படம் | WATCHDOG

சர்வதேச பெண்கள் தினைத்தையும், “இருண்ட பங்குனியாக” பங்குனி மாதத்தையும் பெண்கள் உரிமைகள் குழுக்களும், செயற்பாட்டாளர்களும் நினைவுபடுத்துகையில் எம்மிலும், எமது நடவடிக்கைகளிலும் நீண்டதும், கடுமையானதும், பிரதிபலிப்பிலானதுமான பார்வையொன்றை எம்மால் எடுக்க முடியும் என நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்பதுடன், இலங்கையில் பெண்களுக்கும், சிறுவர்களுக்கும் எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு நீண்டதும், கடுமையானதுமான போராட்டத்தில் இணைவதற்கும் தீர்மானிக்கின்றோம்.

சிறுமி ஹரிஷ்ணவியின் பாலியல் வல்லுறவும், கொலையும்

2016 பெப்ரவரி 16 அன்று மதிய வேளை வவுனியா உக்குளான்குளத்தில் உள்ள தனது வீட்டில் 13 வயதான கங்காதரன் ஹரிஷ்ணவி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்ததாகக் கண்டறியப்பட்டது. வவுனியா விபுலானந்த வித்தியாலயத்தின் ஓர் அறிவுக்கூர்மையான இளம் மாணவியான ஹரிஷ்ணவி தான் ஓரளவு சுகவீனமுற்றிருந்ததாக உணர்வினைக் கொண்டிருந்ததினால் அன்றைய தினம் பாடசாலைக்குச் செல்லாமல் வீட்டில் தங்கியிருந்ததுடன், தனது புதிய சீருடையானது தனக்கு அதிகளவு கட்டையாக இருப்பதாக தனது தாயாரிடம் முறையிட்டுமுள்ளார். அந்நேரம் பாடசாலை மணி அடித்ததினாலும், பாடசாலையில் ஆசிரியர் ஒருவரான அவரது தாயார் பாடசாலைக்குச் செல்லவேண்டியிருந்ததினாலும், வீட்டின் உள்ளேயே இருக்குமாறு ஹரிஷ்ணவிக்கு கூறிவிட்டு, தனது ஏனைய இரு பிள்ளைகளுடன் (வயது 15 மற்றும் 10) காலை 7.50 மணி போல் பாடசாலைக்குச் சென்றார்.

படிப்பிக்கும் வேலைகள் அதிகமாக இருந்ததினால், பாடசாலை முடிந்தவுடனே அவரது தாயால் வீட்டுக்கு இயலவில்லை. இதனால், அவர் பாடசாலையிலிருந்து வீட்டுக்கு பிற்பகல் 2.15 மணியளவில் வந்து, தனது சைக்கிளை நிறுத்தியபோது, அவரது மகன் வீட்டின் உள்ளே சென்று சத்தமிட்டபடி வெளியே வந்து, உள்ளே சென்று தனது சகோதரிக்கு என்ன நடந்துள்ளது எனப் பார்க்குமாறு தாயிடம் கூறினார். தாய் உள்ளே ஓடிச் சென்றபோது நிலத்தில் இருந்து ஓர் அடி மேலாக கழுத்தைச் சுற்றி சேலையொன்று இறுக்கமாகச் சுற்றப்பட்டும், மறுமுனை கூரையுடன் கட்டப்பட்டிருந்த நிலையிலும் தனது மகள் நிமிர்ந்த நிலையில் நிற்பதைக் கண்டார். தனது பிள்ளை விளையாட்டுக்கு தன்னைப் பயமுறுத்துவதற்காக அவ்வாறாகச் செய்வதாக நினைத்த தாய், உடனடியாகச் சேலையை அவிழ்க்க, மகளின் உடல் நிலத்தில் விழுந்தது. கீழே கிடந்த மகளை தாய் உடனடியாக நிமிர்த்திவிட்டு, அவர் மயங்கிவிட்டார் என அனுமானித்து கட்டிலின் மேல் கிடத்தினார். அதேவேளை, வைத்தியசாலைக்கு ஹரிஷ்ணவியைக் கொண்டு செல்வதற்கு வாகனமொன்றை ஏற்பாடு செய்யுமாறு மகனுக்கு தாய் அறிவுறுத்தினார். இதனிடையே, அருகில் இருந்த தனியார் சிகிச்சை நிலையத்திலிருந்து வைத்தியர் ஒருவர் அங்கு வந்து, ஹரிஷ்ணவியைப் பரிசோதித்துவிட்டு, அவர் இறந்துவிட்டதாக அறிவித்தார்.

