படம் | Getty Images

தென்னிலங்கையில் அரசசார்பற்ற நிறுவனங்களில் அதிகம் வேலை செய்யும் ஒரு சிங்கள நண்பர் சொன்னார், “சிங்கள மக்களில் கணிசமான தொகையினர் இப்பொழுதும் ராஜபக்‌ஷவை வெற்றி வீரனாகவே பார்க்கிறார்கள். இப்போதுள்ள அரசாங்கம் அவர் மீது மோசடிக் குற்றச்சாட்டுக்களையும், ஏனைய குற்றச்சாட்டுக்களையும் சுமத்தினாலும் கூட சிங்கள பௌத்த மேலாதிக்கம் என்று வரும்போது ராஜபக்‌ஷவே மதிப்புடன் பார்க்கப்படுகிறார். அவர் பொதுச்சொத்தைத் தனிச்சொத்தாக்கியது, அதிகாரத்தை தனது குடும்பத்தவர்கள் மற்றும் உறவினர் கைகளுக்குள்ளேயே வைத்துக்கொண்டது போன்ற குற்றச்சாட்டுக்களை சிங்கள மக்களில் குறிப்பிடத்தக்க அளவினர் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால், அதேசமயம் அவருடைய ஆட்சிக்காலத்தில் அவரோடிருந்து அவரைப் போல மோசடிகளில் ஈடுபட்ட பலரும் இப்பொழுது புதிய அரசாங்கத்தில் பிரதானிகளாகக் காணப்படுகிறார்கள் என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். ராஜபக்‌ஷ குடும்பத்தின் மீதான எல்லாவிதமான குற்றச்சாட்டுகளுக்கும் அப்பால் சிங்கள பௌத்த மேலாதிக்கம் என்று வரும்போது அதற்குத் தலைமைதாங்கக் கூடியவர்களாக ராஜபக்‌ஷக்களே பார்க்கப்படுகிறார்கள்…..” என்று.

கடந்த ஓராண்டு காலமாக ராஜபக்‌ஷ குடும்பத்தைப் போர்க்குற்றம் தவிர மற்றெல்லாக் குற்றச்சாட்டுக்களின் மூலமாக ரணில் – மைத்திரி அரசாங்கம் சுற்றிவளைத்து வருகிறது. ராஜபக்‌ஷக்கள் ஓரளவுக்குத் தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டு வருகிறார்கள். ரோஹிதவின் கைது ஓர் ஒத்திகைதான். அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்று அரசாங்கம் நாடி பிடித்துப் பார்க்கிறது. ரோஹிதவின் கைதுக்குப் பெரியளவு எதிர்ப்புக்கள் காட்டப்படாத ஓர் பின்னணியில் இனிப் படிப்படியாக ஏனைய ராஜபக்‌ஷக்களிலும் கைவைக்கப்படலாம். ரவிராஜ் கொலை வழக்கில் கோட்டாபயவை நோக்கிக் குற்றச்சாட்டுக்கள் வைக்கப்படுகின்றன. ரோஹிதவைத் தொடர்ந்து தமது ஏனைய குடும்ப உறுப்பினர்களும் கைதுசெய்யப்படலாம் என்ற அச்சம் மஹிந்தவுக்கு வந்துவிட்டது. அதை அவர் வெளிப்படையாகச் சொல்வது என்பது ஒருவித தற்காப்பு உத்திதான்.

இவ்விதம் ராஜபக்‌ஷக்களைக் குறிப்பிடத்தக்க அளவுக்குத் தற்காப்பு நிலைக்கு தள்ளியிருந்தாலும் கூட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மீதான மஹிந்தவின் பிடி முற்றாகத் தளரவில்லை. கடந்த ஓராண்டு காலமாக கட்சியைத் தனது பூரண கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் முயற்சியில் மைத்திரிபால சிறிசேன எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியவில்லை. கட்சி இப்பொழுதும் மைத்திரிக்கும் ராஜபக்‌ஷவுக்கும் இடையில் குறிப்பிடத்தக்க அளவுக்கு கிழிபடும் ஒரு நிலையே காணப்படுகிறது.

