ஒப்பந்தம் இப்போது தடம்புரளச் செய்யப்பட்டால், ஜெனீவா தீர்மானங்களைக் கைவிட்டமையானது ஒரு காலத்திலே அன்றைய பண்டா – செல்வா மற்றும் டட்லி – செல்வா ஒப்பந்தங்கள் மீறப்பட்டமையைப் பற்றி எழுந்த அதே கசப்புடனேயே அவர்களால் நினைவுகூரப்படலாம்.

எனவே, குறிப்பாக இலங்கையின் இனப்பூசலின் குறிப்பான ஏதுக்களின்படி, அதிகாரப் பகிர்வுப் பிரச்சினையை பொறுப்புக்கூறுதலைவிட வேறுபட்டதாகக் கருதுவதானது பிரச்சினையானதாக அமைந்துள்ளது. தேசியப் பிரச்சினையின் இதயபீடத்திலே உள்ள எந்த ஒரு சரித்திரப் பிரச்சினையையும் நிவிர்த்திசெய்ய எடுக்கப்படும் எந்த ஒரு அர்த்தமுள்ள முயற்சியும் திரண்ட அட்டூழியங்களுக்கு நிலவும் தண்டனையின்மையானது முடிவுக்குக் கொண்டுவரப்படுவதை உறுதிசெய்வதுடன், பரஸ்பரம் இணக்கம் காணப்பட்டவைகள் கனப்படுத்தப்படுவதாயும் இருக்க வேண்டும். இதற்கு இலங்கை இணை ஆதரவு வழங்கிய ஜெனிவா தீர்மானத்திலே கூறப்பட்டுள்ள வழிமுறைகளிலே அட்டூழியக் குற்றச்செயல்களுக்கு அர்த்தமுள்ள பொறுப்புக்கூறுதலின் ஒரு வடிவம் இருக்கவேண்டியது முன்தேவையானதாகும்.

மாணிக்கலிங்கத்துடன் ஒருவர் இணங்காதுபோனாலும், நானும் கூறுவதுபோல அரசியற் தீர்வும் பொறுப்புக்கூறலும் இரண்டறக் கலந்தவை என வலியுறுத்தினாலுங்கூட, பொறுப்புக்கூறலானது அரசியற்சட்டச் சீர்திருத்தத்தைத் தொடர்ந்தே இடம்பெறவேண்டும் எனும் நிகழ்ச்சிநிரலை அவர் பரிந்துரைப்பதானது நாம் கவனத்தைச் செலுத்தவேண்டிய அம்சமாக உள்ளது. நிலைமாற்றுக்கால நீதியின் செயன்முறைகளை ஒழுங்குநிரைப்படுத்துவதென்பது சட்டபூர்வமானதும் பல்வேறான நிலைமாற்றுக்கால நீதி இலக்குகளை நோக்கியதாக அவை பரந்தளவிலே பாவிக்கப்படும் ஒரு உபாயமாகவும் இருந்துவருகிறது. 1980கள் மற்றும் 90களிலே லத்தீன் அமெரிக்காவின் வலதுசாரிச் சர்வாதிகாரத்தினர் அச்சுறுத்தலூடாக மன்னிப்புச் சட்டங்களின் மரபை விட்டுப்போனமை அல்லது புதிய அரசின் மீது அப்படியான சட்டங்களைத் திணித்தமையின் பின்புலத்திலே அதன் நிலைமாற்றுக்கால நீதியின் உண்மை அறியும் ஆணைக்குழுக்கள் குற்றச்செயல்களுக்கான சான்றுகளை புட்டுக்காட்டுவதற்கும், முன்னைய அடக்குமுறை ஆட்சிகளை அகௌரவப்படுத்தவும் முடிவிலே அவர்களை விசாரணைக்கு இட்டுச்செல்லவும் வழிகோலியது. மிக அண்மித்த காலங்களிலோ பல நாடுகள் வழக்கு விசாரணைகள் மற்றும் உண்மை அறியும் ஆணைக்குழு ஆகிய இரண்டையுமே சமகாலத்திலே இணைந்து இடம்பெறுவதையே விரும்பியுள்ளன.

