படம் | TAMIL POLITY

2016 – சம்பந்தனின் நம்பிக்கைக்குரிய ஆண்டு. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது சம்பந்தன் ஒரு விடயத்தை தொடர்ச்சியாக அழுத்திக் கூறிவந்தார். அதாவது, 2016 இல் ஒரு நல்ல அரசியல் தீர்வு கிடைக்கும். ஆனால், அது என்ன மாதிரியான அரசியல் தீர்வு என்பது தொடர்பில் சம்பந்தன் இதுவரை எதுவும் சொல்லவில்லை. ஆட்சி மாற்றத்தின் பின்னர் இப்பத்தியாளரிடம் பேசும் போது, சம்பந்தன் ஒரு விடயத்தை கூறியிருந்தார். அதாவது, நான் சில்லறை தீர்வு எதனையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றார். ஆனால், தமிழ் மக்களின் சார்பில் வைக்க வேண்டிய வரைபை வைத்தால் அல்லவா, அரசாங்கம் முன்வைக்கும் தீர்வாலோசனை பெறுமதியானதா அல்லது சில்லறையானதா? என்பதை புரிந்துகொள்ள முடியும். இப்படி கேட்பவர்கள் தற்போது தமிழர் பேரவை என்னும் பெயரில் ஒன்றுபட்டு, தமிழ் மக்களுக்கான தீர்வாலோசனை என்ன என்பதை முன்வைக்கவுள்ளதாக கூறுகின்றனர். ஆனால், அரசாங்கம் இவ்வாண்டில் சில முயற்சிகளை மேற்கொள்ளத்தான் போகிறது. இதன் விளைவாக ஒரு புதிய அரசியல் யாப்பு வரலாம். இதற்குரிய புறச்சூழல் தெற்கில் காணப்படுகிறது. எனவே, அரசியல் யாப்பை மறுசீரமைப்பதற்கு இதுதான் ஏற்ற சந்தர்ப்பம். இலங்கையின் ஆட்சியாளர்கள் உண்மையிலேயே தமிழ் மக்களுக்கு இழைத்த தவறுகளுக்கு பரிகாரம் காண முற்பட்டால், இதனை ஒரு நல்ல சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், அப்படியெல்லாம் நடந்துவிடும் என்று எழுந்தமானமாக நம்பி ஏமாந்துபோன சந்தர்ப்பங்கள் ஏராளம். இதனால், நிலைமைகளை நிதானமாகவும் துல்லியமாகவும் மதிப்பிட்டு செயலாற்ற வேண்டிய திருப்புமுனைக் காலகட்டம் ஒன்றிற்குள், தமிழர் தரப்பு பிரவேசிக்கின்றது. “நீந்த வேண்டுமானால் நனையத் தயாராக இருக்க வேண்டும்” என்று ஒரு கருத்துண்டு. எனவே, தமிழ் அரசியல் சக்திகளை பொறுத்தவரையில் 2016 நீச்சலுக்குரிய காலம். அதில் விரும்பியோ விரும்பாமலோ அனைவரும் நனைந்தே ஆகவேண்டும்.

இவ்வாறானதொரு தருணத்தில் 2016இல் நிகழவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் விடயங்கள் தொடர்பிலான அபிப்பிராயங்களை இப்பத்தி பதிவுசெய்ய விழைகிறது. 2016 இல் நிகழுமென்று எதிர்பாக்கப்படும் விடயங்களில் ஒன்று புதிய அரசியல் யாப்பு தொடர்பானது. அரசாங்கம் இது தொடர்பில் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு ஒன்றையும் நடத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறானதொரு வாக்கெடுப்பிற்கு சென்றால் வெற்றிபெற வேண்டும். வெற்றிபெற முடியுமென்றால் மட்டுமே அரசாங்கம் இந்த முயற்சியிலும் இறங்கும். ஏனெனில், அவ்வாறானதொரு வாக்கெடுப்பிற்குச் சென்று வெற்றிபெறாது போனால், அதன் பின்னர் எந்தவொரு விடயத்தையும் முன்னெடுக்க முடியாது. இரண்டு கட்சிகளும் ஓரணியில் நிற்கின்ற சந்தர்ப்பத்தை சாதகமாகப் பயன்படுத்தி, சிங்கள மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்வதில், பெரிய சிக்கல்கள் இருக்கப் போவதில்லை. ஆனால், அரசாங்கம் கொண்டு செல்லும் பண்டத்தை, சிங்கள மக்கள் மத்தியில் விற்கக் கூடியதாக இருக்க வேண்டும். எனவே, ஒரு வெற்றியை இலக்கு வைத்து வாக்கெடுப்பு நடக்குமாயின், நிச்சயம் அரசாங்கம் விற்கக்கூடிய பொருள் (யாப்பு) ஒன்றுடன்தான் செல்லும்.

