படம் | Selvaraja Rajasegar Photo, MAATRAM FLICKR

இம்மாதம் முதலாம் திகதி யாழ்ப்பாணத்தில் ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. மத்திய மீள்குடியேற்ற அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் மீள்குடியேற்றம் தொடர்பான ஐ.நா. நிபுணர் ஒருவர் பங்குபற்றியிருக்கிறார். அவர் இது விடயத்தில் பரந்துபட்ட அனுபவமும் நிபுணத்துவ அறிவும் மிக்கவர் என்று கூறப்படுகிறது. மீள்குடியேற்றத்துக்கான ஒரு பொருத்தமான கொள்கையை வகுப்பதே இக்கூட்டத்தின் நோக்கம் என்றும் கூறப்படுகிறது.

இக்கூட்டம் நடத்தப்படுவதற்கு முதல் நாள் அதாவது, நவம்பர் 30ஆம் திகதி யாழ். நூலக கேட்போர் கூடத்தில் ஒரு அறிக்கை வெளியீட்டு வைபவம் இடம்பெற்றது. வவுனியாவைத் தளமாகக் கொண்டியங்கும் “மாற்றம் நிறுவனம்” இவ்வறிக்கையை வெளியிட்டிருந்தது. வட மாகாண முதலமைச்சரும் ஏனைய அரசியல்வாதிகளும் பங்குபற்றிய மேற்படி கூட்டத்தில் “நிலமும் நாங்களும்” “Understanding Post – war Land Issues in Northern Srilanka” என்ற அந்த அறிக்கை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டது.

இலங்கைக்கான சுவிஸ் தூதரகமும், சுவிஸ் நாட்டின் அபிவிருத்திக்கும் ஒத்துழைப்புக்குமான நிறுவனமும் (SDC) இவ்வறிக்கையை தயாரிப்பதற்கு வேண்டிய நிதி உதவிகளைச் செய்திருக்கின்றன.

கடந்த ஆண்டு மார்ச்சில் இருந்து டிசம்பர் வரையிலுமான 10 மாதங்களுக்கு கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 2 ஆய்வாளர்களும் 18 உதவி ஆய்வாளர்களும் இதில் பற்றுபற்றியிருக்கிறார்கள். அதன் பின் கள ஆய்வில் பெறப்பட்டவை தொகுத்தும் பகுத்தும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கையின் நிறைவேற்றுச் சுருக்கம் என்ற பகுதியில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

“வட இலங்கையில் யுத்தத்திற்குப் பின்னரான காலகட்டத்தில் இருக்கக்கூடிய காணி தொடர்பான பிரச்சினைகளின் ஆய்வே இந்த அறிக்கை. யுத்தத்தால் சீரழிந்த ஒரு நாட்டில் அந்த யுத்தத்திற்குப் பின்னரான மீள் உருவாக்கம், மீள் இணக்கம் என்பவை நிகழும் சூழமைவில் சமூகங்கள், குடும்பங்கள், ஆண், பெண் ஆகியோரது வாழ்வாதாரத்தினதும், நல்வாழ்வினதும் மையப்பொருளாக அவர்களது காணி உரிமை – காணியைப் பயன்படுத்தல், அடைதல் மற்றும் காணியின் மீதான அவர்களது கட்டுப்பாடு ஆகியவை விளங்குகின்றன.

இலங்கையில் சமாதானம் நிலைபேறானதாக நீடிப்பற்கு காணிப்பிரச்சினைகளுக்குரிய தீர்வு அத்தியாவசியமானதாகும். இன மோதலின் மிக முக்கியமான ஒரு கூறாக காணிப்பிரச்சினை இருப்பதைக் கண்டுகொள்ள வேண்டும். அத்துடன், தேசியப் பிரச்சினைக்கான எந்த ஒரு தீர்வும் காணிப்பிரச்சினையின் திருப்தியான தீர்வுக்கு வழிசமைக்க வேண்டும்…”

ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர் காணி சம்பந்தமான பிரச்சினைகளின் மீது ஏற்கனவே சில ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், மாற்றம் நிறுவனத்தின் இவ்வாய்வானது கள ஆய்வுகளின் மூலம் எடுத்த தகவல்களை அடித்தளமாகக் கொண்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களோடு நேரடியாக இடையூடாடி பெறப்பட்ட தகவல்களைத் தொகுத்தும் பகுத்தும் பெறப்பட்ட முடிவுகளே இவ்வறிக்கை என்று கூறப்படுகின்றது.

