படம் | Human Rights Watch

2001 ஆகஸ்ட் 12 அன்று மலையகத்தில் உள்ள தலவாக்கலயைச் சேர்ந்த 17 வயதான தமிழ் சிறுமியான ரீட்டாவின் ஆட்கடத்தலுக்கும், பாலியல்வல்லுறவுக்கும் இரு ஆண்கள் குற்றவாளிகளாகக் காணப்பட்டனர். குற்றவாளிகள் ஒவ்வொருவருக்கும் 23 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், நஷ்டஈடாக 2 இலட்சம் ரூபா செலுத்துமாறு உத்தரவிடப்பட்டதன் மூலம், 2015 டிசம்பர் 28 அன்று, நுவரெலியா மேல் நீதிமன்றம் வரலாற்று ரீதியிலான தீர்ப்பொன்றை வழங்கியது.

இது ரீட்டாவுக்கும், நீதிமன்றத்தில் அவருடன் இருந்த எமக்கும் ஒரு மகிழ்ச்சியான தருணமாகும். ரீட்டாவின் அசாதாரணமான தைரியத்திற்கும், திடசங்கற்பத்திற்கும், அவரது நீண்டநாள் போராட்டத்திற்கும், ஆதரவளித்த சகலருக்கும் இது ஒரு வெற்றியாகும். ஆனால், இது இலங்கையின் நீதி முறைமையின் அசாதாரணமான தளர்ச்சியைக் காட்சிப்படுத்தியது. அதாவது, 17 வயது சிறுமியொருவரின் ஆட்கடத்தலுக்கும், பாலியல்வல்லுறவுக்கும் நீதியை உறுதிப்படுத்துவதற்கும் 14 வருடங்களுக்கு மேல் எடுத்துள்ளது. தீர்ப்புக்கான தனது அறிமுகத்தில், நீதியில் உள்ள இந்தத் தளர்ச்சியை நீதிபதி குறிப்பிட்டதுடன், பொலிஸ் நிலையங்களில் நிலவும் தாமதங்களையும் குறிப்பிட்டார்.

ரீட்டாவின் சவால்கள், போராட்டங்கள், தைரியம் மற்றும் திடசங்கற்பம்

பாலியல் வல்லுறவினால் பாதிக்கப்பட்டவர்கள், விசேடமாக தோட்டப் பகுதியொன்றிலிருந்த 17 வயது தமிழ்ப் பாடசாலைச் சிறுமியொருவர் நீதிக்காகப் போராடுவார் என்பது அபூர்வமானதாகும். அவரது கிராமத்தில், பாடசாலையில், வேலைத்தலத்தில் அவரை மக்கள் பார்க்கும் விதத்தில், அவர் மீது மேற்கொள்ளப்படும் வாய்மொழி ரீதியிலான கருத்துக்களில் அவர் மீண்டும் மீண்டும் பலியிடப்பட்டிருப்பார். பொலிஸ், சட்ட மாஅதிபர் திணைக்களம், நீதித்துறை, குடும்பம், ஊடகங்கள், பொதுவில் சமூகம் ஆகியன அனுதாபப்படவில்லை. அனுதாபப்பட்டவர்கள் கூட நீதியைப் பின்தொடர்ந்து செல்வதற்கு அர்ப்பணிப்பினைக் கொண்டிருக்கவில்லை. அமைதியாக இருப்பதற்குப் பதிலாக, நீதியைப் பின்தொடர்ந்து செல்வதாக, ரீட்டா தீர்மானித்ததால் அச்சுறுத்தல்களையும், பயமுறுத்தல்களையும், அவரின் மரியாதையைக் கெடுப்பதற்கான முயற்சிகளையும் அவரும், அவரது குடும்பத்தினரும் அனேகமாக எதிர்நோக்கவேண்டியிருக்கும்.

