படம் | AFP PHOTO/ Ishara S.KODIKARA, GETTY IMAGES

வடக்கு கிழக்கிலுள்ள ஆறு மாவட்டங்களுக்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நியமிக்கப்பட்ள்ளனர். இது தொடர்பான நியமன கடிதங்கள், குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இந்த அடிப்படையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சிறிதரன், சிவமோகன், சாள்ஸ் நிமலநாதன் மற்றும் சிறிநேசன் ஆகியோரே குறித்த இணைத்தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனத்தை மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டுவிட்டனரா அல்லது இல்லையா என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால், கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்கவும், ஆலோசனைக்கும் அமைவாகவுமே மேற்படி நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சில தினங்களுக்கு முன்னர் இது தொடர்பான வாதப்பிரதிவாதங்களும் இடம்பெற்றிருந்தன. இவ்வாறான வாதப்பிரதிவாதங்கள் தொடர்பில் பதிலளித்திருந்த கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் பதவி போன்ற சலுகைகளை இலங்கை அரசாங்கத்திடமிருந்து பெறுவது, அரசியல் தீர்வை பலவீனப்படுத்துவதாக அமையும் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், எமது அரசியல் தீர்வு நோக்கிய பயணத்தில், இது ஒரு முக்கியமான விடயமும் அல்ல என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அவர் இவ்வாறு கூறியிருக்கும் பின்னணியில்தான் தற்போது அவசர அவசரமாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றனர். ஆரம்பத்தில் இவ்வாறானதொரு கோரிக்கை கூட்டமைப்பால் அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் கூட, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேசிய அரசாங்கத்தின் பங்காளிகளான, சிறிலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த அங்கஜன் இராமநாதனையும், ஜக்கிய தேசிய கட்சியை சேர்ந்த விஜயகலா மகேஸ்வரனையுமே நியமித்திருந்தார். தற்போது குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், இணைத் தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டால், அது சலுகையை ஆராதிப்பதாக அமையாதா அல்லது அரசியல் தீர்வு நோக்கிய பயணத்தை பாதிக்காதா? இதற்கான பதிலை சம்பந்தனிடம்தான் கேட்க வேண்டும்.

நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் நிகழ்ந்துவருகின்ற ஒரு விடயத்தை எந்தளவு தூரம் தமிழ் அரசியல்வாதிகள், புத்திஜீவிகள், அபிப்பிராய உருவாக்குனர்கள் என்போர் உற்று நோக்குகின்றனர்? கூட்டமைப்பை ஒரு வகையான பதற்ற நிலையிலும், உள்முரண்பாடுகளை பேணிக்கொள்வதற்கு ஏற்ற வகையிலுமே அரசாங்கம் தன்னுடைய ஒவ்வொரு நகர்வுகளையும் திட்டமிட்டு அரங்கேற்றுகின்றது. அரசாங்கத்தின் அண்மைக்கால நடவடிக்கைகளை உற்று நோக்கும் போது அவ்வாறானதொரு முகமே ஊசலாடுகிறது. ரணில் விக்கிரமசிங்கவிற்கும், வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கும் இடையிலான முரண்பாடுகள் தொடக்கம், அரசியல் கைதிகள் விவகாரம் வரையிலான நிகழ்வுகளை ஆழமாக உற்று நோக்கினால், இந்த விடயம் வெள்ளிடைமலையாகும். தற்போது மாவட்ட அபிவிருத்திக் குழுவிற்கான இணைத் தலைவர் பதிவிக்கான நிமயனத்திலும் இந்த நுட்பமான நகர்வைக் காணலாம். முதலில் அதனை வழங்குவதற்கு அரசாங்கம் விரும்பவில்லை. இதனைத் தொடர்ந்து இது தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இதனால், கூட்டமைப்புக்குள் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன. கருத்து முரண்பாடுகள் ஏற்பட்ட பின்னர் தற்போது ஜனாதிபதி மைத்திரிபால கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் உள்வாங்கிக் கொள்வதற்கு அனுமதியளித்திருக்கின்றார். அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் காரசாரமான விவாதங்கள் இடம்பெற்றன. அரசாங்கம் எதற்கும் செவி சாய்க்கவில்லை. இதனால், அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க்கக் கூடிய ஆற்றல் கூட்டமைப்பிடம் இல்லையா என்னும் கேள்வி எழுந்தது. இது கூட்டமைப்புக்குள் கருத்து முரண்பாடுகளை அதிகரித்தது. பின்னர் அரசாங்கம் சில நிபந்தனைகளுடன் அவர்களை விடுவிக்க இணங்கியது. இதனை அரசாங்கம் ஆரம்பத்திலேயே செய்திருக்கலாம், ஆனால் செய்யவில்லை ஏன்? நான் மேலே குறிப்பிட்ட கூட்டமைப்புக்குள் நிலவும் முரண்பாடுகளை பேணிப்பாதுகாக்கும் அரசியல் நுட்பம் என்னும் வாதத்துடன் இது தொடர்புறவில்லையா?

