படம் | Selvaraja Rajasegar Photo

சம்பந்தரின் தெரிவே விக்னேஸ்வரன். தனது தெரிவே தனக்கு எதிராகத் திரும்புவது என்பது ஒரு தலைமைத்துவத்தின் தோல்விதான். என்பதால்தான் விக்னேஸ்வரன் கட்சிக்கு வெளியே சென்று கருத்துக்கள் கூறியபோதெல்லாம் சம்பந்தர் பேசாமல் இருந்துவந்தார். சுமந்திரனும் விக்னேஸ்வரனும் பகிரங்கமாக மோதியபோதும் சம்பந்தர் பேசாமல் இருந்தார். விக்னேஸ்வரனை வெளிப்படையாக எதிர்ப்பதை அவர் ஓரளவுக்குத் தவிர்த்து வந்தார். எனினும், கடந்த மாதம் அவர் மட்டக்களப்பில் வைத்து தனது மௌனத்தைக் கலைத்தார். விக்னேஸ்வரன் விரும்பினால் தலைமைப் பொறுப்பை ஏற்கலாம் என்ற தொனிப்பட அவர் கருத்துத் தெரிவித்திருந்தார். அதன் மூலம் தலைமைப் பொறுப்பை இறுகப் பற்றிக் கொண்டிருக்கும் நோக்கம் தனக்குக் கிடையாது என்ற ஒரு தோற்றத்தை உருவாக்க முற்பட்ட அதேசமயம் விக்னேஸ்வரன் விரும்பினால் அவர் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளலாம் என்ற ஒரு செய்தியையும் சம்பந்தர் உணர்த்த முற்பட்டார். அது ஏறக்குறைய ஒரு பொறிதான். விக்னேஸ்வரன் சம்பந்தரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டால் தலைமைப் பொறுப்பை நோக்கி முன்னகர வேண்டியிருக்கும். ஏற்கவில்லை என்றால் தலைமைப் பீடத்திற்கு எதிராகக் கருத்துக் கூறுவதை நிறுத்தவேண்டியிருக்கும். கடந்த இரு ஆண்டுகளாக விக்னேஸ்வரன் தனது தலைமைத்துவத்தை போதியளவு நிரூபித்திருக்கவில்லை. அப்படிப்பட்ட பொறுப்புக்களின் மீது ஆசை கொண்ட ஒருவராகவும் அவர் காணப்படவில்லை. அப்படிப்பட்ட ஆசைகள் இல்லை என்பதனால்தான் அவர் தலைமைத்துவத்துக்கு எதிராக வெளிப்படையாகப் பேசி வந்தார். எனவே, அவர் தலைமைப் பொறுப்பை ஏற்கப் பின்னடிப்பார் என்ற ஒரு எதிர்பார்ப்போடுதான் சம்மந்தர் ஒரு பொறியை வைத்தார்.

விக்னேஸ்வரன் அதற்கு நேரடியாகப் பதில் சொல்லவில்லை. ஆனால், ஒரு செயல் மூலம் மறைமுகமாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறார். தமிழ் மக்கள் பேரவைக்குத் தலைமை தாங்கியதன் மூலம் அவர் சம்பந்தருக்கு சூசகமாக பதில் கூறியுள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையானது கட்சிசார்பற்றது என்றும், எல்லாக் கட்சிகளுக்குமான ஒரு பொது இடையூடாட்டத் தளம் என்றும் கூறப்படுகிறது. அதற்குள் தமிழ் சிவில் சமூக அமையத்தைச் சேர்ந்தவர்கள் உண்டு. ஆனால், அதற்காக தமிழ் சிவில் சமூக அமையமும் பேரவையும் ஒன்றல்ல என்று சம்பந்தப்பட்டவர்கள் கூறுகிறார்கள். தமிழ் சிவில் சமூக அமையத்தில் இந்து நிறுவனங்களின் ஊடாட்டம் குறைவு. ஆனால் பேரவைக்குள் அப்படியல்ல. பேரவைக்குள் முக்கியஸ்தர்களாகக் காணப்படும் சிலர் தீவிர இந்துமத நிலைப்பாட்டைக் கொண்டவர்கள். கஜேந்திரகுமார் பேரவைக்குள் காணப்படுகின்றார். ஆனால், அதற்காக அவருடைய கட்சி நிலைப்பாடே பேரவையின் நிலைப்பாடும் அல்ல என்று காட்ட பேரவை முயற்சிக்கின்றது. விக்னேஸ்வரன் தலைவராகக் காணப்படுகின்றார். ஆனால், அதற்காக பேரவைக்குள் வட மாகாண சபையும் அடங்கும் என்றும் கூறமுடியாது. விக்னேஸ்வரனைப் போன்று சிந்திக்கும் பலர் கூட்டமைப்புக்குள் உண்டு. ஆனால், அவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. ஏனெனில், கட்சிகள் சார்பாக ஒவ்வொருவரையும் சிவில் அமைப்புக்கள் சார்பாக ஒவ்வொருவரையும் இதில் பங்குபற்றுமாறு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் அதனால்தான் கூட்டமைப்புக்குள் இருந்த ஏனைய அதிருப்தியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் பேரவை வட்டாரங்கள் தெரிவித்தன.