ஆனால், ரீட்டா பாலியல்வல்லுறவுக்கு உட்பட்ட நேரத்திலிருந்து அசாதாரணமான தைரியத்துடனும், திடசங்கற்பத்துடனும் நீதிக்காகப் போராடினார். பொலிஸ் நிலையத்திற்குச் சென்று, முறைப்பாடு செய்துவிட்டு, பின்னர் சம்பவம் நடந்த இடத்தை பொலிஸாருக்குக் காட்டி, சந்தேகநபர்களைத் தேடுவதே சம்பவத்தின் பின்னரான அவரது முதலாவது நடவடிக்கையாக விளங்கியது. தீர்ப்பினை வழங்குவதற்கான தனது காரணங்களை நீதிபதி வழங்குகையில், இந்நடவடிக்கைகளை அவர் திட்டவட்டமான வழியில் குறிப்பிட்டார். ரீட்டாவின் வழக்கை நடத்திய அரச வழக்கறிஞர்கள் 15 தடவைகள் மாற்றமடைந்தார்கள். அவரது வழக்கு விசாரணையைக் குறைந்தபட்சம் 9 நீதிபதிகள் செவிமடுத்தார்கள். கண்டி மற்றும் நுவரெலியா மேல் நீதிமன்றங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட நீதிமன்ற விசாரணைகள், சுருக்க முறையற்ற விசாரணைகள் மற்றும் மாவட்ட நீதிமன்றத்தின் இன்னொரு சிவில் வழக்கு ஆகியன இருந்தன. கடுமையானதும், நுணுக்கமாக ஆராய்கின்றதுமான குறுக்கு விசாரணைகளுக்கு முகம்கொடுத்தல் உட்பட பல ஆண்டுகளுக்கு மேலாக, விபரமாக என்ன நடந்தது என்பதை அடிக்கடி விளக்கமளிப்பதிலான மனவதிர்ச்சியை அவர் தாங்கிக்கொள்ள வேண்டியிருந்ததுடன், அவர் ஒரு முறை மயக்கமும் அடைந்தார். ஆனால், தனது கதையில் ரீட்டா தொடர்ந்துமே முரண்படாமல் இருந்தார். இதை நீதிபதியும் அடையாளங் கண்டதுடன், எதிர்த்தரப்பு வழக்கறிஞர்கள், மருத்துவச் சான்றுகள், பொலிஸாரின் அவதானிப்புகள், சூழ்நிலையின் சான்று, குற்றவாளிகளின் சில வாக்குமூலங்கள் ஆகியவற்றினால் ஊர்ஜிதப்படுத்தப்பட்ட ரீட்டாவின் சாட்சியம் மீது சந்தேகத்தை எழுப்ப முடியாதிருந்ததாகவும் முனைவுபடுத்தியிருந்தார்.

ரீட்டா இளமையாக இருக்கும் போதே தனது தந்தையை இழந்துவிட்டார். நீதிக்காக அவர் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தபோது நடுவழியிலேயே, 2009இல் அவரது தாத்தா காலமானார். அவரது தாத்தா அவருக்கு ஆதரவளித்ததுடன், ஊக்கமும் அளித்தார். பேத்தியின் வழக்கு விசாரணையில் அவர் சாட்சியமும் அளித்தார். தனக்கும், குடும்பத்தினருக்கும் எதிராக அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்ட போதிலும், பணம் வழங்கப்பட்டு, வழக்கை மீளப்பெறுவதற்கு அவர் நிர்ப்பந்திக்கப்பட்ட போதிலும், அவர் நீதியைப் பின்தொடர்ந்துச் சென்றார். பாதுகாப்புக்காக 21 இல்லங்களில் தங்குவதற்கு அவர் கட்டாயப்படுத்தப்பட்டார். தனது நண்பர்களையும், பரீச்சயமான சுற்றுச்சூழல்களையும் அவர் விலகிச்செல்ல வேண்டியிருந்ததுடன், பாடசாலையையும், கிராமத்தையும் மாற்றவும் வேண்டியிருந்தது. தனது வாழ்க்கை முழுவதும் வாழ்ந்த மலையகத்தில் இருந்து, மிகவும் தூரத்தில் சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழிலை நாடவும் வேண்டியிருந்தது.