இது காரணமாகவே அரசியலமைப்பு மாற்றங்கள் தொடர்பில் உறுதியானதும், இறுதியானதுமான முடிவுகளை எடுக்க முடியாதிருப்பதான ஒரு தோற்றம் தென்னிலங்கையில் காணப்படுகிறது. நாடாளுமன்றத்தை அரசியலமைப்புப் பேரவையாக மாற்றுவதற்கான பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு ஏறக்குறைய மூன்று மாதங்கள் ஆகின்றன. ஜனவரி 9ஆம் திகதி அந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், அதன் மீதான வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டுக்கொண்டே வருகிறது. பிரேரணையின் நோக்கத்தைச் சுருக்கமாகக் கூறும் முகப்புரையை (preample) மாற்றுமாறு சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் கோரி வருகின்றனர். பிரேரணையின் முகப்புரையில் முக்கியமாக மூன்று விடயங்கள் அடக்கப்பட்டுள்ளன. நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை மாற்றுவது. தேர்தல் முறைமையை மாற்றுவது. இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது என்பவையே அவையாகும்.

அரசாங்கத்திற்கு உள்ளேயும் வெளியேயும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் இம்முகப்புரையை மாற்றுமாறோ அல்லது நீக்குமாறோ கேட்பதாகக் கூறப்படுகிறது. அரசாங்கமும் அதற்கு உடன்படவிருப்பதாக ஒரு தகவல் உண்டு. அவ்வாறு முகப்புரையை மாற்றினாலோ அல்லது நீக்கினாலோ அரசியலமைப்பு மாற்றம் எவ்வாறு அமையும்? இது தொடர்பில் பின்வரும் கேள்விகள் முக்கியமானவை.

  1. அது அரசியலமைப்புத் திருத்தமாக அமையுமா? அல்லது அது புதிய அரசியலமைப்பு உருவாக்கமாக அமையுமா?
  2. இனப்பிரச்சினைக்கான தீர்வு எப்படி அமையும்? அது புதிய அரசியலமைப்பின் உள்ளுடலுக்குள் இணைக்கப்படுமா? அல்லது திருத்தங்களுக்குள் சேர்க்கப்படுமா?

இக்கேள்விகளுக்கு இப்போதைக்குப் பதில்களைக் கூற முடியாது. ஆனால், இவ்வாறான கேள்விகள் எழுப்பப்படும் அளவிற்கு நிலைமைகள் காணப்படுவதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். அரசியலமைப்பு மாற்றங்கள் தொடர்பான இறுதியான உறுதியான முடிவுகளை எடுப்பதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர்தான் தடையாக உள்ளார்களா? ஐக்கிய தேசியக் கட்சி இதில் விசுவாசமாக உள்ளதா? அல்லது ஐக்கிய தேசியக் கட்சியானது தான் விரும்பாத ஒன்றிற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மீது பழியைப் போட்டுவிட்டு தப்பிக் கொள்ளப் பார்க்கிறதா? இவ்வாறான குழப்பமான ஆனால், தீர்மானகரமான ஓர் அரசியல் சூழலில் தமிழ் மக்கள் என்ன செய்யப்போகிறார்கள்?

கூட்டமைப்பு இதுவரையிலும் தனது முன்மொழிவை வெளிப்படுத்தவில்லை. அதேசமயம், தமிழ் மக்கள் பேரவை ஒரு முன்மொழிவை வெளியிட்டிருக்கிறது. கூட்டமைப்பு இனி வைக்கக் கூடிய முன்மொழிவு அல்லது அரசாங்கம் வைக்கக் கூடிய முன்மொழிவு போன்ற எதையும் இனிப் பேரவையின் முன்மொழிவோடு ஒப்பிட்டுப் பார்க்கவேண்டிய ஒரு நிலைமை இப்பொழுது தமிழ் மக்களுக்குத் தோன்றியிருக்கிறது. முன்மொழிவுகளுக்கு இடையில் காணப்படும் வேறுபாடுகளுக்கு கூட்டமைப்பு விளக்கம் தரவேண்டி இருக்கும். அதேசமயம் அரசாங்கம் வைக்கக்கூடிய ஒரு தீர்வை கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளுமாக இருந்தால் அதற்கும் உரிய விளக்கத்தை அவர்கள் கொடுக்க வேண்டியிருக்கும்.