இதன் பின்னர் சம்பவம் நடந்த இடத்திற்கு பொலிஸார் வந்து விசாரணைகளை நடத்தியதுடன், மரண விசாரணை அதிகாரியும் அங்கு வந்து, உடலைப் பரிசோதித்து விட்டு, அதை வீட்டிலிருந்து கொண்டு சென்றார். ஹரிஷ்ணவியின் வயிற்றில் சில கடித்த அடையாளங்கள் இருந்துள்ளன.

வீட்டின் நிலம் முழுவதும் உடுப்புக்களும், புத்தகங்களும் வாரியிறைக்கப்பட்டிருந்ததுடன், சுவர் கடிகாரம் நிலத்தில் விழுந்து கிடந்ததுடன், அது 11.30 மணியில் நின்றிருந்தது. அவர் தற்கொலை செய்திருப்பார் என மக்கள் வதந்தி பரப்பியபோது, கூரையுடன் சேலையைக் கட்டுவதற்கு ஏறுவதற்காக அங்கு நாற்காலிகளோ அல்லது வேறு ஏதாவதோ இருக்கவில்லை எனக் குடும்பத்தினர் தெரிவித்தனர். உணவு பரிமாறப்பட்டு, ஒன்றாகக் குழைக்கப்பட்ட பாத்திரம் சமையலறை நிலத்தில் இருந்ததோடு அது உட்கொள்ளப்பட்டிருக்கவும் இல்லை. சகல பானைகளும், பாத்திரங்களும் அவற்றின் மூடிகள் திறக்கப்பட்ட நிலையிலும் இருப்பதைக் குடும்பத்தினர் கண்டதுடன், அந்நேரத்தில் அனேகமாக யாரோ ஒருவரினால் ஹரிஷ்ணவி அழைக்கப்பட்டிருக்கிறார் எனக் குடும்பத்தினர் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

ஹரிஷ்ணவி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு, குரல்வளை நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக 2016 பெப்ரவரி 19 அன்று விடுவிக்கப்பட்ட சட்ட மருத்துவ அலுவலர் அறிக்கை குறிப்பிட்டிருந்தது.

தமக்கு எதிரிகள் இல்லை என்றும், தாம் யாரையும் சந்தேகிக்கவில்லை என்றும், ஆனால், அயலவருடன் வேலி எல்லைப் பிரச்சனைகள் இருந்தன என்றும், அவர்களுடன் தாம் கதைப்பதில்லை என்றும் குடும்பத்தினர் தெரிவித்தனர். தற்போது இலங்கையில் விடுமுறையைக் கழிக்கும் வெளிநாட்டில் வாழும் உள்நாட்டு இளைஞர் ஒருவர் அயலில் உள்ள சைக்கிள் கடைக்கு அடிக்கடி வருவதாகவும், சம்பவத்தின் பின்னர் கிராமத்திலிருந்து அவர் காணாமல் போயுள்ளதாகவும் குடும்பத்தினர் குறிப்பிட்டனர். பொலிஸார் அயலவர்களை விசாரணை செய்துள்ளனர். ஆனால், உடனடியாகவே அவர்கள் விடுவிக்கப்பட்டனர். தற்போது அயலில் உள்ள சைக்கிள் கடையின் உரிமையாளரைக் கைதுசெய்து, அவரை விசாரித்து வருகின்றனர்.

2007இல் ஹரிஷ்ணவியின் தந்தை இந்தியாவுக்குச் சென்றதுடன், அதன் பின்னர் ஜேர்மனிக்கு நகர்ந்ததுடன், அங்கு அவர் வாழ்ந்து வருகிறார். கடந்த வருடம் விசாவுக்காக குடும்பத்தினர் விண்ணப்பித்து அது நிராகரிக்கப்பட்டிருந்தது. இவ்வருடம் மீள விண்ணப்பிக்கும் திட்டத்தில் இருந்தனர்.