இது தொடர்பாக இவ்வறிக்கையின் அறிமுகம் என்ற பகுதியில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. “ஏற்கனவே, இருக்கக்கூடிய ஆய்வுகளோடு ஒப்பிடுகையில் இந்த ஆய்வின் முதன்மையான அழுத்தம் தரும் விடயமாயிருப்பது வடபகுதி மக்களின் காணிப்பிரச்சினைகள் தொடர்பில் அவர்கள் தமது கருத்துக்களை சுயமாக எடுத்துரைப்பதற்கான ஒரு கள வெளியை வழங்க வேண்டும் என்பதாகும். எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படக்கூடிய எந்தவொரு காணி தொடர்பிலான வாதிடல் உத்திக்கும் ஒரு தொடக்கப் புள்ளியாக இருப்பது, சாதாரண மக்களின் சராசரி அக்கறைகள்தான் என்பது இந்த ஆய்வை உந்தித் தள்ளுகிற நம்பிக்கையாகும். இந்த செயற்படி முறையில், ஆய்வறிக்கையானது முக்கியமான முதற்படியை வழங்குகிறது. காணிப் பிரச்சினைகள் தொடர்பில் இது பாதிப்புக்குள்ளானோரது நம்பிக்கைகளையும் தேவைகளையும் எடுத்துச் செல்கிற ஊடகமாக இருக்கும் அதேசமயம் செயற்பாட்டாளர்களுக்கும், பணியாளர்களுக்கும் இந்தப் பிரச்சினைகளுடைய கீழிருந்து (களநிலையிலிருந்து) மேல் நோக்கியதான கண்ணோட்டத்தினை வழங்குவதற்கு முயற்சிக்கின்றது.”

மொத்தம் 58 பக்கங்களைக் கொண்ட இவ் அறிக்கையானது ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. 5 அத்தியாயங்கள் இதில் உண்டு. தமிழ் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று மாற்றம் நிறுவனம் கூறியிருக்கிறது.

இது ஒரு புலமைசார் அறிக்கை அல்ல என்று கூறப்பட்ட போதிலும் இது தொடர்பில் உலகளாவிய ஆய்வாளர்களின் அனுபவங்களையும் உள்நாட்டு ஆய்வு முடிவுகளையும் இவ் அறிக்கை பயன்படுத்தியுள்ளது. இது வெளியிடப்பட்டிருக்கும் காலம், இதன் உள்ளடக்கம், இதன் ஆய்வொழுக்கம், இதன் முடிவான அவதானிப்புக்கள் என்பவற்றைக் கருதிக்கூறின் 2009இற்கும் பின் தமிழ்த்தரப்பால் வெளியிடப்பட்ட ஒரு முக்கிய ஆவணமாக இதைக் கூற முடியும்.

தமிழ் – முஸ்லிம் காணிப் பிணக்குகள் தொடர்பாகவும் தேச வழமைச் சட்டத்திலுள்ள பெண்களுக்குப் பாதகமான அம்சங்களைக் குறித்தும் இவ் அறிக்கை பேசுகிறது. பெருமளவிற்கு கீழிருந்து மேல்நோக்கி சேகரிக்கப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்ட ஓர் அறிக்கை இதுவென்பதால் தவிர்க்க முடியாதபடி இது வெளிப்படையான மிக எளிமையான ஒரு உண்மைக்குக் கிட்டவாக வருகிறது. அதாவது, காணிப்பிரச்சினை எனப்படுவது பாதுகாப்புக் கொள்கை சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினையே என்பதுதான்.

இதைப் பின்வருமாறு பொழிவாகக் கூறலாம். மீள்குடியேற்றம் எனப்படுவது படைமய நீக்கம் மற்றும் உயர் பாதுகாப்பு வலயங்கள் எனபவற்றோடு தொடர்புடையது. படைமய நீக்கமும் உயர் பாதுகாப்பு வலயங்களும் பாதுகாப்புக் கொள்கையோடு தொடர்புடையவை. நாட்டின் பாதுகாப்பிற்காக தமிழ் மக்களின் காணியை பிடித்து வைத்திருக்கலாமா? இல்லையா? என்பது தமிழ் மக்களுக்குள்ள காணி அதிகாரத்தோடு தொடர்புடையது. காணி அதிகாரம் எனப்படுவது தமிழ் மக்களின் கூட்டுரிமைகளில் ஒன்றாகும். தமிழ் மக்களின் கூட்டுரிமைகள் எனப்படுபவை அவர்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக் கொள்வதா? இல்லையா என்ற விவாதத்தோடு தொடர்புடையவை. அதாவது, முடிவாகக் கூறின் தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பது என்றால் ஒற்றையாட்சிக்கு வெளியே போவதா இல்லையா என்ற கொள்கை முடிவு அது. அது முழுக்க முழுக்க ஓர் அரசியல் தீர்மானமாகும். அவ்வாறான ஓர் தீர்மானத்தை எடுக்கத் தேவையான அரசியல் திடசித்தம் (Political will) இப்போதுள்ள மைத்திரி, ரணில் அரசாங்கத்திடம் உண்டா?