இலங்கையிலே சிலீ நாட்டைப்போல மேற்கொள்வதற்கு எந்த ஒரு மன்னிப்புச் சட்டமும் இல்லை; அத்துடன், ஆர்ஜென்டீனாவைப்போல ஒரு இராணுவப்புரட்சிக்கான வாய்ப்புகளும் இல்லை. மாறாக, மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்றுள்ள ஒரு அரசாங்கம் – நலிந்ததாக இருந்தாலுங்கூட – அதன் தேர்தல் விஞ்ஞாபனத்திலே போர்க்குற்றங்கள் தொடர்பான விடயங்கள் தேசிய சுயாதீன நீதிப்பொறிமுறையால் கையாளப்படும் என வழங்கிய வாக்குறுதிகளூடாக ஆட்சியைப் பிடித்தது. எந்தச் செயன்முறை மேம்பட்ட முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது எனும் கேள்வியைவிட இலங்கைக்கான மேலானதான உபாயக் கேள்வி எதுவெனில், எடுக்கவுள்ள செயன்முறைகளின் எந்த நிகச்ழ்சி நிரையானது அதன் விளைவீடுகளை உச்சபட்சமாக்கும் என்பதே. இதனை மனதிற்கொண்டுதான் நான் ஒரு உபாய எண்ணமாக, புதிய அரசியற்சட்டம் நாடாளுமன்றத்திலே நிறைவேற்றப்பட்ட பின்பாக அல்லாமல் அதற்கு முன்னதாக பிரதம மந்திரி பரிந்துரைத்துள்ளதுபோலவே 2016இன் நடுப்பகுதியிலே ஒரு சட்டக் கட்டமைப்பைச் சீக்கிரமாக நிலைநாட்டுவதையே ஆதரிக்கிறேன்.

முதலாவதாக, அதிகாரப் பகிர்வுடன் இடைப்படும் ஒரு புதிய அரசியற் சட்டமானது எவ்வகையிலும் முன்கூட்டிய தீர்மானமாக அமைந்துவிடாது; அரசியற் சீர்திருத்தச்சபையை நிலைநாட்டுவதிலே உள்ள செயன்முறைகள் போன்றவற்றிலேயே இடம்பெற்றுவரும் தாமதங்களையும் இழுபறிகளையும் பார்க்கையிலே, பொறுப்புக்கூறுவதை அரசியற்சட்டம் நிலைநாட்டப்படும்வரைக்கும் தரித்துநிறுத்திவைப்பதென்பது, அது எந்தக்காலத்திலுமே கருத்திற்கொள்ளப்படாமல் போவதற்கான சாத்தியங்களையே கூடுதலாகக் கொண்டுள்ளதெனலாம். நிலைமாற்றுக்கால நீதி நீண்டகாலம் எடுக்கும், ஆனாலும் இறுக்கமான தீர்மானங்களை அரசாங்கத்தின் அரசியல் முதலீடு உயர்வாகவும் அதனைத் தூற்றுவோர் மிகவும் பலவீனமாகவும் இருக்கும் “நிலைமாற்றுக்காலத் தருணங்களிலே” எடுப்பதுதான் உள்ளதுக்குள் மிகவும் இலகுவானது.

அரசியலமைப்புச்சட்ட சீர்திருத்தங்களைப்போல அல்லாது, பொறுப்புக்கூறலுக்கான புதிய சட்டமூலங்களுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையோ அல்லது பொதுஜனவாக்கெடுப்போ தேவையில்லை. இத்தப் பின்புலத்திலே, இயலுமான வேளையிலே வெற்றியைப் பெற்றுக்கொள்ள நாடும் ஞானம் நல்லதாகவே இருக்கும். சரித்திரபூர்மான ஆட்சிமாற்றம் இடம்பெற்று பதினாங்கு மாதங்கள் கடந்துவிட்டுள்ள நிலைமையிலே, நிலைமாற்றுக்கால நீதிக்கான சாரளங்கள் மூடப்பட ஆரம்பித்துவிட்டதுடன், நீதிப்பொறிமுறைகளை நிலைநாட்டுவதிலே உள்ள அரசியற் கஷ்டங்களும் தொடர்ச்சியாக அதிகரித்தவண்ணமே உள்ளன. இன்றிலிருந்து ஒருவருட காலத்துக்குள் பொறுப்புக்கூறல் விடயத்திலோ அல்லது சட்டச்சீர்திருத்தத்திலோ இலங்கை எவ்வித முன்னேற்றத்தையும் அடைந்திராவிட்டால் தமிழ் அரசியலின் தொனியும் தோரணையும் அதிகரித்த விரக்தியாகவும், கூர்மையான பேச்சுக்களாயும் நகர்ந்திடத்தொடங்கும். தமிழ் மிதவாதிகள் தள்ளப்பட்டுப்போவார்களேயானால், தமிழ்த் தீவிரத் தேசியத்தினர் தமது சிங்கள சகபாடிகளுக்கு இனப்பூசலை விளாசி எரியப்பண்ண வேண்டிய அளவு எண்ணையை வழங்குவதுடன், சிங்கள மிதவாதிகளின் பிடியை முடிவுக்குக் கொண்டுவரவும் வழிவகுக்கும்.