இங்கு பிறிதொரு முக்கியமான விடயத்தையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. மாவட்ட அபிவிருத்தி குழுக்களின் இணைத் தலைவர்களுக்கான நியமனக் கடிதம் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பட்டிருக்கும் நிலையில், பிறிதொரு புறமாக கிராமிய இராஜ்ஜியம் தொடர்பான திட்ட நகலொன்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளர் ஊடாக, வடக்கு மாகாண பிரதம செயலாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பில் தன்னுடன் எதுவும் பேசவில்லையென்று வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் குறிப்பிட்டிருக்கின்றார். வடக்கு மாகாண சபைக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டிருக்கின்றார். இது தொடர்பில் அவர் மேலும், மாகாண சபைகளிடமிருந்து அதிகாரங்களைப் பறிக்கும் முயற்சியில் மத்திய அரசாங்கம் ஈடுபட்டிருப்பதாகவும், ரணில் விக்கிரமசிங்க அரசியல் ரீதியான பிரச்சினையை, நிர்வாக ரீதியாக அணுக முற்படுவதாகவும் குற்றஞ்சாட்டியிருக்கின்றார். இவ்வாறனதொரு சூழலில்தான் மாவட்ட அபிவிருத்தி குழுக்களின் இணைத் தலைவர்களாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது கூட்டமைப்பின் மாகாண சபைக்கும், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் முரண்பாடுகளை அல்லது விரிசல்களை ஏற்படுத்தலாம். ஏனெனில், இது தொடர்பில் வடக்கு முதலமைச்சரோடு எந்தவிதமான கலந்துரையாடல்களும் இடம்பெறவில்லை. அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் தங்களுக்கு அந்த அவசியம் இல்லையென்று அவர்கள் கூறலாம். அவர்கள் அப்படி கூறினால் அது தவறும் இல்லை. ஆனால், அதிகாரங்களை உறுதிப்படுத்துவதற்காகப் போராடும் சம்பந்தன் அதனை அனுமதித்துக் கொண்டிருக்க முடியுமா? ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனை அனுமதித்துக் கொண்டிருக்க முடியுமா? உண்மையில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மாவட்ட அபிவிருத்திக் குழுவில் பங்குகொள்வது தொடர்பாக முதலில் மாகாண சபையுடன்தான் உரையாடியிருக்க வேண்டும். ஆனால், அது நிகழவில்லை. இவ்வாறானதொரு சூழலில் விக்னேஸ்வரன் மாவட்ட அபிவிருத்தி குழுவுடன் இணைந்து செயற்படப் போவதில்லை. அவர் இணைவற்கான புறச்சூழலை சம்பந்தனும் ஏற்படுத்தவில்லை.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது சம்பந்தன் ஒரு விடயத்தைத் தொடர்ச்சியாக உச்சரித்துக் கொண்டிருந்தார். அதாவது, 2016இல் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். தமிழர் வாழ்வில் 2016ஆம் ஆண்டு ஒரு முக்கியமான ஆண்டாக இருக்கும். அண்மையிலும் சம்பந்தன் அதனை மீளவும் வலியுறுத்தியிருந்தார். ஆனால், அந்தத் தீர்வு எப்படியிருக்கும்? அது தமிழ் மக்களின் அடிப்படையான அரசியல் கோரிக்கைகளை உள்ளடக்கியாக அமைந்திருக்குமா? என்பது தொடர்பில் சம்பந்தன் இதுவரை மக்கள் முன்னால் எவ்வித கருத்துக்களையும் தெரிவித்ததில்லை. ஆகக் குறைந்தது கூட்டமைப்பிற்குள் அங்கம்வகித்துவரும் ஏனைய கட்சிகளுடன் கூட உரையாடியிருக்கவில்லை. அரசியல் தீர்வு தொடர்பான சம்பந்தனின் அணுகுமுறையை பார்த்தால், ஒரு கெரில்லா அமைப்பு தன்னுடைய இராணுவத் திட்டங்களில் இரகசியத்தன்மையை பேணுவதற்கு ஒப்பானதாக இருக்கிறது. ஆனால், ரணில் விக்கிரமசிங்க, கிராமிய இராஜ்யம் பற்றி ஆலோசிப்பதை பார்த்தால், ஒருவேளை அதுதான் சம்பந்தன் கூறும் 2016இன் அரசியல் தீர்வோ? உண்மையில் கடந்த 60 வருடங்களுக்கும் மேலாக நீடித்துவரும் தமிழ் மக்கள் சார்பான அரசியல் கோரிக்கையின் அடிப்படை அதிகாரப் பகிர்வாகும். இதில் பிரபாகரன் தலைமையில் நிகழ்ந்த தனிநாட்டுக்கான ஆயுத பேராட்டம் முற்றிலும் வேறானது. அதனை பிராந்திய, உலகளாவிய அதிகார சக்திகள் எவையும், குறிப்பாக இந்தியா மற்றும் அமெரிக்கா ஏற்றுக் கொண்டிருக்கவில்லை. அதனால், விடுதலைப் புலிகளை முற்றிலுமாக நிர்மூலமாக்குவதற்கு அவர்களின் பூரண ஆசிர்வாதத்தை மஹிந்தவால் இலகுவாகப் பெற முடிந்தது. அதற்குச் சாதகமான உலகளாவிய நிலைமையும் இருந்தது.