இந்த இடத்தில் ஒரு முக்கியமான விடயத்தையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. அதாவது, தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கம் தொடர்பில் கருத்துக் கூறியிருந்த எம்.ஏ.சுமந்திரன், தமிழ் மக்கள் கூட்டமைப்பிற்கே தங்களின் ஆணையை வழங்கியிருக்கின்றனர். எனவே, அதற்கு மாற்றாக முன்வைக்கப்படும் எந்தவொரு விடயம் தொடர்பிலும் அச்சம்கொள்ள வேண்டிய தேவையில்லை என்று தெரிவித்திருந்தார். சுமந்திரன் சொல்லுவது முற்றிலும் சரி. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வைத்தே போட்டியிட்டிருந்தது. ஜனநாயக மரபின் படி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியென்பது குறித்த தேர்தல் விஞ்ஞாபனத்திற்கான தமிழ் மக்களின் ஆணையாகும். அந்த மக்கள் ஆணை என்ன என்பதையும் இப்பத்தி நினைவுறுத்த விரும்புகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது கூட்டமைப்பு முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தில், அரசியல் தீர்வு தொடர்பில் இவ்வாறு கூறப்படுகிறது: முன்னர் இருந்தவாறு ஒன்றுபட்ட வடக்கு – கிழக்கு அலகைக் கொண்ட சமஸ்டிக் கட்டமைப்பிற்குள்ளே அதிகாரப்பகிர்வு ஏற்பாடுகள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். மேற்படி சமஸ்டிக் கட்டமைப்பு எவ்வாறு அமைந்திருக்க வேண்டும் என்பதும் தெளிவாக விபரிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, கூட்டமைப்பு கோரிநிற்கும் சமஸ்டியானது, பகிரப்பட்ட இறையாண்மை என்னும் கோட்பாட்டை அடித்தளமாகக் கொண்டிருக்கும் (கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை – 2015, ப.ம்.8). 2016இல் சம்பந்தன் பெறவுள்ள அரசியல் தீர்வு இந்த அடிப்படைகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். ஏனெனில், இதற்கான ஆணையையே சம்பந்தன் கோரியிருந்தார். அதனை வரவேற்றே மக்கள் கூட்டமைப்பை தங்களின் அரசியல் தலைமையாக ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். எனவே, 2016இல் அரசாங்கம் முன்வைக்கவுள்ள தீர்வு யோசனை சமஸ்டி முறைமையை உள்ளடக்கியதாகவும், அதேவேளை, பகிரப்பட்ட இறையாண்மை என்னும் கோட்பாட்டை தழுவியதாகவும் அமைந்திருக்க வேண்டும்.