ஆனாலும், போர்க்குற்றச்செயல்களுக்கான வழக்குவிசாரணைகளுக்கான சர்ச்சைக்குரிய சட்டங்களை நிறைவேற்றும்போது அது அரசியற் தீர்வுக்கென உள்ள அரசியல் முதலீட்டினைக் குறைத்துப்போட மாட்டாதா எனச் சில கண்டன விமர்சகர்கள் கேட்கக்கூடும். தெளிவுபடுத்துவதிலே அரசுக்கு உள்ள குறைபாடும், அது நாடும் நீதிப் பொறிமுறையைப் பற்றிய அதன் செய்திகளும் எப்படிப்பார்த்தாலும் ஒரு அரசியற் செலவைப் பிழிந்தெடுப்பதுடன், சிங்கள பேரினவாதிகள் எதிர்காலத்து நீதிமன்றங்கள் பற்றிய செய்திகளைக் கட்டுப்படுத்த இடங்கொடுத்து இராணுவத்துக்கு எதிரான வேட்டையாடல் இடம்பெறப்போகிறதெனும் நியாயமற்ற அச்சங்களை மக்களிலே எழுப்பவும் வழிவகுத்துவிடுகிறது. மாணிக்கலிங்கம் கூறுவதுபோல பொறுப்புக்கூறுதல் விடயத்தை அரசு பிற்காலத்துக்காகத் தரித்துநிறுத்தி வைத்திருக்குமேயாயின், இப்படியான போக்கு மேலும் அதிகரித்து செறிவடையவும் கூடும். இந்த நிலைமைக்கான ஒரு மாற்று மருந்து எதுவெனில், அரசு தான் செய்யப்போவதைப் பற்றி மிகத் தெளிவாக இருப்பதுடன், தாமதிக்காமல் அவசியமான பொறிமுறைகளை நிலைநாட்டுவதே. ஒரு உணர்வுள்ள வழக்குரைஞர் வழக்குத் தாக்கல் செய்யும் கொள்கைகளைத் தெளிவுபடுத்துவதால், அதிர்ச்சியூட்டும் சிலவகைக் குற்றச்செயல்களுடன் சம்பந்தப்படாதவர்கள் மத்தியிலே அதுபற்றி நிலவும் அச்சங்களை நிவிர்த்திசெய்ய உதவலாம். செயற்படத் தவறி, ஒருவித அசமந்தப் போக்கினை நீடித்தால், அரசு சம்பவ நிகழ்வையும், ஆதரவையும் இழந்துபோகக்கூடிய இடராபத்தை எதிர்நோக்கியிருக்கும். பொறுப்புக்கூறலை எதிர்காலத்துக்காகத் தரித்து நிறுத்திவைக்கும் உபாயம் பிரச்சினைகளை வரத்திக்கவும் அச்சங்களைப் பெருக்கவுமே வழிவகுக்கும்.

மேற்படியான காரணங்களினிமித்தமாக, உபாயரீதியான கருதுகோள்கள் சர்வதேசக் குற்றச்செயல்களை விசாரித்து வழக்குத்தொடுப்பதற்கு அரசாங்கம் துரிதமாக வேண்டிய சட்டக் கட்டமைப்பினை உருவாக்குவதை கோரிக்கையாக விடுக்கிறதென நான் கருதுகிறேன். அதன் பக்கத்திலே தீர்க்கமான தீர்மானங்களை இது வேண்டிநிற்கிறது. அவர்கள் பலவீனத்தையும் தைரியமற்ற அச்சத்தையும் புலப்படுத்துவார்களேயாயின், நேற்றைய நாளின் பலவான்களின் கோரிக்கைகள் தொடர்ந்தும் வளரும்.

Accountability and a Political Solution: A Response to Ram Manikkalingam என்ற தலைப்பில் Groundviews தளத்தில் வௌிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.