எனவே, மேற்கண்டவை அனைத்தையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் பேரவையானது தன்னை கட்சிசாரா ஒரு பொது இடை ஊடாட்டத் தளமாகவே காட்டிக்கொள்ள முற்படுகிறது. ஆனால், அவர்களுடைய எல்லாப் பிரயத்தனங்களையும் மீறி பேரவையானது ஒரு அணிக்கு எதிரான சேர்க்கையாகவே பார்க்கப்படுகிறது. சம்பந்தன் + சுமந்திரன் அணிக்கு எதிரான ஒரு சேர்க்கையாகவே அது பார்க்கப்படுகின்றது. அது மெய்யாகவே ஒரு கட்சி சாராப் பொதுத் தளமாக வளர்ச்சிபெறுமா இல்லையா என்பது அதன் எதிர்கால நடவடிக்கைகளிலேயே தங்கியிருக்கிறது. ஆனால், தற்பொழுது அரங்கில் உள்ள கட்சிகளின் செயற்பாடுகளில் திருப்தியுறாத ஒரு போக்கின் விளைவே பேரவை எனலாம். யாழ்ப்பாணத்தில் வெளிவரும் இரண்டு பத்திரிகைகள் பேரவைக்கு ஆதரவாகக் காணப்படுகின்றன. ஒரு பத்திரிகை எதிராகக் காணப்படுகின்றது.

அதன் முதல் அமர்வில் பங்குபற்றியவர்களில் செயற்பாட்டாளர்களின் தொகை ஒப்பீட்டளவில் குறைவாகவே காணப்பட்டது. ஏறக்குறைய தமிழ் சிவில் சமூக அமையத்தைப் போல எனலாம். தமிழ் சிவில் சமூக அமையத்திலும் செயற்பாட்டாளர்களின் தொகை ஒப்பீட்டளவில் குறைவு. அது கீழிருந்து மேல் நோக்கிக் கட்டி எழுப்பப்பட்ட ஒரு சிவில் அமைப்பு அல்ல. பெருமளவிற்கு மேலிருந்து கீழ் நோக்கி கட்டி எழுப்பப்பட்ட ஒரு பிரமுகர் சபைதான். அது உருவாக்கப்பட்ட காலகட்டத்தில் மனோகணேசன் யாழ்ப்பாணம் வந்திருந்தார். தானும் ஒரு பிரஜைகள் குழுவை மேல் மாகாண சபையில் அமைக்கப் போவதாகக் கூறினார். அப்பொழுது நான் அவரிடம் சொன்னேன், இது அதன் மெய்யான பொருளில் ஒரு பிரமுகர் சபையே என்று. ஆனால், அது அன்றைய காலகட்டத்தின் தேவையும் கூட. ராஜபக்‌ஷ சகோதரர்களின் ஆட்சிக்காலத்தில் வெற்றிவாதத்தின் கீழ் அதற்கொரு பெறுமதியான பாத்திரம் இருந்தது. அந்நாட்களில் பிரமுகர்கள்தான் ஓரளவுக்குத் துணிச்சலாகப் பேச முடிந்தது. அவர்களுக்குத்தான் அவர்களுடைய பதவிநிலை காரணமாகவும் பிரபல்யம் காரணமாகவும் சமூகப் பெறுமானம் காரணமாகவும் ஒருவித பாதுகாப்பு இருந்தது. வன்னியில் இருந்து வந்தவர்களும் ஏற்கனவே அரசியலில் தீவிர நிலைப்பாட்டோடு இருந்தவர்களும் அரசியலில் அஞ்ஞாத வாசம் செய்த காலகட்டம் அது. வன்னியில் இருந்து வந்தவர்கள் அரசியல் கதைத்தால் புனர்வாழ்வுக்கு அனுப்பப்படலாம் என்ற ஒரு அச்சம் அப்பொழுது நிலவியது. தாங்கமுடியாத தோல்வியினாலும் அவமானத்தினாலும் கூட்டுக்காயங்களினாலும் துவண்டுபோய்க் கிடந்த ஒரு சமூத்தின் மத்தியில் சிவில் சமூக அமையமானது துணிச்சலோடு அனைத்துலக சமூகத்திற்குக் கேட்கக் கூடிய விதத்தில் தமிழ் மக்களின் நியாயங்களை உரத்துக் கூறியது. அந்நாட்களில் பிரமுகர்களாக இருந்தவர்களால்தான் அவ்வாறு பேசக் கூடியதாக இருந்தது. அதேசமயம் லலித், குகனைப் போன்றவர்கள் காணாமல்போகக் கூடிய ஒரு சூழலும் நிலவியது. எனவே, அன்றைக்கு இருந்த பயங்கரமான சூழ்நிலையின் பின்னணியில் வைத்தே தமிழ் சிவில் சமூக அமையத்தின் முக்கியத்துவத்தை விளங்கிக்கொள்ள வேண்டும்.