அறையைச் சுத்தம் செய்தவேளை இரத்தம் உறைந்த ‘கோடெக்ஸை’ (ஆரோக்கிய துவாயின் வணிகக்குறி) அறையின் மூலையில் இருந்து கண்டெடுத்ததாகவும், ஆனால், அவ்வேளையில் ஹரிஷ்ணவி தனது மாதவிடாயைக் கொண்டிருக்கவில்லை எனவும் குடும்பத்தினர் தெரிவித்தனர். எனவே, நிலத்திலிருந்து ஏதேனும் இரத்தத்தை ஒத்தியெடுப்பதற்கு குற்றமிழைத்தவர் அதைப் பயன்படுத்தியிருக்கலாம் என அவர்கள் அனுமானிக்கின்றார்கள். தமது விசாரணைகளுக்காக ஏதேனும் பொலிஸாருக்கு அவசியப்படும் பட்சத்தில் அறையைச் சுத்தம் செய்யும் வேளையில் அவர்கள் கண்டெடுத்த ‘கோட்டெக்ஸ்’ஐயும்’ மற்றும் சகலவற்றையும் பையொன்றில் குடும்பத்தினர் போட்டு வைத்துள்ளனர்.

ஹரிஷ்ணவி ஒரு மென்மையான தன்மையானவர், அமைதியானவர். அத்துடன், படிப்பில் ஆர்வமுள்ளவர். தனது தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் அவர் 170 மதிப்பெண்களைப் பெற்றார். அவர் அபூர்வமாகவே வீட்டில் படித்தார். ஆனால், பாடசாலையில் படித்த சகலவற்றையும் மனதில் வைக்கக்கூடியவர். அவர் யாவருடனும் மிகவும் நட்புறவுடன் பழகினார். செல்லப்பிராணிகளை விரும்பினார். அவர் தொலைக்காட்சியைப் பார்ப்பதற்கு விரும்பியதுடன், அதிகளவு வீட்டு வேலையைச் செய்ய விரும்பவில்லை. ஆனால், எவரையும் ஒருபோதுமே தொந்தரவு செய்ய விரும்புவதில்லை என அவரது சிறிய தாய் பிரியத்துடன் கூறினார். ஹரிஷ்ணவி சமூக விஞ்ஞானங்களிலும், கணிதத்திலும் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இடம்பெறும் (ஒலிம்பியட்) விஞ்ஞான மாவட்ட மட்டப் போட்டிகளில் பங்கெடுப்பார்.

IMG_20160222_182048

ஒரு தடவை மாத்திரம் இடம்பெறும் கலாசாரம்

பெப்ரவரி 23 அன்று (செவ்வாய்க்கிழமை) 13 வயதான ஹரிஷ்ணவியின் பாலியல் வல்லுறவையும், கொலையையும் எதிர்த்து ஆத்திரமடைந்த பெருமளவான பெற்றோர்கள், ஆசிரியர்கள், செயற்பாட்டாளர்கள், மதகுருமார்கள் மற்றும் உள்நாட்டு அமைப்பினர் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர். ஹரிஷ்ணவியின் பாலியல் வல்லுறவுக்கும், கொலைக்கும் அத்துடன், பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் எதிரான வன்முறையின் ஏனைய சம்பவங்களுக்கும் நீதி கோரி, காமினி மகா வித்தியாலயத்திலிருந்து மாவட்டச் செயலக அலுவலகத்திற்கு வவுனியா நகர் ஊடாக 500க்கும் மேற்பட்ட மக்கள் பேரணியாகச் சென்றனர்.