ரீட்டாவுக்கு ஒருமைப்பாடும், ஆதரவும்

ரீட்டா பாலியல் வல்லுறவுக்குட்பட்டு ஒரு சில வாரங்களினுள், அவருக்காக நீதி கோரி, மலையகத்தில் உள்ள ஹற்றனில் நடந்த போராட்டமொன்றில் பங்கெடுத்தேன். அந்தப் போராட்டத்தில் கத்தோலிக்க மதகுரு ஒருவரான வண. நந்தன மணதுங்க முன்நின்றார். அது முதல் அவர் உத்வேகம் கொண்டவராகவும், சிறந்த நண்பராகவும் தொடர்ந்துமிருந்தார். அச்சமயத்தில் அவர் கரிட்டாஸ் கண்டியின் பணிப்பாளராக இருந்தார். ஆனால், பலதரப்பட்ட சமயப்பங்கு நிறுவனங்களிலும் புதிய பதவிநிலைகளைப் பொறுப்பேற்பதற்காகவும் செல்ல அவர் நிர்ப்பந்திக்கப்பட்டார். எனினும், ரீட்டாவுடன் சேர்ந்து வருவதிலும், ஆதரவளிப்பதிலும் அவர் ஒரு போதுமே தயங்கவில்லை என்பதுடன், நூற்றுக்கணக்கான தடவைகள் ரீட்டாவுடனும், பெரும் எண்ணிக்கையிலான வேறு பாதிக்கப்பட்டவர்களுடனும் இருந்ததைப் போன்று தீர்ப்பு வழங்கி நாளன்று நீதிமன்றத்தில் இருந்தார். அவரும், கண்டி மனித உரிமைகள் அலுவலகத்தில் அவரது பணியாளரினதும், தொண்டர்களினதும் அர்ப்பணிக்கப்பட்ட அணியினரும் ரீட்டாவுக்கு பாதுகாப்பளித்துள்ளனர். அவர்கள் ரீட்டாவுக்கு பாதுகாப்பான இல்லங்களைக் கண்டறிந்துள்ளனர். அவரது கல்விக்கும், தொழிலுக்கும் வசதியளித்தனர். சட்ட, மருத்துவ உதவியையும், ஆற்றுப்படுத்தலையும் வழங்கினர். அத்துடன், குடும்ப மரண வீடுகளில், சுகவீனங்களில், அத்துடன், ரீட்டாவின் சொந்தத் திருமணத்தில் உதவியளித்தனர். வழக்கைத் துரிதப்படுத்துமாறு, அப்போதைய ஜனாதிபதி குமாரதுங்கவுக்கு மன்னார் கத்தோலிக்க அதிமேற்றிராணியார் கோரிக்கைவிடுத்திருந்தார். வழக்கைத் துரிதப்படுத்துவதற்காக அழுத்தத்தை பிரயோகிப்பதற்காக தேசிய மற்றும் சர்வதேச இயக்கங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டன.

நுவரெலியாவிலிருந்து, கொழும்புக்கு ரயிலில் திரும்பிச் செல்லும்போது, நான் இதை எழுதுகையில், மறைந்து போன ஆண்டுகளில் ரீட்டாவின் போராட்டங்களின் கட்டங்களையும், அவருடனான எனது சந்திப்புக்களையும், அவர் எனக்கு என்ன கூறினார் என்பதையும் நான் நினைவில் வைத்திருந்தேன். ரீட்டாவின் தளர்ச்சியற்ற தைரியமும், அவரது குடும்பத்தினரினதும், ஏனையோரினதும் ஆதரவும் இருந்திருக்காவிட்டால், 14 வருடங்களின் பின்னரும் கூட நீதி கிடைத்திருக்குமா? என நான் ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.

உயிர்தப்பியவர்களினதும், பாதிக்கப்பட்டவர்களினதும் தைரியத்தினதும், திடசங்கற்பத்தினதும் காரணமாக அபூர்வமான வெற்றிகள்

அனேகருக்கு ஏமாற்றத்தை அளிப்பதும், அடையமுடியாததாக விளங்கியதும், அவ்வாறு இன்னுமே தொடர்கின்றதுமான நீதியைக் கொண்டுள்ள ஒரு நாட்டில் பெருமளவு வேறு வழக்குகளில் உயிர்தப்பியவர்களினதும், பாதிக்கப்பட்டவர்களினதும் தைரியமும், திடசங்கற்பமும் நீதியைக் கொண்டு வந்துள்ளது. இவ்வழக்குகளில் அனேகமானவற்றில், தனிப்பட்டவர்களிடமிருந்தும், தாபனங்களிலிருந்தும் நீண்டகாலமாக துணைக்குச் செல்லுதலும், குறிப்பிடத்தக்க ஆதரவும் இருந்துள்ளன.