சில சமயம் அரசாங்கம் ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்கி அதற்கான மக்கள் ஆணையைப் பெறுவதற்கான ஒரு வெகுசன வாக்கெடுப்பை நடத்தப்போகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்பொழுது கூட்டமைப்பு என்ன செய்யும்? பேரவை என்ன செய்யும்? இனப்பிரச்சினைக்கான தீர்வு அப்புதிய அரசியலமைப்பில் இணைக்கப்படவில்லை என்றால் கூட்டமைப்பு என்ன செய்யும்? பேரவை என்ன செய்யும்? அல்லது அப்புதிய அரசியலமைப்பில் இணைக்கப்பட்டிருக்கும் தீர்வானது திருப்தியாக இல்லையென்றால் கூட்டமைப்பு என்ன செய்யும்? பேரவை என்ன செய்யும்? சில சமயம் கூட்டமைப்பானது அரசாங்கத்தின் தீர்வு யோசனைகளோடு தந்திரோபாயமான ஓர் உடன்பாட்டைக் காட்டுமிடத்து வாக்கெடுப்பின் போது அவர்கள் தமிழ் மக்களுக்கு என்ன சொல்லப் போகிறார்கள்? கூட்டமைப்பு அப்படியொரு முடிவை எடுத்தால் பேரவை அப்பொழுது என்ன செய்யும்?

இனவாதிகளைத் திருப்திப்படுத்தும் ஒரு தீர்வை அரசாங்கம் முன்வைத்தால் அல்லது இனவாதிகளைத் திருப்திப்படுத்தும் அரசியலமைப்பு மாற்றங்களை அரசாங்கம் செய்யுமாக இருந்தால் அவர்கள் தமிழ் மக்களின் வாக்குகளில் தங்கியிருக்கவேண்டிய தேவை இருக்காது. தமிழ் மக்களைத் திருப்திப்படுத்தும் ஒரு தீர்வை முன்வைத்தால் அல்லது அதற்கேற்றாற் போல அரசியலமைப்பை மாற்றினால் அதை மஹிந்த அணி கடுமையாக எதிர்க்கும். அப்பொழுது தமிழ் – முஸ்லிம் – மலையக மக்களின் வாக்குகளைப் பெற்றே வெற்றியை உறுதிப்படுத்த வேண்டியிருக்கும். ஏறக்குறைய கடந்த ஆண்டு மைத்திரிபால சிறிசேனவை வெற்றிபெறச் செய்தது போல. எனவே, இப்பொழுதுள்ள கேள்விகள் வருமாறு:

முதலாவதாக – அரசியலமைப்பு மாற்றமா? அல்லது திருத்தமா? இரண்டாவது – அதில் இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளடக்கப்படுமா? மூன்றாவது – ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுமா? நாலாவது – அப்படியொரு வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் அதில் தமிழ் மக்களின் வாக்குகளில் தங்கியிருப்பதை அரசாங்கம் விரும்புமா? அல்லது முழுக்க முழுக்க சிங்கள மக்களின் வாக்குகளில் தங்கியிருப்பதான ஒரு முடிவை எடுக்குமா? ஐந்தாவது – அப்பொழுது கூட்டமைப்பு என்ன செய்யும்? ஆறாவது – இது விடயத்தில் ஏற்கனவே ஒரு முன்மொழிவை வைத்து அதை மாவட்டங்கள் தோறும் பிரசித்தப்படுத்திவரும் பேரவையானது அப்பொழுது எத்தகைய முடிவை எடுக்கும்?

இவை யாவும் தமிழ் மக்கள் முன்னே தொங்கிக்கொண்டிருக்கும் கேள்விகள். இவற்றில் பெரும்பாலானவை இப்போதுள்ள குழப்பமான நிலைமைகளை அடிப்படையாக வைத்து ஊகிக்கப்படும் கேள்விகள். எனவே, ஊக அடிப்படையில் இவற்றுக்குப் பதில் கூறுவதை இக்கட்டுரை தவிர்க்கிறது. ஆனால், தமிழ் மக்களின் அடுத்தகட்ட அரசியல் தொடர்பில் இக்கேள்விகளுக்கான விடைகள் அதிகம் முக்கியத்துவம் வாய்ந்தவை. தமிழ் மக்கள் எந்த வழியால் போகவேண்டும் என்பதை தீர்மானிக்கும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை. தமிழ்த் தலைவர்களும் கட்சிகளும், சிவில் அமைப்புக்களும் தீர்மானகரமான முடிவுகளை எடுக்கவேண்டிய ஒரு காலம் வருகிறது. முடிவுகளை எடுத்தால் மட்டும் போதாது. தீர்மானங்களை நிறைவேற்றினால் மட்டும் போதாது. அவற்றை செயலுக்குக் கொண்டுபோக வேண்டும். அவ்வாறு செயலுக்குக் கொண்டுபோகுமிடத்து அதில் வரக்கூடிய இழப்புக்களுக்கும், ஆபத்துக்களுக்கும் தயாராக இருக்க வேண்டும். அதாவது, றிஸ்க் எடுக்க வேண்டும்.