கடந்த வருடம் புங்குடுதீவைச் சேர்ந்த 18 வயதான சிவலோகநாதன் வித்தியாவின் பாலியல் வல்லுறவும், கொலையும் நாடு முழுவதும் பாரிய அளவிலான எதிர்ப்புக்களை வெளிப்படுத்தியிருந்தது. ஜனாதிபதி சிறிசேன யாழ்ப்பாணத்தில் உள்ள வித்தியாவின் குடும்பத்தினரை நேரில் சென்று பார்த்ததுடன், மகளுக்கெதிராக மேற்கொண்ட பாலியல் வல்லுறவுக்கும், கொலைக்கும் விரைவான நீதியை அவர்கள் பெறுவதை உறுதிப்படுத்துவதற்காக ட்ரயல்-அட்-பார் விசாரணை நடத்தப்படும் என மேற்படி குடும்பத்தினருக்கு உறுதிமொழி அளித்தார். ஒரு வருடமாகியும் 10 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டும் ஜனாதிபதி அளித்த வாக்குறுதி நிலைநாட்டப்படும் என்ற எதிர்பார்ப்பில் பெற்றோர்கள் இன்னும் இருக்கிறார்கள். பெண்களினதும், சிறுவர்களினதும் இதுபோன்ற பெருமளவு சம்பவங்களின் பின்னர் தன்னிச்சையானதும், ஒழுங்குபடுத்தப்பட்டதுமான போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன. சரண்யாவுக்கெதிரான கூட்டுப் பாலியல் வல்லுறவு மற்றும் கொலை, கடற்படையினரால் காரை நகரைச் சேர்ந்த இரு பாடசாலைப் பிள்ளைகள் மீதான பாலியல் வல்லுறவு, சிறுமி சேயாவினதும், ஜெரூஷாவினதும் கொலைகள்…. அத்தகைய சம்பவங்களைத் தொடர்ந்து போராட்டங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது. அத்துடன், இந்தப் போராட்டங்களினதும், அறிக்கைகளினதும், கட்டுரைகளினதும், மனுக்களினதும், ஜனாதிபதிக்கான கடிதங்களினதும் முடிவுகள் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. சில கைதுகளைப் பொலிஸார் மேற்கொள்கின்றனர். சம்பவங்களையிட்டு விசாரணை செய்வதற்காக பல விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்படுகின்றன. பெண்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அரசாங்க அதிகாரவர்க்கத்தினர் பகிரங்க உறுதிமொழிகளை அளிக்கின்றார்கள் (சம்பவத்தின் தன்மையைப் பொறுத்து), பின்னர் வேகமும், தீவிரமும் இல்லாமல் போனவுடன், முன்பு நடந்த சம்பவங்களைப் கடைசியாக நிகழ்ந்த சம்பவமும், எமது இருட்டான நீதித்துறை குழிக்குள் அமிழ்ந்துவிடுகின்றது.

IMG_20160223_100401

பாதிக்கப்பட்ட குடும்பங்களினாலும், உயிர்பிழைத்து வாழ்பவர்களினாலும் முகங்கொடுக்கப்படும் சட்ட, சமூக மற்றும் பொருளாதார அநீதிகள்

எமது நீதித்துறை கட்டமைப்பானது கீழ் காணப்படும் சில காரணங்களால் திருப்தியற்ற வகையில் செயற்பட்டு வருகிறது. அவை, தீர்க்கப்படாமல் தேங்கியுள்ள வழக்குகள், சாட்சிகளினதும், பாதிக்கப்பட்டவர்களினதும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை உட்பட நீதிமன்ற விசாரணையின் போது பின்பற்றப்படும் முறைமையியல், விசாரணையின் போது எதிர்த்தரப்புச் சட்டத்தரணிகளினால் சாட்சிகள் தொந்தரவு செய்யப்படுதல் மற்றும் பாலியல் வன்முறை சம்பவங்களை விசாரிப்பதற்காக பயிற்றுவிக்கப்படாத பொலிஸ் அலுவலர்கள் போன்ற பிரச்சினைகளால் பாலியல் வன்முறை மீதான சம்பவங்களைக் கையாள்வதில் நீதிமன்ற கட்டமைப்பு மிக மெதுவாகவே செயற்பட்டு வருகின்றது.

கடந்த வருடத்தில் எந்தவொரு வழக்கிலும் தண்டனை வழங்கப்படவில்லை என்று கூறவரவில்லை. விசுவமடுவிலிருந்து (2015 ஒக்ரோபர்) 27 வயதான தாய் ஒருவர், ஜூசன் ரீட்டா (2015 டிசம்பர்), திவ்யா (2012 மே) போன்ற ஒரு சில வழக்குகளில் மாத்திரம் தீர்வு கிடைத்திருப்பினும், இவ்வாறான சம்பவங்கள் ஆகவும் குறைவாக இருப்பதுடன், இன்னும் பல சம்பவங்கள் தொடர்பான வழக்குகள் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆகவே, குற்றங்கள் செய்யாமல் இருக்க பயத்தை ஏற்படுத்துவதற்கும், அதன் மூலம் எதிர்காலத்தில் குற்றங்கள் இடம்பெறாமல் தடுப்பதற்கும் நம் நீதிமன்ற செயற்பாடானது வெற்றிகரமானதல்ல.