2012 மே மாதத்தில், 13 வயதான ‘திவ்யா’ மீதான பாலியல் வல்லுறவுக்காக ஆண் ஒருவருக்கு 20 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்டவருக்கு ஒரு இலட்சம் ரூபா நஷ்டஈட்டை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. ரீட்டாவைப் போலவே திவ்யாவும் தோட்டச் சமூகத்தைச் சேர்ந்த தமிழ் சிறுமியொருவராவார். இந்த மாதத்தின் ஆரம்பத்தில், கண்டியைச் சேர்ந்த இரு நபர்களைச் சித்திரவதை செய்தமைக்காக இரு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தலா 7 வருட கடுங்காவல் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. தடுத்து வைத்தவர்களுக்கும், குடும்பத்தினர்களுக்கும், நீண்ட வருடங்களாக ஆதரவளித்த பின்னர், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நீண்ட காலங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு நபர்களை விடுவிப்பதை HRO சமாளித்தது.

2015 அக்டோபரில், உயர்ந்தளவில் இராணுவமயமாக்கப்பட்டதும், யுத்தத்தினால் சிதைவடைந்ததுமான வடக்கில் இருந்து அபூர்வமான தீர்ப்பொன்றில், 2010இல் விஸ்வமடுவில் இருந்த இரு தமிழ்ப் பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுக்காகவும், பாலியல் துஷ்பிரயோகத்திற்காகவும் இராணுவத்தைச் சேர்ந்த நான்கு வீரர்களுக்கு ஒவ்வொருவருக்கும் 25 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

பலமான தேசிய மற்றும் சர்வதேச இயக்கங்களினால் ஆதரவளிக்கப்பட்ட இலங்கையில் ஆறு வருடங்களுக்கு மேலாக திருமதி சந்தியா எக்னெலிகொடவின் திடசங்கற்பத்திலான போராட்டமொன்று 2010 ஜனவரியில் அவரது கணவரும், கேலிச்சித்திரக்காரரும், இதழியலாளருமான பிரகீத் எக்னெலிகொடவின் கட்டாயப்படுத்தலிலான காணாமல்போகச்செய்தலுக்கு பொறுப்பானவர்கள் என சந்தேகிக்கப்பட்ட இராணுவ மற்றும் புலனாய்வுப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் உட்பட பெருமளவு நபர்கள் கைது செய்யப்படுவதற்கு இட்டுச் சென்றது.

ஆனால், எனது சிறந்த அறிவுக்கு மறுதலையாக, இராணுவ தொடர்பின் நேரடிச் சாட்சியம் இருந்த போதிலும், யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ் இதழியலாளர் ஒருவரான ராமச்சந்திரன் சுப்பிரமணியத்தின் கட்டாயத்திலான காணாமல்போகச் செய்தல் (2007) தொடர்பிலான விசாரணைகளில் முன்னேற்றம் இருக்கவில்லை என்பதுடன், கைதுகளும் மேற்கொள்ளப்படவில்லை. சந்தியா போன்று அவரது வயதுபோன பெற்றோர்களால் இயக்கங்களை நடத்த முடியவில்லை. அத்துடன், சந்தியா பெற்ற தேசிய மற்றும் சர்வதேச ஆதரவை அவர்கள் பெறவில்லை என்பதா காரணம்? பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் துஷ்பிரயோகம், சித்திரவதை, தன்னிச்சையாகத் தடுத்துவைத்தல், நீதிக்குப் புறம்பாக மரணதண்டனையை நிறைவேற்றுதல் மற்றும் காணாமல்போகச்செய்தல் ஆகியவற்றின் ஆயிரக்கணக்கான உயிர்தப்பியவர்களும், குடும்பத்தினரும் இலங்கையில் தசாப்த காலமாக நீதிக்காகக் காத்திருக்கின்றார்கள்.