விடுதலைப் புலிகளின் அழிவிற்குப் பின்னர், தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கை என்பது, முற்றிலும் பிரிபடாத இலங்கை என்னும் கோட்பாட்டின் அடிப்படையில் அணுகப்பட்டது. அப்படித்தான் அணுகவும் முடியும். தமிழ் மக்களின் அதிகாரப்பகிர்வு நோக்கிய பயணத்தில் அரசியல் தரப்பினரின் விருப்பு வெறுப்பிற்கு அப்பால் 13ஆவது திருத்தச் சட்டத்தின் கீழான மாகாண சபை முறைமை பின்னிப்பிணைந்ததாகவே இருக்கிறது. 13ஆவது திருத்தச் சட்டம் அறிமுகமாகிய காலத்திலும் அதன் பின்னரும் அதிகாரப்பகிர்வு தொடர்பான அரசியல் விவாதங்கள் அனைத்தும் ஒன்றில், 13ஐ முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பில் அல்லது அதனை அடியொற்றி அதிகாரத்தை கூட்டுவது தொடர்பிலுமே விவாதிக்கப்பட்டது. இவ்வாறானதொரு சூழலில்தான் விடுதலைப் புலிகளின் அழிவிற்கு பின்னர் மாகாண சபை முறைமையையும் கையாள வேண்டும் என்னும் நிலைப்பாட்டை கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டது. ஆனால், கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்திய மஹிந்த ராஜபக்‌ஷ, வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்துவதை பிற்போட்டுவந்த நிலையில்தான் அதனை நடத்துமாறு சம்பந்தன் தொடர்ச்சியான வலியுறுத்திவந்தார். இதற்காக இந்தியாவின் (சவுத்புளொக்கின்) கதவுகளை தொடர்ச்சியாக தட்டிக் கொண்டிருந்தார். வடக்கு மாகாண சபையை அனைவரும் அன்னார்ந்து பார்க்க வேண்டும் என்னும் நோக்கில்தான் நீதியரசர் விக்னேஸ்வரனை வலிந்து அரசியலுக்குள் இழுத்துவந்தார். ஆனால், எந்த மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று சம்பந்தன் வாதிட்டு வந்தாரோ, அந்த மாகாண சபையின் பிரச்சினைகள் தொடர்பில் இன்றுவரை நாடாளுமன்றத்தில் பேசியதில்லை. இன்று மாகாண சபை அதிகாரங்களை பலவீனப்படுத்தும் வகையில் மத்திய அரசு செயற்படுவதாக நீதியரசர் விக்னேஸ்வரன் கூறுகின்றார். இது தொடர்பில் தலையிட்டு, இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு செல்ல வேண்டிவர்கள் யார்? விக்னேஸ்வரனுக்கு பக்கபலமாக நிற்க வேண்டியவர்கள் யார்?