இதிலிருக்கும் பாரதூரமான பிரச்சினை என்னவெனில், பாதிக்கப்பட்டவர்களும், உயிர்பிழைத்து வாழ்பவர்களும், அவர்களது குடும்பத்தினரும் சட்ட ரீதியாக, சமூக, கலாசார ரீதியாக கூடுதலாக பாதிக்கப்படுபவர்களாக இருப்பதுதான். சட்டபூர்வமான ரீதியில் பிணை வழங்கப்படும் குற்றமாக இன்னுமே பாலியல் வல்லுறவு காணப்படுவதனால் இதன் மூலம் குற்றவாளியை சட்டரீதியாக நீதிமன்ற கட்டமைப்பின் மூலம் பாதுகாக்கும் முறைமையொன்றே காணப்படுகிறது. பொலிஸாரினாலும், விசாரணை மன்றுகளினாலும் ஏற்படுத்தப்படும் தொடர்ச்சியான தாமதங்களும், உயிர்பிழைத்து வாழ்பவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எதுவித பாதுகாப்பும் வழங்காத நிலையும் காணப்படுகிறது. சமூக ரீதியிலும், கலாசார ரீதியிலும் நாம் இன்னும் கொடூரமாகவே செயற்பட்டு வருகின்றோம். பாலியல் வல்லுறவின் அல்லது பாலியல் வன்முறையின் முழுமையான குற்றத்தை பாதிக்கப்பட்டவர்கள் அல்லது உயிர்பிழைத்து வாழ்பவர்கள் மீது சுமத்துவதற்கும், அவர்களைச் சமூகத்தில் களங்கப்படுத்துவதற்கும், அத்துடன் சமூகத்திலிருந்து விலக்கி வைப்பதற்கும் மற்றும் மீண்டும் மீண்டும் அவர்களைப் பாதிப்புறச் செய்வதற்கும் சமூகம் எப்பொழுதுமே தயாராக இருக்கின்றது. பெரிதுமே சமூகத்தின் இந்நடத்தையானது குற்றமிழைத்தவரைப் பாதுகாப்பதற்கு பங்களிப்பது மட்டுமன்றி, தண்டனையிலிருந்து விலக்கீட்டுரிமையின் கலாசாரமொன்றையும் நிலைநிறுத்துகின்றது.

பாலியல் வன்முறையினால் பாதிக்கப்பட்டவர்கள், உயிர்பிழைத்து வாழ்பவர்கள் ஏதோவிதத்தில் தவறான பெறுமதிகளை தம் மீது கொண்டு வருகின்றனர் என்பதை தமது பிள்ளைகளுக்கு நம்பச் செய்வதன் மூலம் சகல தவறான பெறுமதிகளையும் ஆதரிப்பதற்கும், மதிக்காமல் இருப்பதற்கும் எமது பிள்ளைகளுக்கு நாம் கற்பிக்கின்றோம்.

பெருமளவு வழக்குகள் பல ஆண்டுகளுக்கு இழுபட்டுச் செல்வதனால், நீதியை எதிர்பார்த்துச் செல்வதற்கு நடைமுறையிலான கஷ்டமும், பொருளாதாரச் சுமையும், உயிர்பிழைத்து வாழ்பவர்களும், அவர்களது குடும்பத்தினரும் முகங்கொடுக்கும் மேலதிகமான தடையொன்றாகும். அத்தகைய குடும்பங்களுக்கு சமூகத்தில் அமைப்பு ரீதியான அல்லது பிரதேச அடிப்படையிலான ஆதரவு பொறிமுறை இல்லை என்பது சிறந்த உதாரணமாகும். பிணையில் வெளியே வந்துள்ள குற்றமிழைத்தவர்களினாலும் அவர்களது குண்டர்களினாலும் பாதிக்கப்பட்டவர்கள் முகங்கொடுக்கும் அச்சுறுத்தல்களினால் நீதியை எதிர்பார்த்துச் செல்லும் அவர்களது பயணம் தடைபடுகின்றது.

பாதிக்கப்பட்டவரின் குடும்பங்களுக்கும், உயிர் பிழைத்து வாழ்பவர்களுக்கும் ஆதரவளித்தல்