நீதி முறைமையை சீர்திருத்துதல்

நீதியை வழங்குவதற்காக தாபிக்கப்பட்ட அரசாங்க மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்களின் விளைதிறனை விட, பெரிதுமே உயிர்தப்பியவர்களின் – பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களினது அசாதாரணமான தைரியத்தினதும், திடசங்கற்பத்தினதும் – அத்துடன், சில தனிப்பட்டவர்களிடம், குழுக்களின் ஒருமைப்பாட்டினதும், ஆதரவினதும் காரணமாக, இலங்கையில் நீதிக்கான போராட்டங்களில் சில வெற்றிகள் இடம்பெற்றுள்ளன.

நீதியானது சுதந்திரமாக அடையக்கூடியதல்ல, இலகுவாகக் கிட்டுவதுமில்லை. அத்துடன், உரிமையாகவும், விரைவாகவும் கிட்டுவதுமில்லை. ஆனால், பதிலாக ஆதரவைத் திரட்டுவதற்கு பாதிக்கப்பட்டவரின் தைரியம் அல்லது திறமை ஆகியவற்றில் தங்கியுள்ளதாகத் தோன்றுகின்றது என்பதே எமது நீதிமுறைமையின் பாரிய தவறொன்றாகும். பாலியல் வல்லுறவுக்குட்பட்ட 17 வயதுச் சிறுமி ஒருவருக்காக நீதிக்காகக் காத்திருப்பதற்கான 14 வருடங்கள் மிகவும் நீண்டதாகும். இவ்வாறாக, நீண்ட காலத்தில், நீதி முறைமையின் சீர்திருத்தமே முக்கியமானதாகும்.

ஒருமைப்பாடும், துணையாகச் செல்லுதலும் – இது எந்தளவு முக்கியமானதாகும்?

அதேவேளையில், நீதியை வேண்டி உயிர்தப்பியவர்களினதும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களினதும் போராட்டங்களில் துணையாகச் செல்வதற்கு நாம் எந்தளவு எமது நேரத்தையும், சக்தியையும் மூலதனமிட வேண்டும் என்பதையிட்டு நீதியில் நம்பிக்கைக் கொண்டுள்ள நாம் சகலரும் பிரதிபலிப்பது முக்கியமானதாகும் என நான் நம்புகின்றேன். நீதி முறைமையானது அதுவாகவே எம்மைக் களைப்படையச் செய்வதையும், கைவிடச் செய்வதையும் முயல்வதனால், நீண்ட வருடங்களுக்குத் துணையாகச் செல்லுதலையும், ஒருமைப்பாட்டினையும் நிலைத்திருக்க வைப்பதற்கான வழிகள் மீது பிரதிபலிப்பது குறிப்பிடத்தக்க விதத்தில் முக்கியமானதாகும். முறைமையில் தாமதங்கள் இருந்த போதிலும், நிலைத்திருக்கத்தக்க போராட்டத்தினதும், துணையாகச் செல்லுதலினதும் அத்துடன் ஒருமைப்பாட்டினதும் சிறந்த உதாரணமே ரீட்டாவின் வழக்காகும்.

நீதியைப் பின்தொடர்ந்து செல்வதற்காக, மிகக் கடுமையான சமமின்மைகளையும், ஆபத்துக்களையும் தைரியத்துடன் முகங்கொடுத்த உயிர்தப்பியவர்களுடனும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுடனும் பணியாற்றுவதையும், அவர்களை எதிர்நோக்கியதையும் இட்டு நான் சிறப்புரிமையைப் பெற்றுள்ளதுடன், உத்வேகமுமடைகின்றேன். கொலை செய்யப்பட்ட எனது நண்பன் ‘பட்டாணி ராஸிக்கின்’ மகன் ‘ரிஸ்கான்’, நான் மேலே குறிப்பிட்ட சந்தியா எக்னெலிகொட, 2013இல் கடத்தப்பட்டவரின் மனைவி ‘மயூரி’, 10 வருடங்களுக்கு முன் கொலைசெய்யப்பட்ட 17 வயது மகனின் தந்தையான டாக்டர் ‘மனோகரன்’, 2007 முதல் கடற்படையினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள முள்ளிக்குளம் கிராமத்தில் உள்ள சில கிராமவாசிகள் மற்றும் நியாயமற்ற முறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களின் பெருமளவு மனைவிமார் ஆகியோர் எனது மனதுக்கு வருபவர்கள் மத்தியில் காணப்படுகின்றனர். ஐயத்திற்கிடமின்றி இன்னும் பலர் உள்ளனர்.