இப்பொழுது மீண்டும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு வருவோம். அரசாங்கம், கூட்டமைப்பிற்கு தமிழ் மக்கள் வழங்கிய ஆணையுடன் சிங்கள மக்கள் மத்தியில் செல்ல முடியுமா? அப்படிச் சென்றால் வெற்றிபெற முடியுமா? இங்கு சிங்கள மக்கள் என்று நான் பொதுவாக குறிப்பிட்டாலும், உண்மையில் இது சாதாரண சிங்கள மக்கள் தொடர்பானதல்ல. மாறாக, சிங்கள மக்கள் மத்தியில் அபிப்பிராயங்களை காவுவோராக (Opinion bearer) இருக்கும் பௌத்த மதகுருக்கள் முக்கியமாக, பௌத்த பீடாதீபதிகள் ஆகியோர் ஏற்றுக்கொள்ளாத ஒரு விடயத்தை சிங்கள மக்கள் மத்தியில் எக்காலத்திலும் விற்க முடியாது. எனவே, அரசாங்கம் முதலில் பௌத்த மதபீடங்களை திருப்திப்படுத்த வேண்டும். அவர்களின் ஆதரவை பெறுவதில் வெற்றிபெற வேண்டும். மிகவும் வெளிப்படையான சமஸ்டி அரசியல் யாப்பொன்றிற்கு பௌத்த மதபீடங்கள் ஆசியளிக்குமா? இந்த இடத்தில் இரைக்காக காத்திருக்கும் மஹிந்த அணி நிலைமைகளை தனக்கு சாதமாக்கிக் கொள்ளும். எனவே, இப்படியான விடயங்களைக் கருத்தில் கொள்ளாமல் அரசாங்கம் எந்தவொரு புதிய முயற்சியிலும் இறங்கப் போவதில்லை. இந்த நிலைமைகளை விளங்கிக் கொண்டுதான் சம்பந்தன் தீர்வு தொடர்பில் எதனையும் வலியுறுத்தாமல் அமைதியாக இருக்கின்றாரா? அல்லது விடயங்களை இரகசியமாக வைத்திருப்பதுதான் தனக்கு பாதுகாப்பானது என்று கருதுகின்றாரா? விடயங்கள் இரகசியமாக இருப்பதன் மூலம் சம்பந்தனுக்கு ஒரு நன்மை உண்டு. நிலைமைகள் பாதகமாகச் சென்றால் இதிலிருந்து சம்பந்தன் இலகுவாக தப்பிக்கொள்ள முடியும். நாங்கள் எங்களின் மக்களின் ஆணைக்குப் பாதமான ஒன்றை ஏற்க முடியாது என்று கூறிவிட்டு, ஒரு அறிக்கையின் மூலம் சம்பந்தன் தப்பிக்கொள்ளலாம். ஒருவேளை இதுதான் சம்பந்தன் பேணிப்பாதுகாக்கும் இரகசியத்தின், இரகசியமா? ஆனால், சம்பந்தன் நிச்சயம் இவ்வாண்டில் சில உண்மைகளை மக்களுக்கு சொல்லியாக வேண்டும். ஒரு தலைவர் என்பவர் உண்மைகளை மூடி மறைக்கின்ற போதே ஊகங்கள் அதிகரிக்கின்றன. ஊகங்களே பின்னர் உண்மைகளாகின்றன. இன்று தமிழ் அரசியல் பரப்பில் இதுதான் நிகழ்கின்றது. மக்களுக்கு உண்மை நிலைமைகளை தெளிவுபடுத்த வேண்டியது தலைவர்கள் என்போர்களின் கடமையாகும். உண்மையில் வடக்கு – கிழக்கு இணைந்த ஒரு அலகில், சமஸ்டி அடிப்படையிலான ஒரு அரசியல் தீர்வு இந்த ஆண்டு சாத்தியமானதா? அல்லது அவ்வாறானதொரு நிலைப்பாட்டை முன்னிறுத்தியவாறே, இன்றைய சூழலில் பெறக் கூடியதை உறுதிப்படுத்துவது சாத்தியமா? இந்த விடயங்கள் தொடர்பான உண்மை நிலைமையை சம்பந்தன் தெளிவுபடுத்த வேண்டும். இதற்கு முதலில் கூட்டமைப்பிற்குள் ஒரு இணக்கப்பாடு ஏற்பட வேண்டும். அதற்கு சம்பந்தன் தன்னுடைய பண்ணையார் தளத்திலிருந்து கீழிறங்க வேண்டும்.

சம்பந்தன் கடந்த ஆறு வருடங்களாக கூட்டமைப்பின் தலைவராக இருக்கின்றார். இந்தக் காலத்தில் அனைத்து கட்சிகளும் அவரை உளப்பூர்வமாகவே தங்களின் தலைவராக ஏற்றுக் கொண்டன. ஆனால், சம்பந்தனோ அவர்களை மாற்றான் தாய் பிள்ளைகளாகவே நடத்தினார். உண்மையில் கடந்த ஆறு வருடங்களில் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளான முன்னாள் விடுதலை இயக்கங்களைச் சேர்ந்தவர்கள், பல்வேறு அவமானங்களைச் சந்தித்தவாறே கூட்டமைப்பில் அங்கம் வகித்தனர். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர்களது கருத்துக்களுக்கு சம்பந்தன் செவிசாய்க்கவில்லை. தேர்தல்களில் ஆசன ஒதுக்கீடுகள் தொடங்கி, ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கான அங்கீகாரம் வரையில், அவர்களுக்கு உரிய மரியாதை வழங்கப்பட்டிருக்கவில்லை. தன்னை ஒரு உயர்சாதி என்று கருதிக் கொள்பவர், எவ்வாறு கீழ் சாதியினரை நடத்துவாரோ, அப்படித்தான் சம்பந்தன் ஏனைய கட்சிகள் தொடர்பில் நடந்துகொண்டார். ஒரு காலத்தில் உரிமைக்காக ஆயுதம் ஏந்திய இயக்கங்கள் தங்களின் உரிமைக்காக குரல் கொடுக்க முடியாதவர்களாக, ஊடகவியலாளர்கள் முன்னால் கூனிக் குறுகினர். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஏனைய கட்சிகளின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன. கிழக்கு மாகாண சபை அமைச்சரவை நியமனத்தின்போது ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மாகாண சபை உறுப்பினர்களாக இருந்த போதிலும்கூட, சம்பந்தன் தமிழரசு கட்சியை சேர்ந்தவர்களுக்கே அமைச்சுப் பொறுப்புக்களை வழங்கினார். இத்தனைக்கும் குறித்த கட்சிகளில் ஒன்று தன்னுடைய மத்திய குழுவில் தீர்மானம் நிறைவேற்றி, தங்களுடைய கட்சியைச் சேர்ந்தவர் ஒருவருக்கும் ஒரு வாய்ப்பு தருமாறு கேட்டிருந்தது. அதனை சம்பந்தன் காதில் கூட வாங்கிக் கொள்ளவில்லை. இதன் போது ஏனைய கட்சியைச் சேர்ந்தவர்கள் படிப்பறிவில்லாதவர்கள், நாகரீகமாக சபையில் பேசத் தெரியாதவர்கள் என்று பரிகசிக்கப்பட்டனர். அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் அவமானத்தாலும் இயலாமையாலும் கூனிக்குறுகினர். கடந்த நாடாளுமன்ற தேர்தலின் பின்னர், தேசிய பட்டியல் விவகாரத்தில் டெலோவும், ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியும் தங்களின் கட்சிகளைச் சேர்ந்த ஒருவருக்கும் சுழற்சி முறையில் வாய்ப்பு தருமாறு கேட்டிருந்தது. வழமைபோலவே சம்பந்தன் தனது விருப்பின்படி தமிழரசு கட்சியை சேர்ந்த இருவருக்கே வழங்கினார். இத்தனைக்கும் மூன்று கட்சிகளின் தலைவர்கள் சொல்லியும் சம்பந்தன் அதனை கருத்தில் கொள்ளவில்லை. உண்மையில் தீவிர கடவுள் பக்தரான சம்பந்தன், தான் செய்வதை ஒருபோதும் தவறென்று எண்ணியதில்லையா? சம்பந்தனின் இத்தனை அநியாயங்களுக்குப் பின்னரும் கூட, இன்றும் கூட்டமைப்பாக அனைவரும் இருக்கின்றனர் என்றால் அதற்குக் காரணம், ஏனைய கட்சிகளின் பெருந்தன்மையும் சகிப்புணர்வும்தான்.