இது ஒரு விதத்தில் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்ட உடனடுத்த காலகட்டத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பெற்ற கவனிப்புக்கு நிகரானது. புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்ட உடனடுத்த காலப்பகுதியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது ஏதோ ஒரு நம்பிக்கையை ஓரளவுக்காயினும் கட்டி எழுப்ப முற்பட்டது. ஆனால், பின்வந்த ஆண்டுகளில் காலத்தின் தேவைக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்வதிலும் செயற்படுவதிலும் அந்த அமைப்பு போதிய வெற்றியைப் பெறத்தவறியது.

தமிழ் சிவில் சமூக அமையமும் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரான ஒரு காலகட்டத்தில் அதிகம் கவனிப்புக்குரியதொன்றாக மேலெழுந்தது. இவ்வாண்டு ஜனவரி மாதம் ஆட்சி மாற்றத்தின் பின் சிவில் வெளி ஒப்பீட்டளவில் அதிகரித்தபொழுது அவ்வமைப்பானது தன்னை அதிகமதிகம் செயற்பாட்டு ஒழுக்கத்திற்குரியதாக தகவமைத்துக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது. ஆனால், கொள்கைப் பிடிப்புள்ள ஒரு கருத்துருவாக்க சிவில் அமைப்பு என்பதற்கும் அப்பால் ஒரு செயற்பாட்டு இயக்கமாக அந்த அமைப்பால் வெற்றிபெற முடியவில்லை.

இத்தகையதொரு பின்னணியில் தமிழ் சிவில் சமூக அமையத்துள் அங்கம் வகிக்கும் பல சிவில் அமைப்புக்களும் இப்பொழுது தமிழ் மக்கள் பேரவைக்குள் இணைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆட்சி மாற்றத்தின் பின்னரான அதிகரித்துவரும் சிவில் ஜனநாயக வெளிக்குள் செயற்பாட்டு இயக்கங்களுக்கான தேவை அதிகரித்து வரும் ஒரு பின்னணியில் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டிருக்கிறது. தமிழ் சிவில் சமூக அமையத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியாக இதைக் கருதத் தேவையில்லை. ஆனால், ஏற்கனவே இருக்கின்ற கட்சிகள் சிவில் அமைப்புக்கள் போன்றவற்றின் போதாமைகளின் விளைவே பேரவை எனலாம். ஆயின், ஏற்கனவே இருக்கும் கட்சிகளும், அமைப்புக்களும் செய்யத் தவறிய ஏதோ ஒன்றை மக்கள் பேரவை செய்யப் போகிறதா?