எனினும், ஒரு சில குடும்பங்கள் தைரியத்துடன் பயமுறுத்தல்கள், அச்சுறுத்தலை எதிர்த்து நீதிக்காக போராடும் சந்தர்ப்பங்களும் உண்டு. சிலர் பல ஆண்டுகள் நீதிக்காக காத்திருந்து சாதகமான பலனை பெற்றுள்ள அதேவேளை, சிலர் இன்னும் தொடர்ந்துமே நீதிக்காக காத்திருக்கின்றனர். நாம் சமூகமொன்றாக அவர்களைப் புறக்கணிப்பதற்கும், களங்கப்படுத்துவதற்கும் பதிலாக அவர்களது தைரியத்தைப் பாராட்டுவதுடன், அவர்களது போராட்டத்தில் அவர்களுக்கு ஆதரவும் அளிக்க வேண்டும். உள்நாட்டுத் தாபனங்களுடனும், குடும்பங்களுடனும் சேர்ந்து செயல்பட முன்வரவேண்டிய அதேவேளை, அக்குடும்பங்கள் நீதிமன்றத்தை நாடும்போது அவர்களுக்காக எமது நேரத்தை அர்ப்பணிக்கவும் தயங்கக்கூடாது. ஒன்றுசேர்ந்து செல்வதற்கு ஆதரவளிக்க வேண்டும், எமது ஒற்றுமையைக் காட்ட வேண்டும். அத்துடன், அவர்களது சட்ட, பிரயாண மற்றும் வேறு செலவுகள் ஆகியவற்றை அடைவதற்கு நிதியமொன்றை ஆரம்பிக்க வேண்டும். வழக்கு நடைமுறையை துரிதமாக்குவதற்கும், தாமதங்களை தவிர்ப்பதற்கும் அரசாங்கத் திணைக்களங்களினதும், நீதித்துறையினதும் மீது ஊடகங்கள் மற்றும் சமூகம் ஊடாக அழுத்தத்தை பிரயோகிப்பது அவசியமாகும்​.

பெரும்பாலும் சப்தமின்றி இடம்பெறும், நீண்டகாலமாக பாராட்டுதலுக்கு உட்பட்டிராத உள்ளூர் பெண் உரிமை சார்ந்த செயற்பாட்டாளர்கள் மற்றும் ஏனையோரின் அர்ப்பணிப்புகள் குறித்து இவ்விடத்தில் பாராட்டியே ஆகவேண்டும். எனினும், அது அவர்கள் மட்டும் தனித்து நின்று வெற்றிபெறக்கூடிய போராட்டமல்ல. இலங்கையில் பெண்களுக்கும், சிறுவர்களுக்கும் எதிரான வன்முறையானது நாம் அனைவரும் அனுபவிக்கும் யதார்த்த நிலையாகும். அரசாங்கமும், குற்றவியல் நீதித்துறை முறைமையும் அத்துடன் சமூகமும் பொறுப்பையுணர்ந்து செயற்பட்டால் மட்டுமே குறிப்பிடத்தக்க வெற்றியை பெறக்கூடியதாக இருக்கும்.

நீதியைப் பெற்றுக்கொள்ள போராடுவது முக்கிய அம்சமாக இருப்பினும், அதன் மூலம் மட்டும் சாதகமான விளைவுகளை பெற்றுக்கொள்ள முடியாது. செயற்பாட்டாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து நாங்கள் நன்கு அறிவோம். அதனாலேயே பல செயற்பாட்டாளர்களின் செயற்பாடுகள் வரையறுக்கப்பட்டிருப்பதையும் உணர முடிகிறது.

ஒரு தடவை மட்டும் நடக்கும் போராட்டங்கள், கூட்டங்கள், கட்டுரைகள் மற்றும் மேன்முறையீடுகளுக்கு அப்பால் சென்று நீண்டகாலப் போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு ஆக்கத்திறனானதும், நடைமுறையிலானதுமான வழிவகைகளை அடையாளங்காண்பது எம் முன்னால் உள்ள பிரதான சவாலாகும். பொதுமக்களாகிய நாம் இந்தப் போராட்டத்தை எமது கையில் எடுப்பதன் மூலம், உண்மையான வெற்றியை நோக்கி நகர முடியும் என்று உணரும் வரையில் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதென்பது முடியாத காரியமாகும். அது துஷ்கரமானதொரு பயணம் என்றபோதிலும் நாம் ஒன்றாக சேர்ந்து அந்த தூரத்தை சென்றடைய வேண்டியது அவசியமாகும். ஒருவேளை, அது இலகுவாகவும் அமையலாம், அல்லது ஒருபோதும் அடையமுடியாத ஒன்றாகவும் இருக்கலாம்.

Of rape, killings, impunity and our Collective Amnesia என்ற தலைப்பில் Groundviews தளத்தில் ஆங்கிலத்திலும் இந்தக் கட்டுரை வௌிவந்துள்ளது.