இப்படியான தன்னுடைய எல்லா தவறுகளையும் திருத்திக் கொள்வதற்கான ஆண்டாக இந்த ஆண்டை சம்பந்தன் பயன்படுத்திக் கொள்ள முடியும். காலம் இன்னும் கடந்துவிடவில்லை. திருப்புமுனைக்கான ஆண்டாக சம்பந்தன் கருதும் இந்த ஆண்டின் முதல் இலக்கு, கூட்டமைப்புக்குள் கருத்தொற்றுமையை ஏற்படுத்துவதாக இருக்கவேண்டும். ஒருவேளை, சம்பந்தன் இதில் தவறினால் முரண்பாடுகள் நிச்சயம் தீவிரமடையும், அது இறுதியில் பிளவில் முற்றுப் பெறும். இதற்கான அனைத்து பொறுப்பும் சம்பந்தனையே சாரும் வேறு எவரையும் அல்ல. கேக் கிடைக்கும் வரையில் பானை உண்ணாதீர்கள் என்னும் அரசியல் நிலைப்பாட்டை இப்பத்தி புத்திசாதுர்யமான அரசியல் அணுகுமுறையாக ஒருபோதும் கொண்டாடியதில்லை. கொள்கையும் முக்கியம் அதனை விடவும் அந்தக் கொள்கையைப் பாதுகாத்து, அதனை தலைமுறைகள் தழுவி வளர்ப்பதற்கு தமிழர்கள் வாழ வேண்டியதும் முக்கியம். இருப்பு முக்கியம், அந்த இருப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான வாய்புக்கள் கிடைக்குமிடத்து அதனை கெட்டியாக பிடித்துக் கொள்ளும் வகையில் தமிழர் தரப்பு சிந்திக்க வேண்டிய ஆண்டாக இந்த ஆண்டை பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆட்சி மாற்றத்தின் பின்னர் இலங்கையின் அரசியல் சூழலை, தங்களது நலன்களுக்குச் சாதகமான ஒன்றாக நோக்கும் அதிகார சக்திகளின் எண்ண ஓட்டங்களையும் கருத்தில் கொண்டுதான் தமிழர் தரப்பு சிந்திக்க வேண்டியிருக்கிறது. கொள்கைகளை வலியுறுத்துகின்ற அதேவேளை, அவ்வாறான சக்திகளிலிருந்து அன்னியமாகிவிடாத வகையில் விடயங்களை முன்வைப்பதும் அவசியம். தமிழர் தரப்பிற்கு இதில் வேறு எவரும் பாடங்கள் எடுக்க வேண்டியதில்லை. சர்வதேச சக்திகளின் ஆற்றல் எப்படியெல்லாம் சூழ்நிலைமைகளை மாற்றியமைக்கவல்லது என்பதில் தமிழர்களுக்கு இருக்கும் அனுபவம் வேறு எவருக்கு இருக்கிறது? ஆனால், அந்த அனுபவத்தை பட்டறிவாக்கிக் கொள்ளும் திறன் எத்தனை தமிழர்களுக்கு இருக்கிறது என்பதுதான் விடயம்.

யதீந்திரா