அதன் முதலாவது அமர்வில் பங்குபற்றியவர்களில் பெரும்பாலானவர்களின் அரசியல் மற்றும் செயற்பாட்டு ஒழுக்கங்களை வைத்துக் கணித்தால் அந்த அமைப்பானது ஒரு செயற்பாட்டு இயக்கமாக மேலெழுவதற்குரிய அடிப்படைகள் பலவீனமாகவே காணப்படுகின்றன. அதேசமயம், தமிழ் சிவில் சமூக அமையத்தைப் போலவே பேரவையும் அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் கொடுக்கவல்ல ஓர் அமைப்பாக மேலெழுவதற்கான வாய்ப்புக்களே அதிகமாகத் தெரிகின்றன. ஆனால், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் தன்னுள் கொண்டிருக்கும் ஓர் அமைப்பானது எப்படி அதே அரசியல் கட்சிகளுக்கு எதிராக அழுத்தத்தைப் பிரயோகிக்கப் போகிறது? அல்லது இதை வேறுவிதமாகக் கேட்டால் யாருக்கு எதிராக அழுத்தத்தைப் பிரயோகிக்கப் போகிறது? இக்கேள்விகளுக்கான விடைகள் யாவும் ஓரிடத்தையே வந்து சேரும். அதாவது, சம்மந்தன் + சுமந்திரன் அணிக்கு எதிரான ஓர் அழுத்தப் பிரயோக அமைப்பாகவே பேரவை நடைமுறையில் செயற்பட வேண்டியவரும். ஆனால், இதை சில அரசியல்வாதிகளின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கும் ஓர் அமைப்பு என்று குறுக்கிக் கொள்வதை விடவும் அதைவிட பரந்தகன்ற கோட்பாட்டு தளத்தில் வளர்த்தெடுப்பதே தமிழ் மக்களின் எதிர்காலத்தைப் பொறுத்தவரை முக்கியமானது.

அதாவது, ஈழத்தமிழர்கள் ஒரு தேசமாகச் சிந்திக்கவேண்டுமா? இல்லையா? என்ற கோட்பாட்டுத்தளமே அது. ஈழத்தமிழர்கள் ஒரு தேசமாகச் சிந்திக்கும் போதுதான் தமிழ்த் தேசியத்தின் அடிப்படைகளைப் பலப்படுத்த முடியும். தமிழ் மக்களை இலங்கை அரசாங்கமும் உலக சமூகமும் ஒரு தேசிய இனமாக ஏற்றுக் கொண்டால்தான் பொருத்தமான ஒரு தன்னாட்சி அதிகாரக் கட்டமைப்பைப் பற்றி சிந்திக்கவும், உரையாடவும் முடியும். அப்படியொரு நிலைமை உருவானால்தான் ஒற்றையாட்சி கட்டமைப்புக்கு வெளியே சென்று அரசியல் அமைப்பை மீள வரைய முடியும். ஒற்றையாட்சிக்கு வெளியே சென்று சிந்தித்தால்தான் இலங்கைத்தீவின் அரசியல் அமைப்பை ஆகக் கூடிய பட்சம் பல்லினத்தன்மைமிக்கதாக மீள வரைய முடியும். வரப்போகும் ஜனவரி 09இல் இருந்து நாடாளுமன்றமானது அரசியல் அமைப்பு நிர்ணய சபையாக மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படும் ஒரு பின்னணியில் தமிழ் மக்கள் ஒரு தேசமாகச் சிந்திப்பதற்குரிய அடிப்படைகளை பலப்படுத்தினால்தான் அரசியல் அமைப்பு நிர்ணய சபையை உரிய தயாரிப்புக்களோடு எதிர்கொள்ள முடியும். எனவே, பேரவையின் தோற்றத்தை கூட்டமைப்பின் தலைமைக்கு எதிரானது என்று வியாக்கியானப்படுத்துவதை விடவும் ஒரு தேசமாகச் சிந்திப்பதற்குரிய ஒரு இடை ஊடாட்டத் தளத்தைக் கட்டி எழுப்பும் முயற்சி இது என்று பார்ப்பதே நல்லது.

அதேசமயம் கூட்டமைப்பின் தலைவர்களும் கொழும்பில் உள்ள சிங்களத் தலைவர்களும் உலக சமூகமும் இது விடயத்தில் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு பாடம் இருக்கிறது. தமிழ் சிவில் சமூக அமையம், தமிழ் மக்கள் பேரவை போன்ற அமைப்புக்கள் தோன்றுவதற்கான ஒரு தேவை எப்பொழுதும் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கிறது என்பதுதான் அது. இந்த அமைப்புக்கள் சில சமயம் பின்னாளில் காலாவதியாகக் கூடும். ஆனால், அந்த வெற்றிடத்தை வேறொரு புதிய அமைப்பு நிரப்பும். அதாவது, தமிழ்தேசிய உணர்வு எனப்படுவது காலத்துக்குக் காலம் தன்னை ஏதோ ஒரு விதத்தில் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும்.