இச்சிறிய தீவு சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே உரியது என்று நம்பிக் கொண்டிருக்கும் வரை ஒற்றையாட்சிக்கு வெளியே போக முடியாது. இலங்கைத் தீவில் இனம், மொழி, மதம், நிலம் ஆகிய நான்கினுடையதும் விபரீதமான சேர்க்கையே இனப்பிரச்சினையின் தோற்றுவாய் என்று வாதிடும் அறிஞர்களும் உண்டு. சிங்கள இனம், பௌத்த மதம் என்பவற்றோடு புத்தபகவானால் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட நிலம் ஆகிய மூன்றினதும் சேர்க்கையே தம்மதுவீப கோட்பாடு என்ற ஒரு விளக்கமும் உண்டு. இந்தக் கோட்பாட்டு அடித்தளத்தின் மீதே இலங்கைத்தீவின் சிங்கள பௌத்த அரசு கட்டியெழுப்பப்பட்டுள்ளது. அந்த அரசின் ஓர் அங்கமாக காணப்படும் படைக்கட்டமைப்பானது தம்மதுவீபத்தின் காவலாளியாகவே செயற்படும். அதனால்தான் போரில் வெற்றி கொள்ளப்பட்ட தமிழர் நிலங்களில் சிங்கள பௌத்த சின்னங்களை அவர்கள் ஸ்தாபித்து வருகிறார்கள். இவ்வாறான சிங்கள பௌத்த மயமாக்கலைப் பற்றி மேற்படி அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

எனவே, இப்போதுள்ள கேள்வியெல்லாம் மைத்திரி – ரணில் அரசாங்கமானது தம்மதுவீபத்தின் காவலாளியாக செயற்படுமா? இல்லையா? என்பதுதான். இப்படிப் பார்த்தால் காணிப் பிரச்சினைகள் தொடர்பில் முடிவுகளை எடுக்க வேண்டியது அரச அதிகாரிகளோ அல்லது அரச சார்பற்ற நிறுவனங்களின் நிபுணர்களோ அல்ல. மாறாக நிறைவேற்று அதிகாரமுடைய மைத்திரியும், ரணிலும்தான் அந்த முடிவுகளை எடுக்க வேண்டும். அதன் பின்னரே உலகளாவிய நிறுவனங்களின் நிபுணத்துவ உதவியைப் பெற வேண்டியிருக்கும்.

இந்த இடத்தில் இக்கட்டுரையின் தொடக்கத்திற்கு திரும்பிச் செல்ல வேண்டும். அதில் குறிப்பிடப்படும் சந்திப்பானது மீள்குடியேற்றம் தொட்பான ஒரு நடைமுறை கொள்கையை வகுப்பது தொடர்பானது என்று கூறப்படுகிறது. ஆனால், மீள்குடியேற்றம் பற்றிய கொள்கை முடிவென்பது முழுக்க முழுக்க இனப்பிரச்சினைக்கான தீர்வோடு தொடர்புடையது. எனவே, இது விவாதிக்கப்பட வேண்டிய இடமே வேறு. இதைப் பற்றி விவாதிக்க வேண்டிய நபர்களும் வேறு. யார் எங்கே கலந்து பேசி முடிவுகளை எடுத்தால் அது செய்முறைக்கு வருமோ அந்த மட்டத்தில் பிரச்சினை விவாதிக்கப்படவில்லை. மாறாக, அதிகாரம் ஏதுமற்ற ஆனால், அறிவுசார் தகைமைகளைக் கொண்ட நிபுணர்கள் முடிவெடுத்து எதுவும் நடக்கப் போவதில்லை.