இன்று மாவட்ட அவிருத்திக் குழுவின் இணைத் தலைவர்களா நியமிக்கப்பட்டிருக்கும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தேசிய அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளை சேர்ந்தவர்களும் ஒன்றாக பணியாற்ற வேண்டும். ஆனால், உண்மையில் மாகாண சபையை முன்னிலைப்படுத்தி, முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணியாற்றும் ஒரு ஏற்பாடு தொடர்பில்தான் சம்பந்தன் சிந்தித்திருக்க வேண்டும். அதற்கான அழுத்தத்தை அரசாங்கத்திற்கு கொடுத்திருக்க வேண்டும். அவ்வாறானதொரு ஏற்பாட்டின் மூலமாகத்தான் அதிகாரப்பகிர்வு நோக்கிய கோரிக்கை நடைமுறையில் பிரயோகிக்க முடியும். ஆனால், அது நிகழவில்லை. இதன் காரணமாக வடக்கு மாகாண சபைக்கும் மத்திய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துவோருக்கும் இடையில் முரண்பாடான ஓட்டமே நிகழும். இதனைத்தான் சிலர் விருப்புகின்றனர் என்றால் அதற்கான பாதையை போட்டுக் கொடுப்பவர்கள் யார்? இதில் கிழக்கு மாகாண சபையைப் பற்றி பேசுவதற்கே ஒன்றும் இல்லை. அங்கு கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு அமைச்சர்கள் இருப்பதாக மக்கள் பேசிக் கொள்கின்றனர். மற்றும்படி அவர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் வெளிவருவதில்லை. சம்பந்தன் ஒரு விடயத்தை அடிக்கடி உச்சரிக்க மறப்பதில்லை. ஜனாதிபதி மைத்திரிபால தொடர்பில் தான் கொண்டிருக்கும் நம்பிக்கை தான் அது. அண்மையில் கூட மட்டக்களப்பில் ஒரு கூட்டத்தில் பேசுகின்ற போது மைத்திரிபால சரியான விடயங்களை செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கின்றார். மேலும், மைத்திரிபாலவின் சர்வதேச செல்வாக்கு அதிகரித்து வருவதாகவும், அது தமிழ் மக்களுக்கு நன்மையளிக்கும் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார். மைத்திரியின் சர்வதேச செல்வாக்கு அதிகரிப்பது எப்படி தமிழ் மக்களுக்கு நன்மையளிக்கும்? இதற்கான பதிலையும் சம்பந்தனிடம்தான் கேட்க வேண்டும்.

கிழக்கு மாகாண ஆட்சியில் கூட்டமைப்பு பங்காளியாக இருப்பது அனைவருக்கும் நினைவிருக்கலாம். தற்போது கிழக்கு மாகாண சபையில் சி.தண்டாயுபாணி கல்வி அமைச்சராக இருக்கின்றார். இவருக்கு முன்னர், விமல வீர திசாநாயக்க என்பவர் அந்தப் பொறுப்பில் இருந்தார். அவர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்தவர். இவர் கல்வி அமைச்சராக இருந்த போது 13ஆவது திருத்தச் சட்டத்தின் கீழுள்ள காணி அதிகாரத்தை கையாளும் அதிகாரமும் குறித்த கல்வி அமைச்சரின் கீழ்தான் இருந்தது. ஆனால், கூட்டமைப்பைச் சேர்ந்த தண்டாயுதபாணி அமைச்சராக பொறுப்பேற்றவுடன், அதுவரை கல்வி அமைச்சின் கீழிருந்த காணி அதிகாரம் உடனடியாக போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்ட ஆரியவதி கலப்பதி என்பவரின் அதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. கிழக்கு மாகாண சபையில் காணி அதிகாரம் ஒரு தமிழரின் அதிகாரத்திற்கு கீழ் இருக்கக் கூடாதா? ஒருவேளை, சரியானதை செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதால்தான் காணி அதிகாரம் கூட்டமைப்பை சேர்ந்த ஒருவரின் கீழ் இருக்கக் கூடாது என்று மைத்திரிபால நினைக்கின்றார் போலும்! சரி அரசாங்கம்தான் அப்படியென்றால் அந்தப் பதவியில் இருப்பவருக்கு கூட அப்படியொரு விடயம் நடந்தாகவோ, அதற்காக தாங்கள் குரல் கொடுக்க வேண்டும் என்பதோ நினைவில்லை. உண்மையில் இருக்கின்ற அதிகாரங்களை உறுதிப்படுத்துவது தொடர்பில் பேச முடியாத போது புதிய அதிகாரங்கள் கிடைக்கும் என்று கூறுவதை எவ்வாறு நம்பலாம்? ஒருவேளை இந்தியாவும் அமெரிக்காவும் அப்படியொரு தீர்வை பெற்றும் தருமென்று சம்பந்தன் கருதுகின்றாரா? பதில் சம்பந்தனிடம்… ஒருவேளை சம்பந்தன் பதில் சொல்லாமல் விட்டால் கூட வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் சிவில் சமூக பிரதிநிதிகள், புத்திஜீவிகளால் என்ன செய்துவிட முடியும்?

யதீந்திரா