இந்த இடத்தில் அண்மையில் இயற்கை எய்திய அரங்கச் செயற்பாட்டாளர் அரசையாவுடனான ஓர் உரையாடலை இங்கு நினைவுகூர வேண்டும். 1990ஆம் ஆண்டளவில் இக்கட்டுரை ஆசிரியர் அரசையாவோடு உரையாடும்போது சத்தியாக்கிரகம் பற்றி சில கேள்விகளைக் கேட்டார். அச்சத்தியாக்கிரகப் போராட்டத்தில் மிகவும் பிரசித்தமாகிய ஓர் ஒளிப்படம் உண்டு. ஒரு சத்தியாக்கிரகி நிலத்தில் மல்லாக்கக் கிடந்தபடி அசைய மறுக்கிறார். காற்சட்டை அணிந்த ஒரு பொலிஸ்காரர் அந்த சத்தியாக்கிரகியின் நெஞ்சுக்கு நேரே துப்பாக்கியின் கத்தி முனையை நீட்டிக்கொண்டு நிற்கிறார். சத்தியாக்கிரகம் தொடர்பில் வெளிவந்த ஒளிப்படங்களில் அதிகம் கவனிப்பைப் பெற்ற மேற்படி காட்சியில் நிலத்தில் கிடக்கும் சத்தியாக்கிரகி அரசையாதான். இது தொடர்பில் அவரோடு உரையாடிக்கொண்டிருந்த போது இக்கட்டுரையாசிரியர் அவரிடம் ஒரு கேள்வி கேட்டார், “எமது அகிம்சைப் போராளிகள் அகிம்சையை ஓர் உத்தியாகத்தான் கையாண்டார்கள். அதை அவர்கள் ஒரு வாழ்க்கை முறையாகக் கடைப்பிடிக்கவில்லை. அன்றைக்கு அகிம்சை எனப்படுவது சாகத் துணிந்தவர்களின் போராட்டமாக இருக்கவில்லை. சாகப்பயந்தவர்களின் போராட்டமாகவே காணப்பட்டது என்ற ஒரு குற்றச்சாட்டுத் தமிழ்த் தரப்பில் உள்ளது. இது தொடர்பில் நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று. அதற்கு அரசையா சிரித்துக்கொண்டு சொன்னார், “இப்பொழுது சாகத்தயாராக தமது இலக்கை நோக்கிச் செல்லும் பிள்ளைகளைப் போல ஒரு ஐநூறு பேராவது அப்பொழுது எங்கள் மத்தியில் இருந்திருந்தால் முடிவுகள் வேறு விதமாக அமைந்திருக்கும்” என்று.

அதாவது, அகிம்சைப் போராட்டத்தின் போது தமது இலக்குகளை அடைவதற்காக அர்ப்பணிப்புக்கும், தியாகத்திற்கும் தயாராக இருந்தால்தான் வெற்றி பெற முடியும் என்ற அர்த்தத்திலேயே அரசையா அவ்வாறு கூறினார். இதை இக்கட்டுரை ஆசிரியர் இதற்கு முன்னரும் சில தடவைகள் வேறு சில கட்டுரைகளில் மேற்கோள் காட்டியிருக்கிறார். அரசையா கூறியது போல றிஸ்க் எடுக்க தமிழ்த் தலைவர்களும், கட்சிகளும், சிவில் அமைப்புக்களும் தயாரா? அரசியலமைப்பு மாற்றங்கள் தொடர்பில் தீர்மானகரமான ஒரு சந்தியை நோக்கி நாடு நகர்ந்து கொண்டிருக்கம் ஒரு தருணத்தில் அரசையா கூறியது போல றிஸ்க் எடுப்பதற்கு தமிழ்த் தலைவர்களும், சிவில் இயக்கங்களும் தயாரா?