இது ஒரு உத்தியோ என்று யோசிக்க வேண்டியுள்ளது. முடிவெடுக்க வேண்டிய மட்டத்தில் கலந்து பேசாமல் முடிவுகளை எடுக்க முடியாத மட்டத்தில் நிபுணத்துவ ஆலோசனைகளை பெறுவது என்பது ஒரு உத்திதானே? அண்மை மாதங்களாக இது போன்று பல சந்திப்புக்கள் நிகழ்ந்து வருகின்றன. காணிப் பிரச்சினை தொடர்பாக மாகாணசபை மட்டத்திலும் சந்திப்புக்கள் நடந்து வருகின்றன. நல்லிணக்கம் தொடர்பாகவும் இனங்களுக்கிடையிலான கலந்துரையாடல் தொடர்பாகவும் சந்திப்புக்கள் நிகழ்ந்து வருகின்றன. அரசியலமைப்பில் மாற்றங்களை செய்வதற்கு சிவில் சமூகங்கள் எப்படி உதவ முடியும் என்பது பற்றியெல்லாம் சிந்திக்கப்படுகின்றது. இவ்வாறான சந்திப்புக்கள், கூட்டங்கள், கருத்தரங்குகள் சிலவற்றில் கீழிருந்து மேல் நோக்கிய பொறிமுறைகள் ஊக்கவிக்கப்படுகின்றன என்பது நம்பிக்கையூட்டும் ஓர் அம்சம்தான். ஆனால், கொள்கை முடிவுகளை எடுக்கத் தேவையான அதிகாரங்களைப் பெற்றிருப்பவரகள் அந்த முடிவுகளை எடுக்காமல் கீழிருந்து மேல்நோக்கிய செய்முறைகளைக் குறித்தும் நிபுணத்துவ உதவிகளைக் குறித்தும் சிந்திப்பதை எப்படி விளங்கிக் கொள்வது? உள் மருந்தைக் கொடுக்காமல் வெளிப்பூச்சு மருந்தைக் கொடுப்பதற்கு ஒப்பானதே இது. மூல காரணத்தை நீக்காமல் விளைவின் விளைவுகளுக்கு பரிகாரம் தேடும் ஓர் உத்தியே இது.

இதே விதமாகக் கையாளப்பட்டு வருவதால் நீண்டகாலமாக இழுபட்டு வரும் மற்றொரு முக்கிய பிணக்கை இங்கு சுட்டிக்காட்டலாம். அது தான் இலங்கை – இந்திய மீனவர்களுக்கிடையிலான பிணக்காகும். இது பற்றி தற்பொழுது சேவையில் இல்லாத ஆனால், கெட்டிக்காரரான ஒரு சிவில் அதிகாரி கூறியதை இங்கு சுட்டிக்காட்டலாம்… “மீனவர் பிரச்சினை எனப்படுவது ஒரு அரசியல் பிரச்சினை. இரண்டு நாடுகளின் கடல் எல்லைகள் பற்றிய ஓர் பிரச்சினை. இரு நாடுகளின் கடல் எல்லைகள் சம்பந்தப்பட்ட ஓர் பிரச்சினை என்பதால் இதை அரசியல்வாதிகளே தீர்க்க வேண்டும். முடிவுகளை எடுக்கும் அதிகாரம் அவர்களுக்கே உண்டு. இதை மீனவர்களால் மட்டும் தீர்க்க முடியாது. எனவே, கூடிக் கதைக்க வேண்டியது இரு தரப்பிலும் முடிவெடுக்கவல்ல அரசியல்வாதிகளேதான். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருவது என்ன? முடிவெடுக்க வேண்டிய அரசியல்வாதிகள் அந்தப் பொறுப்பை மீனவர்களின் மீது உருட்டிவிட்டு தீர்வை ஒத்தி வைத்து வருகிறார்கள் என்பதே சரி.”

மீனவர்களின் பிணக்கைப் போலவே இப்பொழுது பெரும்பாலான விவகாரங்களும் கையாளப்படுகின்றன. மூல காரணத்தை அப்படியே வைத்துக் கொண்டு விளைவின் விளைவை எப்படித் தீர்ப்பது என்று சிந்திக்கப்படுகின்றது. அல்லது வெளியுலகத்திற்குப் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதற்குரிய முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதான ஒரு தோற்றம் கட்டியெழுப்பப்பட்டு வருகிறது. அதாவது, பிரச்சினைகளைத் தீர்க்க அவர்கள் இப்பொழுதும் தயாரில்லை என்று பொருள்.