இத்தகைய போராட்டங்களுக்கு ஆதரவளிக்கும் இலங்கையின் வேறு பகுதிகளிலும், அதற்கு அப்பாலும் உள்ள தனிப்பட்டவர்களினதும், குழுக்களினதும் பணியையிட்டு நான் வியப்படைகிறேன். சில சகபாடிகளுடனும், நண்பர்களுடனும் சேர்ந்து அத்தகைய சில போராட்டங்களுக்கு ஆதரவளிப்பதற்கு நான் கடுமையாக முயற்சிசெய்துள்ளேன். ஆனால், நாம் ஆபத்துக்களை எதிர்நோக்கியிருந்த போதிலும், அத்துடன், நாம் தனிப்பட்ட தியாகங்களையும், சிறந்த முயற்சிகளையும் எடுத்துள்ள போதிலும், எம்மால் போதியளவைச் செய்ய முடியவில்லை. சில நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட கோரிக்கைகளை உதாசீனம் செய்வது அல்லது ‘இல்லை’ எனக் கூறுவது, அத்துடன், நாம் ஆதரவளிக்க முடியாதபோது ஏனையோரைக் கண்டறிவதற்கு இயலாதிருப்பது ஆகியன இதயத்தைப் பிளப்பதைப் போன்ற துன்பமானதாகும். உயிர்தப்பியவர்களுடனும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுடனும் அதிகளவு பணியாற்றுவதற்கும், அத்துடன், துணையாக இருப்பதிலும், ஒருமைப்பாட்டிலும் அதிகளவு மூலதனமிடுவதற்கும், சகபாடிகள் மற்றும் நண்பர்கள் உட்பட ஏனையோரை செயல்நோக்கமளிப்பதற்கும், ஊக்குவிப்பதற்குமான எனது இயலாமையையிட்டு நான் ஏமாற்றமடைந்திருக்கிறேன்.

துணையாகச் செல்லுதல் மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றை விட ஆராய்ச்சி, பிரச்சாரம், ஆதரித்து வாதாடுதல், சட்ட நடவடிக்கை, பயிற்சிகள் ஆகியன மிகவும் முக்கியமானவையாகும். ஆனால், எனது அனுபவத்தில், வீதிப் போராட்டங்களில் அவர்களுக்குப் பக்கத்தில் நிற்றல், நீதிமன்றங்களுக்கும், வேறு நிறுவனங்களுக்கும் துணையாகப் போதல், அவர்களை சிறைச்சாலைகளிலும், இல்லங்களிலும் சந்தித்தல், தார்மீக ஆதரவை வழங்குதல், மொழிபெயர்ப்புக்களுடன் உதவியளித்தல், அவர்களது காரணத்திற்கு உதவியளிக்கக்கூடியவர்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்தல் போன்ற இலகுவான விடயங்கள் ரீட்டாவினதும், மேலே நான் குறிப்பிட்டுள்ள வேறு பலரினதும் விடயத்தைப் போன்று, உயிர்த்தப்பியவர்களும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் நீதியைப் பெறுவதில் முக்கியமாக விளங்குகின்றன. அத்துடன், நாம் அதிகளவு சுதந்திரமானதும், அடையக்கூடியதும் மற்றும் பயனுறுதிவாய்ந்ததுமான நீதி முறைமையைக் கொண்டிருக்கும் வரை, உடனடியான எதிர்காலத்தில் அனேகமாக நிலைமை இவ்வாறாகவே இருக்கும்.

குறிப்பு: இது ருக்கி பெர்னாண்டோவால் எழுதப்பட்டு Solidarity Actions and Struggles for Justice in Sri Lanka என்ற தலைப்பில் Groundviews தளத்தில் வௌியான ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பாகும்.